மகத்தான ஜலதாரை – மா. அரங்கநாதன்

மேலூர் – கீழுர் என இரண்டாகவிருந்த போதிலும் ஆற்று நாகரீகம் ஏற்பட்ட காலத்திலிருந்தே, அங்கே மக்கள் இயங்க ஆரம்பித்திருக்க வேண்டும். கோவில் நாகரீகமும் தழைத்திருக்கக்கூடும். அந்தக் கரைகளில் யானைகளின் களியாட்டங்களைப் பார்த்துவிட்டு ஒரு கிழவன் கடவுளை அறிந்து கொண்டதாகச் சொல்லித் திரும்பினான். பின்னர் அவன் பெயர் சொல்லிப் பாராட்டி சோறுimage_6 மட்டும் சாப்பிட்டது அந்த ஊர்.

இடப் பெயரைக் கொண்டுதாம் அவ்விரண்டும் நின்றன. காலையிலே அந்த சூர்யவொளி மட்டும் கீழுரிலே முதலில் விழுந்து எழும்பிப் பின்னர் மேலூருக்கு வரும் – வேற்றுமைகள் இரண்டிற்கும் வேறு இல்லை. கலப்பையை விட்டால் எந்தக் கலையும் தெரிந்துவிடாத முந்நூறு பேர்களை அந்த இரண்டு ஊர்களும் சுமந்தன.

ஊர்களின் நடுவே ஓடவேண்டுமென்ற சம்பிரதாயப்படி அது ஓடிக் கொண்டிருந்தது. வெட்டப்பட்ட ஆறு போல ஓடியது. நல்ல நீரையும் சுமந்து வரும். இரு கரைகளிலும் பச்சை மரங்களுக்கு குறைவில்லை. ஆனால் சாக்கடையென்று பெயர் வந்த பிற்பாடு அதன் கரைகளுக்கு மதிப்பில்லாது போயிற்று. அந்தக் கரைகளிலுள்ள நல்ல மரங்களையும் சீண்டுவார் கிடையாது.

சாக்கடை ஒரு காலத்தில் பெரிய ஆறாக இருந்திருக்கக்கூடும். ஊரின் குடிதண்ணீர் குளத்திற்கும், அதன் நீர் சென்றதுண்டு. இப்போது மடையை மூடி விட்டார்கள். எனவே ஆறு சாக்கடையான போது குளம் வெறும் பள்ளமாகிவிட்டது. வரலாற்றுப் புதிராக நின்ற அந்த ஊருக்குத் தகுந்த வொன்றுதான்.

அதன் அகலத்தைப் பொறுத்த மட்டில் ஒரு பிரச்சனையை எல்லாரும் உணர்ந்து கொண்டிருந்தனர். இந்த ஊருக்கோ – ஊர்களுக்கோ – இத்தனை அகல சாக்கடை போதாது – இன்னும் பெரிதாக வேண்டும். முக்கால்வாசி நோய்களும் இதனால்தான். மழைக்காலத்தில் அது பொங்கி ஊருக்குள்ளேயே வருவதென்றால் – இதைக் கவனிக்க வேண்டும் என்று குரல்கள் வந்தன. எல்லாரும் ஏற்றுக் கொண்டார்கள்.

”ஆமாம் – ஆனால் முக்கியமான வேறு பலவற்றை மறந்துவிட முடியுமா?”

கரையோரங்களில் படுத்துக் கொண்டிருக்கும் நாற்கால் சீவராசிகளுக்குப் போக்கிடம்? அது பார்க்கப்பட வேண்டியதானால் இருகால் சீவன்களின் ஆரோக்கியம் எப்படித் தேறும்? ஆரோக்கியம் அந்தந்தக் கால்களுக்குத் தகுந்தபடியல்லவா?

இருக்கட்டும் – அந்தக் கால்வாய் பெரிதாக்கப்பட வேண்டுமானால் இரண்டு மண்டபங்கள் உடைபடுமே – அவை வரலாற்றுப் பாரம்பரியம் உடையதாயிற்றே. பூசனை கூட அந்த மண்டபத்தில் அல்லவா நடை பெறுகிறது. இழந்து விடுவதற்கும் ஓர் அளவு இருக்க வேண்டும். என்ன செய்து? நிதானம் தேவை. அவர்கள் காலங்கருதி இருந்தார்கள். ஒரு மழைக் கால நாளில் ஊரெங்கும் நடுங்கும் நிலையேற்பட ஆறு பொங்கிக் கரைகள் உடைபடலாமென சூசகம் தென் பட, சொல்லி வைக்காமலேயே அந்த முந்நூறு பேரும் மண்வெட்டி கொண்டு தன்னிச்சையாக இரண்டு மைல் தள்ளியிருந்த ஒரு தளர்ந்த பகுதியை வெட்டிவிட வெள்ளம் உடைத்துக் கொண்டு வெளியே ஊர்களைக் காப்பாற்றி விட்டது. உடைப்பெடுத்த பக்கமிருந்த வயல்கள் மண்மேடு கொண்டன. உடைத்த இடத்தின் அருகிலிருந்த இருபது குடிசைகள் மட்டும் திடீரெனக் காணாமல் போயின.

அவர்கள் மயில் மீது ஏறி நின்ற ஒரு அழகான கடவுளுக்கு இரண்டு நாள் பூசனை முடித்தார்கள். உடைப்பு விழுந்த இடத்திலும் பூசனை நடந்தது. அந்த இடம் இன்னொரு ஞாபகச் சின்னமாயிற்று. அவர்கள் சந்தோஷமாகவிருந்ததாகத் தெரியவில்லை. முயற்சியும், ஒற்றுமையும் திருவினையாக்கிற்று என்று பெருமைப் பட்டுக் கொள்ளவுமில்லை. குடிசைகள் பலியானதைப் பற்றி இயல்பான வருத்தத்துடன் பேசினர் – யோசனையும் செய்தார்கள். ஞாபக சக்தியுள்ள ஒருவன் ஆற்றை அகலப்படுத்த வேண்டிய அவசியம் பற்றி எடுத்துச் சொல்லி ஒரு முடிவெடுக்கச் சொன்னான். அது எளிமையான வழியாக தெரியவில்லை.

ஊர்களைத் தாண்டி வயலும் தோப்புமாகச் சேர்ந்திருந்த விடத்தில் சிறுகுடிசையைப் போட்டு வாழ்ந்த இவ்வூர்க்காரன் மாடுகளுக்கு தவிடு வாங்க கீழுர் வருவான். அந்தத் தோப்புக்காரனையும் (அவன் தோப்புக்காரன் என்றே அழைக்கப்பட்டான்) சேர்த்துத்தான் ஊர் மக்கட் தொகை முந்நூறு என்பதை நாளா வட்டத்தில் எல்லாரும் மறந்து விட்டிருந்தனர். நிலத்தடி நீர் பற்றியும் நெற்பயிரின் கூறுகள் பற்றியும் அதிசயமான சங்கதிகளை எளிமையாகக் கூறுவான். தாவர இனத்தில் அநேகமாக அவ்வூர் வகைகள் அனைத்தையும் அறிந்தவன். ”தென்னை மரத்தை வளர்க்கத் தெரியாதவனோடு நான் என்ன பேச முடியும்?” என்று கேட்பான்.

தென்னை மரமென்ன – ஊரின் குப்பை மேனிச் செடிகளையும் அவன் அடையாளங் கண்டு கொள்வான். எந்தக் குடிசையின் ஓலை விரிசல் விட்டிருக்கிறது என்பதை அவனால் சொல்ல முடியும். எப்போதாவது திருவிழாக் காலங்களில் ஊரில் இருந்து விட்டால் ”யாரோ ஒருவன் பட்டம் சூட்டிக் கொண்டால் நீங்கள் அதைக் கொண்டாடிக் கொண்டாடித் தீர்க்கிறீர்கள்” என்று சிரிப்பான்.

”ஏதோ ஒரு சக்தி உண்டல்லவா?” என்ற இரண்டுங் கெட்டான் கேள்விக்கு.

”எனக்குத் தெரியாது. நீ தென்னை மரத்தைப் பத்திக் கேளு – கடவுளைப் பற்றி யாரிடம் கேட்பது என்பது தெரியாமல் போனதின் விளைவுதான் இது – கடவுளுக்கு சிரமம் கொடுக்காதே” என்று சொல்வான்.

வயற்கரைப் பக்கமாகச் சாலையில் நடை பயில்வான். வாய்க்கால் நீரில் தன்னைச் செம்மைப்படுத்திக் கொண்டு நிற்கையில், சில பிரச்னைகள் அவனிடம் சொல்லப்படும். வயலும் குடிசையும் சம்பந்தப்பட்டதாகவிருக்கும்.

ஒரு சமயம் அசலூருக்குப் போயிருந்த ஒருவன் திரும்பி வந்தபோது, அவனது வயல் உழுது பயிரிடப்பட்டிருந்தது – அவனுக்குத் தெரியாமலேயே. இது பற்றித் தோப்புக்காரனிடம் கேட்டபோது சொன்னான்.

”உன்னைவிட அவன் உழவு வேலையை நன்றாகவே செய்திருக்கிறான். இந்த உழவுக்காகவே வயலை நீ அவனுக்குக் கொடுத்துவிடலாம்” என்று பரிந்துரை செய்தான். ”பயிர் செய்வதில் உனக்கு ஆர்வமில்லாத போது ஏன் மற்றவன் மீது கோபங் கொள்கிறாய்” என்று கேட்டான்.

இந்தத் தோப்புக்காரன் பூசைன நடந்த சமயம் ஊருக்குள் வரவில்லை. ஆனால் உடைப்பு பற்றி எல்லாரிடமும் பேசினான்.

”இது ஆறு அல்ல… சாக்கடை. இரண்டு ஊர்களின் பக்கமும் சாக்கடைதான். அது இருக்க வேண்டிய இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி பிரச்சனை தீரும்? இதைச் செய்து பாருங்கள். அதோ அந்தப் பனை மரம் தெரிகிறதே அந்தத் தொலைவு சாக்கடைக்காக விட்டுக் கொடுத்து விலகி, வயற்கரையோரமாக குடிசை போட்டுக் கொள்ளுங்கள், நகர்ந்துவிடுங்கள் – இது ஒன்றுதான் வழி..”

வேறு ஒன்றும் சொன்னான்.

”இந்த வரலாற்று மண்டபங்கள் எப்படியும் உடைப்பட்டு விழும். அது இருக்கட்டும். மண்டபத்திற்காக வருத்தப்படும் நீங்கள் சாக்கடைக்காக வருந்தியதுண்டா – தெரிந்து கொண்டால் சரி – இந்தச் சாக்கடையே ஒரு வரலாறுதான். இந்த ஆற்றின் பெருமைக்காகக் கட்டியதுதான் அந்த மண்டபங்கள். எதற்காக அழவேண்டும் என்பதுகூடத் தெரிவதில்லை உங்களுக்கு.”

அவன் பின்னர் தவிடு வாங்கிக் கொண்டு போனான், போனவன் ஒரு மாத காலமாக வரவில்லை. அவனது தோட்டத்தில் வேலையிருக்கும் – தென்னங் கன்றுகளைப் பரிபாலிக்க வேண்டும். அவனுக்கு வேலை அதிகம், எல்லாமே புதுப்புது வேலைகள்.

தோப்புக்காரன் அடுத்த முறை ஊருக்கு வருமுன்னரே வேலைகள் நடந்தேறின. பனை மரம் இருந்த இடம் வரை கீழுரின் பகுதிகள் சிதிலமாக்கப்பட்டு குடிசைகள் வெகுதூரம் தள்ளிப் போடப்பட்டன. அவன் சொன்னது போல காலி செய்யப்பட்ட இடம் துப்புரவு இல்லாதவொன்றுதான். மண்ணில் நீருற்று – சாக்கடை ஊற்று. அந்த இடத்தில் இன்னும் சிறிது காலமிருந்தால் புரிந்தது. குடிசைகளை மாற்றியமைப்பது அவர் களுக்குச் சிரமமில்லை – ஊரே வேலை செய்தது. <!––> முன்பிருந்ததைவிட இருமடங்கு சாக்கடை அகலமாகிவிட்டது. புதிய குடிசைகள் வயல்கள் பக்கமிருந்த பகுதிகளில் முளைத் தன. கீழுர் இன்னும் கிழக்குப் பக்கமாக விரிந்து நின்றது. புதியதாகப் போடப்பட்ட குடிசைகளின் இடைவெளி அதிகமாகி யதைத் தவிர வேறொன்றும் வித்தியாசம் ஏற்படவில்லை.

தோப்புக்காரன் ஒரு மாதங்கழித்து தொன்னங்கன்றுகளைத் தூக்கிக் கொண்டு வருகையில் அவனை எதிர்கொண்டார்கள். அவன் தென்னங்கன்றில் தான் கண்ட அதிசயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். உலகிலேயே மிகவும் வியப்பான சங்கதி அன்று அந்த தென்னங்கன்றுதான் என்பதாகச் சந்தோஷத்துடன் பேசினான். ஒரே ஒரு விஷயத்திலேயே மகிழ்ச்சியும் வியப்பும் அமைதியும் ஒன்று சேரக் கிடைப்பது சாத்தியமென்பது அவன் பேச்சிலே தெரிந்தது. பிறகுதான் சாக்கடை விஷயத்திற்கு வருகிறான்.

”நீங்கள் எல்லோரும் செய்ததுசரியானது தான். ஆனால் ஒன்று – நான் பனைமரம் வரை என்று சொன்னது மேலூர் பக்கத்தையும் சேர்த்தல்லவா சுட்டிக் காட்டினேன். இப்பொழுது நீங்கள் கீழுர் மரம் வரை மட்டும் விலகிக் கொண்டு விட்டீர்கள். அது நல்லதுதான் – விட்டு விடுவது நல்லதுதான். ஆனாலும் இந்தச் சாக்கடைத் தீமை மேலூருக்கு மட்டும் சேர வேண்டுமா என்ன – நாளைக்கே ஆரம்பித்து விடுங்கள். அந்தப் பக்கத்திலும் விரிவடைய வேண்டும் – அங்குள்ள குடிசைகளும் விலகிப் போய் விடட்டும்.”

புதிய வேலைதான் – ஆனால் புதியதொரு வழியை காட்டிவிடும் வேலை. சாக்கடையை சாக்கடையென்றே அழைக்க ஒரு தைரியம் வேண்டும். தெரிந்தால் மட்டும் போதாது. அந்த ஊர் மனதார அப்படி அழைத்ததாகத் தெரியவில்லை. ஒரு வகையில் பார்த்தால் அந்தச் சாக்கடைதான் விலகிச் செல்கிறது – நகருகிறது என்று தோன்றிற்று. சாக்கடை ஒரு நல்ல ஆறாக இருந்திருக்கக்கூடும் – நகருகின்ற சாக்கடையும் ஆறாக மாறலாம். மாறுவதுதான் நாகரீகம் போலும் – அதுதான் தன்னை உயிருடன் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் செயல் போலும். மகத்தான வொன்றுதான்.

ஆனால் நகருவதில் சிரமம் இருந்ததாக எல்லாரும் எண்ணினார்கள். மேற்பார்வையாகப் பார்த்தால் அது அமைதியுடைய தென்றும் தெரியவில்லை. எளிமையாகவும் தோன்றவில்லை.

இரண்டு ஊர்களும் தூரக் கணக்கில் வித்தியாசப்பட்டிருப்பது யாருக்கும் செளகர்யமில்லை. சாக்கடையொன்று இடையிலே இருந்தது என்றாலும் ஊர் இரண்டாகப் பிரிந்திருப்பது இனிமேல் மனமொப்பிச் செய்ய முடிகிற காரியமாகவும் தெரியவில்லை. இத்தனையளவு விலகிச் செல்வதாக இருந்தால் சாக்கடை பெரிய தாகி விடும், பிரச்சனை தீரும். சந்தேகமில்லை. ஆனால் இனி மேலூர் கீழுராக இருக்க முடியாது. வெவ்வேறாகி விடும் என்பது போல் அவர்களுக்குத் தோன்றிற்று. சாக்கடையை விட அது ஒரு பெரிய பிரச்சனை. ஆனாலும் வேறு ஒரு வழி. இவையெல்லாம் தவிர இருக்க வேண்டும், அந்த வழியை அவர்களே கண்டுபிடித்தார்கள்.

தோப்புக்காரன் வெளியூர் சந்தை சென்று திரும்ப வரும்போது அவனது குடிசையைக் கண்டு பிடிப்பது கஷ்டமாகவிருந்தது. அவனது வயல் – தோப்பு ஆகியவற்றைச் சுற்றியுள்ள இடங்கள் யாவும் மேலூர் – கீழுர் வாசிகளின் குடிசைகளால் நிறைவு பெற்றிருந்தன. அவைகளின் நடுநாயகமாக அவனது குடிசை, காட்டுப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு நின்றது – அவனது மாடுகளும் குளிப்பாட்டப்பட்டு சில பூக்களைச் சூடிக் கொண்டு நடமாடின. தூரத்திலிருந்த பார்த்தவுடனேயே அவனது குடிசை வித்தியாசத்துடன் கோபுரம் போலத் தெரிந்தது. புதிய ஊரில் அவன் நுழைகையில் எதுவும் நடவாதது போல அந்த மக்கள் வரவேற்றனர்.

இனி மேலூரும் கீழுரும் இருக்கப் போவதில்லை. தோப்புக்காரன் ஊராகி விட்டது. பிற்காலத்தில் அது ”கறுப்பஞ் சாவடி” என்றும் அழைக்கப்படலாம். தோப்புக்காரன் பெயராலேயே.

எளிமையான வழி கிடைத்துவிட்ட காரணத்தால் ஆற்று நாகரீகம் மங்கிவிட்டது. ஆனால் இனி புதிய ஜலதாரைகளுக்கு வழி செய்ய வேண்டும். அது உடனடியாகச் செய்ய வேண்டியதில்லை என்று கருதினார்கள்.

உண்மைதானே – வருங்காலத்தில் ஒரு தோப்புக்காரன் கிடைக்காமலா போய் விடுவான்.

****

Advertisements
Comments
One Response to “மகத்தான ஜலதாரை – மா. அரங்கநாதன்”
  1. Jam says:

    அருமையான சிறுகதை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: