>நினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்-ஷங்கர்ராமசுப்ரமணியன்

>

நினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்

கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் கட்டுரை நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை

‘அந்த உலகம் மிகச் சமீபத்தில் தோன்றியது. அங்குள்ள பல பொருள்களுக்குப் பெயரில்லை. அவற்றைக் குறிப்பதற்கு சுட்டிக் காட்டுவதுதான் அவசியமாக இருந்தது.’ இது மார்க்வெசின் ‘நூற்றாண்டு காலத்தனிமை’ நாவலின் தொடக்கத்தில் மக்காந்தோ ஊரைப் பற்றி வரும் சித்தரிப்பு. கவிஞர் கலாப்ரியாவின் பிராயகால நினைவுக் குறிப்புகளான ‘நினைவின் தாழ்வாரங்கள்’ நூலைப்kalapriya படித்து முடித்தபோது அதுகுறித்த பேச்சைத் தூண்டுவதற்கு இந்த விவரணை பொருத்தமாக இருக்கக்கூடும் என்று தோன்றியது.

காலமாற்றத்தில் நிலைவுடைமை சார்ந்த செல்வ வளமுள்ள ஒரு குடும்பத்தின் சிதைவுதான் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ நூலின் மையப் படிமம். படிப்படியாக சிதையும் குடும்பம் ஒன்றின் கடைசி குழந்தையாக, படிப்படியாக நேரும் இழப்புகளில் பங்கேற்பவராகவும் நுட்பமான பார்வையாளனாகவும் இந்த நினைவுக் குறிப்புகளை எழுதிச் செல்கிறார், கலாப்ரியா.

நிலங்கள் ஒவ்வொன்றாக விலையாகின்றன. குடும்பத்தின் அந்தஸ்துக்கு அடையாளமான நகைகள், பொருட்கள் விற்கப்படுகின்றன. தலைமுறை தலைமுறையாகப் புழங்கப்பட்டு குடும்ப நினைவின் ஒரு பகுதியாகவே மாறிவிட்ட, பழைய கைவினைத் திறனுக்கு சாட்சியாக இருந்த பாத்திரங்கள், ஓவியச் சட்டகங்கள் வெளியே போகின்றன. அக்காலத்தில் செல்வ வளமையின் அடையாளமாய் பாதுகாக்கப்படும் இரும்புப் பெட்டியும் விற்கப்பட்டு அது இருந்த இடமும் வெறுமையாகிறது. இது காலப்ரியாவின் அகத்தில் நடப்பது.

கலாப்ரியா, இச்சிதைவு குறித்து எழுதிச் செல்வது இறந்தகாலம் தொடர்பான ஏக்கத்தை உருவாக்கும் நோக்கத்தில் அல்ல பழம் பெருமைகளையும் மரபையும் கிண்டலுடன் சீண்டவும் செய்கிறார். வீட்டின் இரும்புப் பெட்டியில் இருந்த வெள்ளி நாணயம் ஒன்றை நண்பனுடன் சேர்ந்து விற்றுவிட்டு, புரோட்டா சாப்பிடுவதற்காக செல்லும்போது அவரால் இப்படிச் சொல்ல முடிகிறது. இதை நான் ஒரு கவிதையாக சில வார்த்தைகளை வெட்டி மடித்திருக்கிறேன். இக்காட்சியில் வரலாற்றின் இயங்கியல் போக்கு நிதர்சனமாகப் பதிவாகியுள்ளது.

நெல்லையப்பர் கோவிலின்
மேற்குகோபுர வாசல் அது
கழுவேற்றிமுடுக்கு என்று பெயர்
அங்கே எங்கு கழு இருந்தது
எனக்குத் தெரியாது

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள

ஆபிரகாம் ஓட்டலில்

ரெண்டு ரொட்டியும் 
சால்னாவும் 
90 பைசா.

தனது பழைய வீட்டின் இடிபாடுகளை உதிர்த்தபடி சமூக கலாசார மாற்றங்கள் சுழிக்கும் முச்சந்தி வெளி அவனை வசீகரிக்கிறது. அங்கே பழையவை, கனத்த நினைவுகளுடனும் துக்கத்துடனும் தன்னுடன் சேர்ந்திருக்கும் கதைகளை மிச்சம் வைத்துவிட்டு மறைந்து கொண்டிருக்கின்றன.
கலாப்ரியா என்ற கவிதை ஆளுமையின் நிகழ்வு, தமிழகத்தில் சமூக அரசியல் கலாசாரத் தளங்களில் ஏற்பட்ட குறிப்பிட்ட எழுச்சி மற்றும் பண்பு மாற்றங்களுடன் தொடர்புடையது. நிலவுடைமை சார்ந்த மதிப்பீடுகளும் உற்பத்தி உறவுகளும் பலவீனப்பட்டு, நவீன மயமாதலும் அதுசார்ந்த மதிப்பீடுகளும் எழுச்சிபெறும் காலம் கலாப்ரியாவினுடையது. சமத்துவத்தை வலியுறுத்தி பகுத்தறிவு இயக்கம் முன்னெடுத்த வெகுமக்கள் எழுச்சியும் அதுபெற்ற அரசியல் அதிகாரமும், சமூகப் பிரிவினைகளைத் தளர்த்தி நவீன கல்வியின் மூலம் கடைப்பட்டோரும் மேம்படும் வழிகள் திறக்கப்பட்ட சரித்திர நிகழ்வு அது. இக்காலகட்டத்தில் தான் பாகுபாடுகள் நிலவிய மரபான பொதுவெளிகள் உணவு விடுதிகள், திரையரங்குகள், பொருட்காட்சிகள், அரசியல் மேடைகள் ஆகியவை உருவாகின்றன. புதிய வண்ணங்களுடன் புதிய துக்கம் மற்றும் பிறழ்வுகளுடன் குறுக்குமறுக்கான உறவுச் சமன்பாடுகள், கொண்டாட்டங்கள், பிரத்யேகச் சடங்குகள் மற்றும் குழுக்குறிகள் தோற்றம் கொள்கின்றன. (அப்போது அறிமுகமான பொருட்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் திடத்தன்மை இருந்தது. விநோதத்தின் கண் சிமிட்டலுடன் அவை இருந்ததை உணரமுடிகிறது.) இந்நிகழ்வுகளில் சராசரி பங்கேற்பாளனாகவும் நுட்பமான பார்வையாளனாகவும் ஒரு சாதாரணனாக கலாப்ரியா கரைந்திருக்கிறார். அக்காலத்திய சினிமா, அரசியல், மாணவர் போராட்டம், தெரு அரட்டை தொடங்கி குடி, பெண்கள் உள்ளிட்ட சில்லறைச் சல்லித்தனங்கள் வரை தன் பிராயகால நினைவுகளாக எழுதிச்செல்லும் கலாப்ரியா, ஒரு காலகட்டத்து தமிழ் இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிப்பவராகிறார்.

ஒரு தேவாலயத்தில் பிரார்த்திக்கும் அனுபவத்தைப் போல், கூட்டு மன எழுச்சியையும் சந்தோஷத்தையும் அனுபவ பகிர்வையும் சாத்தியப்படுத்தி, பின்பு மொத்தமாக தமிழ் வாழ்வையே நிர்ணயிக்கும் மதமாகவே மாறிப்போன சினிமாவின் வெகுஜனக் கலாசார வரலாறை ஒருவர் இதில் வாசிக்க இயலும். இந்த கூட்டு மன எழுச்சியையும் ஞாபகங்களையும் பொருத்தமான பழைய பாடல் வரிகளினூடாக எழுப்ப முயல்கிறார், கலாப்ரியா. பொதுவாக கவனிக்கப்படாத சினிமா சுவரொட்டி வடிவமைப்பாளர்களின் பெயர்கள் முதல் ஒலிப்பதிவாளர்கள் வரை விஸ்தாரமாக இந்நூலில் சர்ச்சிக்கப்படுகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ் நினைவு மீது சினிமாவைத் தவிர வேறு எதுவும் இத்தனை தாக்கத்தை செலுத்தியிருக்குமா என்பது கேள்விக்குரியது. இந்தப் பொதுநினைவின் சாராம்சமாக விளங்கும் கலாப்ரியாவின் இந்த நூல் தமிழ் வாசகர்களை மிகவும் வசீகரிக்கக்கூடியது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஒவ்வொரு ரயில் நிலையமாகச் சென்று தாரால் இந்திப் பெயர்களை அழித்தபடி மாணவர்கள் திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை நோக்கி செல்கிறார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் மாணவர்கள் படிப்படியாக குறைந்து செங்கோட்டை வரும்போது கலாப்ரியாவும் அவரது நண்பர்கள் ஓரிருவர் மட்டுமே மிஞ்சுகிறார்கள். எங்கு போவது என்று இலக்கில்லாமல், நடக்கிறார்கள். தார்மீக உணர்வும் லட்சியங்களும் தோற்றுப்போய் இலக்குகளற்ற அவநம்பிக்கையின் பாதை அந்த இளைஞர்கள் முன்பு விரிவதை எந்த கூடுதல் அழுத்தமும் இல்லாமல் உணர்த்திச் செல்கிறார்.

பழைய மதிப்பீடுகளும் பழைய உணர்வுகளும் அங்கங்கு கண்ணாடித்தூசி போல் துக்கத்துடன் அனைத்தின் மீதும் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை உண்டு. நிலவுடைமை சார்ந்த குடும்பங்கள் சிதையும் போக்கிலேயே, பாரம்பரிய ஞானம் என்பது போஷிப்பவர்கள் இல்லாமல் விழிபிதுங்கி நிற்கிறது. அதையே வாழ்க்கை முறையாகவும் அடையாளமாகவும் கொண்ட தொழிலாளர்களும் கைவிடப்படுகின்றனர். கல்தச்சர்கள், கண்ணாடிக்கு ரசம் பூசுபவர்கள், கைமருத்துவம் பார்க்கும் குறவர்கள் தங்கள் சுயத்துவம் கூடிய படைப்பழகு துறந்து காலத்தின் பொது வெயிலில் ஆவியாகின்றனர். அவர்களுக்கேயுரிய புராணிகங்களை வரலாற்றைச் சுமப்பதுபோல் கவிஞன் இந்நூலில் சுமந்து திரிகிறான். ஆடியிலிருந்து சுரண்டி எடுக்கப்பட்ட பாதரசத் தூசிகளின் மினுமினுப்பு போல கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் நூலில் அவை சேகரமாகியிருப்பது அழகானது. ஏனெனில், துக்கம் அனைவருக்கும் பொதுவானது. சந்தோஷங்கள் தனிப்பட்டவை.

இதன் நடுவில் ஆலங்கட்டி மழை வீடுகளுக்கு இடையே பெய்கிறது. அபூர்வமாகப் பெய்யும் ஆலங்கட்டியைப் பகிர்வதில் ஸ்பரிசிக்கவே இயலாத ஆண் பெண் கைககள் தொட்டு உறவாடுகின்றன. ஆலங்கட்டியைப் போன்ற கணநேரக் காதல் புதியதா, பழையதா என்று தெரிவதற்குள் கரைந்துவிடுகிறது. மற்றாங்கே கவிதையில் முழுமையடையாத தாபமாக மழை தகரத்தில் உக்கிரமாகப் பெய்கிறது.

ஒரு புனைவில் கவிஞனின் கண்கள் எங்கு பதிந்திருக்கின்றன. அவை எதை அடிக்கோடிடுகின்றன என்பதைப் பார்ப்பது எனக்கு மிக சுவாரசியமான அனுபவமாக இருந்தது. நவீன கவிதையில் துல்லியமான நிலவியல் அடையாளத்துடன் சமகால வாழ்வின் உக்கிரமான சித்திரங்களாலான யதார்த்தத்தை தீவிர அங்கதத்துடன் முன்னுரைத்தவை கலாப்ரியாவின் கவிதைகள். புகைதையில் புதுமைப்பித்தனுக்கு சமமான சாதனை இது. மற்றவர்களும் மற்றவையின் இருப்பும் துள்ளத்துடிக்க இவர் கவிதைகளில் தான் முதலில் இடம்பிடித்தன. தன்கால வாழ்வுக்கு எதிர் வினையாற்றி, ரௌத்ரம் கொண்ட தமிழ் இளைஞன் ஒருவனின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முதல் வெளிப்பாடு அது.

மாறும் காலத்தின் கோலத்தில் சகலமும் எனக்கு ஊறுவிளைவிக்கலாம் என்று பசியற்ற காகங்களைத் தன் மூளையைக் கொத்த அனுமதித்தவர் கலாப்ரியா. பிறரின் துக்கம் தன் அனுபவத்தின் மீது ஏறி கலவரம் புரிய, புறக்கடைகளில் நரகலையும் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளையும் மிதித்தபடி சோரங்கள், இழப்புகள், அபத்தங்களை, மறைபகுதிகளை தரிசிக்க நேர்ந்த வலியிலிருந்து ரத்தத்தால் எழுதப்பட்டவை அவர் கவிதைகள்.

நினைவுதான் மரணத்தைவிட நம்மை வெகுவாகப் பீதியூட்டுவது, கலாப்ரியாவின் சசி குறித்த நினைவுதான் அவரது மொத்தப் படைப்புலகுக்கான முன்னிலை. சசி கிடைக்காத துக்கம், மரண பீதி போன்று அவரை வெளியே விரட்டி சகலவற்றின் மீதும் படிந்து, சகலரின் துக்கத்தையும் அவர் துக்கமாக மாற்றுகிறது. அது தோல் உரிந்த நிலை. கிட்டத்தட்ட பைத்தியத்திற்கு பக்கத்தில் உள்ள நிலை. கலாப்ரியா மிகுந்த உயிர்ப்புடன் படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருந்தபோது எழுதிய கவிதைகள் இப்போது வாசிக்கும் வாசகனைக்கூட நிலைகுலையச் செய்யும் வன்முறையும் தீவினையின் வேகமும் கொண்டவை.

திருநெல்வேலி என்னும் நிலவியலின் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ நூலை வாசித்த அனுபவத்திலிருந்து, புதுமைப்பித்தனிலிருந்து விக்ரமாதித்யன் வரை இந்த நிலத்தின் படைப்புக் குழந்தைகளை பிணைக்கும் சரடு என்ன? இவர்களின் ஆதார மனவுலகம் எப்படி உருவாகிறது என்பதைப் பார்ப்பது முக்கியமானது.

திருநெல்வேலியின் மனநிலப் பரப்பு கோவிலுக்கும் ஆற்றுக்கும் இடையில் இருப்பது. சமயமும் தத்துவமும் சேர்ந்து வீடுகளுக்கு இடையே நெகிழாத சுவர்களை ஏற்படுத்தி, ஒருவரின் தனிமையைக் கூடத் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. காமமும், தாபமும் புணராமல் வெயிலில் முறுகிக் கொண்டிருக்கும் இடம் அது. தன் அனுபவமே கற்பிதமோ என்ற மயக்கத்தில் ஆறு இருக்கிறது… இல்லை… தேர் இருக்கிறது… இல்லை… வாழ்வு இருக்கிறது… இல்லை என்ற கயிற்றரவு மனநிலையிலேயே நீடிக்கிறது. லோகாதாயமான கனவுகள் இல்லாத நிலையில், அந்த இடம் படைப்பு என்னும் கனவு வழியாகவே தன்னைத் தொடர்ந்து ஆற்றிக்கொள்ளவும் உரையாடவும் செய்கிறது.

சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் புதிய தொழில்கள் மற்றும் பொருளா34838_105318686188593_100001313875575_44080_6688702_nதாரம் சார்ந்து அபிவிருத்தி அடைந்த பல நகரங்களுக்கு ஈடாக அது எந்த மாற்றங்களுக்கும் உட்படவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் இங்கு ஏற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மட்டுமே திருநெல்வேலியை நிகழ்காலத்துக்குள் வைத்திருக்கிறது. இங்கு கல்விபெற்ற இளைஞர்கள் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கும் நிலையில், அது கோபுரத்தின் பழைய  நிழலுக்குள்ளேயே மறைய முயற்சித்துக் கொண்டிருக்கிறது. புதுமைப்பித்தன், வண்ணநிலவன், கலாப்ரியா, விக்ரமாதித்யன் படைப்புகளில் விசாரணையாகவும் காதலாகவும் அவலதரிசனமாகவும்  கழிவிரக்கமாகவும் வெளிப்படுவது திருநெல்வேலியிலிருந்து மீறத்துடிக்கும் எதிர்வினைதான்.

பண்டிகை காலங்களில் ஏகாந்தத்திற்காகவும் சில நேரம் துக்கத்துடனும் நான் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்றிருக்கிறேன். ஊரே பண்டிகையில் திளைத்துக் கொண்டிருக்க, நண்பகலில் குறுக்குத்துறை படித்துறையில் யாரோ ஒருவராவது தனிமையில் துணியை அடித்துத் துவைத்துக்கொண்டிருப்பார். வட்டப்பாறையில் துவைக்கும் சப்தம் கோவில் மண்டபத்தில் எதிரொலிக்கும். அங்கே யாராவது துவைத்துக்கொண்டிருந்தால் அது கிழக்கே இருக்கும் ரயில் பாலத்துக்கு எதிரொலிக்கக்கூடும். நட்டநடு வெயிலில் யாருமற்ற ஆற்றில் ஒருவர் துணி துவைக்கும் சப்தத்தில் விளக்க இயலாத தனிமை உள்ளது; அபத்தம் உள்ளது; தீவிரமான தனிமையை உணர நேரும் மரண பிரக்ஞை உள்ளது. இந்த சப்தத்தை பேராச்சி அம்மன் கோவில் படித்துறையில் அமர்ந்து புதுமைப்பித்தனும் ஒரு வேளை கேட்டிருக்கக்கூடும். அவரது ‘செவ்வாய் தோஷம்’ கதையில் ரத்தக்காட்டேரி அடித்து இறந்துபோன நபரின் சடலம் புதைக்கப்பட்டு ஒருவாரத்துக்குப் பிறகும் ரத்தம் உறையாமல் இருக்கிறது. படைப்பென்னும் ரத்தக் காட்டேரியால் தீண்டப்பட்டது இவர்கள் தான் போலும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: