>நன்மையும் சாசுவதம் – ஷங்கர்ராமசுப்ரமணியன்

>

நன்மையும் சாசுவதம்: ஆனால் தீமையும் சாசுவதம்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

 

நகுலன் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தவுடன் நான் செய்ய முயற்சித்தது நகுலன் தொடர்பாக பெருகிய நினைவை நிறுத்த முயற்சித்ததுதான். என்னில் பெருகும் நினைவுகளுக்கு நகுலனின் மூலமாகவே நான் இடையீடு செய்யின் அது ஒரு நிமித்தம் மாத்திரம்.

மதம், நியதிகள், சம்பிரதாயம், பழக்கம், நிறுவனங்கள், அறிவு ஆகியவை கருத்துருவம் செய்த மனிதனின் ஏற்கனவேயான மரணத்தை விபரீத அழகுள்ள படிமங்களால் உரக்க அறிவித்தவர் அவர். தன் இருப்பையே யோகத்தின் சவநிலையாக கோட் ஸ்டாண்ட் கவிதைகளில் வெளிப்படுத்தியவர். ஒரு புதிய அறிதலின் மகிழ்ச்சியுடன் பச்சைக் குழந்தையை nsgu7ஸ்பரிசிக்கும்  வியப்புடன் சாவை நோக்கித் தியானித்திருந்தவர் அவர். புதிய செய்திபோல நகுலன் இறந்து விட்டாரென்று யாராவது நகுலனிடம் போய் சொல்வார்கள் எனில் நகுலன் தன் பாணியில் சிரிசிரியென்று சிரிப்பார்.

நகுலன் என்ற பெயரே அவர் தனக்குத் தரும் ஒரு சாயல் அல்லது விளக்கம்தான். நகுலன் என்ற பாத்திரத்தை ஏன் டி.கே. துரைசாமி தேர்வு செய்தார்? விபீடணன் என்னும் ராமாயணக் கதாபாத்திரத்துக்குள் இவர் குரல் எப்படி துல்லியமாக ஒலிக்கிறது. இந்த கேள்விகளுக்கான பதிலின் திறவுகோல் இவரின் படைப்புகளில் இருக்கிறது.

மகாபாரதத்தில் நகுலன் என்னும் கதாபாத்திரத்தின் இருப்பு ஒரு விளிம்புநிலை. தங்கள் எதிரிகளான கௌரவர்களுக்கு நல்ல நாள் குறிக்கச் செல்பவன். சதா எதிர்நிலைகளிலேயே பழகிவிட்ட பொது மன, பௌதீகப் பரப்பை (ராமன் – ராவணன்- அர்ச்சுனன் – துரியோதனன்) அதன் தர்க்கங்களின் கொலைக் கூர்மையை முனைமழுங்கச் செய்யும் எழுத்தாளக் கதாபாத்திரம் நகுலன். ஆதியிலிருந்துதான் தனியன் என்பதன் நினைவில்லாத மனிதத்தன்னிலை குடும்பம், சாதி, மதம், மதிப்பீடுகளின் மேல் சாய்ந்தும், ஈடுபட்டும் குழுவாக சமூகமாக, கும்பலாக தன்னை பாவிக்கிறது. நகுலன், மனிதன் மிகத் தனியன் என்பதை தொடர்ந்து ஞாபகப்படுத்துபவராய் உள்ளார். விபீடணனின் தனிமொழியிலும் நகுலன் இதை ஏற்றியுரைக்கிறார். லங்கை நகரமே மதுவிலும், போகத்திலும், திளைக்கிறது. விபீடணனால் எதிலும் ஒன்ற முடியவில்லை. விபீடணன் ராவணனுடன் முரண்பட்டு ராமனிடம் சென்றாலும் வானரங்கள் அவனை ஒற்றனாக, அந்நியனாகவே பார்க்கின்றனர். நகுலன் புனையும் ராமாயணத்தில் (நகுல ராமாயணம் என்றே மூன்று, ஐந்து தொகுதிகளைக் குறிப்பிடுவார் கோணங்கி) கும்பகர்ணன் ராமனுடன் உரையாடும் பகுதியில் அரக்கர் – நாகரீக மனிதர் என்ற எதிர்நிலையில் உரையாடல் இடம்பெறுகிறது. தத்துவம், மதம், அமைப்புகள் எல்லாவற்றின் தோல்வியையும் கும்பகர்ணன் போட்டுடைக்கிறான். ராமனின் அம்பில் வீழ்ந்து மரணமுறும்போது ‘ராமா என்னிலும் அசுரன் நீ’ என்றுரைத்து மரணிக்கிறான். இந்த கும்பகர்ணக் கூற்றில் ராமன், ராவணன் இருவருமே ஒரே நிலைமையின் இரு அபாயங்களாக மாறுகின்றனர்.

ராவணனை விபீடணன் ‘பெரிய அண்ணா’ என்று சொல்லும்போதே அதிகாரம் குறித்த பயம் விபீடணன் குரலில் நகுலனாய் நடுங்குகிறது. இந்த தனியனின் குரலே நானும் ஒரு பறையன்தான் (மழை:மரம்: காற்று) என அறிவிக்கிறது. இயற்கை என்ற பேருருவின் சின்னஞ்சிறிய உறுப்புகளான எறும்புகளைப் பார்ப்பதில் லயிக்கிறது. செயலற்று பார்த்துக்கொண்டிருப்பது ஒரு படைப்பு போதமே. காரணகாரியம், சாராம்சம், செயல் தர்க்கம் சார்ந்த பின்னணியுடைய பொதுப்புத்தி அதை "ஒரு துரும்பைக் கூட இவ்வளவு லயிப்புடன் பாப்பாயோ என்றுதான் கேள்வி கேட்கும்."
இது மனிதன் என்று அழைக்கப்படும் அதிசாராம்சத்தை மறுக்கும் நகுலனின் விமர்சனமும்கூட. இயற்கையிலிருந்து விகுதியாய் பாவித்துக் கொண்ட ஒரு மனிதனின் எல்லா வெற்றிகளும் மனதின் தோல்விகளாகவே தொனிக்கிறது நகுலனுக்கு. சலித்து, அலுத்த மனிதனின் சாயைகளாகவே இயற்கை நகுலனுக்கு தோற்றமளிக்கிறது.

சாம்பல், குருவி, கருங்குருவி, பச்சைக்கிளி, மரங்கொத்தி, சாரைப்பாம்பு, மஞ்சள் நிறப்பூனை என்று அவர் படைப்பில் வரும் நகுலனின் ஜனங்கள் அவ்வளவு பேரும் அவரது உணர்வு நிலைகள். ஒரு வகையில் மனிதன் என்ற பேரழுத்தத்திலிருந்து பிராணிகள், பறவைகளுக்குள் நகுலன் கூடு பாயும் வழிமுறைகளும் கூட. (நவீனன் என்கிறேன். நகுலன் என்கிறேன். ஆனால் நான் யார்? யாரைச் சந்திக்கிறனோ, நான் அவர், அவர் ஆகிறேன்… அதனால்தான். இக்கணம் பச்சைப் புழு, மறுகணம் சிறகடிக்கிற வண்ணத்துப்பூச்சி.) பிராந்தியின் போதையும் யதார்த்தத்தின் அழுத்தத்தை களைந்து, உடலைக் கழற்றி வேறு, வேறு சாத்திய நிலைகளுக்குள், ஏற்பாடுதான். நன்றாகக் குடி என்ற பாதலேரின் கவிதை நகுலன் மொழி பெயர்த்தது. இதை நகுலனின் புரிதலாகவும் கொள்ளலாம். "காலத்தின் கொடிய சுமை உன் தோள்களை முறித்து உன்னை நிலத்தில் குனியும்படி செய்வதை நீ உணராமல் இருக்கவேண்டுமென்றால் நீ நல்ல போதையில் இடையீடின்றி இருக்கவேண்டும்."

இயற்கை என்னும் பேரழகின் பிரதிபலிப்பாகவே சுசீலா, துரௌபதை, கண்ணம்மா, சீதை ஆகியோர் இருக்கிறார்கள். உடற்புணர்ச்சி என்ற செயல் சாராமல் நகுலனில் தொனிக்கும் தீராத விரகம் இயற்கையெனும் பேருருவின் மீது முயக்கம் கொள்வதாகியுள்ளது.

கிளிமரம், பறவைகள், வாழை இலையின் நுனிப்பச்சை எல்லாவற்றிலும் தன் காதலை படரவிட்டுள்ளார். சிருஷ்டியின் அழகும், இயற்கையின் முழுமையும் சேதாரத்துக்குள்ளாவதான, அத்துமீறுவதான தயக்கமும், துக்கமும் கலவி என்ற செயல்பால் இருக்கிறது. சுசீலாவின் சாயல் உள்ள ஆண்களிடமும் நவீனனின் மனம் ஆசை கொள்கிறது. (ஆண், பெண் வெறும் தோல் விவகாரம்) சிலசமயம் பிராணிகளிடம்கூட சுசீலாவின் சாயல் இருக்கிறது. புணர்ச்சி பற்றி அறிவு நிலைக்கு முன்னுள்ள தெரியாமையின் புள்ளியில் இவ்வுலகின் சௌந்தர்யத்தை எல்லாம் சதா ஜெபித்துக்கொண்டிருக்கும் உயிர்நிலை நகுலன். இந்த தெரியாமையின் புள்ளியில் நிற்கும் உயிரியின் பார்வை சாத்தியங்கள் அல்லது பார்வைக் கோணத்தில் தான் நகுலனின் ஒற்றைத் துணுக்குகூட காலாதீதத்துடன் உறவு கொள்ளும் மாயமொழி ஆகிவிடுகிறது. இந்த தெரியாமை என்னும் உயிர், தான் அறியாமலே காமார்த்தத்தின் உள் மடிப்புகளையும் புலன் யதார்த்தம் கடந்து அவற்றின் மெய்மையை வெளிப்படுத்தி விடுவதுதான் அறிதல் செயல்பாட்டின் தீர்க்க முடியாத அழகும், முரணுமாகும். கன்னியொருத்தி கருத்தரிக்க/கருத்திசைந்து முன்வரக்/கையினை கைகௌவும்/அவ்வமயம்/தீ எரிய/மத்தளம் அதிர/ஒரு மதயானை நின்று தளரும்)
கலவியின்/பின் கண்கள் சிவந்தன.

சிறிது நகுலனோடு நேரடிப் பழக்கம் உள்ளவர்களிடமும்கூட நகுலன் உடற்புணர்ச்சி தொடர்பான தன் பிரமைகளையும் வினோதத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். நான், சண்முகசுந்தரம் மற்றும் தளவாய் மூன்று பேரும் நகுலனைப் பார்ப்பதற்கு சென்றபோது யோனியின் எப்பகுதியில் செலுத்துவார்கள் என்று உங்களுக்குத் தெரியுமோ? என்ற திரும்பத் திரும்பக் கேட்டார். நாங்களும் அப்போது தெரியாமையின் துவக்கப்புள்ளியில்தான் இருந்தோம். அவரது பேச்சில் கன்னிமை மீதான புனிதம் வெளிப்பட்டது. ஒரு யுவதி, தன் வீட்டின் பக்கவாட்டில் உள்ள சாலையை தினசரி குடையோடு கடந்து போனதையும், பிறகு திருமணமாகிவிட்டதையும் சொன்னார். அதற்குப் பிறகு ஒன்றுமில்லை என்ற தவனி இருந்தது. கலவி அனுபவம் மற்றும் கலவிசார் பௌதீக அறிவு தாண்டிய வியப்பிலிருந்து உருவாக்கிய கவிதைகள் மிகுந்த அகக்கிளர்ச்சியும் பாலார்த்தமும் தளும்புபவை.

நகுலனின் படைப்புகள் இந்திய தத்துவ மரபின் ஆழ்ந்த போதத்தைக் கொண்டிருப்பது, சிலசமயங்களில் அத்வைத விசாரமோ என்ற மயக்கத்தையும் தருவது. வேதங்களின் பாதிப்பும் உண்டு. (மழை மரம் காற்றில் ஆ, ஆசையே நீ ஒரு புராதன விருட்சம்). அதேவகையில் காப்கா, ஜாய்ஸிலிருந்து திருக்குறள், மஸ்தான் சாய்பு, திருமந்திரம், சித்தர் பாடல்களின் பிரதிபலிப்புகள். எடுத்தாள்தல்களும் உண்டு. ஒரு சடங்கின் சட்டகத்தைப் போல் பழம்பிரதிகளின் அமைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு தன் கவித்துவ சகுனங்களை உரைத்ததன் மூலம் நகுலன் தான் இயங்கிய நவீனத்துவ காலத்துக்குப் பின்னும் பொருளுடய அறிதல்களை நிகழ்த்தியவர் ஆகிறார். பழம்பிரதிகள் ஊடாக உலவும் நகுலன் அவற்றை தனது புது ஒழுங்கிற்குள் கலைத்து விடுகிறார். தேய்ந்த படிமங்கள், வழக்குகள், ஓசை, இசைமையை மீட்டுருவாக்குவதையும் போதத்துடனேயே செய்துள்ளார்.

149482_129399930447135_100001313875575_159866_92361_nமனித மனமும், அதன் நினைவுகளும், எண்ண ஓட்டமும் நேர்கோட்டுத் தன்மையுடையதல்ல. அவன் இயங்கும் காலமும் கூட. அவன் மனம் குறுக்கும், நெடுக்குமான நினைவுப்பாதைகளையும், எண்ணிலடங்கா பிரபஞ்சங்களிலும் சஞ்சரிப்பது. பிரத்யட்ச நிலைக்கும் அரூப நிலைக்கும் நகுலனின் பூனை உருப்போல பயணித்துக்கொண்டே இருப்பது. அங்கு நேர்கோட்டுத் தன்மையோ யதார்த்தமோ இல்லை. அவனது நினைவுகள் தெறிக்கும் பிரமைகளின் ஊடாட்டத்தில் ஆயிரம் சிறகுகளையுடைய வயோதிகன் தான் மனிதன். அங்கே அவனது பேச்சும் குறிப்பிட்ட மொழி அர்த்தத் தளத்தைத் தாண்டிய சப்த துணுக்குதான். நகுலனின் நாவல்களில் இந்த அடி உலகத்தில் தான் கதாபாத்திரங்கள் அடிக்கடி சஞ்சரிப்பவர்களாய் உள்ளனர். அவற்றை வாசிக்கும் வாசகனின் நினைவொழுங்கையும் கலைக்கும் பொழுது நிகழ்கிறது வாலறுந்த நரிகளாகும் நினைவுகளின் கலகம்.

நினைவுப்பாதை, நாய்கள், சில அத்தியாயங்கள், நவீனன் டைரி, அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி, வாக்குமூலம், என எல்லா நாவல்களிலும் தன் விசாரத்தில் கிடைக்கும் அபத்த அனுபவத்தை நகுலன் எப்படியோ மொழியின் இசைமைக்குள் உருவாக்கி விடுகிறார். சூசிப் பெண்ணே ரோசாப்பூவே (நினைவுப் பாதை) என்னும் வாக்கியத்தில் துக்கத்தை எப்படி அமரவைக்கிறார். புழங்கு மொழி, பேச்சுக்கூறு, இலக்கிய மரபின் பின்னணியில் வழக்கத்தில் இல்லாத, நேர்கோட்டுத் தன்மையற்ற பேச்சை, வார்த்தைக் கூட்டத்தை மொழி சுழற்சியை ஒரு படைப்பு மனம் உருவாக்குகிறது. அதை வாங்கிக்கொள்ளும் அதே மொழி மற்றும் கலாசாரத்திற்குப் பரிச்சயமான வாசக மனம் தன் பின்னணியில் ஒழுங்குபடுத்தி தொடர்பு கொண்டு களிப்பை அடைகிறது. எழுத்து மொழியில் உருவாக்கப்படும் தொடர்பற்ற, வெட்டிக் கூறும் அபத்த அனுபவத்தை எடுத்துக்கொள்வதற்கு வாசகனிடமும் ஒரு அபத்த அமைப்பு இருக்கக்கூடும். நினைவு, கலாச்சாரம் என்ற பொதுத் தளத்தில் குறைந்தபட்ச பகிர்தலாவது சாத்தியப்படுவது மொழியின் வினோத செயல்பாடுகளில் ஒன்றே.

தீமையின் விதவிதமான சஞ்சாரங்களைக் கொண்டது நகுலனின் படைப்புலகு. ஆரம்பகட்ட கவிதைகளிலிருந்து மரணம் என்பதன் மீதான பொதுவாக நிலவும் எதிர்மறைப் பார்வை, நகுலனின் படைப்புகளில் உற்சவமாய் மாற்றப்பட்டுள்ளது. நகுலனின் கவிதையில் வரும் புள்ளிக் குயிலைப் போல நித்தமும் அரளிக்காயின் விஷப்பாலைப் பருகியவர் அவர். சூரல் நாற்காயின் மனக் குளத்தில் கண்கள் மினுமினுத்து ஒளிப்பிரவாகமிட்டபடி சுருண்டபடி இருக்கும் நகுலனை பாம்பென்றும் அழைக்கலாம்.

நகுலனின் நாவல்களில் கேசவ மாதவன், நவீனன், அவனின் தாய், தந்தை எல்லாரும் சம்பிரதாயமான குடும்ப, உறவு அமைப்புகளின் பின்னணியில் கட்டப்பட்டிருந்தாலும் எல்லாரும் அலுத்து, சலித்து, மரணிப்பவர்கள் அல்லது மரணத்திற்காக கண்கள் மினுமினுக்க காத்திருப்பவர்கள். அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள் முதல் அரசு வரை கரையானால் உளுத்துப்போன சட்டகங்கள். எத்தனை நூறு ஆண்டுகள் மனிதர்கள் பிரமைகளும், சம்பிரதாயங்களாலுமான கூட்டாக ‘தோற்றம் தரும்’ வாழ்வை அனுசரிக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட ஆதியிலிருந்து எதையும், யாரிடமும் பகிர்ந்ததேயில்லை என்பதை நினைவுறுத்தும் துக்கம்தான் நகுலனுடையது. தனிமை, காமம், துயரம், சந்தோஷம் என எதுவுமே இதுவரை யாராலும் யாருக்கும் பகிரப்படாத இடத்தில் தான் தோல்வியில் சுருண்டிருக்கிறார் நகுலன். இந்த துக்கமே "இன்னும் சொல்லால் சொல்ல முடியாத நக்ஷத்திரங்களின் கீழ்" என்று நகுலனை எழுத வைக்கிறது.

மது அருந்தும்போது ஒரு வழக்கம் அவருக்குண்டு. அவருக்கு உள்ள மதுக்குப்பியை மொத்தமாக முதலிலேயே அவருக்குத் தந்துவிட வேண்டும். அதை உள்ளறையில் கொண்டு வைத்துவிடுவார். நம்முடன் குடிக்கும்போது நடுநடுவே உள்ளே சென்று தனது பிரத்யேக அவுன்ஸ் கிளாஸில் ஊற்றி நீர் கலந்து எடுத்துவந்து நம்முடன் மீண்டும் தொடர்வார். உறவு, நாகரீகம், மனிதநேயம் என்ற கலாச்சாரச் சட்டகத்தை முகமூடிகளைப் பாவிப்பவனுக்கு நகுலனின் பழக்கம் ஒவ்வாததாகவே இருக்கும். ஆனால் தனிமை என்னும் அதீத உணர்நிலையில் நகுலனின் சஞ்சரிப்பு அது. நகுலனின் நாவல்களிலும் சரி, கவிதைகளிலும் சரி அதன் கால பரிமாணத்திலும், வரிசையிலும் அவற்றின் பிரஜைகள், அரங்க பொருட்கள், அழகியல், நிறங்கள், நம்பிக்கை எல்லாம் தங்களை களைந்தபடி முன்னேறுகின்றனர். உருவத்திலிருந்து அரூபத்துக்கும், சத்தத்திலிருந்து மௌனத்துக்கும் நகரும் ஒரு எத்தனம். நகுலனின் கடைசி நாவல் மஞ்சள் நிறப் பூனை. நகுலன் தனது இறுதிக் காலத்தில் தான் புனைவுகள் படிப்பதை நிறுத்திவிட்டதாகச் சொன்னதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். திருக்குறளும், அகராதியுமே அவருக்கு சுவாரசியத்தை தூண்டும் நூல்களாய் கடைசியில் இருந்துள்ளன. அகராதியில் அவர் எந்த வார்த்தைகள் மீது கண் பதித்திருப்பார்.
எதிர் நிலைகளே இல்லாத நகுலனின் உலகத்தில் பிறப்பு, இறப்பு, இரண்டுமே இரண்டு பெருவாசல்களாகவே இருக்கிறது.
பிறப்பைக் குறிக்கும் கவிதை இது.

மிகச்சிறிய /

துவாரத்தினூடு /

கர்ப்பச் சிறையில் /

ஒடுங்கிய ஒரு யோகி /

ஒரு புதுநகரைக் காண /

தான் தனியாகத்தான் /

வருவான்

இறப்பைக் குறிக்கும் ஒரு கவிதை

பந்தல் கட்டி /

பாய்விரித்து /

சந்தை விட்டு /

சயனக் கிருதம் /

புகுந்தேன், தோழி.

இங்கு பிறப்பு, இறப்பு இரண்டுமே புதிதான மலரை உணர்வு போல் சொல்லப்படுகிறது. அடியில் மெலிதான கொண்டாட்டம் இருக்கிறது. நகுலன் வெகுகாலம் காத்திருந்து ஒரு புது நகரம் காணச் சென்றுள்ளார். கொண்டாடுவோம்.

( உயிர்மை நகுலன் சிறப்பிதழ்)

Advertisements
Comments
3 Responses to “>நன்மையும் சாசுவதம் – ஷங்கர்ராமசுப்ரமணியன்”
  1. >நகுலனோடனான நேரடி அனுபவங்கள் படிக்கும்போது அவர் படைப்புகள் போலவே புரிந்தும் புரியாதது போல்…. //தங்கள் எதிரிகளான கௌரவர்களுக்கு நல்ல நாள் குறிக்கச் செல்பவன். //அது சகதேவன். நகுலன் நாள் குறிப்பதில்லை. குதிரை, யானைகளை பராமரிக்கும் திறன் உடையவன்.

  2. sankar says:

    >அன்புள்ள ஸ்ரீதர் நாராயணன் இந்தக் கட்டுரை எழுதி முடித்தபிறகே சகாதேவனும் நகுலனான தவறு உரைத்தது. இனி புத்தகமாக வரும்போது நிச்சயம் சரிசெய்து விடுகிறேன்.அன்புடன்ஷங்கர்ராமசுப்ரமணியன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: