‘எழுத்து’ முதல் ‘கொல்லிப்பாவை’ வரை-ராஜமார்த்தாண்டன்

கனவுகளும் யதார்த்தமும்:

1970களின் ஆரம்பத்தில் கேரளம் பாலக்காடு அருகிலுள்ள சித்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ் முதுகலைப் படிப்பில் சேரும்வரையிலும் இலக்கியப் பத்திரிகைகள் என்றால் எனக்குக் கல்கி, ஆனந்த விகடன், குமுதம், கல்கண்டு என்பவைதான். இலக்கியப் படைப்பாளிகள் என்றால் அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், சாண்டில்யன், தமிழ்வாணன் போன்றவர்கள்தான். தி. ஜானகிராமனும் ஜெயகாந்தனும் கல்கி, ஆனந்த விகடனில் எழுதியதால் ஓரளவு அறிமுகம்.

எங்கள் பேராசிரியர் ஜேசுதாசன்தான் மணிக்கொடி எழுத்தாளர்கள், எழுத்து, இலக்கிய வட்டம் rajamarthadan-213x300 இதழ்கள் குறித்தும் அறிமுகப்படுத்தினார். நாகர்கோவிலிலிருந்து சுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் எழுதிக் கொண்டிருந்தது அவர் மூலந்தான் எனக்குத் தெரியவந்தது. எங்கள் பேராசிரியருடன் பழகிய குறுகிய காலத்துக்குள்ளாகவே இலக்கியம் குறித்த என் மதிப்பீடுகள் முற்றாக மாற்றமடைந்தன.

தரமான இலக்கியம் ஒரு சிறிய வட்டத்தினுள் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்ததை அறிந்துகொண்டேன். அந்தப் படைப்பாளிகளின் புத்தகங்களையும் அவர்கள் இயங்கிக்கொண்டிருந்த சிற்றிதழ்களையும் தேடிப்பிடித்துப் படிக்கத் தொடங்கினேன். அப்போது வெளிவந்துகொண்டிருந்த தீபம், கணையாழி, கசடதபற, பிரக்ஞை, ஞானரதம் ஒவ்வொன்றிலும் ஐந்து பிரதிகள் வாங்கி, நவீன இலக்கியத்தில் ஆர்வமுள்ள நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். சிற்றிதழ்களுடனான எனது தொடர்பு இப்படித்தான் தொடங்கியது.

எம். ஏ. முடித்துவிட்டு ஓராண்டு காலம் ஊரிலிருந்த காலத்தில் சதங்கை ஆசிரியர் வனமாலிகையுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் மூலம் சதங்கை இதழ் அறிமுகமானது, எம். எஸ். அறிமுகமானார். சுந்தர ராமசாமியுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் மூலம் பிரமிள் அறிமுகம். பின் உமாபதி, ராஜகோபாலன் என்று இலக்கியப் படைப்பாளிகள், வாசகர்களுடனான தொடர்பு விரிவடைந்தது.

அதன்பின், கேரளப் பல்கலைக் கழகத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக முனைவர் பட்ட ஆய்வாளனாக இருந்த காலகட்டத்தில் நகுலன், ஷண்முக சுப்பையா, ஆ. மாதவன், நீல. பத்மநாபன், எம். எஸ். ராமசாமி ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது ஆகஸ்ட் 1975இல், நாங்கள் நான்கு ஆய்வு மாணவர்கள் சேர்ந்து (அ. திருமாலிந்திரசிங், நான், அ. ராஜேந்திரன், ஆ. தசரதன்) திரு மாலிந்திரசிங் ஆசிரியர் பொறுப்பில் கோகயம் என்ற இருமாதம் ஒருமுறை வெளிவரும் சிற்றிதழைத் தொடங்கினோம். ‘கி திக்ஷீமீமீ றிணீனீஜீலீறீமீt’ ஆக அதை நடத்தினோம். நன்கொடை எதுவும் வாங்காமல், ‘தேவைப்படுவோர் போதிய தபால்தலை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்’ என்ற அறிவிப்புடன் வெளிவந்தது கோகயம்.

கோகயத்தில் நகுலன், ஷண்முக சுப்பையா, உமாபதி, காசியபன், பிரமிள், வெங்கட் சாமிநாதன், தேவதேவன், கலாப்ரியா, நித்திலன் போன்றோரின் கவிதை – கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பிரமிள் எழுதிய ‘பட்டறை’ விமர்சனக் கவிதை தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக நான்காவது இதழுடன் பிப்ரவரி 1976இல் கோகயம் வெளியீடு நிறுத்தப்பட்டது. என்றபோதிலும் ஆசிரியர் குழுவினருக்கிடையேயான நட்பிலும் எழுத்தாளர்களுடனான உறவிலும் எந்தவிதமான விரிசலும் ஏற்பட்டுவிடவில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாகர்கோவிலில் நண்பர் உமாபதி தெறிகள் இரண்டாவது இதழுக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். நாட்டில் நெருக்கடி நிலை அமலிலிருந்த காலகட்டம் அது. பேச்சுரிமையும் எழுத்துரிமையும் பறிக்கப்பட்ட இந்திரா காந்தியின் ஆட்சிக்காலம். தெறிகள் முதல் இதழில் வெளியான புத்தக விளம்பரங்கள் காரணமாகவோ என்னவோ, போலீஸார் மூலமும் உமாபதி பணியாற்றிக்கொண்டிருந்த வங்கி அதிகாரிகள் மூலமும் விசாரணை என்ற பெயரில் அவருக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. (அவசரகால நிலைக்குப் பின் 1980களில் கொல்லிப்பாவை மீதும் ரகசியப் போலீஸாரின் விசாரணை நடந்தது. ‘தனிச்சுற்றுக்காக மட்டும்’ என்று குறிப்பிடுவதைத் தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவு அது, அந்த விசாரணை அனுபவம் சுவாரஸ்யமானதாகவே இருந்தது.) எனவே, இரண்டாம் இதழைக் கலி என்னும் பெயரில் ஓவியர் சக்தி கணபதியை ஆசிரியராகக் கொண்டு வெளியிட முயற்சி மேற்கொண்டார். அதுவும் சரிப்பட்டுவராமல் போகவே அட்டை உள்பட அச்சாகியிருந்த நாற்பது பக்கங்களையும் (சுந்தர ராமசாமியின் சிறுகதை, நகுலனின் நீண்ட கவிதை, கிருஷ்ணன் நம்பி கட்டுரை, ஆனந்த விகடன் கேட்டுக்கொண்டதன்பேரில் ‘சாகித்திய அகாடமி பற்றி’ என்னும் தலைப்பில் சுந்தர ராமசாமி எழுதி, திருப்பியனுப்பப்பட்ட கடிதம்) என்னிடம் கொடுத்து, கோகயத்தில் இணைத்து வெளியிடச் சொன்னார். கோகயம் இதழை மீண்டும் வெளியிடும் உத்தேசம் இல்லாததால் கலியை நான் திருவனந்தபுரத்திலிருந்து வெளியிட முடிவுசெய்தேன். புதிதாக மேலும் சில விஷயங்களைச் சேர்க்கும் எண்ணத்துடன் பிரமிளுக்குக் கடிதம் எழுதினேன். அவர் ‘கலைஞனும் கோட்பாடும்’ என்ற கட்டுரையுடன், பத்திரிகையின் பெயரைக் கொல்லிப்பாவை என்று மாற்றி, அதற்காக டிசைனும் செய்து அனுப்பினார். அந்தக் கட்டுரையுடன் உமாபதி, நான் எழுதிய கவிதைகளையும் சேர்த்து அக்டோபர் 1976இல் கொல்லிப்பாவை முதல் இதழ் வெளியானது. இப்படியாக, சிற்றிதழ் இயக்கத்தில் நானும் ஒரு அங்கமானேன்.

n

இனி, கொல்லிப்பாவையின் முன்னோடி இதழ்களான எழுத்து தொடங்கி தெறிகள் வரையிலான சிற்றிதழ்களின் ‘கனவு’களையும் அவை ‘காரியங்க’ளான நடைமுறை யதார்த்தத்தையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

சி. சு. செல்லப்பாவின் எழுத்து முதல் இதழ் ஜனவரி 1959இல், ‘புதுமை இலக்கிய மாத ஏடு’ என்னும் அறிவிப்புடன் வெளிவந்தது. விலை: ந. பை. 50. “. . . இலக்கிய அபிப்ராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துகளுக்குக் களமாக எழுத்து அமைவது போலவே, இலக்கியத்தரமான புது சோதனைகளுக்கும் எழுத்து இடம் தரும்” என்று முதல் இதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார் சி. சு. செல்லப்பா. ஆனால், எழுத்து இதழ்களில் கவிதையில் மட்டுமே புதிய சோதனைகளைச் சிறப்பாக வெளிக்கொணர முடிந்தது.

மணிக்கொடி காலத்திலேயே கவிதையில் புதிய சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்ட போதிலும், புதுக்கவிதை ஒரு இயக்கமாக மறுமலர்ச்சியடைந்தது எழுத்து காலகட்டத்தில்தான். புதுக்கவிதையின் தோற்றகாலக் கவிஞர்களான ந. பிச்சமூர்த்தி, க.நா. சுப்ரமண்யம் போன்றவர்களுடன் தி. சோ. வேணுகோபாலன், நகுலன், சுந்தர ராமசாமி, சி. மணி, பிரமிள், எஸ். வைத்தீஸ்வரன் போன்ற முக்கியமான கவிஞர்கள் எழுத்துவின் மூலம் அறிமுகமானவர்களே. ந. பிச்சமூர்த்தியின் ‘வழித்துணை’, சி. மணியின் ‘நரகம்’, ‘வரும் போகும்’, ‘பச்சையம்’ போன்ற நீண்ட கவிதைகள் எழுத்துவில் வெளிவந்தன. இவர்களின் கவிதை மொழியும் பார்வையும் தனித்தன்மை கொண்டவையாக இருந்தன. தமிழில் புதுக்கவிதையை ஊக்குவிக்கும் வகையில் மேலை நாட்டுக் கவிதைகள், கவிதைச் சிந்தனைகளையும் எழுத்து தொடர்ந்து வெளியிட்டு வந்ததும் முக்கியமான விஷயமாகும்.

சிறுகதைகளைப் பொறுத்தவரை எழுத்துவின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இல்லை. விமர்சனத்தைப் பொறுத்த அளவில், சி. சு. செல்லப்பாவின் விமர்சன அணுகுமுறையை ‘அலசல் விமர்சனம்’ என்று க. நா. சு. குறைகூறியபோதிலும் ‘நவீனப் புலவர்’ என்று சுந்தர ராமசாமி விமர்சித்தபோதிலும் நவீன இலக்கியத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய வகையில் எழுத்துவின் விமர்சனப் பங்களிப்பை இன்று நாம் நிராகரித்துவிட முடியாது.

எழுத்துவின் போக்கில் கருத்து வேறுபாடுகொண்ட க. நா. சு., சுந்தர ராமசாமி, பிரமிள், வெங்கட் சாமிநாதன் போன்றோரின் பங்களிப்பு அதிகமும் இல்லாததால் காலப்போக்கில் அதன் தரத்தில் தொய்வேற்பட்டது. பொருளாதார நெருக்கடிகளை வைராக்கியத்துடன் தாக்குப்பிடித்து வந்தும், தொடர முடியாமல் போகவே, பத்தாவது ஆண்டிலிருந்து காலாண்டிதழாக உருமாறி, பன்னிரண்டாம் ஆண்டில் – 1970இல் – 119வது இதழுடன் எழுத்து தன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது. இருப்பினும் சி. சு. செல்லப்பா தனக்கு உடல் வலு இருக்கும்வரையிலும் இலக்கிய – களப்பணியைத் தொடர்ந்துகொண்டுதானிருந்தார்.

இன்றைய சிற்றிதழாளர்கள் தங்கள் முன்னோடியான சி. சு. செல்லப்பாவிடமிருந்து சில விஷயங்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். புதிய சோதனைகள் செய்ய வேண்டும் என்கிற லட்சிய வேகம் இருந்தால் மட்டும் போதாது. அது நீடித்து நிலைப்பதற்கான உழைப்பையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். “2000 பிரதிகளுக்கு மேல் அச்சாகாது, நேரில் சந்தாதாரராகச் சேருபவருக்குத்தான் கிடைக்கும்” என்று எழுத்து முதல் இதழில் செல்லப்பா இரண்டு நிபந்தனைகள் விதித்தார். அன்றைய காலத்தில் 2000 பிரதிகள் என்பது இன்றைய நிலையில் 20,000 பிரதிகள் என்பதற்குச் சமமானது. மேலும், பின்னாளில் அவர் சந்தாதாரர்களைச் சேர்ப்பதற்குப் பல சலுகைகளை அறிவித்ததுடன், எழுத்துவை ஏஜெண்டுகள் மூலம் விற்பதற்கும் ஏற்பாடுகள் செய்தார். எழுத்துவின் முதல் இதழிலேயே முழுப்பக்க அளவில் சினிமா விளம்பரம் வெளிவந்துள்ளது. கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் நவீன இலக்கியத்தைக் கொண்டுசெல்ல அவர் முயன்றார். இதற்காகச் சில ‘சமரசங்கள்’ செய்துகொண்டதாக அவர்மீது ஒரு விமர்சனமும் உண்டு. (‘புதுக்குரல்கள்’ மதுரைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றபின் அத்தொகுப்பில் சுந்தர ராமசாமியின் ‘மேஸ்திரிகள்’ உட்பட ஓரிரு கவிதைகள் நீக்கப்பட்டதால் அதனைப் ‘பல்கலைக்கழக மாணவர்களுக்கென்று சுத்தப்படுத்தப்பட்ட’ தொகுப்பு என்று கிண்டல் செய்தனர்.) நவீன இலக்கியத்தைப் பரவலான வாசகர்களிடம் கொண்டு செல்வதற்கான ஒரு எத்தனமாகவே அதனைச் செய்தார். அவரது ‘சமரசம்’ நவீன இலக்கிய முயற்சிகளைப் பரவலாக்கும் நடைமுறை யதார்த்தம் சார்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அதன் காரணமாகவே அவரால் எழுத்து இதழை ஒன்பதாண்டு காலம் மாத இதழாகத் தொடர்ந்து வெளியிடவும் முடிந்தது.

ஏற்கெனவே சூறாவளி, சந்திரோதயம் இதழ்களை நடத்திய க. நா. சுப்ரமண்யம் இலக்கிய வட்டம் என்னும் மாதம் இருமுறை இதழைத் தொடங்கினார். 22.11.1963இல் முதல் இதழ் வெளிவந்தது. “பிரபலஸ்தர்களின் பாராட்டுக்கள் தேவையில்லை; சாஹித்ய அகாடமிக்காரர்களின் பரிசுகளோ பதவிச் சிபாரிசுகளே தேவையில்லை . . . இலக்கியத்தரம் உயர விமர்சகர்களும் வாசகர்களும் போதும் . . . அப்படிப்பட்ட ஒரு ஜாதியைத் தமிழில் தோன்றச் செய்வதற்காகவே இலக்கிய வட்டம்’ உருவெடுக்கிறது என்று உண்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தன் நிலைப்பாட்டை முதல் இதழ்த் தலையங்கத்தில் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார் க. நா. சு.

இலக்கியத்தில் பயிற்சி வேண்டும், தேசிய இலக்கியச் சங்கம் உருவாக வேண்டும், இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் வேண்டும், படிப்பதும் ஒரு கலை, நல்ல இலக்கியாசிரியர்களைத் தேடும் வாசகர் கூட்டம் உருவாக வேண்டும், வாசகர்கள் இலக்கிய ரசனையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். . . என்றெல்லாம் தொடர்ந்து வலியுறுத்தி எழுதினார் க. நா. சு.

“உலக இலக்கியப் பரப்பையும், அதில் சில பகுதிகளையுமாவது எடுத்துச் சொல்ல அவ்வப்போது இலக்கிய வட்டம் முயன்றுவரும்” (3.1.1964) என்றதற்கேற்ப, உலக இலக்கியாசிரியர்கள் பற்றிய குறிப்புகளையும் மொழிபெயாப்புக் கவிதைகள், கதைகள், கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டது இலக்கிய வட்டம். எழுத்துவுடன் ஒப்பிடும்போது கவிதையைப் பொறுத்த அளவில் இலக்கிய வட்டத்தின் பங்களிப்பு மிகவும் குறைவானதுதான் என்றாலும், நவீனத்துவக் கவிதைக் கோட்பாடுகளைத் தெளிவாக வெளியிட்டு வந்தார் க. நா. சு. பின்னாளில் உருவான நவீனத்துவக் கவிதைகளுக்குக் க. நா. சு.வின் கவிதைக் கோட்பாடுகளே உந்துதலாக இருந்தன என்றும் சொல்லலாம்.

விமர்சனத்தைப் பொறுத்தவரையில், க. நா. சு. தன் ரசனை சார்ந்த அபிப்ராயங்களை மட்டுமே வெளிப்படுத்திவந்தார். இலக்கிய ரசனையை வாசகர்களே பயிற்சியின் மூலம் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதற்கேற்ப, தரமான படைப்புகள் – படைப்பாளிகளின் பட்டியலையே க. நா. சு. கூறிவந்தார். இந்தப் பட்டியல்கள் குறித்துக் கருத்து வேறுபாடு கொள்பவர்களும்கூட, ஆய்வுமுறை விமர்சனம் மூலம் சி. சு. செல்லப்பா முன்வைத்த படைப்பாளிகளின் பட்டியல்களை விடவும், ரசனை சார்ந்த க. நா. சு. வின் பட்டியல்கள் மேலானவை என்பதை ஒப்புக்கொள்வார்கள்.

‘பண்டித, பேராசிரியர்களை தாக்குவ’தாகக் க. நா. சு.வை. சி. சு. செல்லப்பா குறை கூறியதுண்டு (எழுத்து, ஜூன் – ஜூலை 1964). கல்வித்துறை சார்ந்தவர்களின் இலக்கியச் செயல்பாடுகளைக் க. நா. சு. கடுமையாக விமர்சித்த போதிலும் நமது மரபின் ஆக்கபூர்வமான இலக்கியச் செல்வங்களை இன்றைய வாசகர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன் காரணமாகவே, பழந்தமிழ்க் கவிதைகளில் தரம்பிரித்துத் தெரிந்தெடுத்து அறி முகப்படுத்திய டி. கே. சி.க்குச் சிறப்பு மலர் வெளியிட்டது இலக்கிய வட்டம்.

30.4.1965இல் 38வது இதழுடன் தன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது இலக்கிய வட்டம் வெளிவந்த வரையிலும் அதன் ‘கனவு’களுக்கும் ‘காரியங்க’ளுக்குமிடையேயான இடைவெளி மிகவும் குறைவானதுதான் என்பதை இன்றைய பார்வையிலும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

சென்னைக்கு வெளியே சேலத்திலிருந்து அக்டோபர் 1968இல் வெளியீட்டைத் தொடங்கியது நடை காலாண்டிதழ். ஆசிரியர் கோ. கிருஷ்ணசாமி என்றபோதிலும் அது சி. மணியின் பத்திரிகையாக வெளி வந்தது. வே. மாலி, செல்வம், ஓலூலூ என்னும் பெயர்களில் சி. மணி கவிதைகள் – கட்டுரைகள் எழுதினார். இலக்கிய இதழில் நவீன ஓவியங்களை முதலில் அறிமுகப்படுத்தியது நடைதான். ஞானக்கூத்தன் புதுக்கவிதை எழுதத் தொடங்கியதும் நடையில்தான்.

“தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் திறனாய்வு வளர்ச்சிக்கும் ஒரு புதிய வாய்ப்பை அளித்து அவற்றின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே நடையின் நோக்கம்” என்று முதல் இதழின் ஆசிரியர் குறிப்பு தெரிவித்தது. மொத்தம் எட்டு இதழ்களே வெளிவந்தன. சி. மணியின் ‘யாப்பியல்’ என்னும் நீண்ட கட்டுரை அன்றைய சூழலில் முக்கியமானதாகக் கருதப்பட்டது.

நா. கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகவும் மஹாகணபதியைப் பதிப்பாசிரியராகவும் கொண்டு, ‘ஒரு வல்லின மாத இதழ்’ என்னும் அறிவிப்புடன் அக்டோபர் 1970 முதல் வெளி வரத் தொடங்கியது கசடதபற. “இன்றைய படைப்புகளிலும் அவற்றைத் தாங்கிவருகிற பத்திரிகைகளிலும் தீவிர அதிருப்தியும் அதனால் கோபமும் உடைய பல இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திறனாய்வாளர்களின் பொது மேடைதான் கசடதபற . . . . எதையும் செய்யுங்கள், ஆனால் இலக்கியமாகச் செய்யுங்கள் என்று மட்டுமே கசடதபற சொல்லும்” என்று முதல் இதழில் அறிவிக்கப்பட்டிருந்தது. நவீன ஓவியர்களின் கோட்டோவியங்கள், லினோகட் ஓவியங்களையும் கசடதபற பிரசுரித்தது. இந்திரா பார்த்தசாரதியின் மழை நாடகம், வெ. சாமிநாதனின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது. கவிதை வெளிப்பாட்டின் தீவிரம் கசடதபற இதழ்களில் மெல்ல மங்கத் தொடங்கியதை இப்போதைய பார்வையில் உணர முடிகிறது. தினமணி கதிர் – இந்திரா பார்த்தசாரதி – ஜெயகாந்தன் தொடர்பான விவாதங்கள் கசடதபறவின் பின்னணியில் இருந்தவர்களிடையே மனக்கசப்பையும் பிளவையும் ஏற்படுத்தின. அந்த விவாதம் நவம்பர் 1971 இதழில் இடையிலேயே நிறுத்தப்பட்டது. 32 இதழ்களுடன் கசடதபற நின்றுபோயிற்று. அன்றைய இலக்கியச் சூழலின் மீது அதிருப்தியும் கோபமும் கொண்டிருந்த இளைஞர்களின் கலகக்குரல், உள்முரண்கள் காரணமாக எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்த முடியாமல் அடங்கிப்போனது.

ஜனவரி 1970இல் ஜெயகாந்தனை ஆசிரியராகவும் தேவ. சித்ரபாரதியை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு ஞானரதம் மாத இதழ் வெளிவரத் தொடங்கியது. ஜெயகாந்தன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவரையிலும் ‘முன்னோட்டம்’, ‘உரத்த சிந்தனை’ (கேள்வி – பதில் பகுதி), கவிதைகள் தொடர்ந்து எழுதினார். அந்தக் காலகட்டத்தில் சில இதழ்களை ஞானக்கூத்தன், வல்லிக்கண்ணன், பரந்தாமன் ஆகியோர் தயாரித்தனர். ஒன்பது இதழ்களுக்குப் பின் ஒரு இடைவெளி. பிப்ரவரி 1972இல் பத்தாவது இதழிலிருந்து தேவ. சித்ர பாரதியின் ஆசிரியப் பொறுப்பில் இதழ் வெளிவரத் தொடங்கியது. கவிதைகளின் தேர்வில் கறாரான இலக்கியப் பார்வை இல்லை என்பதை இப்போது இதழ்களைப் புரட்டிப் பார்க்கும்போது தெரிகிறது. ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே நாவல் தொடராக வெளிவந்தது. ஜி. என். சிறுகதைகள், கவிதைகளும் ஞானரதத்தில் எழுதினார். ஆசிரியர் குழுவிலும் இணைந்திருந்தார். ஞானரதம் வெளியிட்ட க. நா. சு., சி. சு. செல்லப்பா, ந. சிதம்பர சுப்பிரமணியன் ஆகியோரது மணி விழா மலர்கள் முக்கியமானவை.

ஆறாண்டுகள் இடைவெளிக்குப்பின் சுந்தர ராமசாமி எழுதிய ‘பல்லக்குத் தூக்கிகள்’ சிறுகதை ஞானரதம் ஆகஸ்ட் 1973 இதழில் வெளியானது. எழுத்தாளர்களின் ‘உரத்த சிந்தனை’ பகுதி தொடர்ந்து வெளியானது. அக். 1973 இதழில் ‘ரசமட்டம்’ பகுதியில் சுந்தர ராமசாமியின் ‘ஆந்தைகள்’ கவிதை பற்றி ந. முத்துசாமி எழுதியது சர்ச்சையைக் கிளப்பியது. அது தொடர்பாக நகுலன், சுந்தர ராமசாமி இருவரும் தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தி எழுதவேண்டியதாயிற்று. மே – ஜூலை 1974இல் 37 – 39வது இதழுடன் ஞானரதம் நின்றது. மீண்டும் 1983இன் பிற்பகுதியில் இருமாதம் ஒருமுறை இதழாக வெளியீட்டைத் தொடங்கியது. 1985வரையிலான இந்தக் கால கட்டத்தில் இதழின் தரம் மிகவும் சாதாரணமாகவே இருந்தது. பின்னர் 1986இல் க. நா. சுப்ரமண்யத்தைச் சிறப்பாசிரியராகக் கொண்டு மாத இதழாக வெளிவரத் தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில் அது இலக்கிய வட்டத்தின் சாயலையே கொண்டிருந்தது. க. நா. சுவின் வள்ளுவனும் தாமஸ§ம் நாவல் தொடராக வெளிவந்தது. இந்தக் காலகட்டத்தில் க. நா. சு., வண்ணநிலவன் இருவரின் பங்களிப்பும் குறிப்பிடத் தகுந்தவையாக இருந்தன. ஜனவரி 1987இல் மீண்டும் ஞானரதம் நிறுத்தப்பட்டது.

‘மானுடம் பாடும் வானம்பாடிகளின் விலையிலாக் கவிமடல்’ என்னும் அறிவிப்புடன் நவம்பர் 1971இல் கோவையிலிருந்து வெளிவந்தது வானம்பாடி கவிதை இதழ். வானம்பாடியின் உருவாக்கத்துக்குக் காரணமான ஞானி, ஜன. சுந்தரம், புவியரசு, சிற்பி, அக்கினிபுத்திரன், முல்லை ஆதவன், இளமுருகு, தேனரசன், சி. ஆர். ரவீந்திரன், ஜீவ ஒளி, மு. மேத்தா, கங்கைகொண்டான், சக்திக்கனல், நித்திலன் ஆகியோருடன் அபி, அப்துல்ரகுமான், இன்குலாப், கல்யாண்ஜி, கலாப்ரியா, பாலா, பிரமிள், பிரபஞ்சன், மீரா, வண்ணநிலவன், விக்ரமாதித்யன் போன்றோரும் அதில் கவிதைகள் எழுதியுள்ளனர். வானம்பாடிக் குழுவினரிடையே ஏற்பட்ட பிளவுகளினால் இடைவெளிவிட்டு வெளிவந்த இதழ், எண்பதுகளின் ஆரம்பத்தில் நின்றது.

வானம்பாடி இதழில் வெளியான பெரும்பாலான கவிதைகள் மேடை முழக்கங்களாகவும் அரசியல் கோஷங்களாகவும் துணுக்குகளாகவுமே அமைந்துள்ளன. அவற்றில் கவிதையைத் தேடுவது உமிக் குவியலில் அரிசி மணிகளைப் பொறுக்கும் வேலைதான்.

‘புதுக்கவிதையின் வாசகர் வட்டம் விரிவாக்கம் பெற்றது . . . பாரதி மரபு புதுப்பிக்கப்பட்டது. கவிதைக்குள் இடதுசாரிக் கண்ணோட்டம் இடம் பெறக் காரணமானது . . . தமிழகமெங்கும் சிற்றிதழ்கள் வெளிவருவதற்கு ஆதாரமாக அமைந்தது. . .’என்று வானம்பாடியின் விளைவு களைக் குறிப்பிடுகிறார் சிற்பி (‘தமிழில் சிறுபத்திரிகைகள்’, பக். 21). வானம்பாடியின் வரவினால் புதுக்கவிதையின் வாசகர் வட்டம் விரிவானது உண்மைதான். அந்தப் பெருக்கம் கல்கியின் எழுத்துகளால் தமிழ் வாசகர் வட்டம் பெருகியதற்கு ஒப்பானது தான். நவீனக் கவிதையில் பாரதி மரபு புதுப்பிக்கப்பட்டதும் இடதுசாரிக் கண்ணோட்டம் இடம்பெற்றதும் உண்மைதான். ஆனால், அவை கவிதைகளாக வெளிப்படவில்லை என்பதும் உண்மை. வானம்பாடிகளின் ‘வெளிச்சங்கள்’ தொகுப்புக்குத் தெறிகள் இதழில் வெங்கட் சாமிநாதன் எழுதிய விமர்சனம், வானம் பாடிக் கவிதை இயக்கத்துக்கும் பொருந்தும்.

டிசம்பர் 82இல் வெளிவந்த வானம்பாடியின் ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழ் மற்றும் பிரமிள், லா. ச. ராமாமிருதம் பேட்டிகள் வெளியான இதழ்கள் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை.

வனமாலிகையை ஆசிரியராகக்கொண்டு நவம்பர் 1971 முதல் நாகர்கோவிலிலிருந்து வெளிவரத் தொடங்கியது சதங்கை மாத இதழ். ஆரம்ப காலங்களில் அது ஒரு ஜனரஞ்சக இதழ்போலவே வெளிவந்தது. “ஒரு சிறந்த இலக்கியப் பத்திரிகை நடத்தலாம். அல்லது ஒரு பொழுது போக்குப் பத்திரிகை நடத்தலாம். ஆனால் இரண்டையும் கலந்து செய்துவிட வேண்டும் என்பது எப்பொழுதும் வெற்றிபெற்றதில்லை” (ஜனவரி 1973) என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் சுந்தர ராமசாமி. மே 1973 இதழில், “நண்பர் சுந்தர ராமசாமி சதங்கையில் தொடர்ந்து எழுதுவதுடன் அவர்களது ஆலோசனைகளின்படி இதழ்கள் தொடர்ந்து வெளியாகும்” என்ற அறிவிப்புடன் சதங்கை ஒரு இலக்கிய இதழாக மாற்றம் பெற்றது. அப்போது நாகர்கோவிலில் தங்கியிருந்த பிரமிளும் சதங்கையில் எழுதத் தொடங்கினார். பல்வேறு இலக்கியப் பார்வைகள் கொண்ட படைப்பாளிகளுக்கும் சதங்கை களம் அமைத்துக் கொடுத்தது. தரமான படைப்புகள், கட்டுரைகளுடன் சாதாரணமான எழுத்துக்களும் வெளிவந்தன. வெளியீட்டில் இடைவெளிகள் இருந்த போதிலும் புத்தாயிரத்திலும் வெளியீட்டைத் தொடர்ந்து, வனமாலிகையின் மரணம் வரையிலும் நீடித்தது சதங்கை. இதழின் ஆரம்ப காலம் தொடங்கி இறுதிவரையிலும் எம். எஸ். ஸின் பங்களிப்பு இடையீடின்றித் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

‘கி றீவீtமீக்ஷீணீக்ஷீஹ் ஷ்மீணீஜீஷீஸீ ஜிணீனீவீறீ விஷீஸீtலீறீஹ்’ என்னும் அறிவிப்புடன் பரந்தாமனை ஆசிரியராகக் கொண்டு ஜூன் 1972 முதல் சேலத்திலிருந்து வெளிவரத் தொடங்கியது ‘ஃ’ (அஃக்). முதல் இதழில் கி. ராஜநாராயணனின் சிறுகதை, வெங்கட் சாமிநாதன் கட்டுரை, அம்பையின் ‘பயங்கள்’ நாடகம் இடம்பெற்றிருந்தன. கடைசிப் பக்கத்தில் ‘எழுத்து’ (ஜூன் 1959)வில் வெளியான க. நா. சு. வின் ‘இலக்கியத்தில் சோதனை’ கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டிருந்தது. எனவே அதனையே அஃக் இதழின் பிரகடனமாகக் கொள்ளலாம். உருவ – உள்ளடக்கத்தில் மேற் கொள்ளப்படும் சோதனை அம்சம்தான் இலக்கிய வளர்ச்சியைச் சாத்தியமாக்குகிறது என்பதே அந்தக் கட்டுரையின் சாராம்சம். ஆனால், தொடர்ந்து வந்த இதழ்களில் கசடதபறவில் தொடங்கப்பட்ட இந்திரா பார்த்தசாரதி – தினமணி கதிர் – அசோகமித்திரன் தொடர்பான சர்ச்சைகள் இடம்பெற்றன. ‘இலக்கியத்தில் சோதனை’ என்பது பின் தள்ளப்பட்டுவிட்டது. வழக்கமான சிற்றிதழ்கள்போலவே கதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், சர்ச்சைகள், மொழிபெயர்ப்புகள் என்ற வகையிலேயே அஃக் இதழ்களின் உள்ளடக்கமும் அமைந்திருந்தது. ஆனால், அச்சமைப்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.

ஆறாண்டுகள் இடைவெளிக்குப் பின் சுந்தர ராமசாமி எழுதிய ‘ஆந்தைகள்’, ‘சவால்’, ‘பின்திண்ணைக் காட்சி’ ஆகிய கவிதைகள் அஃக் நவ – டிசம்பர் 1972 இதழில் வெளி வந்தன. பிரமிளின் 38 கவிதைகள்கொண்ட கண்ணாடியுள்ளிருந்து கவிதைத் தொகுப்பு ஜன – பிப் – மார்ச் 1973 அஃக் இதழாக வெளிவந்தது. வெங்கட் சாமிநாதன் எழுதிய முன்னுரையும் பிரமிள் எழுதிய பின்னுரையும் புதுக்கவிதை பற்றிய சிறப்பான கருத்தியல் பதிவுகளாகும்.

மே 1974இல் கோவில்பட்டியிலிருந்து வெளிவரத் தொடங்கிய நீலக்குயில், சர்ச்சைகளைப் பெரும்பாலும் தவிர்த்த ஓர் இலக்கியச் சிற்றிதழாக – மற்ற அம்சங்களில் வழக்கமான இதழாக அமைந்தது. அது வெளியிட்ட ‘கடித இலக்கியச் சிறப்பிதழ்’ சிற்றிதழ்ப் போக்கில் வித்தியாசமான முயற்சி. 24 இதழ்களுடன் அது தன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது.

கசடதபற இதழ் வெளியீட்டில் ஓர் இடைவெளி ஏற்பட்டிருந்த காலகட்டத்தில், அக்டோபர் 1974இல் பிரக்ஞை மாத இதழ் வெளியீட்டைத் தொடங்கியது. ஆசிரியர் ஆர். ரவீந்திரன். “இந்தப் பத்திரிகை எழுத்துலகத்தில் ஒரு திருப்பத்தையோ அல்லது ஒரு செம்புரட்சியையோ ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை” என்று முதல் இதழில் அறிவித்திருந்தபோதிலும் பதிமூன்றாவது இதழில் (அக். 1975), “சுத்த இலக்கியம் மட்டுமே வெளியிடுவதுதான் சிறுபத்திரிகைகளின் லக்ஷணம் என்ற நிலை மாற வேண்டும். நம்மைப் பாதிக்கும் எந்த விஷயத்தைப் பற்றியும் அறிவுபூர்வமாக கலைநோக்குடனும் சமூக நோக்குடனும் பார்க்கப்பட்ட கட்டுரைகள் வெளிவர வேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டும். வரும் இதழ்களில் பிரக்ஞை இதற்கான முயற்சிகள் செய்யும்” என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியது. இவ்வகையில் இதனை ஒரு முன்னோடிச் சிற்றிதழாகக் கொள்ளலாம். பிரக்ஞை மார்க்சிய நோக்குக்கொண்ட பத்திரிகையாக இருந்த போதிலும் “எழுதுபவர்களின் சித்தாந்தப் பார்வைகள் பிரசுரத்திற்கு தடையில்லை” (டிசம்பர் 74) என்ற தனது ஆரம்ப கால நிலைப்பாட்டை இறுதிவரையிலும் தொடர்ந்தது. பீனிக்ஸின் ‘மார்க்ஸீயமும், பஜனைக் கவிஞர்களும்’ (ஏப். 75), ஜெயராமனின் ‘ரிசிஷி பணிக்கர் – ஒரு பார்வை’ (ஜூன், ஜூலை 76) போன்ற கட்டுரைகள் முக்கியமானவை. ஆல்பர்ட் கேமுவின் ‘நியாயவாதிகள்’ நாடகம் தொடராக வெளியிடப்பட்டது. தரமான கவிதைகள், கதைகள் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தியது பிரக்ஞை. புத்தக மதிப்புரைகள் – குறிப்பாகக் கவிதைத் தொகுப்புகள் பற்றியவை – மற்ற சிற்றிதழ்களைக் காட்டிலும் காரமாகவும் சிறப்பாகவும் அமைந்திருந்தன.

கசடதபற மார்ச் 1975 இதழில் சி. மணியின் ‘வரும் போகும்’ தொகுப்பை விமர்சித்து ‘சி. மணியின் எழுத்துக்கள்’ என்னும் தலைப்பில் ஞானக்கூத்தன் எழுதிய கட்டுரையைக் கடுமையாகத் தாக்கி ந. முத்துசாமி எழுதிய ‘வேற்றுமை’ கட்டுரை அக்., நவ., டிசம்பர் 1975 இதழ்களில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ஞானக்கூத்தனின் ‘ஆறும் ஏழும்’, சா. கந்தசாமியின் ‘போலி விமர்சனமும் போலி கவிதையும்’ (ஜன. 76), பிரமிளின் ‘கவிப்பொருளும் சப்தவாதமும் (பிப் – மார்ச் 76), சுந்தர ராமசாமியின் ‘ஒன்றும் நாலும்’ (ஏப். 76) கட்டுரைகள் வெளியாயின. ந. முத்துசாமி, ஞானக்கூத்தன், சா. கந்தசாமி கட்டுரைகளில் வெளிப்பட்ட தனிநபர் தாக்குதல்கள் பிரக்ஞை ஆசிரியரை வெகுவாகப் பாதித்திருந்ததை அதன் தலையங்கப் பகுதி மூலம் அறிந்துகொள்ளலாம்: “இவற்றில் வெளிப்படையாகத் தொனிக்கும் காழ்ப்புணர்ச்சிகளை விலக்கிவிட்டு முக்கிய விஷயத்தை அணுகிப் புரிந்துகொள்ளுமளவு தீவிரம் தன் வாசகர்களிடையே இருக்கும் என்பது பிரக்ஞையின் எதிர்பார்ப்பு” (ஜன. 76).

சர்ச்சையின் தொடர்ச்சியாக வெளிவந்த ஞானக்கூத்தனின் பதில் (ஒரு பகுதி மட்டும்) மே 76 இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதே இதழில், கோகயம் நிறுத்தப்பட்டுவிட, இங்கு பிரசுரமாகும் கட்டுரைப் பகுதி என்னும் ஆசிரியர் குறிப்புடன் வெங்கட் சாமிநாதன் எழுதிய ‘ஒரு தயாரிப்புக் கவிஞர் – பிற்சேர்க்கை: இன்னும் சில எதிரொலிகள்’ என்னும் கட்டுரை பிரசுரமானது. அதற்குப் பதிலாக எஸ். கார்லோஸ் (தமிழவன்) எழுதிய ‘இன்னொரு பார்வை’ கட்டுரை ஆக., செப்., 76 இதழில் வெளியானது. (பின்னர் இந்த விவாதம் நிறுத்தப்பட்டுவிட அது கொல்லிப்பாவையில் தொடர்ந்தது.)

அதன் பின்னர் பிரக்ஞை வெளியீட்டில் அவ்வப்போது இடைவெளி ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடியுடன் சிற்றிதழ் வாசகர்கள் மீதான அதிருப்தியும் அதற்குக் காரணமெனலாம். “கருத்துலகில் தன் ‘பிராண்ட்’ சிந்தனையைத் தவிர வேறெதையும் பார்ப்பதில்லை என்று உங்களில் பெரும்பாலானோர் முடிவு கொண்டிருக்கும்வரை ஆக்கபூர்வமான பெரும் மாற்றங்கள் தமிழில் ஏற்படப் போவதேயில்லை” (ஜூலை 1977) என்னும் தலையங்கக் குறிப்பு இதனைத் தெளிவுபடுத்தும். நாற்பது இதழ்களுக்குப் பின்னர் பிரக்ஞை அரசியல், சமூகப் பிரச்சினைகளில் தீவிர கவனம் கொண்டது. சிறிது காலத்தில் தன் வெளியீட்டையும் நிறுத்திக்கொண்டது.

விருதுநகரிலிருந்து தெறிகள் என்ற சிறிய இதழை நடத்திவந்த கவிஞர் உமாபதி, பின்னர் நாகர்கோவிலிலிருந்து அதே பெயரில் அதிக பக்கங்களுடன் 1976இல் காலாண்டு இதழாக வெளியிட்டார். “தமிழில் சிறு பத்திரிகைகள் கணிசமான அளவிற்குத் தோன்றிவிட்டன, தெறிகள் ஈறாக. இவைகள் பீமீநீறீணீக்ஷீமீ செய்கிற அல்ல – தருகிற விஷயங்களை வைத்தே வளர்ச்சியின் தன்மை உருவாகும்” என்று அந்த இதழில் குறிப்பிட்டிருந்தார் உமாபதி. சம்பத் எழுதிய இடைவெளி நாவல், கலாப்ரியாவின் சுயம்வரம் குறுங்காவியம், வானம்பாடிகளின் வெளிச்சங்கள் கவிதைத் தொகுப்பு குறித்த வெங்கட் சாமிநாதனின் நீண்ட விமர்சனம் மற்றும் கவிதைகள் முதல் இதழில் இடம்பெற்றிருந்தன. இலக்கியத் தரமான ஒரு இதழாகச் சிறப்பாக அமைந்திருந்தது அந்த இதழ். அது அவசரகால நிலை அமலில் இருந்த காலமாதலால், நெருக்கடியான சூழ்நிலையில் உமாபதியால் தொடர்ந்து இதழை வெளியிட முடியவில்லை.

முன்னர் குறிப்பிட்டதுபோல, தெறிகள் இரண்டாவது இதழுக்குத் தயாரித்த விஷயங்களுடன் கொல்லிப்பாவை முதல் இதழ் அக். 1976இல் திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்தது. இரண்டாவது இதழ் ஜன – மார்ச் 77இல் வெளிவந்தது. 1978இல் மட்டுமே குறிப்பிட்டபடி நான்கு இதழ்கள் வெளிவந்தன. மூன்றாவது இதழிலிருந்து 12வது இதழ்வரை குமரி மாவட்டத்திலிருந்து இடைவெளிவிட்டு இதழ்கள் வெளிவந்தன. இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த கொல்லிப்பாவை இதழ்களில் சுந்தர ராமசாமியின் ‘உடல்’ நாடகம் மற்றும் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம், வெங்கட் சாமிநாதனின் ‘இரண்டு தலைமுறைகளுக்கிடையில்’ கட்டுரையும் அது தொடர்பான விவாதங்களும் குறிப்பிடத்தக்கவை. எம். வேதசகாயகுமார் இதழ்களிலிருந்து பிரதியெடுத்த புதுமைப்பித்தனின் ‘சாமாவின் தவறு’, ‘நம்பிக்கை’, ‘சாளரம்’, ‘கண்ணன் குழல்’ ஆகிய சிறுகதைகள் கொல்லிப்பாவையில் மறுபிரசுரம் செய்யப்பட்ட பின்னரே புதுமைப்பித்தன் தொகுப்புகளில் அவை இடம்பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜூலை 1985 முதல் ஆர். கே. ராஜகோபாலனை ஆசிரியராகக்கொண்டு மீண்டும் வெளிவரத் தொடங்கிய கொல்லிப்பாவை காலாண்டிதழ், அவர் குறிப்பிட்டபடி எட்டு இதழ்களுடன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது. இந்தக் காலகட்டத்தில் க. நா. சு., நகுலன், கலாப்ரியா, சி. மணி ஆகியோரின் கவிதைகள் குறித்த விரிவான விமர்சனங்கள் வெளியிடப்பட்டன. சுந்தர ராமசாமியின் கவிதைகள் அதிக அளவில் பிரசுரமாயின. கொல்லிப்பாவை மூலமே ஜெயமோகன் கவிஞராக அறிமுகமானார். மொழி பெயர்ப்புக் கவிதைகளும் நிறைய வெளிவந்தன.

“அவதூறுகளுக்கும் தனிநபர் தாக்குதல்களுக்கும் கொல்லிப்பாவை இடம் தராது” என்று பதின்மூன்றாவது இதழில் அறிவித்தபடியே, எட்டு இதழ்களையும் வெளியிட்டார் ராஜகோபாலன். இதன் காரணமாக, ‘கொல்லிப்பாவை’ சுவாரஸ்யமற்றதாகிவிட்டது என்ற விமர்சனமும் எழுந்ததுண்டு. ஆனால், அவரது உறுதியான நிலைப்பாடே அந்த எட்டு இதழ்களும் சிறப்பாக வெளிவரக் காரணமாக இருந்தது. சுந்தர ராமசாமியின் தொடர்ந்த பங்களிப்பும் ஒத்துழைப்பும் இதழுக்குப் பக்கபலமாக இருந்தன.

கொல்லிப்பாவை ஆரம்ப காலத்தில் வெளியிட்ட, “சில கட்டுரைகளில் விவாத எல்லையை மீறிய தனிநபர் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்ததாகக் குற்றச்சாட்டும் விமர்சனமும் கொல்லிப்பாவை வெளிவந்த காலகட்டத்திலும் அதன் பின்னரும் எழுந்ததுண்டு. அந்தக் குற்றச்சாட்டிலும் விமர்சனத்திலும் நியாயம் இல்லாமலில்லை. என்றாலும் அத்தகைய கட்டுரைகளின் பிரசுரம் அன்றைய காலகட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு என்றும் சொல்லலாம். கொல்லிப்பாவையின் சமகாலத்தில் வெளிவந்த பிரக்ஞை, வைகை, யாத்ரா போன்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் – விமர்சனங்களுக்கு எதிர்வினையாகவே அவற்றில் பெரும்பாலானவையும் பிரசுரிக்கப்பட்டன” என்று ‘கொல்லிப்பாவை இதழ்த் தொகுப்’பின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தேன். இன்று யோசித்துப் பார்க்கும் வேளையில் அது மட்டும் காரணமல்ல என்றே தோன்றுகிறது. (விமர்சன எல்லைகளை மீறியதாகக் கூறப்பட்ட அந்தக் கட்டுரைகளில் வெளிப்பட்ட தனித்துவமும் நுட்பமும் கூடிய விமர்சன வீச்சுகள் இன்றைய பெரும்பாலான விமர்சனக் கட்டுரைகளில் காணக்கிடைக்காதவை.)

எழுத்து, இலக்கிய வட்டம் இதழ்களை நடத்திய சி. சு. செல்லப்பாவும் க. நா. சுவும் முக்கியமான இலக்கிய ஆளுமைகள் என்பதுடன் அயராத உழைப்பும் மனவுறுதியும் கொண்டவர்களாக இருந்தனர். இலக்கியமே அவர்களின் ஆத்மார்த்த லட்சியமாக – உலகமாக இருந்தது. அவற்றில் எழுதியவர்களில் பெரும்பாலானவர்களும் அவர்களுக்கு அடுத்த தலை முறையைச் சார்ந்த படைப்பாளிகள். ஆனால், கசடதபற, பிரக்ஞை, கொல்லிப்பாவை இதழ்களின் ஆசிரியர்கள் நிலைமை அத்தகையதல்ல. இவர்களைவிடவும், இவர்கள் நடத்திய இதழ்களில் எழுதிய படைப்பாளிகள் இலக்கிய ஆளுமைமிக்கவர்களாக இருந்ததால், அவர்களின் சர்ச்சைக்குரிய விமர்சனக் கட்டுரைகளை நிராகரிக்கும் மனத்திடம் இல்லாதவர்களாக இருந்தனர் (விதிவிலக்காக ராஜகோபாலனைச் சொல்லலாம்) என்பதும் அத்தகைய கட்டுரைகள் வெளிவரக் காரணமாக இருந்தது. எனவேதான் சி. சு. செல்லப்பா, க. நா. சு. இருவரின் கனவுகளும் நடைமுறையில் காரியங்களாக உருப்பெற்ற அளவில் பின்வந்த சிற்றிதழாளர்களின் கனவுகள் காரியங்களாக முழுமை பெறவில்லை. என்றாலும், இன்று பார்க்கும்போது அந்தக் குறைகளையும் மீறிய மேலான படைப்புகள் அவற்றில் வெளிவந்துள்ளன என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

நன்றி: காலச்சுவடு இதழ் 100, ஏப்ரல் 2008

Advertisements
Comments
3 Responses to “‘எழுத்து’ முதல் ‘கொல்லிப்பாவை’ வரை-ராஜமார்த்தாண்டன்”
 1. RAMESHKALYAN says:

  எவ்வளவு விஷயங்கள்!
  இலக்கிய இதழில் நவீன ஓவியங்களை முதலில் அறிமுகப்படுத்தியது நடைதான். ஞானக்கூத்தன் புதுக்கவிதை எழுதத் தொடங்கியதும் நடையில்தான்.
  கசடதபற – இந்திரா பார்த்தசாரதியின் மழை நாடகம், வெ. சாமிநாதனின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது. ஞானரதம் – ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே நாவல் தொடராக வெளிவந்தது. தெறிகள் – சம்பத் எழுதிய இடைவெளி நாவல்.
  நல்ல கட்டுரைப் பொக்கிஷம்.

 2. history of literature little magzines good document..use full for young generation

 3. சிறு பத்திரிகைகளின் வரலாறு மட்டுமல்ல இலக்கியவாதிகளின் வாழ்வையும் பதிவு செய்துள்ளது .அண்ணாச்சி
  முனைவர் என்பதோடு முனிவர் என்றும் காட்டிவிட்டார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: