கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள்.- ரமேஷ் : பிரேம்

ஜூலை-14, 1789 அன்று கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள்.

1
தேய்பிறைக்கால நிலாக்களைப் போல உனது தீர்மானங்கள் எப்பொழுதும்  தாமதமாகத்தோன்றுகின்றன. எந்தத் தீர்மானமும் இதுவரை உன்னால் நடைமுறைப்படுத்தப்பட்டதே இல்லை. உனது ஒவ்வொரு எத்தனிப்பும் சற்றுக் கூடுதலாய்க் ramesh-premகரையேறி மணல் தொட்ட அலைகளைப் போல் குமிழ் எழுப்பி மறைந்து போகின்றன. உனது ஒவ்வொரு நெடும் பயணமும் கப்பல்வரைச் சென்று கரை மீண்டுவிடும் பணிப்படகுகளோடு முடிந்து விடுகின்றன. உனது தொடக்கத்திற்கான நீண்ட ஆயத்தங்கள் ஒவ்வொன்றும், இல்லாத ஒரு இசைக்கருவிக்கு எழுதிய குறிப்புகள் போல தனித்துக் கிடக்கின்றன. ஒரு சுடர் தனது எரிதலையே வடிவமாக்கிக் கொள்ளுவது போலவும், ஒரு துளி தான் மறைகிற கணங்களையே தனது இருப்பின் தருணங்களாக்கிக் கொள்ளுவது போலவும் நீ உனது இருப்பை அர்த்தப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறாயோ என்று தோன்றுகிறது. ழீல், உனது வயலினையும் இசைக்குறிப்புகளையும் எரித்துவிட்டு எங்காவது தொலைந்து போய்விடுவதே நல்லது. இனியும் உனது அடுத்த பெரும் சாகசத்திற்கான திட்டத்துடன் என்னை வந்து சந்திப்பதை நிறுத்திவிடு.
2
மதாம் பெர்னாதேத் , உங்களுடைய சிறிய வீட்டிற்குள் ஒரு வேற்றுக் கிரக இயந்திரம் போலவோ, கைவிடப்பட்ட விண்கலம் போலவோ தோன்றும் உங்களது பியானோ நிசப்தமாக உள்ளபோது பயங்கரங்கள் நிரம்பியதாகவும், ஏதோ ஒரு சிறு ஒலியையாவது எழுப்பிக் கொண்டிருக்கும் பொழுது, தெளிவான ஒரு மீன் தொட்டி போலவும் எனது சிறு வயதிலிருந்து எனக்குத் தோன்றியிருக்கிறது. நான் ஏதும் சாகசங்கள் செய்யும் பொருட்டோ  சாதனைகள் செய்யும் பொருட்டோ இசையை உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, இசைக் கருவிகளின் நிசப்தமும் மௌனமும் உருவாக்கும் மகா பயங்கரத்திலிருந்து தப்பிக்கவே நான் இசைக்குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என்றாலும், எனது அடுத்த சாகசம் என்று ஒன்று உண்டென்றால் அது புவியீர்ப்பு விசையை ஒரு இடத்தில் இல்லாமல் ஆக்கவோ அல்லது, புவியீர்ப்பு விசை ஒரு உடலைத் தாக்காமல் இருக்கவோ ஆன உத்தியைக் கண்டுபிடிப்பதாகத்தான் இருக்கும். ஆம், நான் தூக்குதண்டனையிலிருந்தும் கில்லெட்டினிலிருந்தும் தப்பிக்க வேண்டும். தூக்குதண்டனை எனது உடல் மீது புவியீர்ப்புவிசை செயல்படுவதால் நிகழ்த்தப்படுவது. கில்லெட்டின் புவியீர்ப்பால் இயங்கும் ஒரு பொருள் என் உடல்மீது செயல்படுவதால் நிகழ்த்தப்படுவது. இரண்டையும் நான் மீறவேண்டும். இதற்கு இசை ஏதாவதுவொரு வழியில் பயன்படுமா என்று நீங்கள்தான் கூறவேண்டும்.
3
ழீல், னீஷீஸீ ஜீமீtவீt! எனது செல்லமான மாணவனே! நீ தண்டனை பற்றி சிந்திக்க வேண்டிய தேவை என்ன இப்போது? நீ உனது விநோத சிம்ஃபொனிகளையும், மிக அபூர்வமான ஒபேராக்களையும் நிகழ்த்திக் காட்டவோ வெளியிடவோ இன்னும் காலம் கடந்துவிடவில்லை. நீ ஒரு இளைஞன். முப்பதே வயதான இளைஞன். மிக பால்யத்திலேயே நீ ஒரு அதிசயக் கலைஞனாக மாறிவிட்டதனால் எனக்கும்கூட நீ நீண்டகாலமாக செய்ய வேண்டிய சாதனையை செய்து முடிக்கவில்லை என்றும், மிகப் பிடிவாதமாக உனது அபூர்வ இசைகளை மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறாய் என்றும் தோன்றிக்கொண்டிருக்கிறது.

எனது முதுமை என் பார்வையையும், விரல்களையும் பாதிக்கத் தொடங்கிவிட்ட பிறகு உனது இசைக் குறிப்புகளை, நீ தரப்போகும் மாபெரும் கன்ஸர்ட்டில் ஒருத்தியாக இருந்து வாசிக்க முடியாமல் போய்விடுமோ? என்ற அச்சம் என்னை அடிக்கடி சூழ்ந்து கொள்கிறது. நான் உன்னைப்போல் மந்திர இசை வல்லுநன் இல்லை. வெறும் இசையாசிரியை. பியானோவையும் வயலினையும் கருவிகளாக எப்படிக் கையாள்வது என்பதையும், எழுதப்பட்ட ஒரு ஸ்வரத்தை இக்கருவிகளில் எப்படி எழுப்புவது என்பதையும் மட்டுமே அறிந்த ஆசிரியை. நீ உனது மூன்றாவது வயதில் முதன்முறை வயலினை வாசித்து நான் பார்த்த பொழுதுதான் வயலின் ஒரு கருவி அல்ல, இசை ஒரு உத்தியல்ல என்று நான் தெரிந்து கொண்டேன். முதன்முறையாக இசை எனது மூச்சை அடைத்தது. உடல் சிலிர்ப்புற்று வெடிக்கும் மௌனசப்தத்தில் ஓராயிரம் நரம்புகள் அதிர்ந்தன. அதற்குப் பிறகு ஒவ்வொரு நிசப்தமும் மௌனமும் வேறுவேறு அர்த்தங்களால் நிறைந்தன.

அந்த அர்த்தங்களூடாகவே உன்னை இந்த இருபத்தேழு ஆண்டுகளாக நான் கவனித்து வருகிறேன்.
உனது ஒவ்வொரு அசைவும் எனக்குப் பழக்கமாகி இருக்கிறது. உனது உடலின், செய்கையின்,

நடத்தையின் ஒவ்வொரு மாற்றமும் என் நினைவுகளின் பள்ளத்தாக்குகளில் நீர்ப்பொதிந்த மேகங்களெனத் தேங்கிக் கிடக்கின்றன. அதன் ஈர அசைவுகளே என்னைத் தாலாட்டி தூங்க வைக்கின்றன. நீ ஒரு பனி மேகக் குழைவு; உனக்குள் ஏன் குருதிச் சூடு? நீ தண்டனை பற்றி; அதுவும் மரண தண்டனைப் பற்றி பயம் கொள்ள வேண்டிய காரணம் என்ன? உன் மீதான எனது கோபங்களையும் கடும் சொற்களையும் நீ தவறாகப் புரிந்து கொள்ளமாட்டாய் என்று எனக்குத் தெரியும். நேரில் வந்து என்னிடம் பேசு ழீல்! உதறிவிட்டு எழும்போதும் தொங்கிக்கொண்டிருக்கின்றன இரண்டொரு குட்டிகள் தாயின் காம்புகளில்.
4
மதாம்… உடலையும் சைகைகளையும் போலில்லை கனவுகளும் ஏக்கங்களும் உங்களுக்குத் தெரியாது. எனது உடலுக்குள் ஏற்பட்ட நெரிசல் வேறு சில உருவங்கள் என்னை ஒரு பதுங்கு குழியாக பயன்படுத்திக் கொண்டிருப்பதும், எனது அங்கங்கள் ஒவ்வொன்றும் வேறுவேறு உயிரிகளின் ரகசியக் கட்டளைகளை ஏற்று இயங்கிக் கொண்டிருப்பதும், எனது நினைவும் கனவும் இனம் புரியாத குரல்களின் சூறாவளியால் கலைந்து கொண்டிருப்பதும் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கே பல தருணங்களில் தெரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கிறது. எனது பேச்சு அறியப்படாத மொழிகளின் உருவகங்களாலும், எனது மௌனம் இல்லாத நிலப்பரப்புகளின் காட்சிகளாலும் நிரம்பியபொழுது நான் எனது இசைக்கருவிகளுடன் தனித்தே இருந்தேன். நான் தேடி அலைந்த வீடு அகழ்ந்தெடுக்கப்பட்ட நகரம் ஒன்றின் வீதியில் அடையாளம் காணப்படுவதுபோல் திகைப்புகளுக்கு நடுவே நான் உலவிக் கொண்டிருந்தேன். நான் மறுமுறை நினைவுகூர முடியாத வாக்கியங்களால் சிந்தித்துக் கொண்டிருந்தேன். என்றாலும் நான் மீறமுடியாத ஒரு குற்றவுணர்வால் குமைந்து கொண்டிருந்தேன். அது என்னை ஓயாமல் பின்னப்படுத்திக் கொண்டே இருந்தது. நான் அந்த வாதை நிறைந்த நினைவிலிருந்து தப்பி, எங்காவது பதுங்கிக் கொண்ட பொழுதெல்லாம், ஒரு உருவம் தவறாமல் வந்து என்னைத் தொட்டெழுப்பி அந்த வாசகங்களை நினைவூட்டி விட்டுச் சென்றது. நான் இரண்டாவது கொலைக்குத் தயாராகிவிட்டதாகத் தோன்றியது. கொலை, உங்களுக்கு அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு சொல். என்றாலும், உங்களுடைய செல்லமான மாணவனும் இசைவரலாற்றில் பெரும் சாகசங்களைச் செய்ய வேண்டியவனுமான ழீல் ஒரு கொலைகாரன். அவனது மாபெரும் இசைச் சேர்க்கைக்கான குறிப்புகளெல்லாம் இரண்டு கொலைகளுக்கான ரகசிய திட்டங்களின் சங்கேதவரிகள்தான். ஒன்று பச்சையான கொலை. மற்றது, அந்தக் கொலைக்குச் சாட்சியாக அமைந்ததை அழித்த கொலை. குற்றவுணர்விலிருந்து மீள பல வழிகள் உண்டு என்றாலும், உத்தரவாதமான ஒரு வழி அக்குற்றத்தை மீண்டும் செய்வதுதான் என்று ஒரு துறவி என்னிடம் எப்பொழுதோ கூறிச் சென்றார். நான் குற்றவுணர்வுடன் இல்லை; மாறாக, தண்டனையிலிருந்து தப்பிக்கும் தந்திரத்தைக் கண்டு பிடிக்கும் பரிசோதனையில்.
5
ழீல்! நீ கொலை செய்ததாகக் கூறிய இரண்டு நபர்களும் தற்போது உயிருடன் இருக்கிறார்கள். நீ அவர்களை ஏதும் செய்யமுடியாது. உன்னால் பார்க்கக்கூட முடியாத இடங்களில் அவர்கள் இருக்கிறார்கள். என் பிரியமான குழந்தையே! இப்படிப் பேசுவதை எல்லாம் விட்டுவிடு. நீ கண்டது வெறும் கனவு. உனது இசைக்குறிப்புகளையும் உனது வயலினையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடு. இனி நீ தனியாக எங்கும் இருக்கவேண்டியதில்லை. உன்னை அடையாளம் கண்டுகொள்ள இந்தச் சிறிய நகரத்தில் யாரும் இல்லை; என்னைத் தவிர. பிரெஞ்சுப் பெயர்களும், வடஇந்தியக் கடைகளும், ஆங்கிலப்பள்ளிகளும் நிறைந்த இந்த பொந்திஷேரியில் உனது வயலினுக்குள் பதுங்கிக் கிடக்கும் மாய விநோதங்கள் பற்றி பேச நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம். நீ இப்படி மறைந்து விளையாடுவதையும் செய்யாத குற்றங்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பதையும் விட்டுவிட்டு என்னை வந்து பார். வேறு யாரேனும் இவற்றைத் தவறாகப் புரிந்து கொள்ளவும் அதன்மூலம் வேறு பிரச்னைகள் ஏற்படவுமான சூழ்நிலைகளை நீ உருவாக்கிவிட வேண்டாம். உனது பியானோ பயிற்சி கடந்த மூன்று மாதங்களாகத் தடைபட்டிருக்கிறது. மாற்று உடை ஏதும் எடுத்துக்கொள்ளாமலேயே சென்ற நீ தற்போது எந்த உடுப்பைப் போட்டுக் கொண்டிருக்கிறாய்? இனி உனது இசை நிகழ்ச்சியை எப்பொழுது நிகழ்த்தப் போகிறாய் என்றோ, உனது இசையாக்கங்களை உலகிற்கு ஏன் தெரிவிக்கவில்லை என்றோ கேட்டு உன்னைத் தொல்லைப்படுத்தப் போவதில்லை. உனக்குப் பிடித்தமான பிரம்பு ஊஞ்சல் ஒன்று வாங்கி வாதுமை மரத்தில் தொங்கவிட்டிருக்கிறேன். உனக்குப் பிடித்தமான நாவல்கள் சிலவும் பாரிசிலிருந்து வரவழைத்திருக்கிறேன். மொசார்டின் ஓவியத்திற்கு அழகான சட்டமாக மாற்றி வைத்திருக்கிறேன். இசை வகுப்புக்கு வரும் குழந்தைகள் உன்னைத் தினம் கேட்கும் பொழுதெல்லாம் நீ திபேத்திற்குச் சென்றிருப்பதாகப் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இரண்டு நாளைக்கு ஒரு முறைதான் என்னால் சாப்பிட முடிகிறது. உனது மனச்சிதைவிற்கும் மூளைவலிக்கும் வைத்தியம் பார்த்துக் கொள்வதை என்னிடமிருந்தும் நீ மறைக்கத் தேவையில்லை. அந்த வைத்தியம் எனக்கும் தேவைப்படுவதாக இருக்கலாம். நீ எத்தனை கொலைதான் செய்தால் என்ன? என் பிரியமான நட்சத்திர மீனே! என் உள்ளங்கையில் வந்து உறங்கு செல்லமே! என்னை இந்த வயதிற்குப்பின் அலையவிடாதே. அழுதால் மயக்கம் வருகிறது. தனிமையில் மயக்கம் வந்தால் தண்ணீர் தர யார் இருக்கிறார்கள் ழீல்?
6
அப்பா, சவப்பெட்டி செய்யும் நேரம் தவிர வயலின் வாசித்துக் கொண்டிருப்பார். மிகப் பழைய வயலின். மெர்ஸ்யே பெனுவா தன் வீட்டை விற்றுவிட்டு பிரான்ஸுக்குச் சென்றபொழுது தந்துவிட்டுச் சென்ற தட்டுமுட்டுச் சாமான்களில் வயலினும் ஒன்று. சாராயவாடை வயலினிலிருந்து வருவதற்குக் காரணம் அப்பா அதை தன் முகத்தோடு ஒட்டி வைத்தே எப்பொழுதும் வாசிப்பதுதான் என்று அம்மா சொல்லும். அம்மா, காயரில் முக்கிய பாடகி. தனியே பாடும் பொழுதெல்லாம் சில பிரெஞ்சுப் பாடல்கள் மட்டும் பாடும். அம்மாவுக்கு அதற்கு அர்த்தம் தெரியாது என்று அப்பா சொல்லுவார். அப்பாவுக்கு வயலின் வாசிக்கத் தெரியாது என்றும், தன் மனம் போன போக்கில் வாசித்து ஊரை ஏமாற்றுவதாகவும் அம்மா சொல்லும். ஆனால், ஊரில் எல்லோரும் அப்பாவைப் பெரிய வயலின்காரன் என்றே கூறுவார்கள். பங்கில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் வயலின் உண்டு. அம்மாவின் பாடல்களும் உண்டு. அம்மா பாடும் பொழுது எப்போதும் மூடிய கண்களும் முனைமட்டும் தெரியும் கண்ணீரும் உண்டு. அம்மா வேலை செய்யும் போதும், கோவிலைப் பெருக்கும்போதும், நடக்கும் போதும் கவனமாகக் கேட்டால் பாடல் ஒலிக்கும். உதடுகள் அசையாது. கன்னத்திலிருந்து காது வழியாக சில சமயம் ஒரு ரேகை அசையும்.

அப்பா என்னை வயலின் வாசிக்கச் சொன்னபோது எனக்கு இரண்டு வயது. கொஞ்சமாக ஞாபகம் இருக்கிறது. சப்தம் என்னை முதலில் பயமுறுத்தியது காதுக்கு வெகு அருகே. விரல்களைப் பிடித்து, வில்லை நகர்த்தி அப்பா, பின்னாலிருந்து என் கை வழியே வாசித்தபோது மெல்லிய இசை ஒன்று புகைபோல் புறப்பட்டது. திரும்பத் திரும்ப அதை வாசித்தபோது அசைவுகள் புரிந்தன. அப்பா இல்லாதபோது அம்மா ஒரு நாள் எனக்குச் சொல்லித் தந்தது. அப்பொழுதுதான் அம்மாவுக்கும் வயலின் வாசிக்கத் தெரியும் என்பது தெரிந்தது. அப்பாவிடம் சொல்லவேண்டாம் என்று அம்மா கேட்டுக்கொண்டதன் காரணம் பின்னால் புரிந்தது.

மதாமை நான் பார்த்தது எனது மூன்றாவது வயதில். கோவிலில் பியானோ வாசிக்கப் புதிதாக வந்தவர். அப்பாவுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அம்மா என்னையும் வயலினையும் தூக்கிக்கொண்டுச் சென்றது. எனக்குப் பக்கத்தில் நின்றபடி அம்மா பாட, முதன்முறையாக ஒரு பொது இடத்தில் வயலின் வாசித்தேன். நான்தான் வாசித்ததாக நிறைய பேருக்குத் தெரியாது. ‘பியானோ மதாம்’ என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் பரவசமான ஒரு ஒளி. வாசித்து முடித்ததும் என்னைக் கூப்பிட்டார். நான் அம்மாவைப் பார்த்தேன். அம்மா தலையசைத்ததும் மதாம் அருகில் சென்றேன். ‘குட்டி மொசார்ட்’ என்றபடி என் இரு கைகளையும் பிடித்துத் தன் கண்களில் வைத்துக் கொண்டார். பிறகு அம்மாவும் மதாமும் பேசிக் கொண்டதும், அம்மா அப்பாவிடம் பேசிக்கொண்டதும் அதிகம் ஞாபகம் இல்லை. மூன்றாவது நாளிலிருந்து மதாம் வீட்டிற்கு மாலை நேரத்தில் இசைவகுப்புக்குச் செல்லவேண்டியிருந்தது. அம்மா அழைத்துச் செல்லும்.

வயலினும் இசையும் என் நினைவை முற்றிலுமாகச் சூழ்ந்து கொண்டதும், என் உறக்க நேரங்களில் புதிய இசைகள் தோன்ற அந்த நினைவுகளில் நான் வாசிக்க முயற்சி செய்வதை மதாம் பியானோவில் வாசித்து, எழுத்தாகக் குறித்துக் கொண்டதும் அப்பொழுது எனக்கு இயல்பாகத் தோன்றினாலும், மதாம். பெர்னாதேத்துக்கும், அம்மா, அப்பாவுக்கும் பேரதிசயமாகவே தோன்றியது. இப்படியாகத்தான் நான் இந்த வலி நிறைந்த உயிர் அரிக்கும் இசையை எனக்குள் நிறைத்துக் கொண்டதும்,ஒரு இசைக் கலைஞன் என்று பெயர் பெற்றதும் நடந்தது.

எனது நான்காவது வயதில் என்னை ஒரு அதிசயக் குழந்தையாக இசை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துவிட மதாம் செய்த ஏற்பாடுகளும், அதற்காக நான் செய்த பயிற்சிகளும் முழுமையாகப் பயனளித்திருந்தால், தற்போது நான் சிகிச்சைக்காக உங்களிடம் வருவதற்கு பதிலாக ஏதாவது அய்ரோப்பிய நாடு ஒன்றில் வரலாற்றுப் புகழ் பெற்ற மனநோய் மருத்துவமனையில் தங்கி இருக்க நேர்ந்திருக்கலாம். வான்கோ போல், ஆர்தோ போல், அல்தூஸர் போல்… மெர்ஸ்யே தொனாதேன்.
7
மரியாதைக்குரிய மதாம். பெர்னாதேத் அவர்களே! தங்கள் வளர்ப்பு மகனும்; அனாதை குழந்தைகள் இல்லத்தின் இசையாசிரியனும்; தனது வயலின் இசையால் தேவாலயத்தின் கர்த்தர் சிலையில் உள்ள காயத்திலிருந்து குருதி வடிய வைத்த அதிசய கலைஞனுமான மெர்ஸ்யே. ழீல் அமாதியே தற்போது எனது கண்கானிப்பில்தான் இருக்கிறார். தான் இருக்குமிடத்தை உங்களுக்குத் தெரிவிக்கக்கூடாது என்ற உறுதிமொழியை என்னிடம் பெற்றிருக்கிறார். உங்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களை அவருக்கும், அவர் தரும் தகவல்களை உங்களுக்கும் கிடைக்கச் செய்வதில் நான் கவனமாக இருக்கிறேன்.

நான் மனநல மருத்துவன் என்று அறியப்பட்டவன். பிராங்கோ தமிழனான நான் இதுவரை முப்பதுக்கும் மேலான நாடுகளில் பயணம் செய்திருக்கிறேன். மூன்று அய்ரோப்பிய நாடுகளிலும், இரண்டு ஆப்ரிக்க நாடுகளிலும் சில ஆண்டுகள் தங்கி பணி செய்திருக்கிறேன். என் அம்மா ஒரு பிரெஞ்சு மருத்துவர் வீட்டில் வேலை செய்தவர். அவரது இருபத்தேழாவது வயதில் நான் பிறந்தேன். கன்னிமரியாள் பெற்றெடுத்தது போல என்னைப் பெற்றெடுத்ததாக அம்மா சொல்வார். அம்மா பின்னல் வேலைகளில் கைத்திறன் பெற்றவர். தனது அய்யா வீட்டின் அத்தனைப் பொருட்களையும் துடைத்தபடி அவர் பிரார்த்தனைப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பார். மாட்டு மாமிசம் சமைப்பதில் அம்மாவைப் போல் அய்ரோப்பா முழுதும் தேடினாலும் ஆள் இல்லை என அந்த பிரெஞ்சு மருத்துவர் கூறுவார். மருத்துவர் என்னைத் தனது மகனாக என்னுடைய பதினெட்டாவது வயதில் ஏற்றுக்கொண்டார். நான் அவரைக் கடைசிவரை ‘மெர்ஸ்யே’ என்றுதான் அழைத்து வந்திருக்கிறேன். எனக்கு அவர் கற்றுத் தந்தவை பிரெஞ்சு வரலாறு, இசை, ஹோமியோபதி மருத்துவம் மற்றும் தனியே வாழ்வதற்கான மனநிலை. அம்மா எனக்குக் கற்றுத் தந்தவை எவருடைய முகத்தையும் பார்த்து அவருடைய சிந்தனை ஓட்டத்தைப் படித்துக்கொள்ளும் கணிப்பு, கண்களை உற்று நோக்குவதனூடாக ஒருவரை புற நினைவற்றவராக மாற்றி அந்தரமனதுடன் பேசும் உத்தி மற்றும் செடிகளுடன் பேசுவதற்கான சங்கேத மொழி. மெர்ஸ்யேவின் நூலகமும், அம்மாவின் பின்னல் ஓவியங்களும் வீட்டின் இரண்டு பெரிய அறைகளை நிறைத்தபடி எனது சொத்துக்களாக அமைந்தன. என்னைச் சர்வதேச உளவியல் அமைப்பு, மருத்துவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. உலகின் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகை மனநோயாளியாக அடையாளம் காண வேண்டும் என்பது அவர்களின் விதிமுறைகளில் ஒன்றாக உள்ளபோது; அந்த வகையில் மனம் என்பதுதான் முதல் நோய் என்றும், நோய் குணமாவது என்பது மரணம்தான் என்றும் நான் நம்பத் தொடங்கிவிட்டது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது. நான் எனது நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க ஒரு சமரசம் செய்து கொண்டேன். ‘சிகிச்சை என்பது ஒரு நோயிலிருந்து மற்றொரு நோய்க்கு மாற்றும் கலை’ என்ற கருதுகோளை முன் வைத்தேன். நான் கடைசியாக பாரிஸில் இருந்தபோது மருந்துகளில் இருந்து வாசனைத் தைலங்கள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்ததால் சட்டபூர்வமான நடவடிக்கைக்கு உட்பட்டு மீண்டும் பொந்திஷேரி வந்தேன். நான் மிலித்தேரியில் இருந்தபொழுது எனது ஒரு கண்ணில் மட்டும் நிறப்பார்வை இழந்தேன். தலையில் காயம் பட்டதால் ஏற்பட்டக் கோளாறில் இரண்டு காதுகள் வழியாக நுழையும் ஒலி தனித் தனியே இம்மி நேர இடைவெளிகளுடன் கேட்கும் தன்மை எனக்கு ஏற்பட்டது. இந்த இரண்டு குறைபாடுகளையும் இதுவரை நான் யாரிடமும் தெரிவித்ததில்லை. உங்களிடம் மட்டும் இதைக் கூறுவதற்குக் காரணம், ழீல் அமாதியேவுடன் எனக்கு ஏற்பட்ட நட்புக்கு இவை காரணமாக அமைந்தன என்பதனால்தான். நான் உங்களிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புவதெல்லாம் இசை ழீலை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அவரை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டும் இருக்கிறது.

ஓசைகளில் மரணமும்  அவற்றிற்கிடையே வரும் மௌனங்களில் உயிர்ப்பும் மாறி மாறி நம்மைத் தாக்குவதை நீங்கள் அறிவீர்கள்தானே. எனக்கும் ழீலைப் போலவே அச்சமாக இருக்கிறது. எனது கனவுகளில் அடிக்கடி நான் ஒரு கொலை செய்து கொண்டிருக்கிறேன். விழித்ததும் எனது கைகளை ரத்தக் கறைகளுடன் கண்டு பதறிப்போகிறேன். கழுவக் கழுவ தீராத கறை எனது கைகளில் படிந்து போயிருக்கிறது. எனது நூலகத்தில், எனது அம்மாவின் பின்னல் ஓவிய அறையில் அந்த ரத்த வாடையும், கறையும் அவ்வப்பொழுது தென்படுகிறது. நானும் என் அம்மாவைப் போல துணியை வைத்து நாள் முழுதும் அந்தப் பழமையான வீட்டையும், அதிலுள்ள ஒவ்வொரு பொருள்களையும் மீண்டும் மீண்டும் துடைத்துக் கொண்டிருக்கிறேன். ஒருமுறை துடைக்கும்பொழுது ரத்தக் கறையையும் மறுமுறை துடைக்கும்பொழுது எனது குற்றம் பதிந்த ரேகையையும் மாறி மாறி அழித்துக் கொண்டிருக்கிறேன்.

ழீல், எனது அம்மா தங்கியிருந்த கடைக்கோடி அறையில் தனது இசையை எழுதிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது எனது பியானோவையும் தனது வயலினையும் பயன்படுத்திக்கொள்கிறார். நான் உங்களை வந்து சந்தித்துவிட்டு செல்லும் ஒவ்வொரு முறையும் ழீல் உங்கள் உடல் நிலைப் பற்றி கேட்கிறார். இந்த மிகச்சிறிய நகரத்திலேயே நாம் இப்படி ஒளிந்து வாழ முடியுமா என்று எனக்கு வியப்பாக இருக்கிறது

* * * * *

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: