காடன் மலை- மா. அரங்கநாதன்,

‘‘ஐயா-மலையை வலப்புறமா சுத்தணுமா-இடப்புறமாவா.’’

‘‘எப்படி வேண்டுமானாலும் சுத்து – மலையைப் பாக்கணும் – அதுதான் முக்கியம்.’’

அந்த இடத்திற்கு விசேட நாளன்று அவன் சென்றிருக்கக் கூடாது. விசேடங்கள் இட விசேடத்தை மங்கச் செய்யும். பெரிய அரண்மனை போன்ற கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஒரு மூலையில் எங்கேயும் பார்க்காதவாறு உட்கார்ந்து கொண்டிருந்த தாடிக்காரிடம் ஏனோ பேச வேண்டும் போலத் தோன்றிற்று. கேட்ட கேள்விக்கு அவர்தான் இப்படிப் பதில் சொன்னார்.

காடன் மலையோடு அவனுக்குச் சொந்தம் உண்டென்று பல்லாண்டு காலமாக கருதிக் கொண்டு maarangana வந்திருக்கிறான். பள்ளி செல்லும் பருவம் முதற்கொண்டு மலை அவனிடம் பேசி வந்திருக்கிறது. எட்டாம் வகுப்பில் தோற்றுப்போன செய்தியோடு வீடு திரும்புகையில் மலையைப் பார்ப்பதைத் தவிர்த்தான். பார்த்திருந்தால் அது சிரித்திருக்காது – அவனுக்கு ‘வெவ்வெவ்வே’ காட்டியிருக்காது. மலையின் அனுதாபம் எப்படியேனும் வெளிப்பட்டிருக்கும். அது காடன் மலை.

மீண்டும் ‘ஐயா’ என்றான். தாடிக்காரர் அவனை இப்போது கவனிப்பதாக இல்லை. எனவே கோவிலின் மற்றப் பகுதிகளுக்குச் சென்றான். உட்பிரகாரங்கள் மனிதக் கும்பலால் அழகிழந்து காணப்பட்டன. வெளிச்சம் குறைவாக விழுந்த ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான். நேரஞ் செல்லச் செல்ல, கும்பல் அவனிருந்த ப்கத்திலும் வந்து மோதி உட்கார்ந்தது. திடகாத்திரம் உள்ளவனாதலால் சமாளித்துக் கொண்டான்.

இரண்டு மணி நேரம் அவனும் அந்தக் கும்பலுமாக இருந்த இடத்திற்கு வருகை தந்தது, அவன் அதுவரை கேட்டிராத ஒரு முடிவின் ஓசையும் ஒரு கருவிய்ன பிளிறலும். இந்தப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பவனான போதிலும், இந்த இடத்தையே சார்ந்தவன் என்று சொல்ல முடியாது. அதனால்தான் அவ்விசைக் கருவிகளைப் புதிதாகச் செவியுற்று அதிர்ந்தான்.

காடன் மலையில் பண்டாரங்கள் மிகுதி. திருவிழாவின்போது அவர்கள் கூட்டம் இன்னுமதிகம். சுற்று வட்டார ஊர்களிலிருந்து நேர்ந்து கொண்ட காணிக்கையைச் செலுத்த, கரும்புத் தொட்டிலிலே குழந்தையைக் கொண்டு வரும் பெற்றோரும் அதிகம். அவர்களில் சிலர் துணியால் வாயை மூடிக்கொண்டும் இருந்தனர். மாமியார்கள் இருக்க முடியாதென அவன் நினைத்தான்.

கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து கொண்டிருப்பதில் ஒரு லாபமும் இருந்தது. பக்கத்திலிருந்த இருவர் பேசிக்கொண்டிருந்த விஷயம். அவனுக்கு அது உதவியாக இருந்தது.

‘‘மூணு நாளா வெளிப் பிரகாரத்திலே அப்படியே உட்கார்ந்திருந்தாராம். பேச்சில்லை. மாமியாரு கொடுமையாலே சாமியாரா மாறிட்டாராம்.’’

சிரிப்புடன் கூடிய பேச்சு. அவனுக்கு அது போது மானதாக இருந்தது.

‘கோனாரே’ என்றழைத்தது, அந்தக் குரல். அதே தாடிப் பண்டாரம்தான். அவன் பேசுவதற்காக நின்றான்.
‘‘எதைத் தேடி நீங்க வந்தாப்பில – முத்துக்கறுப்பக் கோனாரையா.’’

காடன் மலை வரும்போது, வழியில் ஆறு ஒன்றில் இருவர் தவம் புரிந்து கொண்டிருப்பதை அவன் பேருந்தில் இருந்தவாறே பார்த்தான். அப்படியல்ல – அவர்கள் மீன்தான் பிடித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை அருகே சென்றதும் கண்டு தெரிந்து கொண்டான். இந்தப் பண்டாரமும் அதுபோன்றே இருக்கலாம். மீன் பிடிப்பதும் மோட்டார் பழுது பார்ப்பதுங்கூட தவநிலைதான் என்று எங்கோ படித்ததும் அவன் ஞாபகத்தில் வந்தது.

‘‘ஐயா-எனக்கொண்ணும் புரியல்லே – எல்லாம் தெரிஞ்சவங்க நீங்க. நான் கோனாரைத் தேடித்தான் வந்தேன்.’’
‘‘தேடிப் பிரயோசனம் இருக்காது – தானா வரணும்.’’

அவன் எதுவும் பேசத் தெரியாது நின்றான். மாலை விழாவிற்கான கூட்டம் மோதிற்று. தூரத்தே காடன் மலையைத் திரும்பித் திரும்பிப் பார்த்து தவித்தனர். மந்திரி வரக்கூடும். பக்திப் பாடல்கள் ஒலித்தன. கடவுள் இல்லையென்று சொல்பவருக்குத் தகுந்த பாடங் கற்பிக்க வேண்டும் என்று பிரசங்கி வேண்டுகோள் விடுத்தார். பண்டாரம் முகத்தில் ஏளனம்.

ஓரே கூச்சல். காடன் மலையில் தீ எரிந்து கொண்டிருப்பதை வரவேற்ற மக்களின் குதூகலம். பண்டாரம் தாடியை நீவிக்கொண்டார்.

‘‘முத்துக்கறுப்பக் கோனார் என் தாய் மாமன். அவரைத் தேடித்தான் இங்க வந்தேன். பிரகாரத்திலிருக்கறப்ப சொன்னாங்க, ‘யாரோ மாமியார் கொடுமையாலே சாமியாரா மாறிட்டாரு’ அப்படின்னு – அது அவராயிருக்கும்.’’

‘‘நினைச்சேன் தம்பி. அந்த ஆளு முகச்சாயல் கொஞ்சம் ஒங்கிட்டேயிருக்கு-ஒம் பேரு என்ன?’’

‘‘சுப்பிரமணி.’’

‘‘வாய்யா கோனாரே’’ என்று சத்தமிட்டவாறே, தாடி தூரத்தில் ஒருவரை நையாண்டியுடன் வரவேற்றார். சுப்பிரமணி திரும்பிப் பார்த்தான். வந்துகொண்டிருந்தது இன்னொரு தாடி.

காடன் மலையில் சிறிது மழை தூறியது. தெருக்களில் நின்று பார்த்தால் மலையுச்சியில் மேகக் கூட்டம் கசிந்துருகி நீர் வடிப்பதை இங்கிருந்து துல்லியமாகப் பார்க்க முடியும். இந்த விழாவிற்கு மழையும் கட்டாயம் வரவேண்டும்.

பெரிய கோபுரத்திற்கு ஒரு பறவைக் கூட்டம் வந்திறங்கி, அங்கேயும் மனிதக் கும்பல் அடைத்துக் கொண்டுள்ளதைக் கண்டு தயங்கி சிறகடித்து நின்று, பின்னர் வேறு இடந்தேடிச் சென்றது. தலையைத் திருப்பி பண்டாரத்தைப் பார்த்தான் சுப்பிரமணி. இன்னொரு பண்டாரம் போய் விட்டிருந்தார்.

‘‘இன்னிக்கி நான் எதுவும் சாப்பிடல்லே. ராத்திரி ஒரு வீட்டிலே சாப்பிடக் கூப்பிட்டிருக்காங்க. போகணும். வேணும்னா இப்ப ஒரு காப்பி குடிக்கலாம்’’ என்றார் தாடி அவனைப் பார்த்து.

சுப்பிரமணி அவசரத்துடனும் வெட்கத்துடனும், ‘வாங்க ஐயா-சாப்பிடலாம்’ என்று அழைத்தான்.

‘‘எப்படி எப்படி – தமிழ்லே பேசி இரந்துண்டா அவன் பிச்சைக்காரன் – பண்டாரம் இல்லையா?’’ என்றார் நமட்டுச் சிரிப்போடு. சுப்பிரமணி எதுவும் பேசவில்லை.

‘‘இப்ப சொல்லு.’’

நுரை பொங்கி வழிந்த காப்பியை அப்படியே ஒரே முழுங்கில் குடித்துவிட்டு எழுந்தார் தாடி.

வெளியே மண்தெரிந்த இடத்திலெல்லாம் மனிதர்தாம். நடப்பது சௌகர்யமாக இருக்கவில்லை.

‘‘அவரா இஷ்டப்பட்டுத்தான் மாமா கல்யாணம் பண்ணிக் கிட்டாராம். வாத்தியார் வேலை சௌகரியமாத்தான் இருந்தது. ஒரே ஒரு பையன். என்னைவிடச் சின்னவன். வேலை கிடைக்கல்லே. சண்டை போடுவான் வீட்லே அடிக்கடி.’’

‘‘ஒனக்கு எப்படி வேலை கிடைச்சதோ?’’

‘‘அப்பாக்கு சர்க்கார் வேலை. அவரு செத்துப் போனதாலே அந்த வேலையை எனக்குக் கொடுத்தாங்க. பி.டபிள்யூ.டி.’’

‘‘அதுதான் கேட்டான்.’’

தாடி இதன்பிறகு கேள்வி எதையும் கேட்கவில்லை. ஆனால் நிறையப் பேசினார்.

திண்டிவனம் பக்கத்திலேயே தனக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று தெரிந்தவுடன் சமாதானமடைந்திருந்தான் முத்துக்கறுப்பன். அது அவன் சகோதரியைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிற இடம். அவள் கணவருக்கு அங்குதான் வேலை. எனவே எந்தச் சங்கடமும் இருக்கவில்லை. ஆசிரியர் வேலை மனதிற்கு இதமளித்திருந்தது. சக ஆசிரியர்கள் நன்கு பழகினர். மீதியுள்ள பணிக்காலம் முழுவதையுமே அவன் அங்கே கழித்து விடவும் தயாராக இருந்தான். ஒரு வகையில் அவ்வாறுதான் ஆயிற்று. அந்த ஊரிலேயே அவனுக்குத் திருமணம் நடந்தது. இஷ்டப்பட்டுத்தான் கல்யாணம். பெண் அந்த ஊர்தான். ஒரே ஒரு நிபந்தனையுடன்தான் நடந்தது என்று சொல்லலாம். பெண்ணின் தாயாரும் அவர்களோடுதான் இருப்பாள் – காப்பாற்ற வேண்டும். அது ஒன்றும் பெரிய விஷயமில்லையென்று முத்துக்கறுப்பன் நினைத்தான். அவன் சகோதரியும் எதுவும்சொல்லவில்லை. அவன் இஷ்டப்படியே எல்லாம் நடந்தன. பின்னாளில் சகோதரியின் கணவர் காலமானாலும், மகன் சுப்ரமணிக்கு அரசுத்துறையில் வேலைக் கிடைத்தபடியால் முத்துக்கறுப்பனுக்கு புதிய பொறுப்புகள் எதுவும் வந்து சேரவில்லை. தன் மகனுக்கு படிப்பு ஏறவில்லையே; வாத்தியார் மகன் மக்காக இருக்கிறானே என்ற கவலை மட்டுமே உண்டு. ஆனால் அந்த மகன் சாமர்த்தியசாலி – ஊரிலுள்ள அனைவரோடும் தொடர்புகொண்டு, ஏதாவது சம்பாதித்துக்கொண்டும் சேமித்துக்கொண்டும் தானிருந்தான் என்பதையோ மற்ற இளைஞரிடம் காணமுடியாத குணம் – பணத்தின் சக்தியை அறிந்த குணம் – அவனிடமிருந்ததையோ, முது;துக்கறுப்பன் அறியவில்லை.

பையனின் பாட்டியும் அம்மாவும் அவனுக்கு இன்னும் வேலை கிடைக்காதது பற்றி; பேச ஆரம்பித்திருந்தனர். வேலை கிடைக்கவில்லை. அதுவும் சுப்ரமணிக்கு வேலை எப்படிக் கிடைத்தது என்று தெரிந்த பிற்பாடு அந்தப் பையன் அமைதி குலைத்தவன் ஆனான். பாட்டியிடம் மட்டுமே மனம்விட்டுப் பேச முடிந்தது. அந்தப் பேச்சில் அவன்கேட்ட கேள்வி ஒன்று அந்தப் பாட்டியையே சிந்திக்க வைத்தது. வேண்டியது தானே. நாளைக்கு காப்பாற்றப் போகிறவன் கேட்ட கேள்வி. கேட்டதும் அத்தனை அறிவு கெட்ட கேள்வியல்ல. ‘‘அப்பா செத்துப்போனா, சர்க்காரில் வேலை தருவாங்க இல்லையா?’’ என்பதுதான் அது. சரி – சாவது இலேசான விஷயம் அல்ல. அதற்கும் அரசு ஆணைக் குறிப்பில் ஒரு விதிமுறை இருக்கிறதே. கேட்டறிந்து பையன் சொன்னான். ‘‘அரசு ஊழியர் காணாமல் போய்விட்டால் ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர், திரும்பி வராவிட்டால் அவர் இறந்துவிட்டதாகக் கருதி, அவர் பிள்ளைக்கு கருணை அடிப்படையில் Nவுலை தரலாம் – வழி இருக்கிறதே – எனக்கு இப்போ பதிடினட்டுத்தான் ஆகுது.’’

இந்தப் புத்திசாலித்தனத்திற்காகவே அரசு ஒரு வேலை அளித்திருக்க வேண்டும் அல்லவா? இதைத்தான் முத்துக்கறுப்பனிடம் அவர்கள் வெகுசகஜமாக எடுது;துச் சொல்லியிருக்க வேண்டும். அதாவது ‘செத்துப் போ அல்லது எங்காவது ஒழிந்து போ’ – அதுதானே அதற்கு அர்த்தம். இது ஒரு வெள்ளிக்கிழமை இரவில் நடந்த விஷயம். இதில் அவன் மனைவியின் பங்கு என்னவென்று ஊகிக்கத்தான் முடியும். திங்கட்கிழமை காலை வெளியே சென்ற முத்துக்கறுப்பன் இன்னமும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன கதை இதுதான்.

முத்துக்கறுப்பன் போளுர் வரை நடந்து சென்றதாகத் தெரிகிறது. அங்கு எப்போதோ தெரிந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அவனைக் கண்டு வீட்டிற்கழைத்து சாப்பாடு போட்டிருக்கிறார். திரும்பவும் புறப்பட்ட அவனிடம், ‘எங்கே’ என்று விசாரித்தபோது, மலையைச் சுட்டிக் காட்டியிருக்கிறான். எத்தனை பேரைத்தான் இந்த காடன் மலை தன்னிடம் அழைத்திருக்கிறதோ?

அவன் மலையைச் சுற்றவில்லை. ஊரைச் சுற்றி வந்தான். கோவில் வெளிப் பிரகாரத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான். வேட்டி மேலும் அழுக்காயிற்று. நெடிதுயர்ந்த ஒரு பண்டாரம் அவனிடம் பேசாது ஒரு துண்டை நீட்டினார்.

பண்டாரங்களிடம் பேசுவது எளிதாக இருக்காது என்று அவன் நினைத்திருக்கலாம். இரண்டு நாள் கழித்து போளுர் ஆசிரிய நண்பர் கோவிலுக்கு வந்து அவனிடம் சிறிது பேசிவிட்டு அகன்றார். அதன் பின்னரே அவன் எப்படியோ ஆரம்பித்து தனது கதையை அந்தப் பண்டாரத்திடம் சொல்ல முடிந்தது. முடித்துவிட்டு, கேள்வியாக இல்லாது வேறு எதுவாகவோ சொன்னான்.

‘‘மனிதரை எப்படி நம்புவது…’’

‘‘ஏன் மாடுகள் இல்லையா நம்புவதற்கு – இதோ பாரு – இந்த மலையில் ஒரு காடன் மனிதரைவிட ஆட்டையும், மாட்டையும்தான் நம்பினான்’’ என்று பண்டாரம் தெரிவித்தார்.

‘‘மலையைச் சுத்தலையா கோனாரே?’’

இருவரும் கோவில் பக்கமாக வந்துவிட்டனர். விழா முடிந்து விட்டதற்கான அறிகுறி தெரிந்தன. மலையைப் பார்த்துக்கொண்டே கூட்டம் கலைகிறது.

‘‘சுத்த வேண்டியதுதான் ஐயா – மீதி விவரமும் தெரிஞ்சா நல்லாயிருக்கும்.’’

‘‘மீதி என்ன மீதி – எப்போதுமே மீதி இருக்கும். முத்துக்கறுப்பக் கோனார் வேலையை ராசினாமா பண்ணியாச்சு. போளுர் நண்பர்தான் எல்லாம் முடிச்சுக் கொடுத்தாரு… ராசினாமா பண்ணிவிட்டதாலே மகனுக்கு வேலை கிடைக்காது.’’

‘‘எனக்கு மாமாவைப் பார்க்கணும் ஐயா.’’

‘‘மலையைச் சுத்து – பாக்கலாம். அந்தத் திருப்பத்திலே சேரி இருக்கும் – ராப் பள்ளிக்கூடம் அங்கே. அங்குள்ள பிள்ளைகளுக்குப் பாடம். தங்கல் அங்கேயேதான். நல்ல இடம் – வெளியே வந்தா மலை தெரியும்.’’

‘‘நல்லதையா – ஐயாவும் வந்தா நல்லாயிருக்கும். ஒரு வேளை சேரிப்பக்கம் வரமாட்டீங்களோ?’’

‘‘கோனாரே – பண்டாரம் பாத்த வேலையைத்தான் இப்ப முத்துக் கறுப்பக் கோனாரு பாக்காரு – நல்லாவே பாடம் சொல்லித் தாராருன்னு பிள்ளைங்க சொல்லுது – எனக்கு இங்கிலீசு வராது. இப்ப இந்தப் பாடமும் நல்லபடியா நடக்குதாம். சரி. போயிட்டு வா-நான் அந்தப் பக்க மூலையிலேதான் இருப்பேன். வசதியான இடம். அங்கிருந்து பாத்தாத்தான் மலை நல்லாத் தெரியும் – போயிட்டு வா.’’

*****

நன்றி: மா. அரங்கநாதன் தளம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: