>மெளனியுடன் நேர்காணல்: கி. அ. சச்சிதானந்தம்

>

தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் தனிச் சிகரமாக ஓங்கி நிற்கும் மெளனி அவர்கள் அறுபதாண்டுகள் அண்மையில் நிறைவெய்தினார். சிதம்பரத்தில் வாழ்ந்து வரும் அவரை ஒருதடவை சந்தித்தாலே போதும், அவருடைய தும்பை மலர் போல் வெண்ணிறமான, அடர்ந்து திமிறி நிற்கும் தலைமுடியும்; சிற்பியின், ஓவிய விரல்களில் தினவு எடுக்கச் செய்யும் முகபாவமும், அவரின் உரையாடலும், அவரது உயர்ந்த கலைப்படைப்பைப் போலவே பசுமையாக நினைவில் நிற்கும்.

மெளனி அவர்கள் கணிதத்தில் பட்டம் பெற்றவர். ஆழ்ந்த இலக்கிய ஞானம் உடையவர்; சங்கீதத்தில் பயிற்சி கொண்டவர்; தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்; மெளனியின் ஆளுமை,mowni4   கணிதத்தால் ஏற்பட்ட அறிவுநுட்பமும், சங்கீதத்தால் உண்டான கலையுணர்வின் நளினமும், இலக்கியத்தால் வந்த கற்பனையும், தத்துவம் அளித்த தீர்க்க முடியாத தாகமும், இத்தனையும் உள்ளடக்கியது. அவருடன் உரையாடும்போது நம் மனக்கண் முன்பு ஒரு மாபெரும் உலகம் விரிகிறது.

உயர்ந்த இலக்கியப் படைப்பு ஒவ்வொரு தலைமுறைக்கும் புதுப் புதுப் பொருளையும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தையும், ஒருத்தருக்கே வெவ்வேறு காலத்தில் வெவ்வேறாகத் தோன்றும்படி இருக்கும் என ஆங்கிலக் கவி ஆடன் கூறியிருப்பது மெளனியின் இலக்கியப் படைப்புக்கு மிகப் பொருந்தும். அவர் எழுதி அச்சில் வெளிவந்தது மிகக் குறைவுதான். ஆனால், எழுதி வைத்து அச்சில் வராதது சுமார் 2 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன!

இரு உலகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று காலத்தால் படைக்கப்பட்டது. இவ்வுலகத்தில் தவிர்க்க முடியாத தேவை, மாயை, துயரம், மாறுதல், அழிவு, இறப்பு யாவும் மாற்ற முடியாத சட்டங்களாக இருக்கின்றன. மற்றோர் உலகமோ ஊழுழியால், காலங்கடந்த நிரந்தரத்தால் படைக்கப்பட்டிருக்கிறது. இங்கே சுதந்திரம், அழகு, அமைதி கொலுவீற்றிருக்கின்றன. நம் சாதாரண அனுபவம் காலத்தால் படைக்கப்பட்ட அந்த முதல் உலகத்தில் நடைபெறுகிறது. ஆனால், அந்த இரண்டாம் உலகத்தின் காட்சி, தற்செயலான சுயமாய் எழும் நினைவாலும், ஆழ்ந்த த்யான உணர்வாலும், தோன்றும்போதே மறையும் அந்தக் காலத்துளிகளில், கணங்களில் புனையா ஓவியம் போல் தெரிகிறது. மெளனி என்னும் மாபெரும் கலைஞன் அந்தக் காலத்துளிகளின் மின்னொளியைப் பிடித்துக் காலத்துக்கு உட்பட்ட இவ்வுலக அனுபவத்தின் மேல் பாய்ச்சுகிறார். ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்றாரே அந்த நிழல்களின் மேல் தெரியும் வினா விடைகளைக் காணலாம்.

தங்கள் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களாகவும், இலக்கியத் துறையுடன் தங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது பற்றியும் தீபம் வாசகர்களுக்குத் தெரிவிக்கலாம் அல்லவா?

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில், ஆங்கில இலக்கியத்தையும் பிற பாஷைகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட உலக இலக்கியங்களையும், படித்து உணர்ந்து ரஸிக்கும் ஆர்வம் பலரிடம் இருந்தது. அவர்களில் நானும் ஒருவன். ஒருவகையில் என் மனோபாவத்தைப் பொறுத்து, ஏன் நாமும் அதைப் போலத் தமிழில் எழுத முயலக் கூடாதென்பதின் விளைவாக என் எழுத்து தோன்றியது போலும். வேறு ஒரு வகையிலும், நான் ஏன் அப்போது எழுத ஆரம்பித்தேன் என இப்போது என்னால் அனுமானிக்க முடியவில்லை. 1934லிலிருந்து முடிவிற்குள், அநேக அரைகுறை கதைகளையும், பூர்த்தியாகாத நான்கு ஐந்தையும், ஒரு நெடுங்கதையும் எழுதிவிட்டேன். என்னைப் பொறுத்த மற்றொரு விஷயம், உருவாகிவிட்டதென்பதற்கு, அச்சுக்குப் போகும் வரையிலும் பலப்பல உருமாறத்தான் திரும்பத் திரும்ப எழுதுவது வழக்கம். இவ்விதமான என் வழக்கத்தினால் என் கதைகள் ஒன்றுக்கும் ஒரு நகல் எனச் சொல்லும்படி என்னிடம் ஒன்றும் இருந்ததில்லை. அச்சில் வந்து எனக்கு அனுப்பிய பிரதிகளையும் நான் கவனமாகக் காப்பாற்றுவது கிடையாது… 1959ல் என் கதைகளை சேகரம் செய்ய க.நா.சுவும், சி.சு.செ.யும் எடுத்துக் கொண்ட முயற்சி நான் சொல்லுவதை மெய்ப்பிக்கும்.

‘மணிக்கொடி காலம்’ பற்றித் தாங்கள் வாய்மொழியாக விளக்கிக் கொள்ள வாசகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். ஒரு சிறிது கூறுங்களேன்?

இந்தக் கேள்வியை நான் எப்படி விளங்கிக் கொண்டு பதிலளிப்பது என்பதில் கொஞ்சம் சிரமம் தோன்றுகிறது… ‘மணிக்கொடி காலம்’ என்பது 1932 – 38 வரை. (வ.ரா. பி.எஸ். ராமையா, பா.ரா. இவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு) வெளியான காலத்தைக் குறிப்பதென்று எண்ணி ‘மணிக்கொடி’யில் என்னுடைய பெரும்பான்மையான கதைகள் வெளிவந்ததென்பதை எண்ணிச் சொல்கிறேன். மேலே குறிப்பிட்ட ஆர்வங்கொண்ட அநேகருடைய கதைகள் அதில் வெளிவந்தன. அதிலும், பி.எஸ்.ரா. காலத்திலிருந்து சிறுகதைகளுக்கு எனவே வெளிவந்த பத்திரிகை என்பதில் அதிகமாகவே வந்தன. கதைகளின் புதுத் திருப்பமும், நோக்கும் அநேகர் கவனத்தை ஈர்க்க இருந்தன. அவைகளின் இலக்கியத் தராதரத்தை விமர்சகன் ஏற்று நன்கு தெரிந்து சொல்ல வேண்டியது கடமை. என்னுடையது என்பது என் அபிப்பிராயம். என் கதைகள் மணிக்கொடியில் வர நேர்ந்தது ஒரு எதேச்சையான சம்பவமெனத்தான் எனக்குத் தோன்றுகிறது. யார் யார் கதைகள் அதில் எந்த்ந்தக் காரணங்களுக்காக வெளிவந்தன என்பதை என்னால் சொல்ல இயலவில்லை. ஒருவகையில் என் கதைகள் வேறு எந்தப் பத்திரிகைகளிலும் வெளிவந்தோ அல்லது வெளி வராமலோ இருந்து இருக்கலாமெனக் கொள்ளலாம்…

தங்களுக்கும் புதுமைப்பித்தனுக்கும் நேராகவோ கடித மூலமாகவோ தொடர்பு இருந்ததா? புதுமைப்பித்தனைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?

மணிக்கொடியில் என் இரண்டாவது கதை வெளிவந்தவுடன், எங்கள் ஊர்வாசியான ந. பிச்சமூர்த்தி அவர்கள் (பழைய மணிக்கொடி எழுத்தாளர் என்பதில்) எனக்கு அறிமுகமானார். அதோடு கூட அவர் நண்பரான கு.ப.ராவும் என் வீட்டிற்கு சமீபத்தில் இருப்பவர்கள். முன்பே இவர்களைத் தெரியுமானாலும், நான் ஒரு கதாசிரியன் என்ற பாவத்தில் சொல்கிறேன். பிறகு நான் இவர்களை சந்தித்துப் பேசுவது வழக்கம். ந.பி. வக்கீலாகத் தொழிலாற்றிக் கொண்டிருந்தவர். அடிக்கடி அவரிடம் பேசுவது முடியாது. கு.ப.ரா. என்னைப் போன்றவர். அவரை அடிக்கடி சந்திக்கவும் பேசவும் வாய்ப்பிருந்தது… அநேகமாக இலக்கிய சர்ச்சைகள்தான். நானும் என்னை ஒரு விதத்தில் விமர்சகன் என்று சொல்லிக் கொள்ள உரிமை உண்டு. (அத்தொழிலை வெகுவாக என் எழுத்து வெளிவரும் முன்பு அதனிடம் உபயோகிக்கிறேன்). என் பேச்சில் சுவாரஸ்யம் கண்டவர் போலும். அதை எழுதித் தன்னிடம் கொடுக்கும்படி அநேக தரம் கேட்டதுண்டு. பேச்சுக்கும் எழுத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அடிக்கடி நான் அவரிடம் கூறுவதுண்டு.

ஒருநாள் கு.ப.ரா. என்னை ஒரு கதை எழுதிக் கொடுக்கும்படி கேட்டார். 1937ல் தினமணி ஆண்டு மலரை வெளியிடும் பொறுப்பைப் புதுமைப்பித்தன் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும், அவர் ஒரு துல்லியமான இலக்கிய உணர்வு கொண்டவர் என்றும், மேலும் அவரே ஓர் உயர் இலக்கியப் படைப்பாளி எனவும் சொல்லி, என்னுடைய கதையை அவர் போடுமாறு அவருக்கு அனுப்புவதாகச் சொல்லி கேட்டார். புதுமைப்பித்தன் பற்றியும், மணிக்கொடியில் எழுதுவதிலிருந்து எனக்குப் Sachithanantham_splபெயர் பரிச்சயம் உண்டு. எனக்கு அப்போது எழுத ஒன்றும் தோன்றவில்லை. முடியவில்லை என்று சொல்லவும் இயலவில்லை. ஆரம்ப காலத்தில் எழுதியிருந்த ஒரு அரைகுறை கதை, பிறகு எழுதிய ஒரு அரைகுறை இவைகளை ஒன்றாக சேர்த்து (பின்பகுதி முன்னாலும் முன்பகுதி பின்னாலும் எழுதப்பட்டது) ஒரு பெரிய அளவில் (எனக்கு நீள அளவில் எழுதுவது வழக்கமல்ல) ஒரு கதையை அவரிடம் கொடுத்ததுதான் ‘எங்கிருந்தோ வந்தான்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. 1939ல் ஒருதரம் சென்னை சென்றபோது அவரை நேராக சந்தித்தேன். பிறகு 1945 வரையில் அவ்வப்போது போகும்போது நேர்ந்தால் சந்திப்பது என்பதில் ஒரு நான்கைந்து தரம் சந்தித்துப் பேசியிருப்பேன். அதிகமான தொடர்பு இல்லை. எனினும் ஒருவரையொருவர் நன்கு தெரிந்து கொண்ட வகையில்தான் தோன்ற இருக்கிறது போலும். என்னைப் பற்றி 1946ல் வானொலியில் அவர் பேசியதும் எனக்குத் தெரியாது. சிதம்பரத்தில் வசித்த க.நா.சு. ‘பொன்னி’ என்ற ஒரு பத்திரிகையில் அதைக் காணா எனக்குக் காட்டியதுதான் தெரியும்.

ஒரு ஐரானிகல் ஆட்டிட்யூட் இயங்க ஒரு பிரமாதமான சாதனையைத்தான் புதுமைப்பித்தன் இலக்கியப் படைப்பில் காட்டியிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை உலகில் அவருக்கு நிச்சயம் ஒரு ஸ்தானம் உண்டு. இலக்கியப் பார்வை என்பதில் ‘ஐரானிக் ஆட்டிட்யூட்’க்கு எந்த மதிப்பு என்பது விமர்சனத்திற்கு உரியது. அவர், க.நா.சு. சொல்கிறபடி அவருடைய ‘ஐரானிக் ஆட்டிட்யூட்’ இயங்கிப் பிரமாதமான சாதனை காட்டினாலும் ஒரு பூரண இலக்கியத்தன்மை உருப்பெறாத அளவில் ‘ஒரு மேதையைத் தமிழ்நாடு இழந்தது’ எனக் கொள்வது சரி. (‘ஐரானிக் ஆட்டிட்யூட்’டில் பூரண இலக்கியத்தன்மை உருப்பெற முடியாது என்ற சித்தாந்தம் இதைவிட ஓர் உயரிய ‘ஆட்டிட்யூட்’ இருக்கிறது என்பதைக் குறிக்கும். அதில் யாராவது இருக்கிறார்களா என்பதையும் விமர்சகர்கள்தான் கூறவேண்டும்). க.நா.சு. ஒருவரின் மதிப்பீட்டை ஒருவகையில் சரி என ஒப்புக் கொள்கிறேன். ”மேதைத்தன்மையும், கலையில் ஒரு பூரணத்துவம் காண முடியாதபடிக்கும், அவருடைய தனித்துவம் காட்ட முடியாதபடியும் ஆனதற்குக் கலையாக்குவதிலும், கட்டுப்பாட்டிலும் அவர் நம்பிக்கையற்ரவராக இருந்துவிட்டதினால்தான்” என்பதை நான் வேறு ஒரு வகையாகக் காண்கிறேன். அவர் ஐரானிக் ஆட்டிட்யூட்டில் இலக்கியம் படைத்ததனால் என்று கொள்ளும்படி எனக்குத் தோன்றுகிறது. இலக்கியப்படைப்பில் ஐரானிக் ஆட்டிட்யூட்தான் சிறந்ததெனச் செயல்பட முடியுமென்பது முடியாது. இந்தப் போக்குப் புத்தியைச் சார்ந்தது என்றும் மனதை சார்ந்து முழுமனிதன் செயல்பட இடம்கொடுக்க முடியாதென்பதையும் நான் ஒருவகையில் உணர்கிறேன். புதுமைப்பித்தனுக்கு இந்த மாதிரியான உணர்வும் அடிக்கடி தோன்றியிருக்கலாம். என்னைப் பற்றிய அவருடைய மதிப்பீடு வாசகங்களினூடே அதை நான் அனுமானிக்கிறேன். ஐரானிக் ஆட்டிட்யூட்டில் உயர்வகை இலக்கியம் ஒருவகையில் முடியும் என்பதைப் புதுமைப்பித்தனைப் போல எழுதும், எழுத ஆசை கொள்ளும் அநேக படைப்பாளிகளின் தரத்தை உணரும்போது நமக்கு விளங்கும். ஐரானிக் ஆட்டிட்யூட் இலக்கிய மதிப்பு ஒருவகையில் ரிலேட்டிவ் ஆகத்தான் இருக்க முடியும். அவர் கதைகளில் காணும் ஒரு அதிசய பிரமிப்பு முழுதும் பூர்த்தியாக செயல்பட முடியாதவாறு அனுபவமாவதில், இன்னும் சிறிது காலம் இருந்து அவர் ‘போஸ்’ என இந்த ஆட்டிட்யூட் மாறி வேறுவிதமான இலக்கியம் படைத்திருப்பாரோ எனவும் நினைக்க வேண்டியிருக்கிறது. சமய சந்தர்ப்பம் சூழ்நிலை இவைகளின் நிமித்தம் உண்டாகி ஒரு ‘போஸ்’ எனத் தோன்றியது. விடாது பிடிக்கும் நிலைமை அடைந்து அதை விட்டு விலக முடியாது. மேலும் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் இந்த நோக்கிற்குச் செயல்படுகிறது என்றும் சொல்லலாம்.

தாங்கள் நீண்ட காலமாக எழுதாமலிருக்கிறீர்களே ஏன்? புதுமைப்பித்தன் தங்களைத் திருமூலரோடு ஒப்பிட்டிருக்கிறார். இனிமேல் திருமந்திரம் ஒன்றாவது கிடைக்குமா?

ஏதோ ஒரு சமயம் எழுதியவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலில் என்னை இந்தக் கேள்வி கேட்டதற்கு நான் பெருமை கொள்கிறேன். அப்போது நான் எப்படி எழுதினேன் என்பதே இப்போது எனக்குப் புரியவில்லை. எனக்கு நிறைய எழுத வேண்டும் என்ற ஆவல் எப்போதும் உண்டு. எப்படி எழுதுவது என்பது வர வர வெகு கடினமாகவே தோன்றுவதை உணருகிறேன்… இவ்வகையில் கடினமெனத் தோன்ற தமிழ்மொழி வெகுவாக என்னைப் பொறுத்தவரையில் தொண்டாற்றிக் கொண்டு வருகிறது. என்னைத் திருமூலருடன் ஒப்பிட்டது எதற்கென என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த வாக்கியத்திற்குப் பிறகு அவர் சொன்னதிலிருந்து ஒருவகை அனுமானம் கொள்ளவும் என்னால் முடியாமல் இருக்கிறது. நான் திருமந்திரம் படித்ததில்லை… புதுமைப்பித்தன் உயிரோடிருந்தால் அவரை நான் பதிலளிக்கக் கேட்டிருப்பேன்.

தற்காலத் தமிழிலக்கியம் பற்றித் தங்கள் கருத்துக்கள் யாவை?

நான் எழுதுவதை சந்தர்ப்பம் நிர்பந்தத்தினாலல்லாது பிறருக்கு தெரியப்படுத்துவது இல்லை. ஒருவகையில் நான் எழுத்தாளன் எனப் பிறருக்குக் காட்டிக் கொள்வதில் வெட்கம் கொள்ளுபவன் என வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வகையில் ஆதி நாட்களிலிருந்து என்னை எழுத்தாளனாகத் தெரிந்தவர்கள், எழுத்தாளர்களிலேயே சிலர்தான் இருக்கிறார்கள். அதாவது ந. பிச்சமூர்த்தி, பி.எஸ். ராமையா. சி.சு.செல்லப்பா, க.நா.சு., சி.சு.ம, ஆகியவர்கள்தாம். இப்போது சமீபகால இலக்கிய உலக நடப்புகளைச் சில சமீப கால நண்பர்கள் மூலம் தெரிந்துக் கொண்டதில் என் அனுமான அபிப்பிராயமெனச் (தற்கால தமிழ் இலக்கியத்தில் சிறிதுதான் பரிச்சியம்) சொல்ல, சமய சந்தர்ப்ப சூழ்நிலை சரியாகப்படவில்லை என்ற லெளகீக காரணத்தை முன்னிட்டு, முடியவில்லை என்பதற்கு மன்னிக்கவும்…

சிறுகதை இலக்கியப் படைப்பில் தங்கள் நோக்கில் தொழில் நுணுக்கங்களாக எவற்றை கூறுகிறீர்கள்?

எந்த அம்சம் தொழில் நுணுக்கமென, நான் என் சிறுகதைப் படைப்பில் கையாண்டேன் என்பது சொல்லும் வகைக்குத் தெளிவாக உணர்வு கொள்ளவில்லை. ஆனால், ஒன்று சொல்லலாம் என நினைக்கிறேன். எதைச் சொல்கிறோம் என்பது, எப்படி சொல்லுவது என்ற உணர்வுடன் கலந்து உருவாவதுதான் இலக்கியம். ஒன்றைவிட்டால் இரண்டும்கெட்டு ஒன்றுமே இலக்கியமெனத் தோன்ற உண்டாகாது.

தங்களின் இலக்கியப் பார்வை அல்லது தத்துவத்தைக் கூறுவீர்களா?

இலக்கியம் என்பதற்குப் பதில் கலை என்பதாகக் கொண்டு சிறிது கூறுவது ஒருவகையில் சுலபமாகத் தோன்றுகிறது. இது ஒரு வகையில் உங்களுக்கு ஆச்சர்யமாகப் படலாம். இலக்கியம் என்பது கலையின் ஒரு பிரிவு என்பதில்… ஆனால், இலக்கியம் என்பது வார்த்தைகள் மூலம் செயல்படுவதன் காரணமாக வார்த்தைகள் என்பது அதன் அருத்தத்தின் குறியீடு என்பதினாலும்… மொழி என்பது இலக்கியத் தத்துவத்திற்கு, என்ன உறவுடையது என்பது மிகவும் சிரமம் கொடுக்கக் கூடியது. சில காலம் முன்பு நான் கலை இலக்கியம் என்பதைப் பற்றி நன்கு உணர்ந்தவன் என்று இறுமாப்புக் கொண்டிருந்தேன். தற்காலத்தில் சில விமரிசனத் தோரணைகளும், தமிழ் மொழியில் விரிவும் நன்கு உணர ஏற்பட்டதிலும் மேலும் சமீபமாக சில ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க நேர்ந்ததாலும் இந்த எண்ணம் எவ்வளவு அறிவீனம் என்ற நினைவு ஏற்படலாயிற்று. நான் கண்ட கலைத் தத்துவம் இலக்கிய தத்துவத்துக்கு வேறு முரணாகத் தோன்றியதால் அல்ல வெளியீடு பற்றிய சிரமம், ஆங்கில மொழி விரிவையும் நம் மொழியின் குறைவையும் நான் வெகுவாக வருத்தத்துடன் காண நேர்ந்தது.

அதாவது ‘தான்’ தன்னை மங்கலாக உணர்கிறது. அது உண்மையும் அழகும் நிறைந்ததாயும் உணர்கிறது. அந்த நிறைவைத் தன் முன்னாலேயே ஒரு புறநிலைப் பொருளாக, தனக்கு எதிரான மற்றொரு ‘தான்’ ஆக இல்லாமல், பிரக்ஞை இல்லாமலே உருவாக்கிக் கொள்ளுகிறது. இப்படியாக, இந்த தான் மங்கலாக வெளிப்பட்டதை உண்மையென உணர்ந்து கொண்டே செல்லுகிறது. இந்த நிலையில் கலை, தத்துவம், சமயம் எல்லாமே ஒன்றாக இருக்கின்றன.

இலக்கியப் படைப்பில் படைப்பாளியும், இரசிகனும் ஒருவகையில் ஒன்றெனப்படுவார்கள். படைப்பாளி யாருக்காகவும் படைப்பதில்லை. இரசிகனும் பிறர் படைத்ததென உணர்ந்து படித்து இரசிப்பதில்லை… இலக்கியப் பொருள் என்றோ அழகிய பொருள் என்றோ ஒன்று இருப்பதாக எண்ணி அதைப்பற்றிச் சுற்றி வளைத்து எழுதுவது இலக்கியமாகாது… பிரத்திய அநுபவம் ஒரு நிலை ஒரு பார்வையில் கொள்வதில், அதில் ஒன்றியும், தன் மனம் புலன்கள் இரசித்து உணர்ச்சி வசப்படாது ஒரு நோக்கு காட்சியெனக் காட்டுவதுதான் உயர்ந்த இலக்கியத் தத்துவமெனப் படுகிறது.

‘தீபம்’ பற்றி தங்கள் கருத்தென்ன?

இலக்கியத் தரமான பத்திரிகை நீண்டகாலம் வாழ்ந்தது இல்லை. நீடித்து வாழ்வதெல்லாம் இலக்கியத் தரமாக இருப்பதில்லை என்று தோன்றி உருவாகிய ஒரு போலி நியதியைத் ‘தீபம்’ பொய்யாக்கும் என நம்புகிறேன்.

நன்றி: மெளனியின் கதைகள்; பீகாக் பதிப்பகம்; எண்.6, முதல் தெரு, வடக்கு கோபாலபுரம்; சென்னை – 86. விலை: ரூ: 185/

நன்றி: சிதைவுகள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: