புலிக்கட்டம் – எஸ். ராமகிருஷ்ணன்

அவன் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன. தன்னைச் சுற்றிலும் உள்ள புறவெளியில் பனி இறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். திரட்சி திரட்சியாக வெண்மை படர்ந்து நிரம்புகின்றது. குளிரின் குணத்தால் வீடுகள் கூட உருமாறத் தொடங்குகின்றன. சிவப்பு நாழி ஓட்டு வீடுகள் வளைவுகள் இறங்கும் வெம்பா வீட்டின் செங்கற்களை ஈரமாக்கி வெறிக்கச் செய்கின்றன. மூன்று தெருக்களும் பிரியும் முனையில் இருந்தது அந்த மைதானம். அவனைத் தவிர அந்த மைதானத்தில் இப்போது நின்றுகொண்டிருப்பவை இரண்டு மரங்கள்தான். அவன் கைகள் புங்கை மரத்தில் கட்டப்பட்டிருந்தன. உதடு வெடிக்க அவனையும் குளிர் பற்றிக் கொண்டிருந்தன. உறக்கமற்ற வான்கோழியொன்று கவக்! கவக்! என்றபடி தெருவில் அலைந்து கொண்டிருப்பதைப்  பார்த்துக் கொண்டிருந்தான். வான்கோழியின் அசைவு தெருவையே சலனம்tagore_s.ra_1 கொள்ளச் செய்கிறது.

நீளும் பின்னிரவில்தான் நிலா வெளிப்பட்டிருக்கின்றது. முகத்தில் சரியும் தலைமயிரை நீக்கக்கூட கைகளை அசைக்க முடியாது. வெகு வலுவாகவே கட்டியிருந்தார்கள். புங்கை மரத்தில் காய்கள் சடை சடையாகத் தொங்குகின்றன. பூக்களின் வாடை வேறு. மூன்று தெருவினுள்ளும் தன் போக்கில் அலைகிறது காற்று. எல்லா ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்தன. வானம் நீலம் இருண்டு கருத்து வெடித்தபடியே நகர்கிறது. புங்கை மரத்தின் பட்டையைப் போல அவனும் மரத்தோடு சேர்ந்து போயிருந்தான். மரத்தின் இலைகள் விரலை அசைத்தபடியிருந்தன. உடம்பின் அடிபட்ட காயங்களில் ஈரக்காற்று புகுந்து வேதனை கொள்ள வைக்கின்றது. தன் கால்களைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தான். காற்று தூக்கி எறியப்பட்ட ஓலைப்பெட்டியை அறுக்கும் சப்தம் கேட்டபடியே இருந்தது. வயசாளியின் இருமலும், தொடர்ந்த புலம்பலும் கேட்கின்றன. அவன் உடம்பில் இரண்டு எறும்புகள் இறங்கத் தொடங்கி இருந்தன. புங்கை மரத்தின் பூக்களின் அடியில் உறங்கிக்கொண்டிருந்த ஜோடி எறும்புகளாக இருக்கக்கூடும். கறுத்த, கட்டுகட்டான வயிற்றோடு எறும்புகள் அவன் நெற்றியில் வந்து நின்று மரத்தின் உருவம் திடீரென மாறிவிட்டது போலத் திகைப்படைந்து, கீழே இறங்க வழியின்றி அலையத் தொடங்கின. வெகுவேகமாக முகத்தின் பரப்பில் எறும்புகள் ஊர்ந்து காது வழியே தோளில் இறங்கி, திரும்பவும் முகத்துக்கே வந்தன. எறும்பினை ஒருபோதும் இத்தனை அருகில் கண்டதேயில்லை. நுட்ப வசீகரமும், உருண்ட கண்களுமாக அவற்றின் அலைச்சல் தீவிரமாகின்றது. உடல் முழுவதும் எறும்பின் பிடியில் சிக்கி சிலிர்த்தது போலாகியது. அவன் இச்சையின்றியே முகம் சுருங்கி விரிகின்றது. இரண்டு எறும்புகளும் நுண்ணிய கால்களால் முகத்தைப் பற்றிக்கொண்டு நகர்கின்றன. வழியின்றி மீண்டும் மரத்தின் கிளைகளை நோக்கி நகர்ந்தன எறும்புகள்.

இந்த இரவின் சில மணி நேரங்களுக்கு முன்பு அவன் கூட ஈர ஓடுகளைப் பற்றி இப்படித்தான் நகர்ந்துகொண்டிருந்தான். அப்போதே காற்றில் குளிர் இருந்தது. சுவர் சுவராகக் கடந்து மேற்கு வளைசலில் அவன் இரவில் போய்க்கொண்டிருக்கும் போது பூசணிக் கொடிகளில் பூக்கள் இரவில் பூத்துவிடுவதைப் பார்த்தான். பின்பனிக் காலத்தில் கேட்பாரற்ற பூசணிக் காய்களின் மீது இலைகள் படர்ந்து மறைக்கின்றன. நாய்களும் கூட அடங்கி மண்ணில் முகத்தைப் புதைத்து உறங்குகின்றன. அவன் இடுப்பில் இருந்த சூரிக் கத்தியை உருவி சுவரில் படர்ந்த கொடிகளை வெட்டியபடியே நடந்தான். சுவர்கள் பொதுமியிருந்தன. பின்கட்டில் உலர வைத்த தானியங்கள், கொத்த கோழிகள் அற்றுக் காய்கின்றன. நீர்த்தொட்டிகளின் சலனமற்ற நீர், நட்சத்திரங்களைக் காட்டிக்கொண்டிருந்தது. தன் முகத்தையும் அதில் பார்த்துக்கொண்டான். சாக்குப் படுதாக்கள் தொங்கும் தொழுவத்தில் இறங்கும்போது மாடுகள் விழித்துக்கொண்டுதான் இருந்தன. தாங்கு கல் வழியே ஏறி ஓட்டின் மீது உட்கார்ந்து கொண்டான். மெல்ல நகர்ந்து ஏறியதும், மைதானத்தின் புங்கை மரங்களும், வேதக் கோயிலின் மணிக்கூண்டும், கண்ணாடி ஜன்னல்களும் தெரிந்தன. இரண்டடுக்கு ஓட்டுச் சரிவினுள் புறாக்கள் இருக்கின்றதா எனப் பார்த்தான். ஓட்டை மிதித்து நடந்தால் புறாக்கள் விம்மி குரல் எழுப்பிவிடும். மரத்தூசுகள் அடர்ந்த அந்தப் பொந்தில் புறாக்கள் இல்லை. குருவி முட்டை தென்பட்டது. வெகு அலட்சியமாகவும் தைரியமாகவும் ஓட்டின் மீது உட்கார்ந்திருந்தான்.

அவன் ஏறியிருந்த வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தார்கள். அந்த வீட்டில் கொடுக்கல் வாங்கல் ரொக்கம் எப்போதும் உண்டு. ஆண்கள் மாதம் ஒரு நாள் வசூலுக்குப் போய்விடுவார்கள்.  இன்று அது தெரிந்துதான் வந்திருந்தான்.

குனிந்த கண்ணாடி ஓடு வழியாக உள்ளே பார்த்தான். கறுப்பேறிய தரை தெரிந்தது. அறையின் ஒரு மூலையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது போலும்; வெளிச்சம் தரைக்கு வருவதும் போவதுமாக இருந்தது. கிழக்கு ஓடு ஒன்றை எடுத்துவிட்டால் உள்ளே இறங்கிவிடலாம். ஓடு சரியாகச் சொருகப்பட்டிருந்தது. கத்தியைக் கொடுத்து நெம்பினான். ஓடு உடைபட்டது. பாதி ஓட்டைக் கையில் எடுக்கும்போது எதிர் மாடியிலிருந்து பூனை தாவி அடுத்த ஓட்டில் நடந்தது. வாலைச் சுருட்டியபடியே அவனைப் பார்த்தபடியே போனது. உடைபட்ட ஓட்டின் வழியே காற்று குபுகுபுவெனப் புகுந்து வீடெங்கும் நிறைகிறது. விளக்கின் வெளிச்சமில்லை. அவன் ஈர ஓடுகளைப் பற்றி உள்ளே இறங்க வழி செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் கை வைத்திர்நுத ஓடு உடைந்தது. எழும் முன்பு வரிசையாக ஓடுகள் உடையும் சப்தத்துடன் உயரத்திலிருந்து வீட்டினுள் விழுந்தான்.

பெண்கள் சப்தத்துடன் எழுந்து கொண்டார்கள். மூத்தவள் கதவைத் திறந்து தெருவில் கத்தியபடி ஓடினாள். தெருவில் அரவம் கேட்கும் முன்பு எழுந்து ஓட முயன்றான். யாரோ அவன் கால்களைக் குறி வைத்து ஊனு கம்பை வீசினார்கள். கால்கள் மடங்கத் தெருவில் விழுந்தான். நாய்களின் தூக்கம் கலைந்த கரைப்பும், குழந்தைகளின் அழுகையொலியும் கேட்கத் தொடங்கின.

அவன் தலைமயிறைப் பற்றியிருந்த கரம் ஒரு வயசாளியினுடையதாக இருந்தது. அரிக்கேன் விளக்குகளுடன் வந்த சிலர் தூரத்தில் வெறித்துக்கொண்டிருந்தார்கள். பெரியவள் ஓடும் போது தள்ளிய கோழிக்கூட்டிலிருந்த குஞ்சுகள் எதையும் அறியாது மேயத் தொடங்கியிருந்தன. முகத்துக்கு எதிராகத் தீக்குச்சியைக் கிழித்துக் காட்டியதும் அவன் கண்களை மூடிக் கொண்டான். ஓங்கி அறை விழுந்தது. ஆள் அடையாளம் சுலபமாகக் கண்டுவிட்டார்கள். பெண்கள் கலையாத உறக்கத்துடன் அவிழ்ந்த சேலைகளைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். பிடரியைப் பிடித்துத் தள்ளியபடி அவனை மைதானத்திலிருக்கும் புங்கை மரத்தில் கட்டி வைக்கக் கூட்டிப் போனபோது, எப்போதுமே உறங்கிக்கொண்டிருக்கும் குருடன் எழுந்து எதையோ விசாரித்தபடி அருகில் வந்துகொண்டிருந்தான். அவன் குரல் இரவுப் பூச்சிகளின் அறுபட்ட சப்தத்தை ஞாபகப்படுத்தின. உறங்கிய நாய்களைத் திட்டியபடியே வந்தான் குருடன்.

நிறைய பணமும், தங்கமு வைத்திருப்பதாக எல்லோரும் நம்பிக்கை கொண்டிருந்த அந்தக் குருடன், தன் படுக்கையிலேதான் எல்லாவற்றையும் வைத்திருந்தான். எப்போதும் உறங்கியபடிக் கிடக்கும் அவன் குரல் கசப்பும் பிசுபிசுப்பும் கொண்டிருந்தது. அருகில் வந்து அவன் முகத்தில் விரல்களைப் பதித்து அலையும் குருடனின் விரல்கள் மண்புழுவின் நெளிவைப் போல இருந்தன. அசூசையாக இருந்தது. பெருமூச்சு விட்டபடியே திட்டினான் குருடன். தனியே வீட்டுக்குப் போகும்வரை பேசியபடியே நடந்த குருடனுக்குப் பின்னால் அவனைத் தள்ளிக் கொண்டு வந்து புங்கை மரத்தில் கட்டினார்கள்.

அம்மாவின் பின் ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்த சிறுமிகளில் ஒருத்தியை அவன் பார்த்தபடியே இருந்தான். அவள், அம்மாவிடம் “கள்ளப்பய, என்னயவே பாக்கான்” எனச் சிணுங்கினாள். சிறுமியின் முகத்தை சேலை மறைத்துக் கொண்டது. உறக்கம் கலைந்த இரண்டு சிறுவர்கள் மரத்தின் எதிரேயிருந்த கல்லில் உட்கார்ந்து அவனைப் பார்த்தபடியே இருந்தார்கள். ஒடிசலான, கன்னம் ஒட்டிய உருவத்தை கள்ளன் என அவர்கள் ஒருபோதும் நினைவு கொண்டதில்லை. அவன் தலைமயிர் சரிய குனிந்திருந்தான். காலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவனைக் கூட்டிப் போகும்போது உடன் போக வேணுமென சிறுவர்கள் பேசிக் கொண்டார்கள். கூட்டம் கலைந்திருந்தது. அந்தச் சிறுவர்களை வீட்டுக்குள் விரட்டிவிட்டுப் பெரியவர் கல்லில் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். வீட்டுப் பெண்கள் அலுத்தபடியே கலைந்து போகும்போது அவன் மனைவியின் சாயல் கொண்ட ஒருத்தி கூட அந்தக் கூட்டத்தில் கலைந்துபோனாள். வீட்டில் விளக்கைப் பெரிதாகத் தூண்டிவிட்டு உறக்கம் வரும்வரை அவர்கள் இனிப் பேசிக்கொண்டிருப்பார்கள் எனத் தோணியது.

சிகரெட் புகை அவன் முகத்தைச் சுற்றியது. நாக்கில் சிகரெட் சுவை தானே ஊறியது. காற்றைக் கிழித்துக்கொண்டான். வீட்டில் இந்நேரம் மனைவி உறங்கியிருப்பாள். அவளுக்குக் குழந்தைகள் மேல் எப்போதும் ஆசைதான். எட்டு வருசமாகியும் குழந்தையில்லை. இப்போதும் சிறு பெண்ணைப் போல யாரு வீட்டிலாவது திருகைச் சுற்றிக் கொண்டிருப்பாள். அவளுக்கு மிகச் சிறிய கண்கள். அவள் பெட்டியில், உலர்ந்த தாழம்பூ மடல் கிடப்பது கூட ஏனோ ஞாபகம் வருகிறது.

திடீரென ஏற்பட்ட அதிர்வென்று ஊர் அடங்காமலேதான் இருந்தது. அந்த இரண்டு எறும்புகள் அவன் தலைக்கு வருவதும், மேலேறுவதுமாகவே அலைந்தன. பனி கால்களின் அடியில் இறங்குவதை உணர்ந்தான். பறவைகள் எதுவும் அடையாத மரமாக இருந்தது.

கட்டி வைக்கப்பட்ட அவனுக்குக் காவலாக யாராவது ஒருவர் மட்டும் மைதானத்தில் இருக்கலாம் எனப் பேசிக் கொண்டார்கள். எப்போதோ பல வருடங்களுக்கு முன்பு பிடிபட்டு கட்டி வைக்கப்பட்ட கள்ளன் ஒருவன் உதடுகள் வெடித்து, குளிர் தாங்காது செத்துக் கிடந்ததை யாரும் இன்னும் மறக்கவே இல்லை. அந்த மரம் இப்போதில்லை. பெண்களின் பயத்தால் வெட்டுப்பட்டுப் போனது.

ஆனால் இறந்துபோன கள்ளன் இரவெல்லாம் கடுமையாக முனங்கினான். திடீரென வெறி வந்தது போலக் கத்துவான். மரத்தையே சாய்த்துக்கொண்டு ஓடுபவன் போல மூர்க்கம் கொள்வான். சமயங்களில் தானே பலருடன் பேசிக்கொண்டது போல பேசிக்கொண்டிருந்தான். அப்போதும் நல்ல பனிக்காலம். நடமாட்டம் அற்ற தெருக்கள். அவன் குளிரை பேயை விரட்டுவது போல இரவெல்லாம் திட்டியபடி இருந்தான்.  அவன் சப்தம் ஓய்ந்து இறந்துபோனபோது ஊரில் வெம்பா அடர்ந்து போயிருந்தது. மூன்று நாள்களுக்கு அவன் உடல் ஊரிலே கிடந்தது. ஆள் அடையாளம் தேடி தெற்குப்பக்கம் போனவர்களும் திரும்பிவிட்டார்கள். அவன் முதுகில் தேளின் உருவத்தைப் பச்சை குத்தியிருந்தான். அந்தக் கள்ளன் யாரென்று தெரியவே இல்லை. அவனை அந்த ஊர்க்காரர்களே சேர்ந்து எரித்து வந்தார்கள். அதற்குப் பிறகு அந்த வருடம் ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் வந்ததையும், ஊரின் பல வீடுகளில் தேள் உதிர்ந்ததையும் கண்டார்கள். அந்த மடங்கிய கால்கள் பெண்களின் ஞாபகத்தினுள் புதையுண்டிருந்தது நெடுங்காலமாய்.

அதன்பிறகு இப்போதுதான் அவர்கள் இன்னொருவனைப் பிடித்திருக்கிறார்கள். காவலுக்காயிருந்து ஓர் இடத்தில் நிற்காமல் நடப்பதும், கைகளை சொடுக்கிக்கொள்வதுமாக இருந்தான். அவன் விரல்களில் பாம்பு மோதிரமிட்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. காவலுக்கு இருந்தவன் சமயங்களில் அவன் அருகில் வந்து தலைமயிரைப் பற்றித் தூக்கி மூச்சு வருகிறதா எனப் பார்த்துக்கொண்டான். பனி அதிகமானதும் காவல்காரனும் போய்விட்ட பின்பு அவன் மட்டும் நின்றிருந்தான்.

விழித்திருக்க இருக்க பசியும் தாகமும் அதிகமாகிக்கொண்டே போனது. அந்தச் சிறுவர்கள் இன்று இரவு உறங்க மாட்டார்கள் என்றே தோணியது.

அவன் சிறுவனாகயிருந்தபோது உறங்குவதை விடவும் ஊர் சுற்றுவதிலேதான் விருப்பப்பட்டான். உறங்குவதாயினும் காட்டுவெளியின் கோயில் படிகளிலோ, வைக்கோல் போரில் புரண்டோ உறங்க விரும்பினான். அய்யாவின் பழக்கமும் அப்படியே இருந்தது. ஊரில் கிடைபோடும் கீதாரிகள் வரும் காலத்தில் அய்யா அவர்களோடு காட்டில்தான் தங்குவார். அவனும் உடன் போவான். கீதாரிகளுடன் காட்டில் உறங்கும்போது அதிசயக்கனவுகளின் ஊற்று கசிந்து பெருகத் தொடங்கும். கீதாரிகள் அய்யாவுக்குப் பயந்தார்கள்.

காட்டில் சாப்பாட்டு ருசி மாறிவிடும். நிலா வெளிச்சத்தில் மணலில் அய்யா பதினெட்டாம் புலி கட்டம் வரைவார். மணல் கோடுகள் கட்டமாகும். கீதாரிகள் அவரோடு விளையாட பயந்தார்கள். சிவக்குளம் கீதாரி அய்யாவோடு விளையாடினான். அய்யாவுக்குப் புலிகள். கீதாரிக்கு ஆடு. புலியாட்டம் தொடங்கியது. அய்யாவின் புலிகளால் ஒரு ஆட்டைக் கூட தொட முடியவில்லை. ஆடுகள் புலியை அடைத்துவிட்டன. ஏழு ஆட்டம் தொடர்ந்து புலிகளே அடைபட்டன. கீதாரி ஜெயித்துக் கொண்டே இருந்தான். எட்டாவது ஆட்டத்தில் கீதாரி தற்செயலாக அய்யாவின் கண்களைப் பார்த்தான். கோபமும் குரோதமும் கொண்ட அந்த கண்கள் புலியை ஞாபகப்படுத்தின எட்டாவது ஆட்டத்தில் வேண்டுமென்றே புலி, ஆடுகளை வெட்ட வழி பண்ணி ஆடினான் கீதாரி. அய்யாவுக்குக் கோபம் அதிகமானது. “விட்டுக் கொடுத்து விளையாட வேண்டியதில்லை” என அதட்டினார். அடைபட்ட ஒரு புலி மட்டுமே மிஞ்சியபோது கீதாரி ஆட்டத்தை நிறுத்திவிட்டு மல்லி காபி போடத் தொடங்கினான்.

தூரத்தில் கிடை ஆடுகள் தரை பார்த்து அசைவற்று நின்றன. அய்யா அடைபட்ட புலிகளைப் பார்த்தபடியே இருந்தார். நெருப்பு கல்லி நின்று வெடித்து செத்தைகளில் தாவியது. பூதாகரமான நிழல்கள் தோன்றி மறைந்தன. மல்லி வாடை கொதித்தது. சூடாக மல்லி காப்பியைக் குடித்துவிட்டும் அய்யா தோற்றுத்தான் போனார்.  கீதாரி ஆடுகளுக்கு நடுவில் உறங்கப் போனான். அவனும் அய்யாவும் புலிக்கட்டத்தின் பக்கமே படுத்துக் கிடந்தார்கள். விளையாட்டில் புலியாக மாறியிருந்த  கற்கள், இப்போது வெறும் கற்களாக இருந்தன. அய்யாவுக்கு உறக்கம் கொள்ளவே இல்லை. புரண்டுகொண்டே இருந்தார்.

கீதாரி ஆடுகளுக்குள் பதுங்கி வரும் உருவத்தைப் பார்த்தபடியே படுத்துக் கிடந்தான். அய்யாதான் கையில் கத்தியோடு ஆடுகளுக்குள் பதுங்கி கீதாரி படுத்துக் கிடந்த இடத்துக்குப் போய்க் கொண்டிருந்தார். ஆடுகள் உடம்பை நெளித்துக் கொண்டன. கோழை ஒழுகும் மூக்கை அய்யா மேல் உரசி நின்றன ஆடுகள். அய்யா அருகில் வந்து எழும்போது, கீதாரி ஆடுகளை விரட்டுவது போல எதிர்ப்பக்கம் சூ! சூ! எனக் குரல் கொடுத்தான். கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு அய்யா, தீப்பெட்டி கேட்டபடியே, இன்னொரு ஆட்டம் போடலாமா எனக் கேட்டார். அவன் அந்த இடத்திலே அய்யா காலில் விழுந்து, “எதும் தப்பா நடந்திருந்தா… மன்னிச்சிருங்க. பிழைக்க வந்தவன்” எனக் கும்பிட்டு எழுந்தான். அய்யா அவனோடு உட்கார்ந்து கொண்டார். விடியும்வரை கீதாரி தன் குடும்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான். அன்றிரவு ஆற்று மணலில் படுத்துக் கிடந்தபோது அடித்த ஆட்டுக் குட்டிகளின் பால் வாடை அவனுக்குப் பிடித்திருந்தது.

சிகரெட் புகையும் அடங்கிவிட்டது. அவன் மரத்தோடு சரிந்து நின்றுகொண்டிருந்தான். வெம்பா படர ஆரம்பித்து, அடுத்திருக்கும் மரம், வீடுகள், வேதக் கோயில், வான்கோழி எதுவும் தெரியவில்லை. எல்லாமும் வெம்பாவினுள் போய் விட்டன. மரத்தின் இலை இலையாக வெம்பா படிகிறது. குளிர்ச்சி கொண்ட மரம் அசைவற்று நின்றது. அவன் எதையும் பார்க்காமலிருக்கக் கண்களை மூடிக்கொண்டான். பட்டை உதிர்ந்த மரத்தில் ஈரம் குபுகுபுவென ஊருகின்றது.

அடைக்காமல் விட்டுப்போன கோழிக் குஞ்சுகள் வெம்பாவில் மாட்டிக்கொண்டு சப்தமடைகின்றன. அவன் தளர்ந்து போயிருந்தான். மெல்ல தான் மரத்தினுள் புகுந்துவிட்டது போலவும், எல்லாக் கிளைகளும் தன்னிடமிருந்தே கிளைக்கின்றன எனவும் உணர்வு கொண்டான். இப்போது மரத்தின் முண்டுகளும், வெடிப்பும், அசைவற்ற தன்மையும் அவனுக்கு துக்கத்தையே தந்தன. தன் கைகள் கட்டப்படாமல் உயரே அசைத்துக்கொண்டிருப்பதாகத் தோணியது.

மரத்தின் வயிறு திறந்து அதனுள் புகுந்துகொண்டது போன்றும், பசுமைச் சாறுகள் தன் உடலெங்கும் ஓடுவதாகவும், வெகு பாதுகாப்பான இடத்தினுள் தான் பதுங்கியுள்ளதாகவும் உணர்ந்தான். உடல் பருமன் அழிந்து மரமெங்கும் நீண்டது. ஊரின் உயரத்துக்கு வியாபகம் கொண்டிருந்தது மரம். அண்ணாந்து பார்த்தபோது ஆயிரக்கணக்கான இலைகளும், காய்களும் விநோதமாகத் தோன்றின. புங்கை இலைகளைச் சொருகிக்கொண்டு வேட்டைக்குப் போனதன் ஞாபகம் திரும்பியது.

வேட்டைக்குச் செல்லும் அய்யாவின் பின்பு உடம்பில், தலையில் இலைகளைக் குத்திக்கொண்டு துணை வேட்டையாடி, தெருச் சுற்றி வரும்போது அறுபட்ட கோழியின் ரத்தம் தெருவெங்கும் திட்டுதிட்டாகப் படியும்.

ஆகாசம் கூட இப்போது கலங்கிய ரத்தத் திட்டைப் போலச் சிதறிக் கொண்டிருந்தது. ஈரம் நிரம்பத் தொடங்க, உடல் துவண்டு உறக்கத்தினுள் இழுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு புள்ளியில் பனி சில்லிட அவன் உறக்கம் கொண்டான். எதுவும் அப்போது நினைவில் இல்லை. வெயில் பட்டபோதே நினைவு வந்தது.

அந்தச் சிறுவர்கள் இருவரும் எதிரில் உட்கார்ந்திருந்தனர். சிறுவர்களில் ஒருவனிடம் அவனின் சூரிக் கத்தி இருந்தது. அதைக் காட்டி மற்றவர்களை மிரட்டிக் கொண்டிருந்தான். மைதானம் பிரகாசமாகி, மரம் அவனை வெளியேற்றியது போல் திமிறி நின்றது. ஊரின் அமைப்பே மாறியிருந்தது. அவனைக் கூட்டிப் போக வந்திருந்த ஆட்கள் குளித்து, படியத் தலை வாரியிருந்தார்கள். மரத்தில் சரிந்திருந்த அவன் தலையை நிமிருந்து பார்த்தபடி பேசிக்கொண்டார்கள்.
“கிறங்கிப் போயி கிடக்கான். கஞ்சித் தண்ணி கொடுத்துத்தான் கூட்டிட்டுப்  போகனும்.”
சிறுவர்களில் ஒருவன் வேகமாக ஓடி தண்ணீர் செம்பும், கஞ்சியுமாக வந்தான். எதையும் குடிக்க முடியவில்லை. வயிற்றைப் புரட்டியது. பெண்கள் சிறு குழந்தைகளுக்குக் கள்ளப் பயல் காட்டிக்கொண்டிருந்தார்கள். வெயில் ஏறியிருந்தது. இரவில் பார்த்த முகங்கள் எல்லாம் மாறியிருந்தன. அவனை தெரு வழியாக நடத்திக் கூட்டிப்போகும் போது நாய்கள் குலைத்தபடி பின்தொடர்ந்தன. அவன் தெரு தாண்டும்போது திரும்பி வந்த மைதானத்தைப் பார்த்தான்.

மரம் வெயிலில் நின்றிருந்தது. இரவிலிருந்து கீழே இறங்க வழியற்றுத் திரிந்த இரண்டு எறும்புகள் வேகமாக மரத்தில் இறங்கத் தொடங்கின. அவன் தலை இருந்த இடம் வந்ததும் திகைப்படைந்து நின்று மெல்லக் கால்களை நகர்த்தி ஊர்ந்தன. மரம் தன் உருவில் இருப்பதாக உணர்ந்ததும் வேகமாக இறங்கித் தரையில் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் ஊரைக் கடந்து போயிருந்தார்கள். சூரியன் உச்சிக்கு வந்திருந்தது.

*******

1992

Advertisements
Comments
2 Responses to “புலிக்கட்டம் – எஸ். ராமகிருஷ்ணன்”
  1. Rathnavel says:

    நல்ல கதை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: