எழுதிக்கொண்டே இருந்த க.நா.சு – அசோகமித்திரன்

க.நா.சு.100

புத்தக அறிமுகம்

எழுதிக்கொண்டே இருந்த க.நா.சுப்பிரமணியம் கி.அ.சச்சிதானந்தம்  வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை – 600017. விலை – ரூ75/-

மன்ச்சி மனுஷிக்கு ம -ரணமே சாட்சி’ என்று ஒரு பழமொழி தெலுங்கில் உண்டு. எல்லா நல்லவர்களுக்கும் அனாயாச மரணம் கிடைப்பதில்லை. ஒரு குழந்தையுடையது போன்ற மனது கொண்ட பாரதியார் கடைசி நாட்களில் ஒரு நொடிப்போதாவது ‘காலா, நீ உடனே வா’ என்று எண்ணியிருக்கக் கூடும். செப்டம்பர் 12-ஆம் தேதி வரை அவர் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருந்தால் அது மனைவி, குழந்தைகளை அனாதரவாகவிட்டுச் செல்ல மனமில்லாததால்தாka-na-su ன் இருக்கும்.

க.நா.சுப்பிரமணியனுக்கு அனாயாச மரணம் சாத்தியமாயிற்று. அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது என்று சில ஆண்டுகள் முன்புதான் தெரிய வந்தது. அவர் கண் மருத்துவரைப் பார்ப்பதைத் தவிர்த்தது இந்த நோயை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதற்காகத்தான் என்று இன்று எனக்குத் தோன்றுகிறது. நோய் ஒப்புக்கொள்ள மறுத்த பலர் வாரக்கணக்கில் மருத்துவமனையில் சித்திரவதைக்குள்ளானதைப் பார்த்திருக்கிறேன். என் குடும்பத்திலேயே இந்த அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

’எழுதிக் கொண்டேயிருந்தவர்’ என்ற அடையாளம் அவருக்குப் பொருத்தமானதுதான். சுஜாதா கூட எழுதிக் கொண்டேயிருந்தார். பிரசுர சாத்தியமோ, வேறு எந்த வகை வெகுமானமோ இல்லை என்று தெரிந்துதான் க.நா.சு எழுதிக் கொண்டேயிருந்தார் என்று கூற வேண்டும்.

நான் அவரை 1966 முதற்கொண்டு அறிவேன். சென்னையிலும், டில்லியிலும் அவருடைய வீட்டுக்குப் பலமுறை போனதில் பல விஷயங்கள் கேட்காமலே தெரிந்தன. ஒன்று, தினமும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அவர் பத்து பக்கமாவது எழுதுவது. இரண்டாவது, அவருடைய பல ஆங்கிலக் கட்டுரைகளை சன்மானமே சாத்தியமில்லாத பத்திரிகைகளுக்கு எழுதியது. மூன்றாவது, அவருடைய பல படைப்புகள் திரும்பி வந்திருப்பது. நான்காவது, அவருடைய கையெழுத்துப் பிரதிகள் ஏராளமானவை தொகுக்கப்பட்டிருக்கின்றன. பல பகுதிகள் கொண்ட அவருடைய சுயசரிதைக் கையெழுத்துப் பிரதியை இலக்கியப் பத்திரிகை என்று அறியப்பட்டதொன்று தொலைத்துவிட்டதாகக் கூறியது. ஒரு சொல் வருத்தம் தெரிவிக்கவில்லை. அது போனது போனதுதான்.

கி.அ.சச்சிதானந்தம் எழுதிய ‘எழுதிக் கொண்டேயிருந்த க.நா.சுப்பிரமணியம்’ சில நல்ல பின்னிணைப்புகளைக் கொண்டிருக்கிறது. முக்கியமானது, க.நா.சு – செல்லப்பா விவாதம். ஆனால் அச்சிட்ட முறையில் அதன் முழுப்பயனும் பெற முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது.

ஆங்கில மொழியில் க.நா.சுப்பிரமணியம் ஏராளமான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அநேகருடைய படைப்புகளை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் அமெரிக்கப் பதிப்பகம் ராண்டம் ஹவுஸ் நடத்திய ஒரு போட்டிக்காக ‘அவதூதர்’ நாவலை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருக்கிறார். அவருடைய நாவல் பரிசு பெறவில்லை. ஆனால் சில மாற்றங்கள் செய்தால் பிரசுரம் செய்யச் சம்மதம் என்று ராண்டம் ஹவுஸ் கடிதம் எழுதியிருந்தது. (இதை நான் பார்த்தேன்). க.நா.சு முடியாது என்று எழுதியிருக்கிறார். இது போன்ற விஷயங்களில் இதுதான் சரி என்று கூற முடியாது. இந்த நாவல் தமிழிலும் மிகத் தாமதாகத்தான் வெளியாயிற்று. ‘பித்தப்பூ’ கற்பனை செய்யமுடியாத அச்சுப்பிழைகளுடன் வெளியாயிற்று. ராண்டம் ஹவுஸ் சில மாற்றங்கள் செய்தாலும் அச்சுப்பிழைகள் இல்லாமல் வெளியிட்டிருக்கும்.

சச்சிதானந்தம் அவரறிந்த க.நா.சுவை ஒரு சிறு விள்ளல்தான் இந்த நூலில் தந்திருக்கிறார். க.நா.சுவுக்கு எழுத்துத் துறைக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் என்று கிடையாது. சென்னையில் எம்.கோவிந்தன் என்ற மலையாள இலக்கிய இலட்சியவாதி க.நா.சுவின் நெருங்கிய நண்பர். இவர்கள் இருவர் முயற்சியில் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர்கள் மாநாடு கேரளத்தில் நடந்தது. சண்முகசுந்தரம், மெளனி, சுந்தர ராமசாமி, சி.சு.செல்லப்பா போன்றோர் அகில இந்திய கவனம் பெற்றார்கள். அவ்வளவு மகத்தான படைப்பாளிகளை ஒரே இடத்தில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு அதன்பின் நேரவேயில்லை.

க.நா.சு தொகுத்து வெளியிட்ட நூல்கள் ஒவ்வொன்றிலும் அவருடைய விரிவான அறிமுகக் கட்டுரை இருக்கும். இலக்கியக்கட்டுரைகள் என்றால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி இருக்க வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம் ஏற்பட்டுவிட்டது. க.நா.சு இலக்கியவாதிகள் மட்டுமல்லாமல் அனைவரும் அந்த விவாதத்தில் பங்கு பெறவேண்டும் என்று நினைத்தவர். ஆதலால் எளிய நடையில் அவருடைய கட்டுரைகள் இருக்கும். பொதுவாகப் பத்து கதைகள் கொண்ட தொகுப்பு என்றால் அதில் ஐந்தாறுதான் தரமாக இருக்கும். க.நா.சு பிற மொழிகளில் கூடச் சிறப்பாக உள்ளதைத்தான் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருப்பார். அத்தொகுப்பு நூல்கள் இன்று கடைகளில் கிடைக்காது. தேசிய நூலகங்களில் இருக்கக்கூடும்.

கி.அ.சச்சிதானந்தன் நூலில் பல தகவல்கள் இருக்கின்றன. அந்த நூலுக்கான அளவில் உள்ளதைப் போல இன்னும் நிறையப் பதிவு செய்யப்படாமல் உள்ளன.

நன்றி: சொல்வனம்

Advertisements
Comments
2 Responses to “எழுதிக்கொண்டே இருந்த க.நா.சு – அசோகமித்திரன்”
  1. கி.அ.சச்சிதானந்தன் அவர்களைப் பற்றிய விளக்கமான தகவலுக்கும், நூல் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி…

  2. K. says:

    written with affection and feeling. bala

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: