கடவுளின் கடந்த காலம்-கோபி கிருஷ்ணன்

கோபி கிருஷ்ணன்

திடாரென்று பழுக்கக் காய்ச்சிய இரும்புத்துண்டு ஒன்று அவரது இடது தொடைமேல் இருந்தது. அவர் துடித்தார். சற்றுக் கழித்து இரும்புத் துண்டு விலகிற்று. அலறியடித்துக் கொண்டு லுங்கியை விலக்கித் தொடையைக் கவனித்தார். சதை வெந்து ரணமாகியிருந்தது. மருத்துவரிடம் சென்று, களிம்பு ஒன்று தடவியதில் சில தினங்களில் குணமாயிற்று. ஆனால், தீ வடு நிலைத்தது. இரண்டு நாட்கள் கழித்து, வலது தொடைமீது எரிந்து கொண்டிருக்கும் பீடி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சிறிது நேரம் சென்று பீடி அகன்றது. தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

mandala-yab-yum-tibetan-buddhism-drawing-modern-art-work

இப்பொழுது இந்த அனுபவம் அவருக்குப் பழக்கப்பட்டுவிட்டிருந்தது. திடாரென அவரது கைக்கடியார வார் முறுக்கப்பட்டது. மணிக்கட்டில் தாங்க முடியாத இறுக்கம் ஏற்பட்டது. அவர் எச்சரிக்கையானார். இப்படியே விட்டால் இது அவரைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும். அவர் சில முடிவுகளை உடனடியாக எடுக்கத் தொடங்கினார். புதிய முயற்சிகளில் ஈடுபடலானார். இன்னும் மணிக்கட்டில் இறுக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. அவர் விவேகத்துடன் மானசீகமாகக் கைக்கடியாரத்தைக் கழற்றினார். உடனே இறுக்கம், உபாதை வடிந்தது. அவர் தான் கையாண்ட உத்திக்காகத் தன்னைப் பாராட்டிக் கொண்டார். அந்த வினோதமான ஒன்றை வென்ற திருப்தி அவருக்கு மனநிறைவைத் தந்தது. அப்பாடா ‘ இந்தக் கஷ்டத்திலிருந்து ஒருவாறு விடுபட்டாகிவிட்டது.

ஆனால், அவரது நிம்மதி நெடுமூச்சு அதிககாலம் நிலைக்கவில்லை. தலைமுடிக்குள்ளே ஒருபல்லி ஊர ஆரம்பித்தது. இப்பொழுது அவர் அலறவில்லை. பல்லியை மானசீகமாகக் கை கொண்டு தட்டிவிட்டார். உடனே ஊரல் அகன்றது. மீண்டும் அவர் தன்னைப் பாராட்டிக்கொண்டார். மென்மேலும் நெருப்புத் துண்டுகள் அவரை இம்சித்தபடி இருந்தன. அவர் மனரீதியில் அவற்றை அகற்றி நிவாரணம் தேடிக் கொண்டிருந்தார்.

இப்படியே காலம் நகர்ந்துகொண்டிருந்தது. மானுட சோதனைகளில் நேரம் அதிகம் விரயமாகிக் கொண்டிருந்தது. அவர் சளைக்காமல் அந்த விசித்திரத்துடன் மல்லாடிக் கொண்டிருந்தார். ஒரு கற்பித மதம்பிடித்த யானையுடன் உக்கிரத்துடன் போரிட்டு அடிக்கடி வெற்றிகாணும் உணர்வு அவருக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவருக்கு அதிகாலை வேளையில் ஒரு ரம்மியமான அனுபவம் ஏற்பட்டது. வசீகரமான ஆகாயப் பரப்பு. ஒரு பூதாகரப் பருந்து சுழன்று சுழன்று வந்து கொண்டிருந்தது. பிரபஞ்சம் அனைத்தும் சுழன்று சுழன்று வந்தது. பருந்து அனைத்துக்கும் மேலாக வட்டமடித்துக் கொண்டிருந்தது. பருந்து அழகே உருப்பெற்றதாக இருந்தது. அதன் கழுத்தை வெள்ளை வட்டம் ஒன்று ஆரமாக அலங்கரித்திருந்தது. வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்து அந்தரத்தில் நிலைத்து நின்றது. தன் அலகுகளை அகலத் திறந்தது. அவர் உட்சென்றார்மிகவும் பிரியப்பட்டு. அந்த அழகான உயிரினத்தினுள் அவர் ஒரு கணம் ஐக்கியமானார். நேரம் கழிந்தது. பருந்தின் அலகுகளில் இருந்து அவர் வெளிவந்தார். உதடுகள் அனிச்சையாக முணுமுணுத்தன: ‘நான் சக மனிதனை நேசிப்பவன், காதலிப்பவன், இனி இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சகல உயிரினங்களும் என் உற்ற தோழர்கள். ‘ அவரது உறக்கம் கலைந்தது. கண்ணெதிரே ஓர் ஒளிவட்டம் தென்பட்டது. அதிலிருந்து ஒரு செய்தி வெளிவந்தது: ‘அன்பு, எல்லாம் அன்பு மயம் ‘ ஒளிவட்டம் அகன்றது. ஆனால் செய்தி மனதில் ஆழமாகப் பதிந்தது.

அடுத்த இரவு இன்னொரு அனுபவம்: உறக்கம் கலைந்த நிலையில் எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தார். எந்தவொரு சிந்தனையும் அவரை ஆட்கொள்ளவில்லை. முற்றாக ஒரு சிந்தனையும் அற்றநிலை. அந்த அனுபவம் நிகழ்ந்து கொண்டிருந்த சமயம் அவர் அதை உணரவில்லை. மனம் ஓர் அனுபவத்தை நுகர்ந்து கொண்டிருக்கும்போது அது எப்படிச் செயல்படுகிறது என்பதை உணர்வது அசாத்தியம். அனுபவம் நிறைவுற்ற பிறகே பின்னோக்கி நகர்ந்து அனுபவத்தின்போது அது செயல்பட்ட விதத்தை ஊகிக்கலாம். எது எப்படியோ அந்தச் சிந்தனையற்ற சூனியம் அவருள் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருபிரம்மாண்டமான சூன்யம். முழுக்கவும் ஒன்றுமில்லாத நிலை. அவரும் இல்லை. எதுவும் இல்லை. அவரது அனுபவம் முடிவுற்றது. அவர் இப்பொழுது ஆழ்ந்த அமைதியைப் பிரக்ஞை பூர்வமாக அனுபவித்தார். எண்ணங்களற்ற வெற்று நிலை; மனதின் அசைவுகளற்ற, சலனமற்ற உயரிய நிலை. முக்தி நிலை. அவருக்கு அது ஏற்பட்டிருந்தது, ஒரு பத்தே நிமிடங்களாக இருந்தாலும். புத்தரின் போதி விருட்சமும் ஆர்க்கிமிடாஸின் தண்ணீர்த் தொட்டியும் நினைவில் தைத்து விடுபெற்றன. தனக்கு ஒரு சாதாரணப்படுக்கை. பரவாயில்லை. எந்த நிலையில் உன்னத அனுபவங்கள் ஏற்பட்டாலும் வரவேற்கத் தக்கனவே. மீண்டும் அந்தச் செய்தி அவரைச் சந்தித்தது: ‘அன்பு, எல்லாம் அன்பு மயம். ‘

அவர் இப்பொழுது அன்பே உருவானவராக விளங்கினார். கனிவு, பரிவு, நேசம் — அதுதான் அவர். குரலில் தேன் வழிந்தது. அவருக்கு நிறைய நண்பர்கள் ஏற்பட்டார்கள். தோழிகளும். அவர் முதல் முறையாகக் கடவுள் பற்றி மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தார். கடவுள் என்றால் அன்பு என்றார். பரந்துபட்ட நேசத்திலும் பிறரை மன்னிப்பதிலும்தான் கடவுள் இருக்கிறார் என்றார். கடவுள், மனிதன் உருவாக்கிய சம்பிரதாயக் கட்டிடங்களில் இல்லை என்றார். சில மதவாதிகள் அவரைக் கடுமையாகச் சாடினார்கள். அவர் மென்மையுடன் விமரிசனங்களை ஏற்றுக் கொண்டார். விமரிசனம் செய்பவர்களையும் தான் ஆழ்ந்து நேசிப்பதாக சொன்னார். ஒரு நாத்திகவாதியின் நேசம் தங்களுக்குத் தேவையில்லை என்றார்கள் அவர்கள். தன்னை அன்னியப்படுத்த வேண்டாம் என்று அவர் கெஞ்சினார். அதீத மானுடக் கற்பனைகளால் உருப்பெற்ற கடவுள்கள் மனிதர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்க வேண்டாம் என்றார். ஆனால் அவர்களுக்கு அன்பைவிட ஒரு சிலைக் கடவுள்தான் முக்கியமாகப்பட்டது. அவர் மனவருத்தம் கொள்ளவில்லை. அவரது அன்பு வடியாத ஒன்றாக இருந்தது. ‘சாந்தி ‘ என்ற வார்த்தையை அவரது உதடுகள் அடிக்கடி உச்சரித்தன.

திடாரென ஒரு நாள் அவரது நினைவுகள் ஓராண்டு காலம் பின்னோக்கி நகர்ந்தன. தான் கஞ்சா அடித்ததையும் அப்பொழுது பிரக்ஞை விசாலமாகத் தோன்றியதையும் நினைவு கூர்ந்தார். ஓர் ஒன்பது மாத காலம் ஒரு நிலையில் தொடர்ந்து உட்காரவோ நிற்கவோ முடியாமல் நிலை கொள்ளாமையால் அவஸ்தைப்பட்டதும் அவரது நினைவுக்கு வந்தது. ஏழெட்டுமுறை போதைமாத்திரைகள் உட்கொண்டதையும் நினைவுபடுத்திக் கொண்டார். அப்பொழுதும் அவர் பிரபஞ்சத்தைப் பற்றியும் கடவுளைப்பற்றியும் யோசித்ததுண்டு. ஆனால் அவை மிகமிகக் குழப்பமான நாட்கள். பிறகு தன்மேல் வைக்கப்பட்ட நெருப்புத் துண்டுகள் அவர் நினைவை எரித்தன. கஞ்சாவும் போதை மாத்திரைகளும் அவருக்கு எப்படியெல்லாம் தொல்லை தந்துவிட்டன ‘ தான் திடமுடன் போராடாமல் விட்டிருந்தால், அந்த இரண்டு விழிப்புணர்வு அனுபவங்களும் ஏற்பட்டிருக்காவிட்டால் ? அவர் மேற்கொண்டு நினைக்க அஞ்சினார்.

மனம் லேசான தொந்தரவுக்குள்ளானதை அவர் உணர்ந்தார். எழுந்து குளியலறைக்குச் சென்றார். முகத்தைக் கழுவிக் கொண்டார். மீண்டும் அவர் தன் தற்பொழுதைய நிலைக்கு வந்துவிட்டிருந்தார். ‘அன்பே சிவம் ‘ என்று உதடுகள் உச்சரிக்க அவர் அன்பில் மீண்டும் அடைக்கலம் புகுந்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: