>சு.ரா:நினைவின் கதவுகளைத் திறந்து பார்க்கிறேன் எஸ்.ரா

>

சுந்தர ராமசாமி : நினைவின் கதவுகளைத் திறந்து பார்க்கிறேன் – எஸ்.ராமகிருஷ்ணன்

இலக்கியப் புத்தகங்களை தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த எனது பதினெட்டாவது வயதில் ஜேஜே சில குறிப்புகளை முதன்முறையாகப் படித்தேன். ஒரு நாள் மதுரையில் உள்ள புத்தகக் கடை ஒன்றில் ஜேஜே பற்றி இரண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தேன். மருத்துவம் படிப்பவர்களைக்கூட இவ்வளவு தீவிரமாக இலக்கியம் பேச வைத்திருக்கிறதே, உடனே அந்த நாவலை வாங்கிப் படிக்க வேண்டும் sura என்று முடிவு செய்து கொண்டேன்.

அதுவரை நான் வாசித்திருந்த தமிழ்நாவல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வாசிப்பு அனுபவம் தருவதாக இருந்தது ஜேஜே. பத்துப் பக்கம் படித்து முடித்தவுடன் அது தொடர்பான சந்தேகங்கள்,  யோசனைகள், வியப்பு மற்றும் காரணமற்ற கோபம் வந்துவிடும். அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பேன். பிறகு அதைத் தொடர்ந்து படிப்பேன்.

மூன்று நாட்களில் படித்து முடித்து விட்டு எனது அண்ணனின் நண்பர் ஒருவரைச் சந்தித்த போது அவர் இது கம்யூனிஸ்டுகளை கேலி செய்து எழுதப்பட்ட மிக மோசமான நாவல் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.  இரண்டு நாட்கள் அதைப்பற்றியே விவாதம் செய்து கொண்டிருந்தோம். எனக்கும் நாவலின் சில பத்திகளின் மீது கடுமையான விமர்சனமிருந்தது.

விவாத முடிவில் நானும் ஒரு நண்பனும் இது தொடர்பாக நேரடியாக சுந்தர ராமசாமியைச் சந்தித்துப் பேசுவது என்று முடிவு செய்து கொண்டோம்.

சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள், புளியமரத்தின் கதை, போன்றவற்றை முன்னதாகவே படித்திருந்தேன். அவரது மயக்கமூட்டும் எழுத்து நடையின் மீது தீராத விருப்பமிருந்தது. குறிப்பாக, காற்றில் கரைந்த பேரோசை என்ற அவரது கட்டுரையை நாற்பது ஐம்பது முறை படித்திருப்பேன். வரிகள் அப்படியே உருகி காட்சிகளாகவும் சப்தமாகவும் மனவோட்டமாகவும், உள்ளார்ந்த கேலியாகவும் மாறும் அற்புதம் அந்தக் கட்டுரையில் இருந்தது. எழுத்தின் வழியே தோழர் ஜீவாவை அருகில் அமர்ந்து கண்டது போலிருந்தது.

சுந்தர ராமசாமியின் வாக்கிய அமைப்பு ஐரோப்பிய எழுத்தாளர்களின் எழுத்தைப்போன்று தேர்ந்த சொற்களும், கவித்துவமும், காட்சிபடுத்துதலும் கொண்டது. அத்துடன் அவர் தனக்கென விசேசமான சொற்களை கொண்டிருந்தார். அதன் பிரயோகம் பல இடங்களில் வாசிப்பை மிக நெருக்கமாக்கிவிடும்.

ஜேஜே சில குறிப்புகள் வந்த பிறகு அவர் ஒரு தீவிரமான அறிவுஜீவி என்ற பிம்பம் உருவானது. அதன் முன்பு வரை இருந்த அவரது கதை சொல்லும் தன்மையிலிருந்து இது ஒரு பாய்ச்சல். தமிழ்வாழ்வு குறித்த ஜேஜேவின் கேலிகளும், சுட்டிக்காட்டுதலும் வாசக மனதில் சொல்லமுடியாத கிளர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழில் அப்படியானதொரு பிரதி அதன் முன் வந்ததேயில்லை என்பதால் அதை எப்படி எதிர்கொள்வது என்று விவாதங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.

நான் அறிந்த இலக்கிய  நண்பர்களிடம் சுந்தர ராமசாமிபற்றி விசாரித்த போது அவர் எதையும் கறாராக விமர்சனம் செய்யக்கூடிய அறிவுஜீவி என்றே தெரிவித்தார்கள். அவரைத் தேடிச் சென்று எப்படி அறிமுகம் செய்து கொள்வது என்று குழப்பமாக இருந்தது.

அந்த நாட்களில் மதுரையில் நடைபெறும் இலக்கிய விழாக்களில் நிறைய பேர் ஜிப்பா போட்டுக் கொண்டு வருவார்கள்.  ஜிப்பாவும்  ஜோல்னாப்பையும் தீவிர இலக்கிய வாசகன் மற்றும் எழுத்தாளர்களின் அடையாளமாக இருந்தது.

ஆகவே நானும் நண்பனும் கதர்க்கடையில் போய் ஆளுக்கு ஒரு வெள்ளை ஜிப்பா வாங்கினோம். அதைப் போட்டுப் பார்த்த போது தற்போது தொலைக்காட்சியில் வரும் தலிபான் தலைவர்கள் போடுவார்களே அதுபோல  முட்டிக்கால் வரை நீண்டிருந்தது. இந்தத் தோற்றத்தைக் கண்டதும் நிச்சயம் சுந்தரராமசாமி நம்மை  முக்கியமான இலக்கியவாசகர் என்று நம்புவார் என்று தோன்றியது. கறுப்பு பேண்டும் வெள்ளை ஜிப்பாவும் அணிந்தபடியே நாகர்கோவில் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்தோம்.

மதுரையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் அதிகம்  விருது நகரில் நிற்காது. ஆகவே புறவழிச்சாலையில் நின்று பேருந்தில் ஏற வேண்டும். நாங்கள் புறவழிச்சாலையில் நின்று கைகாட்டியதும் கூட்டமாக வந்த ஒரு பேருந்து நின்றது. ஏறி நின்று கொண்டோம். நண்பன் நமது ஜிப்பாவைப் பார்த்துதான் பஸ் நின்றது என்று சந்தோஷமாகச் சொன்னான். நாங்கள் பேருந்தில் நின்றபடியே ஆளுக்கு ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துப் படித்தபடியே நின்றோம். சாத்தூரை நெருங்கும் போது இரண்டு பேர் இறங்கினார்கள்.

உடனே அந்த சீட்டில் இருந்தவர் பாஸ்டர் இங்கே வந்து உட்காருங்க என்று எங்களைக் கூப்பிட்டார். அடப்பாவி, எங்களை கிறிஸ்துவ இளம்பாதிரியாக நினைத்துவிட்டாரே என்ற கோபத்தில் அதைக் கண்டு கொள்ளாமல் நின்றபடியே இருந்தோம். கண்டக்டர் சப்தமாக பாதர் அங்கே இடம் இருக்கு என்று சொன்னார்.

அப்போதுதான் புரிந்தது, அடிக்கடி திருநெல்வேலியில் இருந்து இது போன்ற வெள்ளுடை அணிந்த இளம்பாதிரிகள் பயணம் செய்வார்கள் என்று. மறுபேச்சு பேசாமல் நாங்கள் சீட்டில் உட்கார்ந்தோம். நண்பனுக்கு சிரிப்பாக வந்தது. நாகர்கோவில் போய்ச் சேரும்வரையாவது இந்த அறிவுஜீவித்தோற்றம் இருக்கட்டும் என்பதற்காக முகத்தை இறுக்கமாக வைத்தபடியே உட்கார்ந்து கொண்டோம்

நாகர்கோவிலில் போய் பேருந்து நின்றது. சுந்தர ராமசாமியின் ஜவுளிக்கடையை விசாரித்துப் போய்ச் சேர்ந்தபோது அவர் வீட்டுக்குப் போய்விட்டதாகச் சொல்லி முகவரி தந்தார்கள். நடந்தே அவர் வீட்டின் முன்பு போனோம். நண்பன் கேலியாக சுந்தரராமசாமி நம்மளை மாதிரி எத்தனை ஜிப்பா போட்ட ஆட்களைப் பாத்திருப்பாரு.. வேண்டாம் இப்படியே திரும்பிப் போயிடுவோம் அவமானப்பட வேண்டாம் என்று சொன்னான். எனக்கும் அது சரியென்றே தோன்றியது. அவர் வீட்டின் முன்பு நின்றபடியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். வாசலில் நிழலாட்டம்கூட இல்லை.

அப்படியே திரும்பி கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள டீக்கடையில் உட்கார்ந்தபடியே எப்படி அவரைச் சந்திப்பது, எப்படி வாதங்களை முன்வைப்பது என்று யோசிக்கத் துவங்கினோம். சிரில் என்றொரு நண்பனின் வீடு நாகர்கோவிலில் இருந்தது. அங்கே போய்த் தங்கிக் கொண்டு அவனிடமே யோசனை கேட்கலாம் என்று முடிவு செய்து அவன் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தோம்.

அவன், அந்த ஐவுளிக்கடைக்காரரை எதற்காகச் சந்திக்க வேண்டும், ஏதாவது கடன்பாக்கி விஷயமா என்று புரியாமல் கேட்டான். அதெல்லாம் இல்லை அவர் ஒரு எழுத்தாளர் என்றதும், அப்படியா.. யாரு சொன்னது என்று கேட்டான். எப்படி இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது என்று புரியாமல் கையில் வைத்திருந்த ஜேஜே சில குறிப்புகளைக் காட்டினோம்.

அவன் அதைப் புரட்டிவிட்டு கிறிஸ்துவரா என்று கேட்டான். இல்லை என்றதும் எங்கப்பா அந்த ஜவுளிக் கடையில் நிறைய துணி எடுத்திருக்கிறார். அவர் வரட்டும், கூட்டிக்கிட்டு போகச் சொல்றேன் என்றான்.  அது வேண்டாம், நாங்கள் இலக்கியவாசகர்கள். சந்தர்ப்பம் பார்த்து நேரில் சந்திக்கிறோம் என்று சொல்லிவிட்டு அவன் வீட்டிலே இரண்டு நாட்கள் தங்கிக் கொண்டோம்.

இரண்டு நாளும் எங்களுக்கு இருந்த ஒரே வேலை சுந்தர ராமசாமியின் வீட்டின் முன்பாக ரகசிய உளவாளிகள் போல உள்ளே யார் போகிறார்கள், வருகிறார்கள் என்பதை வேடிக்கை பார்ப்பது. அவரைப் பற்றிப் பேசிக் கொள்வது என்று நீண்டது. சுந்தர ராமசாமி வீட்டிலிருந்து கிளம்பி, கடைக்குச் செல்லும் போது அவர் பின்னாடியே நடப்போம். அவருக்கு நாங்கள் யாரோ மாணவர்கள் என்று தோன்றியிருக்கக் கூடும்.

அவர் கடைக்குப் போன பிறகு நாங்கள் அருகில் இருந்த பூங்காவிற்குப் போய்விடுவோம். பிறகு மாலையில் அவர் நடைப்பயிற்சிக்காகச் செல்லும் பள்ளி மைதானத்திற்கு போய் அவர் நடந்து செல்வதைப் பார்த்தபடியே இருப்போம். ஒரு முறை அவர் அருகில் சைக்கிளில் சென்று யாரோ போல வணக்கம் வைத்தோம். அவர் புன்னகையுடன் தலையசைத்துவிட்டுக் கடந்து போனார். அந்த உறவு ரொம்பவும் பிடித்திருந்தது.

மூன்றாம் நாளில் அவரைச் சந்திக்காமலே வீடு திரும்பிவிட்டோம். ஆனால் அவரைப் பார்த்ததும் பின் தொடர்ந்ததுமே போதுமானதாக இருந்தது.

அதன் ஒரு வருசத்திற்குப் பிறகு ஒருநாள் திடீரென சுந்தர ராமசாமியைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை அதிக மானது. தனியே போவது என்று முடிவு செய்து ஒரு நாள் மாலை ஐந்து மணிக்கு நாகர்கோவில் போய் இறங்கினேன். விடுவிடுவென அவரது வீட்டின் முகவரியை வைத்துக் கொண்டு நடந்தே செல்ல ஆரம்பித்தேன்.

வீட்டின் வெளிக்கதவு சாத்தியிருந்தது. தள்ளித் திறந்து கொண்டு உள்ளே போன போது படியில் நாலைந்து செருப்புகள் கிடப்பது கண்ணில் பட்டது. வெளியில் கிடந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். அடுத்த அறையில்தான் சுந்தர ராமசாமி யாருடனோ பேசிக் கொண்டிருப்பது போன்ற குரல் கேட்டது.

சில நிமிசங்களில் வெளியே வந்தவர் யார் நீங்கள் என்று மென்மையான குரலில் விசாரித்தார். அவரது வாசகர் என்று சொன்னேன். உள்ளே வாருங்கள்  என்று  அழைத்துக் கொண்டு போனார். அவரைச் சந்திப்பதற்காக வந்திருந்த இரண்டு மலையாளப் பத்திரிகையாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் இந்திய அரசியல் பற்றி காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அரை மணிநேரத்தில் அவர்கள் கிளம்பிச் சென்றதும் சுந்தர ராமசாமி, நான் எந்த ஊரிலிருந்து வருகிறேன். என்ன படித்துக் கொண்டிருக்கிறேன் என்று கேட்டுவிட்டு என்னைப் பார்க்கவா வந்தீர்கள் என்று கேட்டார். ஆமாம் என்றேன். சொல்லுங்க என்ற படியே நான் சொல்லிக் கேட்கத் தயார் ஆனவர் போல என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்குப் பேச்சு வரவில்லை. நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

பிறகு தைரியமாக ஜேஜே சில குறிப்புகள் குறித்து எனது அபிப்பிராயங்களை தாக்குதலாகக் கொட்டத் துவங்கினேன். மிக அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, இது எல்லாம் உங்க அபிப்பிராயம் இல்லையா என்று சொல்லிவிட்டு சிரித்தார். நிஜம்தானே. இதை ஏன் கடுமையான தாக்குதல் நடத்திவிட்டதாக நினைத்துக் கொண்டேன் என்று வெட்கமாக இருந்தது.

இலக்கியம் பற்றிய பேச்சிலிருந்து மாறி எப்படியிருக்கிறது எனது கிராமம். அங்கே உள்ள பள்ளிக்கூடங்கள் முறையாக  நடக்கிறதா?  நூலகம்  எப்படியிருக்கிறது. எதற்காக ஊருக்கு மல்லாங்கிணறு என்று பெயர் வந்தது என்று கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு அவரைத் தேடி யாரோ ஒரு தமிழ் ஆசிரியர் பார்க்க வந்தார். நாளைக்கு இருப்பீர்களா என்று சுந்தர ராமசாமி கேட்டதும் ஆமாம் என்றேன். நாளைக்கு ஆறு மணிக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு தமிழ் ஆசிரியருடன் பேசச் சென்றுவிட்டார்.

எதற்காக ஆமாம் என்று சொன்னேன் என்று யோசித்தபடியே எங்கே செல்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தேன். சிரில் வீட்டிற்குப் போகலாம்தான். ஆனால் அதை விட வேறு எங்காவது போய் இரவெல்லாம் அவரிடம் என்ன பேசுவது என்று திட்டமிடலாம் என்று கன்னியாகுமரிக்கு பஸ் ஏறினேன்.

கடற்கரையில் அதிகக் கூட்டமில்லை.  மணலில் விரல்களால் எதையோ எழுதுவதும் அழிப்பதுமாக அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.  பிறகு எழுந்து கன்னியாகுமரியின் கடைத்தெருக்களில் சுற்றியலைந்தேன். இரவில் காற்று ஏகமாக வீசியது. இருளில் கடல் மெல்ல கண்பரப்பிலிருந்து மறைந்து கொண்டிருந்தது.

இயக்கம் ஓய்ந்து போன காந்தி மண்டபத்தின் முன்னால் நின்றபடியே எதற்காக நான் சுந்தர ராமசாமியை மறுபடியும் பார்க்க ஆசைப்படுகிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். இரவில் எங்கே போவது என்று தெரியவில்லை. அங்குமிங்குமாக அலைந்தேன். பிறகு சுற்றுலாப் பேருந்துகள் நிறுத்துமிடத்தின் அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டேன். பின்னிரவு வரை இருளுக்குள்ளாகவே இருந்தேன். மனது நிலை கொள்ள மறுத்து எதை எதையோ நினைத்துக் கொண்டிருந்தது.

திருச்சியில் இருந்து வந்த பேருந்து ஒன்று பின்னிரவில் வந்து நின்று அதிலிருந்து பள்ளிமாணவர்கள் உற்சாகமாக இரவில் கடலைப் பார்க்க நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அந்த பெஞ்சிலே சுருண்டு படுத்துக் கொண்டேன். கடற்காற்றும் இருண்ட ஆகாசமும் நிறைய நட்சத்திரங்களும் என்னோடு இருந்தன. விடிகாலையில் குளிரத் துவங்கியது. மாலை நாலுமணி வரை என்னசெய்வது என்று புரியாமல் விழித்தபடியே இருளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சூரிய உதயம் காண்பதற்காக ஆட்கள் வரத் துவங்கியிருந்தார்கள்.

டவுன் பஸ்ஸில் ஏறி அருகில் எங்காவது போய்வரலாம் என்று தோன்றியது. ஒரு பேருந்தில் ஏறி சுசீந்திரம் என்று டிக்கெட் வாங்கினேன். பஸ் வயல்களின் ஊடே சென்று கொண்டிருந்தது. வயலின் ஊடே ஒரு மோட்டார் பம்ப்செட் ஓடிக் கொண்டிருந்தது. அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு வயலை நோக்கி நடந்து கொண்டிருந்த போது அதிகாலை சூரியன் வானில் ததும்பிக் கொண்டிருந்தது..

சீறிப்பாயும் தண்ணீரில் நீண்ட நேரம் குளித்தேன். கேள்விகேட்க யாருமில்லை பிறகு ஈs.ramakrishnanரஉடைகளுடன் அப்படியே வயல்வெளியின் ஊடே நடந்து செல்ல ஆரம்பித்தேன். மனது மிகுந்த சந்தோஷம்  கொண்டிருந்தது. அந்த ஊர் எனது ஊர் போலவும் நான் இப்போது வீடு திரும்பிக் கொண்டிருப்பது போன்றும் கற்பனை செய்த படியே நடந்தேன்.

இன்னொரு பஸ் ஏறி சுசிந்திரம் வந்த போது வெயிலேறியிருந்தது. கோவிலில் பகல் முழுவதும் உட்கார்ந்திருந்தேன். எத்தனை பிரமாண்டமான கோவில். எவ்வளவு அழகான ஊர். மதிய வேளையில்  நாகர்கோவில் பேருந்தைப் பிடித்து சுந்தர ராமசாமி வீட்டிற்குப் போய் அருகாமையில் இருந்த ஒரு டீக்கடையில் உட்கார்ந்து கொண்டேன். மாலை வரை அங்கேயே காத்துக் கொண்டிருந்தேன்.

ஆறுமணிக்கு அவர் வீட்டிற்குப் போன போது அவர் கேட்ட முதல் கேள்வி ராத்திரி எங்கே தங்கியிருந்தீர்கள் என்பதே. அவர் என் கோலத்தை வைத்து யூகித்திருக்கக் கூடும். நான் நடந்ததை எல்லாம் சொன்னேன்.

இப்படி ஊர் ஊராகச் சுற்றுவீர்களா என்று வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு உரிமையுடன், நீங்கள் என் வீட்டிலேகூட தங்கிக் கொள்ளலாம். அதில் ஒரு சிரமமும் இல்லை என்றார்.

ஒரேயொரு முறை சந்தித்துள்ள வாசகன் என்ற உறவைத் தவிர வேறு எந்த நட்புமில்லை. ஆனால் என்னை, தன்னோடு வீட்டில் தங்கிக் கொள்ளச் சொல்கிறாரே என்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று இலக்கியம் சினிமா கல்லூரி பாடம் என்று நிறைய சுந்தர ராமசாமி பேசினார். இரவு அவர் வீட்டிலே சாப்பிட்டேன். ஊருக்குக் கிளம்பிச் செல்கிறேன் என்று விடைபெற்ற போது வழியில் இறங்கிவிடாதீர்கள் என்று கேலியாகச் சொன்னார்.

விருதுநகரில் பின்னிரவில் வந்து இறங்கிய போது அப்போதே கதவைத் தட்டி நண்பர்களிடம் சுந்தர ராமசாமியைச் சந்தித்ததைப் பற்றிச் சொல்ல வேண்டும் போலிருந்தது. வழக்கமாக இரண்டாவது காட்சி பார்த்துவிட்டு வரும் நண்பர்கள் கூட அன்றைக்குப் போயிருந்தார்கள். மறுநாள் முழுவதும் அவரைப் பார்த்ததைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தது.

சுந்தர ராமசாமியைச் சந்தித்துத் திரும்பும் எவரும் பலநாட்கள் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது இயல்பு. அவரது ஆளுமை மிகவும் வலிமையானது. அதுமெல்ல நம் பேச்சில் செயலில் சிந்தனையில் கலந்து விடக்கூடியது. அந்த சந்திப்பின் பிறகு சுந்தர ராமசாமியைத் தேடித்தேடிப் படித்தேன். அவர் வாசிக்கச் சொன்ன தளையசிங்கம், ஆல்பெர் காம்யூ, எம்என் ராய் என்று அத்தனையும் படித்தேன்.

மதுரையில் நடைபெற்ற ஒரு இலக்கியக் கூட்டத்தில் சுந்தர ராமசாமி பேசுவதைக் கேட்டேன். உள்ளார்ந்த கேலியும் தான் மனதில் நினைத்த விஷயங்களை அத்தனை வலிமையோடும் தெளிவோடும் பேசிய அவரது உரை மிகவும் பிடித்திருந்தது. எப்படி ஒருவரால் மொழியை தன் கைப்பிடிக்குள் இத்தனை லாவகமாக வைத்துக் கொள்ள முடிகிறது. பழகிய குதிரை போல அவரது சிமிட்டலுக்கு ஏற்ப ஓடுகிறதே என்று வியந்தபடியே இருந்தேன்.

இரண்டு ஆண்டுகள் சுந்தர ராமசாமியைத் தவிர வேறு யாரும் முக்கியமாகப்படவில்லை. ஆங்கிலத்தில் நான் வாசித்த ஐரோப்பிய எழுத்தாளர்கள் ஒவ்வொருவருடன் அவரை ஒப்பிட்டுப் பார்த்தபடியே இருப்பேன். சில ஒப்புமைகளும் அவர்களைவிட நிறைய நுட்பமும் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

அதன் சில வருசங்களில் நான் எழுதத் துவங்கியிருந்தேன். நகர் நீங்கிய காலம் என்ற எனது சிறுகதை சுபமங்களாவில் வெளியாகி இருந்தது. அதைப் படித்துவிட்டு சுந்தர ராமசாமி ஒரு வாசகர் கடிதம் எழுதியிருந்தார். இளையபாரதி அதை ஜெராக்ஸ் எடுத்து எனக்கு அனுப்பித் தந்தார். கோமல் தொலைபேசியில் பேசி தன் வியப்பைத் தெரிவித்தார். அப்போது சென்னையில் சுற்றிக் கொண்டிருந்தேன். ஊருக்குப் போகையில் சுந்தரராமசாமியைச் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

அந்த முறை அவர் வீட்டிற்குப் போன போது மிகுந்த நட்பும் இணக்கமும் உள்ளவரை சந்திக்கச் செல்வது போன்றேயிருந்தது. அவர் அறையில் தங்கிக் கொள்ளச் செய்தார். நிறைய நேரம் பேசினேன். நிறைய அறிந்து கொண்டேன்.

சுந்தர ராமசாமி ஒரு சிறந்த ஆசிரியர். தான் சொல்ல விரும்பியதை எப்படிச் சொன்னால் மற்றவர் புரிந்து கொள்வார்கள் என்று அவருக்குத் தெரியும். அதே நேரம் காது கொடுத்துக் கேட்கக் கூடியவர். எவ்வளவு கடுமையான  விமர்சனத்தையும்  அவர் முழுமையாகக் கேட்பார். முடிவில் ஒரு சிரிப்பு. அல்லது மௌனம் . அடுத்த விஷயத்திற்குப் போய்விடுவார். தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தவர் என்பதால் அவரிடம் உலக இலக்கியங்கள் குறித்து துல்லியமான பார்வை இருந்தது. ரஷ்ய இலக்கியங்கள் குறித்து அவரோடு நிறைய பேசியிருக்கிறேன்

அதன் சில வருசங்களுக்குப் பிறகு பாம்பன்விளையில் ஒரு இலக்கியப் பயிலரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் சுந்தர ராமசாமியோடு ஒரு இரவு நிறைய பேசிக் கொண்டிருந்தேன். அன்று அவரைக் காண வந்த போது ஜிப்பா அணிந்து கொண்டு வந்து பின்னாடியே சுற்றியலைந்ததைப் பற்றிச் சொன்னேன். அவரால் நம்ப முடியவில்லை. வேடிக்கையாகச்  சிரித்தபடியே அது நிஜமான அனுபவமாக்கும். நான் அப்படி பலநேரம் கூச்சப்பட்டிருக்கிறேன். என்றபடியே நான் வந்து நின்ற கோலத்தை நினைத்து நினைத்து சிரித்தார்.

அன்றிரவு புதுமைப்பித்தன் பற்றி நிறைய அவரிடம் கேட்டேன். புதுமைப்பித்தன் படைப்புலகம் சார்ந்து  விவரிக்கும் போது அவரது மனதில் இருந்த புதுமைப்பித்தனின் சித்திரம் அவரது கண்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

சிறுவயதில் எப்போதும் வீட்டிற்குள்ளாகவே நோயாளியாக அடைபட்டுக் கிடந்து மீளமுடியாது என்ற நிலையில்  இருந்த சுந்தர ராமசாமிக்கு  இலக்கியம் உற்ற துணையாக நின்று அவரை ஒரு எழுத்தாளர் ஆக்கியிருக்கிறது. புதுமைப்பித்தன் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாடும் வாசிப்பு நுட்பமும் அவர் எந்த அளவு புதுமைப்பித்தனின் ஆளுமையில் தன்னைக் கரைத்துக்  கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்தக் கூடியது.

சிறுவயதில் கிடைக்காது போன அவரது அப்பாவின் அன்பு அவருக்குள் ஆழமான வடு போலவே பதிவாகியிருக்கிறது. ஒருவேளை அது தான் புதுமைப்பித்தன் மீது அவர் நெருக்கம் கொள்வதற்கான காரணமோ என்னவோ, புதுமைப்பித்தனும் அப்பாவின் மீதான கசப்புகள் நிரம்பியவர் தானே.

ஒவ்வொரு முறை அவரைச் சந்தித்துத் திரும்பும் போது அவரது பேச்சின் பாதிப்பு சில நாட்களுக்கு தொடர்வதாக இருக்கும். குற்றாலத்தில் நடை பெற்ற கவிதைப் பட்டறையில் அவர் கலந்து கொண்டார். நானும் கோணங்கியும் அவரைச் சந்தித்தோம். அவருக்கு மேஜிகல் ரியலிசம் மற்றும் புதிய வகை போக்குகளான கதை எழுத்தின் மீது அதிக விருப்பம் இல்லை என்பதை நேரடியாகவே தெரிவித்தார்.

எப்போதும் அவரைச் சுற்றியும் இளம்படைப்பாளிகள் பேசவும் விவாதிக்கவும் கூடவே இருப்பதும் அவர்களை அரவணைத்து முகம் கோணாமல் அவர் பேசுவதும், உறவு கொள்வதும் ஒரு எழுத்தாளரின் ஆளுமை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் போலிருந்தது.

எழுத்தாளர்கள் வாசகர்கள் ஆசிரியர்கள் என்று தேடித்தேடிப் பார்த்த ஆளுமை சுந்தர ராமசாமி. எல்லா நாட்களிலும் அவரைச் சந்திக்க யாராவது இருந்து கொண்டேயிருப்பார்கள். தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் அவரது எழுத்தும் இலக்கிய உறவும் இருந்த காரணத்தால் அவர்களும் சுந்தர ராமசாமியைத் தேடி வந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.  ஒரு எழுத்தாளன் மீது இத்தனை பேர் அக்கறையும் ஆர்வமும் கொண்டது இவர் ஒருவருக்கே.

அது குறித்து அவர் ஒரு போதும் பெருமிதம் கொண்டவரில்லை. தன்னைத் தேடி வரும் இளம்வாசகன் மீது தான் அவரது முக்கிய கவனம் இருந்தது. அப்படித் தேடி வந்த பலரை அவர், தொடர்ந்த சந்திப்பு மற்றும் உரையாடல்களின் வழியே எழுத்தாளர்களாக்கியிருக்கிறார்.

குற்றாலத்தில் நடைபெற்ற  கவிதைப்பட்டறையில் கட்டுடைப்பு மற்றும் அமைப்பியல் சார்ந்த அணுகுமுறைகள் குறித்த விவாதங்கள் தீவிரமாக நடைபெற்றன. அவர் அதை விரும்பவில்லை என்பதோடு அது கவிதை வாசிப்பதற்கு எதிரானதாக இருக்கும் என்று கடுமையாக விவாதம் செய்தார். அன்று மதியம் சாரல் அடிக்கும் குற்றாலத்தின் சாலையில் அவரோடு  ஈழத்து இலக்கியம் குறித்து நிறைய பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஈழக் கவிதைகள் அளவிற்கு உரைநடை தன்னைக் கவரவில்லை என்றதோடு தளையசிங்கத்தை ஏன் வாசிக்க வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார்.

சென்னையில் அவரது மகன் கண்ணன் திருமணம் நடைபெற்ற நாளில் நண்பர்களுடன் சென்றிருந்தேன். அன்று அவரும் ஜெயகாந்தனும் ஒருவர் கையைப் பிடித்து மற்றவர் உரிமையுடன் பேசிக் கொண்டிருந்தை அருகில் நின்றபடியே பார்த்த போது சொல்லமுடியாத சந்தோஷம் உருவானது. அன்று பார்த்த சுந்தர ராமசாமியிடம் முன் ஒரு போதும் நான் கண்டிராத நெகிழ்வும் சந்தோஷமும் இருந்தது. அவரது சிரிப்பில் அது முழுமையாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

அதன் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவல் வெளியான போது அது என்னைக் கவரவில்லை. அதன் மீது எனக்கு அதிருப்தியிருந்தது. அதை அவரிடம் தெரிவித்தேன். அத்துடன் ஒரு இலக்கியக் கூட்டத்தில் நேரடியாக அதை விமர்சனம் செய்து பேசினேன். அவரும் உப பாண்டவம் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால் இந்த விமர்சனங்கள் எதுவும் அவரோடான உறவிற்கு எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை. அவரை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு அவரது உணவு மேஜையில் ஒன்றாகச் சாப்பிட்டிருக்கிறேன். அவரிடம் எவ்விதமான விரோதம் பாராட்டுதலும் இருந்ததில்லை.

எனது நெடுங்குருதி நாவல் வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்திருந்தேன். நாவலைப் படித்துவிட்டு எந்தப் பதிலும் சொல்லாமல் இருந்தார். இரண்டு முறை அவரிடம் போன் செய்து அதைப் பற்றிக் கேட்டேன். தான் ஒரு கட்டுரையாக அதை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். நிகழ்ச்சி நடைபெற்ற நாளின் காலையில் அவருக்கு எதிர்பாராத உடல் நலமற்று போனது உடனே தொலை பேசியில் அழைத்து தன்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை என்று சொன்னதோடு தனது கட்டுரையை ஒரு நண்பர் வசம் அனுப்பி அதை நான் படிப்பதற்காகத் தந்தார்.

அவருக்கு நாவல் பிடித்திருந்தது. ஆனால் பிடித்திருந்த விஷயம் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்வதில் பரபரப்பு கொள்ள வேண்டியதில்லை என்பதில் தான் அவரது சுபாவம் இருந்தது.

ஒவ்வொரு முறை சுந்தர ராமசாமி சென்னைக்கு வரும்போது அது இலக்கிய உலகில் மிகுந்த கவனத்திற்கு உரிய ஒன்றாக இருந்தது. அவரைச் சந்திப்பதற்கு விரும்பியவர்கள், சந்தித்தவர்கள் என்று அதைப்பற்றியே ஒருவார காலம் பேசிக் கொண்டிருப்பார்கள். ஊடகங்களில் அதிகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத ஒரு எழுத்தாளருக்கு இத்தனை தீவிரமான இலக்கிய வாசகர்கள் இருப்பதும் அவர்களுடன் இணக்கமான உறவும் அன்பும் கொண்டிருப்பதை வியப்போடு பார்த்துக் கொண்டிருப்பேன்.

காலச்சுவடு நடத்திய தமிழ் இனி கருத்தரங்கின் பின்பு அவரைப் பார்ப்பதில் இருந்து மெல்ல விலகத்துவங்கினேன். ஒரு முறை என் எதிரில் புத்தகக் கண்காட்சிக்குள் அவர் சென்று கொண்டிருந்த போது அவரை விலக்கி கடந்து போனேன். ஏனோ அவருடன் காரணமில்லாமலே ஒரு பிரிவு ஏற்பட்டது. யோசித்துப் பார்க்கையில் ஒவ்வொருவரும் சுந்தர ராமசாமியுடன் உள்ள தனது உறவு தனக்கு மட்டுமேயானதாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறோமோ என்றுகூடபடுகிறது. அப்படித் தான் நானும் நினைத்தேனா என்று துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் காரணமற்ற மனத்தடை அவரை விட்டு விலகச் செய்தது.
அவரை நிறைய கேலியும் விமர்சனமும் செய்திருக்கிறேன். சில நேரங்களில் அது மிகக் கடுமையாகவும் இருந்திருக்கிறது. ஆனால் அவர் அதை உள்வாங்கிக் கொண்டு விலகியே இருந்தார்.

நீண்ட நாட்களின் பின்பு அசோக மித்திரன் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் அவரை சில நிமிசங்கள் சந்தித்தேன். மிகுந்த அக்கறையும் உரிமையும் கொண்டவராக எப்படியிருக்கிறேன் என்று விசாரித்துக் கொண்டிருந்தார். பேச்சின் ஊடாக வெளிப்படும்  கேலி அன்றும் அவரிடம் இருந்தது. இரவில் அவரை அறையில் சந்திக்கலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் நான் விருப்பமற்று இருந்துவிட்டேன்.

அதன்பிறகு அவரது மரணம் பற்றிய செய்தி மட்டுமே வந்தது. யாரைத் தேடிச் சென்று வீட்டின் கதவுகளின் முன்பாகக் காத்திருந்து காத்திருந்து சந்தித்தேனோ அதே வீட்டிற்கு அவரது மரணத்தின் பொருட்டு செல்வதற்கான துணிச்சல் என்னிடம் இல்லை.

அத்துடன் மனம் அவரது மரணத்தை நம்ப மறுத்தது. அவரது இறுதி நிகழ்விற்குச் சென்று வந்த நண்பர்கள் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். என் கனவில் நான் சுந்தரராமசாமியின் வீட்டில் முன்னால் காத்துக் கொண்டேயிருந்தேன். அவரோடு சேர்ந்து நடந்தேன்.  பல நாட்களுக்கு அவரது இணக்கம் அவரது அன்பு என்று மனது துக்கம் ஏறி விடுபடமுடியாமலே  இருந்தது,

இரண்டு ஆண்டுகளின் முன்பாக ஒரு நாள் காரில் கன்னியாகுமரி போயிருந்தேன். வழியில் அவரது வீட்டினைக் காணவேண்டும் போலிருந்தது. கோட்டார் சாலையில் சென்ற போது அவர் வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்தது. அவர் இல்லாத வீட்டின் வெளியே காரிலிருந்து இறங்கி இந்த நேரம் சுந்தர ராமசாமி என்ன செய்து கொண்டிருப்பார் என்று நினைத்தபடியே அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே நடந்து வரக்கூடும் என்பது போலவே இருந்தது. பத்து நிமிசங்கள் அந்த வீட்டினையே பார்த்தபடி நின்றிருந்தேன்.

எவ்வளவு இலக்கிய உரையாடல்கள்,  விவாதங்கள்,  படைப்புகள் அத்தனையும் அங்கிருந்து தானே உருக்கொண்டிருக்கிறது. எத்தனை இலக்கிய வாசகர்கள் வந்து போன இடம். கனவுகளும் நிஜமும் கலந்து உருவான வெளியல்லவா. பார்க்கப் பார்க்க மனம் வலியேறத் துவங்கியது. அங்கிருந்து திரும்பிச் செல்ல ஆரம்பித்தேன்.  இன்றுவரை சுந்தர ராமசாமி வீட்டிற்கு மறுபடியும் செல்லவேயில்லை.

சுந்தர ராமசாமி தமிழ் இலக்கியத்தில் தனித்துவமிக்க ஆளுமை. அவரது அக்கறைகள் இலக்கியம் சார்ந்தவை மட்டுமில்லை. தனது சமகாலச் சூழல் குறித்து தீவிர அக்கறையும் அவதானிப்பும் அவரிடமிருந்தது.  அவர் சார்ந்த பதிவுகள் தமிழில் எழுதும் பலருக்குள்ளும் தீராத நினைவுகளாக உள்ளது. அவரது படைப்புலகம் சார்ந்த மறு பார்வைகள், விமர்சனங்கள் யாவும் இருந்த போதும் அவரது உறவும் நெருக்கமும் எழுத்தின் வழியே கிடைத்த அரிய அன்பு என்றே சொல்வேன்.

நன்றி:  உயிர்மை

Advertisements
Comments
2 Responses to “>சு.ரா:நினைவின் கதவுகளைத் திறந்து பார்க்கிறேன் எஸ்.ரா”
  1. >அருமையான பதிவு !

  2. >பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: