>புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை-எம் வேதசகாய குமார்

>

‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ ‘ எனும் எனது ஆய்வு 1975 -80 கால அளவில் முதுபெரும் பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களை மேற்பார்வையாளராகக் கொண்டு முனைவர் பட்டvethasakhaayakumarத்துக்காக நடத்தப்பட்டது.1980 ல் ஆய்வு முழுமைபட்ட போதிலும் 1991 ல் தான் கேரள பல்கலி கழகத்துக்கு சமர்ப்பிக்கபட்டது. 1992 ல் கேரள பல்கலைகழகம் இதற்கு முனைவர் பட்டம் அளித்தது.ஆய்வினை துவக்கும் போது ஓர் ஆய்வாளன் மனதில் சதாகாலமும் எரிந்து கொண்டிருக்கும் இலட்சிய வெறிக்கும் ஆய்வின் முடிவில் அவன் அடையும் நடைமுறை வெற்றிக்கும் இடையேயான இடைவெளியே இந்த தாமததுக்கு காரணம்.1980 ல் கேரள அரசு பணியில்தமிழ் விரிவுரையாளராக சேர்ந்தேன்.1979ல் வெளிியான எனது ‘ ‘தமிழ் சிறுகதை வரலாறு ‘ ‘எனும் விமரிசன நூல் தமிழ் இலக்கியத்தில் என் பெயரையும் இடம் பெற செய்தபோது ஆய்வு பட்டம் அத்தனை பெரிதாக தோன்றவும் இல்லை.ஆனால் தமிழ் நாட்டில் உள்ள பல பல்கலை துறை அறிஞர்களும் சிற்றிதழாளர்களும் என்னுடைய ஆய்வு நூலாக வரவேண்டும் என்றார்கள்.

பல்கலை சார் ஆய்வுகளில் தர மதிப்பீடுகளுக்கு இடமில்லை என்ற கணிப்பு வலுவாக இருந்தது ,இருக்கிறது. இந்நிலையில் தர மதிப்பீட்டையே அடிப்படையாக கொண்ட என் ஆய்வை அனுமதித்து சுதந்திரமாக என் சிந்தனைகளை வளர்க்க அனுமதி தந்த பேராசிரியர் ஜேசுதாசன் என்றும் என் நன்றிக்கு உரியவர். 1974 ல் சுந்தர ராமசாமியிடம் பழகும் வாய்ப்பு  கிடைத்தது.தொடர்ந்து காகங்கள் கூட்டம் அவர் வீட்டில் நடந்தபோது அதில் கலந்து கொண்டேன். துணிவாக கருத்துக்களை முன் வைத்து விவாதிக்கும் வாய்ப்பு அப்போது கிடைத்தது.

ஆய்வில் முன் செல்ல இடையூறாக இருந்தது முதன்மை ஆதாரமான புதுமைப்பித்தன் கதைகளின் ஒழுங்கின்மை. எனக்கு முன்னமே பேரா ஜேசுதாசனின் மாணவரான ஆ.சுப்பிரமணிய பிள்ளை புதுமைப் பித்தனின் படைப்புகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்று விட்டிருந்தார். இந்த ஒழுங்கின்மை குறித்து அவர் அக்கறை கொண்டிருக்கவில்லை. தூய்மையான தரவுகள் தேவை என்று எனக்கு பட்டது. எனவே கதைகளின் காலம் ,வெளிவந்த ஊடகம் ஆகியவற்றை திரட்ட வேண்டியிருந்தது.

அப்போது புதுமைப்பித்தன் கதைகளின் எண்ணிக்கை குறித்து கூட உறுதி இல்லாமல் இருந்தது.ஒருதொகுப்பில் இடம் பெற்ற கதையையே மற்ற தொகுப்புகளிலும் சேர்த்து தொகுப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்திருந்தனர். கதைகளின் காலம் ஊடகம் போன்ற விசயங்களை அறிவதற்கு எந்த வழியும் இல்லை. புதுமைப்பித்தன் மறைவுக்குப் பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் அவரது படைப்புகளுக்கு உரிமை கொண்டாடினர். தாங்கள் வெளியிட்டதாகச் சொல்லி இல்லாத கதைதொகுப்புகளின் பட்டியல்களைக் காட்டினர். வெளியிட்டவர்கள் கையில் கிடைத்த எல்லாவற்றையும் அவர் கதைகளாக சேர்த்துக் கொண்டனர். உயிரோடு இருந்த போதும் அவர் படைப்புகள் வணிக நோக்கில் சுரண்டப்பட்டன. இப்போதும் சுரண்டப்படுகின்றன.

புதுமைபித்தனின் கதைகளை அவற்றின் மூலங்களைக் கண்டுபிடித்து திரட்ட முடிவு செய்தேன். எளிமையான பணியாக இது அமையவில்லை. தமிழ்நாடு முழுக்க சுற்றி அலைய வேண்டியிருந்தது. பலகசப்பான அனுபவங்களை எதிர் கொள்ளவேண்டியிருந்தது.

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில்புதுமைப்பித்தன் வீட்டைத்தேடி ஒரு நாள் முழுக்க அலைய வேண்டியிருந்தது. அன்று இலக்கிய வாசகர் மத்தியில் கூட புதுமைப்பித்தன் அத்தனை பிரபலமல்ல. லாட்டரி பரிசு விழுந்த அம்மா வீடு என்று கேட்ட போதுதான் வீடு அடையாளம் காட்டப் பட்டது. புதுமைப்பித்தன் வீட்டில் அவரது நூல்களின் ஒரு பிரதிகூட இல்லை. தமிழக முதல்வர் வாசிப்பதற்காக அவை எடுத்துச் செல்லப்பட்டன எனும் தகவல் மட்டுமே கிடைத்தது. புதுமைப் பித்தனின் வாழ்க்கை பற்றிய தகவல்களைத் தயக்கமின்றி அவர் மனைவி கமலா விருத்தாசலம் என்னிடம் பகிர்ந்துகொண்டார். புதுமைப்பித்தனுக்கு கல்கி அனுப்பிய பணவிடைக்கான ரசீது ஒன்று தன்னிடம் இருப்பதாகச் சொன்னார்[புதுமைப்பித்தன் முக்கியமான கலாச்சார நசிவு சக்தியாகக் கண்ட கல்கியிடம் அவர் மனைவி அவர் மறைவுக்கு பின்பு நிதியுதவி பெற்றது குறித்து சில விமரிசனங்கள் இருந்தன. கமலா விருத்தாசலம் புதுமைப்பித்தனே அப்படி உதவி பெற்றுக் கொண்டவர் என நிறுவ விரும்பினார் . அடுத்த நாள் தேடித்தருவதாகச் சொன்னார். அடுத்தநாள் காணவில்லை என்றார். புதுமைப்பித்தன் எழுதிய கடிதங்களோ கைப்பிரதிகளோ தன்னிடமில்லை என்றார். ஆனால் சமீபத்தில் அவரிடமிருந்து இளைய பாரதியால் பெறப்பட்ட கடிதங்கள் ‘ ‘கண்மணி கமலாவுக்கு ‘ ‘ என்ற பேரில் அச்சு வடிவம் கண்டன.

சி சு செல்லப்பா அதுவரை வெளிவந்த தொகுப்புகளின் அடிப்படையில் திரட்டப்பட்டக் கதைகளின் எ ண்ணிக்கை 90 என்று குறிப்பிட்டார். ஆய்வுக்கு இவையே போதுமே வெயிலில் அலையாதே என்றார்.தொகுக்கப்படாத கதைகளும் இருக்கக் கூடும் என்று அவர் சொன்னதில் தான் என் கவனம் இருந்தது. மணிக்கொடி இதழ்கள் சில அவரிடம் இருந்தன. பார்வையிட அனுமதி தந்தார்.பி எஸ் ராமையா வீட்டின் முகவரியைத் தந்து அவசியம் சந்திக்கும் படி சொன்னார்.

பி எஸ் ராமையாவைச் சந்தித்தது மிக உதவியாக இருந்தது. புதுமைப் பித்தனிடம் நீண்ட கால தொடர்பை கொண்டிருந்தவர் அவர் மட்டுமே. புதுமைப்பித்தன் சென்னை வந்து வாழ தொடங்கிய போதே அவருடன் ராமையாவுக்கு தொடர்பு இருந்தது. புதுமைப்பித்தனுடைய இளம் நண்பர்களுக்கு [ரகு நாதன் ,மீ ப சோமு] அவருடனான தொடர்பு சில வருடங்கள் மட்டுமே. ராமையா இந்த நண்பர்களை தரகர்கள் என்று பலமுறை குறிப்பிட்டார். இவர்கள் இப்போது அம்மன் கோவில் பூசாரிகளாக ஆகிவிட்டர்கள். புதுமைப்பித்தனின் பல கதைகள் வெளியான காலங்களைத் தன் வாழ்வில நடந்த பல சம்பவங்களுடன் ஒப்பிட்டு நினைவுகூர்ந்தார். பின்னாளில் இக்கதைகளை இதழ்களில் கண்ட போது ராமையாவின் காலக் கணிப்பின் துல்லியத்தை அறிந்து வியப்புற்றேன்.

புதுமைப்பித்தனின் படைப்புகள் வெளியான ஆரம்பகால மணிக்கொடி இதழ்களை வ ரா வீட்டில் காண முடியும் என ராமையா வழிகாட்டினார். இதற்காகவே இரு முறை சென்னை வந்தும் திருமதி வ.ரா என்னைச் சந்திக்க மறுத்துவிட்டார். மிக சொற்பமான உதவிப்பணத்திலும் சொந்தப் பணத்திலும் நான் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த காலம் அது. பி எஸ் ராமையாவை போய்க் கேட்டபோது அவை வரலாற்றின் பதிவுகள் என்ற முறையில் அவற்றைப் பார்க்க எனக்கு உரிமையுண்டு என்றார். உரிமைகள் தரப்படுபவை அல்ல போராடி பெறப்படுபவை என்றார். அவர் வழிகாட்டியதன் பேரில் வ ரா வீட்டு முகப்புத் திண்ணையில் காலை முதல் அந்தி வரை அமைதியாக உட்கார்ந்து கொண்டேன். மூன்றாவது நாள் பக்கத்து வீட்டு பெண்கள் எனக்காகக் குரல் கொடுத்தனர். கடைசியில் அந்த கதவு எனக்காக திறக்கபட்டது. எவரையுமே சந்திக்க மறுக்கும் அந்த அம்மா எனக்கு மாம்பழச் சாறு தந்தார். என் போராட்டம் ஒரு உண்ணாவிரதம் என அவர் கருதியிருக்கலாம்.

அறைக்கதவை திறந்தபோது வைக்கோலை குவித்து போடுவது போல புத்தகங்கள் மற்றும் இதழ்கள் தரையில் குவிக்கப்பட்டிருந்தன.அவை இருந்த அலமாரிகள் சமீபத்தில் விற்கப்பட்டிருக்க வேண்டும். திறக்கபடாத அலமாரிகளும் சில இருந்தன. மிக பெரிய ஈழ கேசரி தொகுப்புகளை மேஜை போல அடுக்கி வைத்து அமர்ந்து தேவையான இதழ்களைத் தேடிஎடுத்து கையாலேயே பிரதியெடுக்க தொடங்கினேன். மணிக்கொடி இதழ்கள் எந்தச் சிரமமும் இல்லாமல் கிடைத்தன. வ ரா வின் சேகரிப்புகள் காலம் தவறாக அவரிடம் விட்டுச் சென்றவை அல்ல.

பாரதியின் இந்தியா இதழ்கள் முழுக்க இருந்தன. பாரதி எழுதிய வேறு இதழ்களும். இரண்டு நாட்களை அவற்றைப் படிப்பதற்கென்றே ஒதுக்கினேன். இந்தியா இதழில் வெளிவந்த கருத்துப் படங்கள் என்னை கவர்ந்தன. இடையிடையே வ ரா வின் ஜெயில் டைரிகளை வாசித்தேன். 5 நாpudu5ட்கள் மிகவும் பயனுள்ளவையாக கழிந்தன.ஆறாவது நாள் ஒருவர் வந்தார். திருமதி வா ராவின் தம்பி என்றார். என்னை பலவந்தமாக அந்த அறையை விட்டு வெளியேற்றினார். சிறு தொகை தருவதாக சொல்லி பார்த்தேன். அவரோ ஒவ்வொன்றுக்கும் தனித்தொகை என்றார். திருடும் குணமோ 5000 ரூபாயோ இருந்திருந்தால் அன்றே இந்தியா இதழ்கள் என் கைக்கு வந்திருக்கும் ,பிற்பாடு நேர்ந்த முக்கியமான ஒரு ஆய்வுப் பிழை நேர்ந்திருக்காது [இந்தியா இதழில் பாரதி வேலை பார்த்தபோது அவற்றில் வெளிவந்த கருத்துப் படங்கள் ஆ.இரா வேங்கடாசலபதியால் ‘ ‘பாரதியின் கருத்துப் படங்கள் ‘ ‘ என்ற பேரில் பாரதியால் உருவாக்கப் பட்டவை என்று சொல்லி பதிப்பிக்கப் பட்டன. நமது வழிபாட்டு மோகம் அதை அப்படியே எற்க வைத்ததுமல்லாமல் தொகுப்பாளரூக்கு நட்சத்திர அந்தஸ்தை பிரபல இதழ்கள் மூலம் உருவாக்கித் தரவும் செய்தது. பாரதி இந்தியா இதழில் அதன் கருத்துத் தரப்பை தீர்மானிப்பவர்களில் ஒருவர் மட்டுமாகவே இருந்தார். அவர் அதை நடத்தவில்லை. அப்படி இல்லாவிட்டாலும் கூட அக்கருத்துபடங்கள் பாரதியின் கருத்துப்படி, உத்தரவின்படி வரையப்பட்டவை என சொல்ல திட்டவட்டமான புற ஆதாரம் வேண்டும். இந்நூல் அச்சில் இருக்கும் போதே ஆய்வாளரிடம் நான் இதைச் சொன்னேன். ஆதாரம் உண்டு, நூலில் சொல்லப்பட்டுள்ளது என்றார் அவர். ஆனால் நூலில் அப்படி எந்த ஆதாரமும் தரப்படவில்லை. ஒரு பரபரப்புக்குப் பிறகு பாரதி ஆய்வாளர்களிடம் எந்த மரியாதையையும் உருவாக்காமல் நூல் நூலகத்தில் ஒதுங்கியது. ஆனால் தொகுப்பாளர் அவர் உத்தேசித்ததை அடைந்தார். வணிக ரீதியான பரபரப்பு நோக்கங்களுடன் நடத்தப்படும் பொறுப்பற்ற ஆய்வுக்கு இது ஒரு சிறந்த உதாரணம்]

வ ரா வீட்டில் கிடைத்த வெற்றி எல்லா இடத்திலும் பயன் தரவில்லை. ஆனந்த விகடன் அலுவலகம் என்னை சுலபமாக தூக்கி எறிந்தது. என்றாலும் விகடன் இதழ்களை வேறு இடத்தில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. புதுமைப்பித்தனின் முதல் கதையான சாளரம் இம்முயற்சிக்குப் பயனாக கிடைத்தது. தினமணி அலுவலகத்தில் நுழைவதில் வெற்றிகண்டேன். ஆனால் நூலகத்துக்கு துணையாக வந்த ஒரு வயதான ஊழியர் புதுமைப்பித்தனின் காலத்து நாளிதழ் தொகுப்புகளை சொக்கலிங்கம் கொண்டுபோய்விட்டதாகச் சொன்னதை நம்பி அங்கிருந்து வெளியேறிவிட்டேன். அது தவறாக போயிற்று. இப்போது நண்பர் ராஜ மார்த்தாண்டன் பல புதுமைப்பித்தன் கட்டுரைகளை அங்கிருந்துதான் கொண்டு வந்திருக்கிறார்.

கோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியாரையும் நன்றியுடன் நினைவுகூர்வேன். அவர் உதவியை அதிக அளவில் பெற்று கொண்டு ஆய்வை முடித்த ஒரு பேராசிரியர் தன் ஆய்வேட்டில் அவர் பெயரை சொல்லாதது ஆய்வாளர்கள் மீதே அவருக்கு வெறுப்பை தோற்றுவித்துவிட்டிருந்தது. என்னையும் அனுமதிக்க மறுத்துவிட்டார். காரைக்குடியில் இருந்த பழைய பேப்பர் வியாபாரிகள் சிலரை சந்தித்தேன். பழைய புத்தகங்கள் குறிப்பாக சமய நூல்கள் கிடைத்தால் அவர்கள் பழைய புத்தக கடைகளில் விற்பதுண்டு. குறிப்பிட்ட நூலகளை பற்றி விசாரித்தேன். தேடிப்பார்க்கலாம் என்றனர் . அவர்களில் ஒருவனாக சைக்கிளில் சென்றேன். சாதி அமைப்பு இத்தகைய நட்புகளை தெரியாத இடங்களில்கூட உருவாக்கிவிடுகிறது. குமரன் இதழ் தொகுப்பு ,பாரதியின் பாஞ்சாலி சபதம் முதல் பதிப்பு ,மாயத்தேவன் எழுதிய தைப்பிங்கில் வெளியான இலக்கியத்தில் புதுமைப்பித்தன் என்ற சிறு நூல் போன்ற என் சேகரிப்புகளோடு செட்டியாரை மிண்டும் சந்தித்தேன்.மனைவியை அழைத்து என் சேகரிப்புகளைக் காட்டினார். எத்தனை நாள் வேண்டுமானாலும் தன் வீட்டில் தங்கி தன் நூலகத்தை பயன்படுத்தலாம் என்றார். வீட்டிலேயே சாப்பிட மிகவும் வற்புறுத்தினார்.[இங்கு இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்லவேண்டும். ரோஜா முத்தையா செட்டியாருடைய இந்த மிகப்பெரிய சேகரிப்பு பிற்பாடு சிகாகோ பற்கலை யின் கைக்கு போய் சேர்ந்தது. மொழி அறக்கட்டளை என்ற பேரில் இன்று அந்நூல்தொகுப்பு சென்னையில் ஒரு அமைப்பாக ஆக்கப்பட்டு நுண்படம் எடுக்கப் பட்டு சேமிக்கப் படுகிறது. க்ரியா ராமகிருஷ்ணன் முதலியோர் இன்று அதன் நிர்வாகத்தில் இருக்கிறார்கள். அதை ஒரு எளிய தமிழ் வாசகனோ ஆய்வாளனோ இன்று அணுக முடியாது. நான் சேகரித்து தந்த சில தகவல்களை நான் சொன்னதற்கு ஏற்ப பார்வையிட முயன்ற போது தமிழகத்தின் புகழ் பெற்ற எழுத்தாளரான ஜெயமோகன் அங்கு அதன் முன்னாள் நூலகரால் போதிய ‘அத்தாட்சி ‘கள் பெற்று வரவில்லை என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டதுடன் அவமதிப்பாகவும் நடத்தப்பட்டார். இது அவரே பலமுறை என்னிடம் வருத்தமாக சொன்னது. இன்று அந்நூலகத்தில் நுழைய வெள்ளை நிறம் ,அல்லது சற்று லுக்கோடர்மா நோய் பாதிப்பாவது தேவை என்பது இங்குள்ள பிரபல வேடிக்கைக்கதை.]

ரோஜா முத்தையா செட்டியாருடைய அனுபவங்கள் சுவையானவை. தபால் தலை சேகரிப்பில் துவங்கினார். கடிதங்கள் அனேகமாக புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையே தான் இருக்கும். அவ்வாறு புத்தகச் சேகரிப்பும் துவங்கியது. அவை அதிகமாக மலேயா சிங்கப்பூர் பர்மா செட்டியார்களின் சேகரிப்புகள். கடிதங்களையும் பாதுகாக்க ஆரம்பித்தார். சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்த அன்று அங்கு நிலவிய நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் ஆஸ்திரேலிய பெண்ணுடன் அவள் விளம்பரத்தைக் கண்டு தொடர்பு கொண்டார். இவரிடம் இருந்த பல கடிதங்கள் விரிவானவை.அந்த பெண் தந்த பணத்தில் தான் ஆய்வு முன்னேற முடிந்தது. மற்றபடி எந்த ஆய்வு நிறுவனமோ மற்ற அமைப்புகளோ அவருக்கு எந்தவித உதவியையும் செய்யவில்லை. சேகரிப்புகளைப் பார்வையிட வந்தவர்கள் திருடிக்கொண்டுபோனதுடன் சரி.[சிங்கப்பூர் விழுந்தபோது அதை பாதுகாத்து நின்றது ஆஸ்திரேலிய படைகள் என்று சமீபத்தில் ப.சிங்காரத்தின் ‘ ‘புயலிலே ஒரு தோணி ‘ ‘ ‘ நூலில் பார்த்த போதுதான் அக்கடிதங்களின் ஆஸ்திரேலிய முக்கியத்துவம் எனக்கும் புரிந்தது.]

1979ல் என் நூலான ‘ ‘தமிழ் சிறுகதை வரலாறு ‘ ‘ வந்தபிறகு சிரமங்கள் குறைந்தன. அறிமுகங்கள் பெருகியமையே காரணம். மதுரை என் சிவராமன்[வைகை ஆசிரியர்] மற்றும் சி மோகன் [விமரிசகர்]உதவியுடன் ஆண்டிப்பட்டி ரெட்டியாரை சந்தித்தேன். அவரை போல அத்தனை அழகாக நூல்களை சேமிக்க யாரலும் முடியாது.

1979ல் புதுமைப்பித்தன் கதைகளை கால வரிசைப்படி தொகுத்தேன். புதுமைப்பித்தனின் புனைபெயர்கள் அனைத்தையும் முதற்கட்ட சான்றாதாரங்களுடன் தொகுத்தேன். அவை வெளிவந்த இதழ்களை அசலை பெரும்பாலும் தேடி எடுத்து பட்டியலிட்டேன். புதுமைப்பித்தனுடன் சம்பந்தமுள்ளதாக பொதுவாக எவரும் கருதாத ஜோதி இதழ்களை கண்டடைந்து அவர் கதைகள் சிலவற்றை தேடியெடுத்தது அன்றைய சூழலில் முக்கியமான விஷயம் என்று பலரும் கூறினார்கள். ராமையா அப்போது வெளிநாட்டு தமிழ் இதழ்களில் எழுதுவது தான் லாபமாக இருந்தது என்று சொன்னதன் அடிப்படையில் தான் ஜோதி இதழில் புதுமைப்பித்தனின் கதைகளை தேடிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. பட்டியலை உடனடியாக சுந்தர ராமசாமிக்கு படிக்க தந்தேன்.விபரங்களை தன் புரிதலுக்கே பயன்படுத்துவதாகவும் வெளியிடுவதில்லை என்றும் சொன்னார்.தேடி எடுத்த கதைகளை ரகஸியமாகப் பாதுகாக்க வேண்டும் எனும் உணர்வு எனக்கு இருக்கவில்லை.உடனுக்குடன் கமலா விருத்தாசலத்துக்கு ஒரு பிரதியை தந்தேன்.கொல்லிப்பாவையில் 5 கதைகளையும் வண்ணமயில் இதழில் ஒரு கதையையும் வெளியிட்டேன்.20 வருடம் முன்பு புதுமைப்பித்தனின் முழுக்கதைகளையும் படித்திருந்தவர்கள் சிற்றிதழ்ச் சூழலிலேயே மிகவும் குறைவு.பிரபல இதழ்களின் வாசகர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.புதுமைப்பித்தன் குறித்து ஒரு விவாதம் உருவாக்க நானும் ராஜ மார்த்தாண்டனும் பலவகையிலும் முயன்றோம்.ஆய்வின் முடிவுகளை வெளியிட இன்னொரு காரணமும் இருந்தது.அன்று இப்போது போல புதுமைப்பித்தனுக்கு நட்சத்திர மதிப்பு இருக்கவில்லை.அவரை விற்க நிறுவனங்கள் போட்டிய்ிடவும் இல்லை.வணிக ஆய்வாளர்கள் தோன்றி ஆய்வுகளை சுவீகரித்துக் கொள்ளும் நிலையும் இருக்கவில்லை

என் கள ஆய்வின் விளைவாக புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றிய பல ஒழுங்கின்மைகளை நீக்க முடிந்தது.புதுமைப்பித்தன் எழுதாத கதையான ‘ ‘மனநிழல் ‘ ‘அவரது தொகுப்பில் இடம் பெற்றிருந்ததை கண்டுபிடித்து நீக்க முடிந்தது.அது புதுமைப்பித்தனின் மனைவி கமலா விருத்தாசலம் எழுதியது என்று அவரது அசல் தொகுப்பைக் கண்டடைந்து புறச்சான்றுகளுடன் நிறுவ முடிந்தது.நடைச் சித்திரமாக வந்த ‘ ‘திருக்குறள் குமரேச பிள்ளை ‘ ‘சிறுகதையல்ல என்று அடையாளம் காட்ட முடிந்தது.ஆறு சிறுகதைகளைப் புதிதாக வாசக கவனத்துக்குக் கொண்டுவரவும் முடிந்தது.முடிவாக புதுமைப்பித்தன் கதைகளின் எண்ணிக்கை மொத்தம் 102 என்று நிறுவவும் முடிந்தது.இந்த எண்ணிக்கையில் இருந்து பல வித மான ஆய்வு மாறுதல்களை நோக்கி எளிதாக நகர முடியும். புதுமைப்பித்தனின் தழுவல் கதைகள் மட்டுமே இன்னும் என் முன் சவாலாக நிற்கின்றன.புற ஆதாரமின்றி ஏதும் முடிவாக சொல்லக் கூடாத விஷயம் அது.எந்தத் துறையானாலும் அசல் ஆய்வை செய்துள்ள எவரும் இதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.ஆனால் காலச்சுவடு பதிப்பகத்தார் வெளியிட்ட ‘ ‘அன்னையிட்ட தீ ‘ ‘ தொகுப்பில் எனது ஆய்வின் முடிவுகள் தங்கள் கண்டுபிடிப்பாக முன்வைக்கப்பட்டுள்ளன.நிதியுதவி பெற்று ஆய்வு செய்யும் ஒரு தொகுப்பாளர் அதற்கு கணக்கு காட்டும் பொறுப்பில் இருப்பவர் இப்படி செய்வது நெறி மீறல் மட்டுமல்ல, நேர்மையின்மையும் கூட!

என் ஆய்வேட்டின் பிரதி கிட்டத்தட்ட 7 வருடங்களாக சுந்தர ராமசாமி இல்லத்தில் [காலச் சுவடு அலுவலகம்] இருந்தது . என் பட்டியல் மீது எனக்கு ஒரு உணர்வு ரீதியான பிடிப்பு உண்டு.ஓர் இளம் ஆய்வாளனின் தன்னலமற்ற உழைப்பும் தியாகமும் அதன் பின்னால் உண்டு.என் ஆய்வுக்கு இன்றியமையாதது அல்ல எனினும் இந்த ஆய்வை நான் மேற்கொண்டதற்கு பின்னால் உள்ளது புதுமைப்பித்தன் மீது எனக்குள்ள அன்பும் ஆர்வமும் தான்.அந்த உழைப்பு அங்கீகரிக்கபடவேண்டும் என்று நினைக்கிறேன்.இதில் உள்ளது சுய நலம் மட்டுமல்ல.அதுவே ஆய்வு நேர்மை.மேலும் ஆய்வுகள் செய்யப்பட அவசியமான ஊக்கம் அப்போதுதான் உருவாக முடியும்.மேலும் இப்போக்கு இனிவரும் காலங்களில் மேலும் பெரிய வணிீக நிறுவனங்களால் ஆ ய்வுகள் சுரண்டப்படவும் வழிவகுக்கும்.

இந்த ஆய்வேடு பிரசுரமான கதையையும் சொல்லவேண்டும்.சுந்தராமசாமி இதன் முக்கியத்துவத்தை பலரிடம் சொல்லியிருக்கிறார்.[இப்போது சொல்வாரா தெரியாது].பிரசுரிக்குமாறு என்னை ஊக்கப்படுத்தினார்.கிரியா இதை வெளியிட வேண்டும் என அதன் பங்குதாரர்களான மதுரை சிவராமனும் ,சுந்தர ராமசாமியும் விரும்பினார்கள்.ஆகவே அதை அவர்களுக்கு அனுப்பினேன்.ஆனால் பதில் ஏது இல்லை. கிரியா ராமகிருஷ்ணன் அவர் சாதாரண ராமகிருஷ்ணனாக இருந்தபோதே எனக்கு நன்கு அறிமுகமானவர்.அவரை நேரில் பார்க்க போனேன்.கணிப்பொறியில் வேலை செய்து கொண்டிருந்த அவர் என்னை சந்தித்த போது தான் பொட்டலம் கூட பிரிக்கப் படாத என் நூல் பிரதியை எடுத்துவரச் சொல்லி கணிப்பொறி திரையை விட்டு கண்ணை எடுக்காமலேயே ஆய்வை புரட்டி பார்த்து இதை மூன்றில் ஒன்றாக சுருக்கித்தான் பிரசுரிக்க முடியும் என்றார்.அவர் காட்டிய அந்த அலட்சியம் என்னை மிகவும் புண்படவைத்தது .பிரதியை அப்போதே வாங்கி திரும்பிவிட்டேன்.

காலச்சுவடு இதழ் இரண்டாம் முறை வந்தபோது அதனுடன் நான் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன்.என் நூலை அவரே வெளியிடுவதாக சொன்னார் கண்ணன். பொருளாதாரச் சிக்கல் இருப்பதாக சொன்னார்.ஆனால் புதுமைப்பித்தன் பதிப்பக முயற்சி துவங்கியபோது ஆ இரா வேங்கடாசலபதி அதன் ஆசிரியராக ஆகிவிட்டிருந்தார்.என் பட்டியலை மட்டும் ‘ ‘பயன் படுத்தி ‘ ‘ கொள்வதாக கண்ணன் சொன்னார்.நான் அதற்கு உடன்பட மறுத்துவிட்டேன்.ஆய்வேடுகளை அப்படிப் பிரித்துப் பிரசுரிப்பது மரபல்ல.ஆய்வேடு பல்கலை கழக சொத்தும் கூட.அனால் காலச்சுவடு நிறுவனம் அந்த பட்டியலை தாங்களே ‘ ‘சொந்த வகையில் ‘ ‘ தேடி எடுத்து கண்டடைந்ததாகக் கூறி பயன்படுத்திக் கொண்டது.

பல்கலை வெளியீடாக வெளியிட ஒரு பேராசிரியர் முயன்றார்.அது கைகூடவில்லை.மனம் சோர்ந்திருந்த போது தான் தமிழினி வசந்தகுமார் ஜெயமோகன் மூலம் கேள்விப்பட்டு என்னை அவரே அணுகி நூலாக வெளியிடுவதாக சொன்னார்.அழகிய முறையில் நூலை வெளியீடதுமல்லாமல் புதுமைப்பித்தன் பற்றி என்னிடம் ஆழமான விவாதங்களை மேற்கொள்ளவும் என் தேடலை மூன்னெடுத்துச் செல்லவும் உதவினார்.அவமதிப்பு ஆணவம் சுரண்டல் ஆகியவற்றையே எங்கும் கண்டு வந்த எனக்கு இது ஒரு பெரிய ஆச்சரியம்.

[மே 2000 த்தில் எழுதப்பட்ட கட்டுரை.சுருக்கமான வடிவம் என் ‘ ‘புதுமைப்பித்தனும் ஜெய காந்தனும் ‘ ‘.தமிழினி வெளியீடு நூலில் உள்ளது.TAMILINI .342 TTK SAALAI . RAAYAPPEETTAI .CHENNAI 600014. INDIA]

அடிக்குறிப்புகள்

1] கொல்லிப்பாவை:ஆ.ராஜ மார்த்தாண்டனை ஆசிரியராகக் கொண்டு நாகர்கோவிலில் இருந்து 70-80 களில் வெளிவந்த சிற்றிதழ்

2]வண்ணமயில்: சென்னையில் இருந்து 80 களின் இறுதியில் வெளியான நடுவாந்தர இதழ்

3] பி எஸ் ராமையா :புதுமைப்பித்தனுடைய மகால படைப்பாளி.மணிக்கொடியின் இரண்டாம் பகுதியின் ஆசிரிய பொறுப்பில் இருந்தவர்.சிறுகதையாசிரியர்

4]வ.ரா:வ.ராமசாமி அய்யங்கார் .பாரதியின் சீடர்.மணிக்கொடியின் முதல்கட்ட ஆசிரியர்.ஈழகேசரி ஆசிரியராகவும் இருந்தார்.சீர்திருத்தவாதி

5]வைகை சிவராமன்: மதுரையில் இருந்து 70_80 களில்வெளியான சிற்றிதழ்.சிவராமன் ‘ ‘சுவர்கள் ‘ என்ற கட்டுரை நூலை எழுதியுளார்.ஆங்கிலப் பேராசிரியர்

6]சி மோகன்: விமரிசகர்[நடைவழிகுறிப்புகள்].சிறுகதை ஆசிரியர் பதிப்பாசிசிரியர் [ஜி நாகராஜன் கதைகள்]

7] ஜோதி: 1930 களின் கடைசியில் கிழக்காசியாவில் இருந்து வந்த ஒரு தமிழ் இதழ்.ஆசிரியர் வெ.சாமிநாதசர்மா

Advertisements
Comments
One Response to “>புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை-எம் வேதசகாய குமார்”
  1. >அலட்சியம், அவமானம், ஏய்ப்பு, சுரண்டல் எல்லாவற்றையும் தாங்கி அன்பும் ஆர்வமும் காரணமாகவே நேர்மையான ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் வேத சகாயகுமாரும் ஆதரவளித்தவர்களுமே வரலாற்றிக்கு அவசியமானவர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: