>ந.முத்துசாமி:நரையேறும் காலம்: எஸ்.ரா

>

‘நரையேறும் காலம்’- கதாவிலாசம்- எஸ்.ராமகிருஷ்ணன்

காலை நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது வழியில் தினமும் அவர்கள் மூவரையும் பார்ப்பேன். எழுபது வயதான ஒரு பெரியவர், நாற்பது வயதான குள்ளமான மனிதர், பதினாறு வயதுப் பையன். மூவரும் ஒரே விதமான ஷ¨, வெள்ளை நிற பேன்ட், டி&ஷர்ட் அணிந்திருப்பார்கள். அவர்களில் குள்ளமானவர் வழி முழுவதும் பேசிக்கொண்டே வருவார். பதினாறு வயது பையன் அவர்களோடு நடப்பதை விலக்கி தனியே ஓடத் துவங்கிவிடுவான். அப்போது நடுத்தர வயதுக்காரர் சப்தமாக ‘கோவிந்த் வெயிட்’ என்று உரத்த குரலில் கூப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். அவன் அதைப் பற்றிய லட்சியமேயின்றி தனியே அதிகாலை வெளிச்சத்தில் ஓடுவான்.

வயதானவர் மிக மெதுவாகத்தான் நடப்பார். சாலைக்கடைகளில் தொங்கும் தினசரிகmuthuswamyளின் போஸ்டர்களை அருகில் சென்று வாசித்த பிறகே கடந்து வருவார். இது அந்த நடுத்தர வயதுக்காரருக்குப் பிடிக்கவே பிடிக்காது. சாலையைக் கடந்து வந்து அவரது கையைப் பிடித்து  இழுப்பார். ‘என்ன பழக்கம்ப்பா இது? அதான் வீட்ல ஹிண்டு வருதே. அதைப் படியேன்’ என்பார்.
பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் சாலை முனை வரை நடந்து அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்திற்கு வந்து சேர்வார்கள். அங்கிருக்கும் பெஞ்சில் சில நிமிடங்கள் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்தும்போது பெரியவருக்கு அவர் ஒரு நாள் முழு வதும் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை நடுத்தர வயது நபர் குழந்தைக்குச் சொல்வதுபோலச் சொல்வார்.

‘டிபன் சாப்பிட்டு பேங்க்குக்குப் போயி Ôசெக்Õகை கலெக்ஷனுக்கு போட்டிருப்பா. வரும்போது மாம்பலம் வரை போயி காபி பவுடர் அரைச்சு வாங்கிக்கோ, அப்படியே ஸ்டேஷன் கீழே வெந்தயக் கீரையிருக்கும்… பாத்து ஒரு கட்டு வாங்கிக்கோ… அங்கிருந்து வடபழனிக்குப் போயி, நம்ம முரளியோட பையன் ஸ்டேட்ஸ்ல இருந்து வந்திருக்கான். அவனைப் பார்த்து பேசி நம்ம கோவிந்தை அனுப்புறதுக்கு யோசனை கேளு. அவங்க வீட்ல ஏதாவது கொடுத்தா சாப்பிடாதே.

வீட்டுக்கு வந்ததும் கதவை பூட்டிக்கோ. வேலைக்காரக் குட்டி வந்தா அவளை ஒரு கண் பார்த்துக்கோ… வீடு பெருக்குறேன்னு எதையாவது வாயில எடுத்துப்போட்டுத் தின்னுகிட்டு இருப்பா… போன் வந்தா யாருனு கேட்டு நம்பரைக் குறிச்சு வெச்சிரு… பகல்ல வீட்ல ஏ.சி. போடாதே… சொன்னது எல்லாம் நினைவு இருக்கில்லையா? தலையைத் தலையை ஆட்டிக் கேட்டுட்டு பிறகு மறந்துட்டேன்னு சொல்லாதே… வீட்டுக்குப் போனதும் ஒரு பேப்பரில் எழுதி வெச்சுக்கோ, உன் செலவுக்குப் பத்து ரூபா இருக்கு. பஸ்ல போயிட்டு வந்திரு. இதையெல்லாம் செஞ்சு முடிச்சதும் போன் பண்ணு, வேறு ஏதாவது இருந்தா சொல்றேன்.’

மாநகராட்சி மைதானக் காவல்காரனின் குழந்தைகளுக்காக, வீழ்ந்து கிடக்கும் இலைகளில் ஒன்றை எடுத்து ஊதுகுழல்போல ஒன்றைச் செய்து தருவார் பெரியவர். குள்ளமானவர் உடற்பயிற்சி முடிந்ததும் அருகில் வந்து அப்பாவின் கையிலிருக் கும் இலைக்குழலை பிடுங்கிப் போட்டபடியே மைதானத்தைவிட்டு அழைத்துக்கொண்டு போவார்.

இருவரும் போன பிறகு பதினாறு வயது பையன் மட்டும் சாவகாசமாக வந்து சுவரில் ஏறி உட்கார்ந்துகொண்டு நிம்மதியாக ஒரு சிகரெட் பிடிப்பான். புகையை வானத்தை நோக்கி ஊதுவான். பிறகு ஒரு பபிள்கம்மை மென்று சுவைத்துவிட்டு ஒரு மரத்தில் ஓட்டவைத்துவிட்டுப் போவான்.
இந்த மூன்று நடையாளர்களை மாதக்கணக்கில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். துணி துவைப்பதற்காக உவர் மண் எடுக்கச் செல்பவர்கள் கழுதைகளின் கால்கள் நடுங்க மணல் மூட்டைகளை ஏற்றிவருவதைப் போல இத்தனை வேலைகளைப் பெரியவரின் முதுகில் ஏற்றியபோதும் அவர் எப்படிச் சலனம் இல்லாமல் ஏற்றுக்கொள் கிறார். உண்மையில் யார் அப்பா, யார் பிள்ளை?

சில நாட்களுக்குப் பிறகு தற்செயலாக அந்த வயதானவர் மட்டும் தனியே நடந்து வருவதைப் பார்த்தேன். நான் அவரது பெஞ்சின் அருகில் சென்று அமர்ந்தேன். அவர் சிரித்தபடியே, ‘நீங்கள் எழுத்தாளர்தானே… பத்திரிகையில் உங்கள் போட்டோ பார்த்திருக்கிறேன்’ என்றார். அவரும் நானுமாக அருகம்புல் சாற்றைக் குடித்தோம். அவர் இளவெயிலைப் பார்த்தபடியே என் குழந்தைகளைப்பற்றி விசாரித்தார். நான் தயக்கத்துடன் கேட்டேன் Ôஇன்றைக்கு உங்கள் மகன் வரவில்லையா?’
அவர் சிரித்தபடியே சொன்னார்… Ôஊருக்குப் போயிருக்கிறான். அவனைக் கவனிச்சிருக்கீங்களா… எனக்கு ஒரே பையன். பேரு விஸ்வம். பெரிய வேலை, நல்ல சம்பளம். ஆனா, சதா வாய் ஓயாம எதையாவது உளறிக்கிட்டே இருப்பான். முட்டாள்… நான் கூட ரிட்டயர்ட் இன்ஜினீயர். வயசு எழுபதாகுது. மருமகள் பேங்க்ல வேலை பாக்குறா. உதவியா இருக்கட்டுமேனு மகன்கூட வந்து இருக்கேன். ஊர் அம்பாசமுத்திரம். பெரிய வீடு இருக்கு. பாத்துக்கிட யாரு மில்லை. பூட்டிட்டு வந்துட்டோம்.’

அன்றைக்குக் காவல்காரனின் குழந்தைகளைக் காணவில்லை. நான் அவரிடம் ஒரு இலையைக் கொடுத்து ஊதுகுழல் செய்துதரச் சொன்னேன். அவர் இலையை லாகவமாக மடித்துக் கொண்டே சொன்னார், Ôஅப்பாவும் பிள்ளையும் கொஞ்சிக்கிடறதும் ஒட்டிக்கிட்டு தூங்குறதும் பத்து வயசு வரைக்கும்தான். அப்புறம் வளர வளர இடைவெளி வந்துருது. உடைந்த கண்ணாடியில் முகம் பார்த்தா முகம் சிதறித்தான் தெரியும். அப்படித்தான் பையன் அப்பனைத் தப்பு சொல்றான். அப்பன் பையனைத் தப்பு சொல்றான். மரத்து நிழல் மாதிரி இருந்துட்டுப் போயிட்டா பிரச்னையில்லை. புரியலையா? மரத்து நிழலால மரத்துக்கு ஒரு லாபமும் கிடையாது. மத்தபடி வெயில்ல ஒதுங்குற யாரா இருந்தாலும் அது குளிர்ச்சியானது தான்.Õ

அவர் குழலை ஊதிப் பார்த்தார். நாதம் வந்தது. சிறுகுழந்தையைப்போல ஆகாசத்தை ஏறிட்டபடி ஊதினார். ஊதுகுழல் சப்தம் கேட்டு ஓடிவந்த ஒரு சிறுவன் ஆசையாகக் கையை நீட்ட, பெரியவர் அந்த சிறுவனுக்கு ஊதுகுழலைத் தந்துவிட்டு சொன்னார்… Ôரெண்டு நாள் முன்னாடி மாம்பலம் ஸ்டேஷன் படியில மயக்கமா வருதுனு உட்கார்ந்துட்டேன். கண்ணைக் கட்டிக்கிட்டு வந்தது. எனக்குனு யாருமே இல்லையேனு ஒரு நிமிஷம் கண்ல தண்ணி வந்திருச்சு… யாரோ ஒரு ஸ்கூல் பையன் ஓடிப்போய் ஜூஸ் வாங்கிட்டு வந்து கொடுத்தான். வீடு வரைக்கும் கூடவே வந்து விட்டுட்டுப் போனான். ஒருவேளை அப்பவே நான் போயிருந்தா… வாக்கிங் போறதுக்கு ஒரு ஆள் குறைஞ்சிருக்கும். என்னைத் திட்டுறதுக்குப் பதிலாக என் பையன் அவன் மகனைத் திட்ட ஆரம்பிச்சிருவான். இப்போ நான் ஒரு தடுப்புச் சுவர் மாதிரி இருக்கேன். இவ்வளவுதான் சார் வாழ்க்கை!Õ

எனக்கு காஃப்கா, தஸ்தாயெவ்ஸ்கி, புதுமைப்பித்தன் என பல எழுத்தாளர் களைப் பற்றிய நினைவுகள் வந்தன. இவர்கள் யாவரும் அப்பாவோடு பிணக்குக் கொண்டவர்கள். அப்பாவுக் கும் மகனுக்குமான பிணக்கு உலக மெங்கும் ஒன்றுபோலத்தான் இருக் கிறது. படிக்கவைப்பது, வேலை வாங்கித் தருவது, சாப்பாடு போடுவது மட்டும் ஒரு அப்பாவின் வேலையல்ல. அப்பா வாக இருப்பது ஒரு பொறுப்பு உணர்ச்சி. அது தன்னை விலக்கிய நிலை.

ந.முத்துசாமியின் கதை ஒன்று நினைவுக்கு வந்தது. இவரது கதைகளின் உலகம் புஞ்சை என்ற கிராமம் மீதான அவரது நினைவுகளும் சம்பவங்களுமே. கதைகளின் பின்புலத்தைத் துல்லியமாக விவரிப்பதன் வழியாக கதாமாந்தர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தனியான எழுத்து முறை இவருடையது. மிக அபூர்வமாகவே சிறுகதைகள் எழுதிவரும் ந.முத்துசாமியின் ‘அப்பாவின் பள்ளிக்கூடம்’ என்ற சிறுகதை தமிழில் வெளிவந்த சிறந்த கதைகளில் ஒன்று.
இந்தக் கதை பள்ளிக்கூடம் செல்லும் இரண்டு சிறுவர்களைப் பற்றியது. அவர்களது அப்பா ஒரு பள்ளி ஆசிரியர். அவர் சில நாட்களுக்கு முன் பாக மாரடைப்பால் வகுப்பறையிலே இறந்துபோகிறார். அந்த நிகழ்ச்சி சிறுவர்களின் மனதில் மிக ஆழமான துயரத்தை உருவாக்குகிறது.
ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு திரும்பிவரும்போது வழியெல்லாம் மூத்தவன் அழுதபடி வருகிறான். தம்பி காரணம் கேட்டும் சொல்லவேயில்லை. வீடு வந்ததும் அம்மாவிடம் கதறி அழுதபடி தன்னை வாத்தியார் அடித்து விட்டதாகச் சொல்கிறான். இதைக் கேட்டு தம்பியும் சேர்ந்து அழுகிறான்.

பிள்ளைகளின் மீது விழும் அடி அவர்கள் அப்பனை இழந்ததை உறுதிப் படுத்துவது போல இருப்பதாக அம்மாவிற் குத் தோன்றுகிறது. அவளும் தன் பிள்ளை களைக் கட்டிக்கொண்டு அழுகிறாள். இதைக் கண்ட பாட்டி, பிள்ளைகளைச் சமாதானம் செய்கிறாள். மறுநாள் ஆசிரியரைப் பார்க்க பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கூடம் செல்கிறாள் பாட்டி. ஆசிரியரோ தான் அடிக்கவேயில்லை என்கிறார். மூத்தவனுக்கு அப்பா இறந்துபோன பிறகு அவரது முகம் சில நாளிலே மறந்து போய்விட்டிருக்கிறது. அப்பாவைப் பற்றி நினைத்தால் ஒரு ஆசிரியரின் உருவம்தான் நினைவுக்கு வருகிறது.

அவன் மனமயக்கத்தில் வகுப்பு ஆசிரியர் தன் அப்பாவைப் போலவே இருப்பதாக நினைக்கிறான். அன்றும் இது போன்ற மனபிரமை அதிகமாக, பயத்தில் வகுப்பை விட்டு வெளியேறி ஓட முயற்சிக் கும்போது தடுக்கி விழுகிறான். ஆசிரியர் அவனைக் காப்பாற்றப் போகும்போது அப்பாவின் ஆவி தன்னைப் பிடிக்க வந்து விட்டதாக நினைத்து கத்தி அழுகிறான். வீடு வரும் அவனை வேறு பள்ளியில் சேர்ப்பதாக பாட்டி சமாதானம் செய்கிறாள் என்பதோடு கதை முடிகிறது.
அப்பா எப்படி குழந்தைகள் மனதில் படிந்து போயிருக்கிறார். அல்லது அப்பாவை எப்படி நினைவுகொள்வது என்பதுதான் கதையின் மையம். பெரும்பான்மை வீடுகளில் அப்பாவின் உருவம் துர்கனவில் வரும் உருவம் போலவே குழந்தைகளுக்குள் படிந்து இருக்கின்றன. அப்பாவின் மீது கோபம் துளிர்க்காத இருபது வயது இளைஞனே உலகில் இல்லை. ஆனால், அந்தக் கோபம் அப்பாவின் மீதான கோபமில்லை. தனது அடையாளங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் விளைவாக உண்டான கோபம். தனது விருப்பங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாத கோபம். அடுத்தவர்கள் தன் குடும்பத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக அப்பா விதித்த கட்டுப்பாடுகளின் மீதான கோபம். இந்தக் கோபங்கள் சில நேரம் நீர்க்குமிழியைப் போலக் கரைந்து விடுகின்றன. சில நேரம் தீக்காயம் போல நாள்பட்டும் உலராமலே போய்விடுகின்றன.

பையனுக்கும் அப்பாவுக்குமான உறவு படகுக்கும் அதைச் செய்த மரத்தச்சனுக்கும் உள்ள உறவைப் போன்றது. படகு ஆற்றில் விடப்படுவதற்காகத்தான் உருவாக்கப் படுகிறது. தச்சன் அதைச் செய்யும்போது மிகக் கவனமாகச் செய்கிறான். ஆனாலும் அதை ஆற்றில் விடாமல் வீட்டிலே வைத்துக்கொண்டு இருக்க முடியாது. அதோடு ஆற்றின் சீற்றத்தைச் சந்திக்க படகிற்கு அவன் கற்றுத்தந்து விடவும் முடியாது. கூடவே இருக்கவும் முடியாது. ஆற்றின் விசையை எதிர்கொள்வது படகின் விதி.

தொலைவில் செல்லும் படகின் போக்கினைக் கரையிலிருந்து மௌன மாகப் பார்க்கும் தச்சனைப் போன்றது தான் அப்பாவின் நிலை. ஒரு நாள் நாமும் அந்த தச்சனில் ஒருவனாக இருப்போம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

தமிழில் நவீன நாடகங்கள் உருவானதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் ந.முத்துசாமி. இதற்காக இவர் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். 1936 &ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்தவர். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களில் முத்துசாமி முக்கியமானவர். இவரது Ôகூத்துப்பட்டறைÕ என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறது. ÔகசடதபறÕ, ÔநடைÕ போன்ற இலக்கிய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவரது Ôநீர்மைÕ என்ற சிறுகதைத் தொகுதி குறிப்பிடத்தக்கதாகும். Ôஅப்பாவும் பிள்ளையும்Õ, Ôநாற்காலிக்காரர்கள்Õ Ôகாலம் காலமாகÕ, Ôசுவரொட்டிகள்Õ, Ôபடுகளம்Õ போன்ற நாடகங்களை எழுதியிருக்கிறார். Ôஅன்று பூட்டியவண்டிÕ என்ற தெருக்கூத்துக் கலை பற்றிய இவரது கட்டுரைத் தொகுப்பு மிக முக்கியமானது. நவீனதமிழ் நாடகங்களை உலகமெங்கும் நடத்திக் காட்டிய பெருமை ந.முத்துசாமிக்கு உண்டு.

நன்றி: கதாவிலாசம்- விகடன் பிரசுரம்

Advertisements
Comments
One Response to “>ந.முத்துசாமி:நரையேறும் காலம்: எஸ்.ரா”
  1. >மீண்டும் எஸ்.ரா. அருமை !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: