க.நா.சுவின் எழுத்து மேஜை – சுகுமாரன்

க.நா.சு.100

ஓவியம்: ஆதிமூலம்

என்னைப் பற்றி அக்கப்போர்கள் அவ்வப்போது எழுந்து அடங்கி யிருக்கின்றன. யார் யாரோ அந்தந்தச் சமயத்துக்கு ஏதோ சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். இன்றும் சொல்கிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று எண்ண வில்லை. காலம் பதில் சொல்லட்டும். என் அபிப்பிராயத்தில் வலுவில்லாவிட்டால் காலம் அடித்துக்கொண்டு போய்விடும். வலுவிருந்தால் என் அபிப்பிராயம் தானாக நிற்கும். – க.நா.சு.


இலக்கிய வாசிப்பு முக்கால் நேரத் தொழி தொழிலாக இருந்த நாட்களில் க.நா.சுவின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். கதைகளிலும் நாவல்களிலும் வெளிப்படும் தெளிவால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். கவிதைகளில் தென்பட்ட தெளிவான இருண்மையால் குழம்பியிருக்கிறேன். அவற்றில் தெரியும் வடிவரீதியான கட்டற்றதன்மையால் வசீகரிக்கப்பட்டிருக்கிறேன். அவருடைய விமர்சனங்களையும் அவர்மீதான விமர்சனங்களையும் வாசித்திருக்கிறேன். எனினும் அவரது பங்களிப்பை நிர்ணயித்துக்கொள்ளக் கூடிய வாசிப்பைச் செய்ய முடிந்ததில்லை.ka.na.su-drawings

மலையாளக் கவிஞரான குமாரன் ஆசான் நினைவாக உருவாக்கப்பட்ட ‘ஆசான் கவிதைப் பரிசு’ 1979ஆம் ஆண்டு க.நா.சுவுக்கு வழங்கப்பட்டது. அந்தப் பரிசு அவருக்குப் பரவலான அங்கீகாரத்தைக் கொடுத்தது. அவருக்குக் கிடைத்த முதல் தனிப்பட்ட அங்கீகாரம் அதுதான். அதற்கு முன் தமிழக அரசின் பரிசைக் கோதை சிரித்தாள் என்ற நூலுக்காகப் பெற்றிருந்தார். மலையாளக் கவிஞரும் பத்திரிகையாளருமான நண்பர் ஒருவர் தான் பணியாற்றும் மலையாள நாளிதழின் வாரப் பதிப்புக்காகக் க.நா.சு. பற்றிக் கட்டுரை எழுத முயன்றுகொண்டிருந்தார். க.நா.சு. தமிழ் எழுத்தாளர், விமர்சகர், ஆங்கிலத்திலும் எழுதுபவர் என்ற அதிகபட்சத் தகவல்கள் நண்பரிடமிருந்தன. க.நா.சுவின் படைப்புகள், அவரது விமர்சனமுறை, மொழிபெயர்ப்பு, இலக்கிய நடை முறையாளராக அவர் தமிழ் இலக்கியத்துக்குச் செய்த பங்களிப்புகள் போன்ற உபரித் தகவல்களை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர் அளித்த அந்த வாய்ப்புத்தான் க.நா.சுவின் இலக்கிய ஆளுமையைப் புரிந்துகொள்ள உதவியது. ஒரு வாரக் காலம் தேடித் தேடிப் படித்துத் தொகுத்தவற்றைத் தமிழில் எழுதிக் கொடுத்தேன். கோடுபோட்ட நோட்டுப் புத்தகத் தாளில் பத்துப் பதினைந்து பக்கம் வந்தது. ஒரு தகவல் விடுபடாமல், வரிசைக் கிரமம் மாறாமல் நண்பர் அதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து அனுப்பினார். அன்று துக்ளக் இதழில் பணியாற்றிக்கொண்டிருந்த வண்ணநிலவன்தான் க.நா.சுவின் புகைப்படத்தை அனுப்பித் தந்தார்.

நாளிதழ் வாரப் பதிப்பில் முழுப்பக்க அளவில் அமர்க்களமாகக் கட்டுரை வெளிவந்திருந்தது. க.நா.சுவின் வாசகனாக அந்தக் கௌரவம் மகிழ்ச்சியளித்தது. ஆனால் அவ்வளவு பெரிய கட்டுரையில் எங்காவது என் பெயர் தட்டுப்படுகிறதா என்றுதான் தேடிக்கொண்டிருந்தேன். இல்லை. மலையாள மொழியாக்கத்தில் நண்பர் செய்திருந்த ஒரே மாற்றம் கட்டுரைக்கு ஒரு ரொமாண்டிக் சாயலைக் கொடுத்ததுதான். ‘எங்கே தரமில்லாத இலக்கியம் இருக்குமோ அங்கே விமர்சகனின் வாளுடன் க.நா.சு. பிரசன்னமாவார்’ என்ற இப்போதும் நினைவில் பதிந்திருக்கும் வரியைப் படித்தவுடன் வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றியது.

கட்டுரையில் என் பங்கு மறுக்கப்பட்டதைப் பற்றி இலக்கிய நண்பர்களிடம் புலம்பினேன். கேட்டவரில் யாரோ அட்சரம் பிசகாமல் என் முறையீட்டை மலையாள நண்பரிடம் தெரிவித்தார். ‘அவர் எழுதியது தமிழில்தானே, நானல்லவா அதை மலையாளத்துக்கு மாற்றினேன். முடிந்தால் அவரே மலையாளத்தில் எழுதுவதுதானே?’ என்று சொன்னது என்னைச் சீண்டிவிட்டது. அதுவரை மலையாளத்தில் பேசவும் வாசிக்கவும் மட்டுமே என்னால் முடியும். பிழையில்லாமல் எழுதுவது சிரமம். நண்பரின் கேலியால் உசுப்பப்பட்டே அந்த மொழியைப் பிழையற எழுதப் பயின்றேன். இதுவரை தோராயமாகப் பதினைந்து உருப்படியான கட்டுரைகளை மலையாளத்தில் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு கட்டுரையை எழுதியபோதும் தமிழ் எழுத்தாளரான க.நா.சு. வாளையுருவியபடி நிற்கும் ஆவிரூபத் தோற்றம் மனத்துக்குள் தென்பட்டது. ஆக என்னுடைய மலையாள ஞானத்துக்கு மறைமுகமான தூண்டுதல் அவரும்கூட என்பது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்.

o

கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம் என்ற க. நா. சு. இன்று இருந்தால் வயது நூறு. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் மறைந்தபோது நவீனத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட காலம் செயல்பட்டவர் என்ற பெருமைதான் அவர் மிச்சம் வைத்துவிட்டுப்போனதாகத் தோன்றியது. நீண்ட ஆயுளுடன் இலக்கிய நடவடிக்கையை மேற்கொண்டிருந்தவர்கள் அவருக்கு முன்பும் பின்பும் இருந்தனர். ஆனால் அவர்கள் வாழ்க்கையின் ஏதோ கட்டங்களில் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். எழுத்தின் மீதுள்ள மோகத்தால் ஈடுபட்டிருந்த பணிகளைத் துறந்து இலக்கியம் செய்தவர்கள். கல்லூரிப் படிப்பை முடித்த நாள் முதல் எழுத்தும் வாசிப்பும் மட்டுமே தன்னுடைய விருப்பமும் தொழிலுமாக வாழ்ந்தவர் க. நா. சு. நம்பிப் பிழைப்பு நடத்தப் போதுமான வருவாய் தராத எழுத்துத் துறையில் ஈடுபட்டிருந்ததை ஒரு சாகசமாகவே எண்ணத் தோன்றுகிறது.

எழுத்தைச் சார்ந்திருப்பவனுக்குத் துணையாக இருந்திருக்கக்கூடிய கல்வி, பத்திரிகைத் துறைகள்மீது வைத்த கடுமையான விமர்சனங்கள் க.நா.சுவைத் தீண்டத்தகாதவராக்கின. ஈடுபட்டிருந்த இலக்கியத் துறையிலும் கணிசமான பகைமையை ஈட்ட முடிந்தது. ‘பண்டிதப் போக்கு, பத்திரிகைப் போக்கு, இலக்கியப்போக்கு இந்த மூன்றும் இருபது ஆண்டுகளாக எந்த மாற்றமுமில்லாமல் இருக்கின்றன. இவை மாறும் என்பதற்கும் உத்தரவாதமில்லை’ என்றுKA.-NA.-SU-Portrait-01 ஐம்பதுகளில் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். தமிழில் இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் அவருடைய நோக்கம். எனவே இலக்கியப் பகைமையை விரும்பியே ஏற்றுக்கொண்டார். பகைமை மூலம் கிடைத்த சுதந்திரத்தை அனுபவித்தார் என்றும் தோன்றுகிறது. எழுத்தின் மீது மட்டும் பிடிப்புள்ளவராக வாழ இந்தச் சுதந்திரம் அவருக்குத் துணையாக இருந்தது. ஒரு நாடோடியின் சுதந்திரம். அதைச் சார்ந்துதான் அவருடைய கருத்துகளும் விமர்சன அடிப்படைகளும் உருவாயின. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இலக்கியத்தில் ஒரு சுயவதைக் குதூகலத்துடன் இயங்கியவர் க. நா. சு. என்பதைத்தான் அவரது வாழ்க்கையின் முதன்மையான இயல்பாகக் காண்கிறேன். இலக்கியத்தின் மூலம் தன்னை நிறுவவோ பொருள் ஈட்டவோ அவர் முனைந்ததில்லை என்பது இந்த இயல்பின் அடையாளம். ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லலாம்.

க.நா.சுவின் மறைவுக்குப் பின்பு அவர் சேகரித்துவைத்திருந்த புத்தகங்களையும் அவரது கையெழுத்துப் படிகளையும் அவரது மருமகன் பாரதி மணி ‘சுந்தர ராமசாமி நினைவு நூலகத்’துக்குக் கொடுத்திருந்தார். அவற்றை வகைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். வியப்பளிப்பதாக இருந்தது அந்தச் சேகரிப்பு. பெயரளவில் தெரிந்துவைத்திருந்த தமிழ். இந்திய, பிற மொழி எழுத்தாளர்களின் கடிதங்கள். தலைப்பு மட்டுமே தெரிந்த பழைய புத்தகங்கள். அவர் சேர்த்திருந்த புத்தகங்களுக்குக் கிட்டத்தட்ட சம அளவில் கையெழுத்துப் படிகளும் அதில் இருந்தன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பல நூறு பக்கங்கள். அவற்றில் சில மட்டுமே அச்சேறியவை. சில எழுதத் தொடங்கி முடிக்காமல் விடப்பட்டவை. சில சிறுகதையாகத் தொடங்கி நாவலாக்கும் எண்ணத்தில் நீட்டப்பட்டுப் பாதியில் நிறுத்தப்பட்டவை. ஆங்கிலக் கையெழுத்துப் படிகள் பலவும் பத்திரிகைகளின் வேண்டுகோளின்படியும் பதிப்பாளர்களின் ஒப்பந்தத்துக்கும் தயாரிக்கப்பட்டவை. அவற்றில் சரபோஜி மன்னரைப் பற்றிய ஆங்கில நூலுக்கான கைப் பிரதிகள் இரண்டோ மூன்றோ இருந்தன. ஒன்று விரிவானது. மீதி இரண்டும் அதிலிருந்து சுருக்கப்பட்டவை. அவற்றுக்கு மத்தியில் நான்கைந்து நாற்பது பக்கக் குறிப்பேடுகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் கணக்குகள் எழுதப்பட்டிருந்தன. நேர்த்தியாகப் பத்தி பிரித்துக் கோடுபோட்டு எழுதப்பட்டவை. எல்லா நோட்டுகளிலும் பார்த்த ஒற்றுமை – எதிலும் தொடர்ச்சியாகக் கணக்குகள் இல்லை.

மாதத்தின் ஆரம்ப நாட்களில் மட்டும் எழுதப்பட்டிருந்தன. எந்தப் பத்திரிகைக்கு என்ன படைப்பை அனுப்பியிருக்கிறார் என்பதைப் பொருள் பத்தியிலும் அதற்கு வர வேண்டிய அன்பளிப்புத் தொகை பற்றுப் பத்தியிலும் வந்த தொகை வரவுப் பத்தியிலும் எழுதப்பட்டிருந்தன. ஆர்வத்துடன் பார்த்ததில் அவர் எழுதியவையும் அவருக்கு வர வேண்டிய பற்றும் அதிகம். வரவுப் பத்தியில் அபூர்வமாகவே குறிக்கப்பட்டிருந்தது. அநேகமாக வரவு இல்லை.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அவர் தனக்காக வாதிட்டதாக எந்தத் தடயமும் இல்லை. ஆனால் அவர் இடம்பெற்றிருந்த அமைப்புகளில் தமிழ் சார்ந்த காரியங்களுக்காக அவர் விட்டுக் கொடுத்ததுமில்லை. ஜான் ஆப்ரஹாம் இயக்கிய அக்ரஹாரத்தில் கழுதை படம் தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட நடுவர் குழுவில் ஒருவராக இருந்த க. நா. சுதான் காரணமென்று சொல்லப்பட்டது. சினிமாவோடு எந்த நெருக்கமும் கொண்டிராதவரான க. நா. சு. ஒரு தமிழ்ப் படம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததை இது காட்டுகிறது. அவருடைய இலக்கியப் பரிந்துரைகளிலோ பட்டியல்களிலோ இந்திரா பார்த்த சாரதியின் பெயர் அநேகமாக இடம்பிடித்ததில்லை. ஆனால் சாகித்திய அக்காதெமி விருது பெற்ற இ.பாவின் குருதிப்புனல் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் க. நா. சு. தமிழ் நாவல் ஒன்று தேசிய அளவில் பேசப்படும் வாய்ப்பை அவர் பாழாக்கவில்லை.

க. நா. சுவின் இந்த இயல்புதான் அவரைத் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமையாக்கியது. அவரது கருத்துகளுக்கு மதிப்பளித்தது. விமர்சனரீதியாக அவரைத் தூற்றியவர்களும் பிற்போக்காளர் எனக் குற்றம் சாட்டியவர்களும் மரியாதையுடன் அவரைப் பார்த்ததற்கும் தமது படைப்புகளைப் பற்றி எதிர்மறையாகவேனும் கருத்துச் சொல்வாரா என்று எதிர்பார்த்ததற்கும் அவரது சமரசமற்ற இயல்பு காரணமாக இருக்கலாம். இந்த இயல்பிலிருந்தே தனது இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கியிருக்கிறார்.

ka-naa-su-table ன்று இலக்கியத்துக்குள் வரும் தலைமுறை க. நா. சு.வின் படைப்புகளை வாசிக்காமலிருக்கலாம். அவருடைய விமர்சனக் கருத்தாக்கங்களை ஊன்றிக் கவனிக்காமலிருக்கலாம். எனினும் இலக்கியம் ஒரு தீவிரச் செயல்பாடு என்று நம்புமானால் க. நா. சுவின் தொடர்ச்சியை இந்தத் தலைமுறையிலும் காண முடியும். முன் எப்போதையும்விடப் படைப்புச் செயல் பன்முகமாகவும் வேகமாகவும் நடைபெறும் காலம் இது. மிக அதிக எண்ணிக்கையில் கவிஞர்களும் எழுத்தாளர்களும் அணிவகுத்தும் அதைவிட அதிக எண்ணிக்கையில் படைப்புகள் குவிந்தும்வரும் காலம். எனினும் எச்சரிக்கையான வாசகன் இவை எல்லாவற்றையும் மகத்தானவை என்று ஒப்புக்கொள்வதில்லை. தன்னுடைய ரசனைக்கும் மனப்பாங்குக்கும் ஒத்துவருவதையே வாசிக்கத் தயாராகிறான். அதிலும் தனக்கான தரத்தை நிர்ணயிக்கிறான். தேர்ந்த வாசகன் வைரமுத்துவின் கவிதைகளையும் ஞானக்கூத்தனின் கவிதைகளையும் தரம் பிரித்தே அறிகிறான். கொற்கையையும் (ஜோ டி குருஸின் நாவல்) உடையாரையும் (பாலகுமாரனின் நாவல்) இனங்கண்டுகொண்டே வாசிக்கிறான். இந்தத் தரநிர்ணயத்தை வலியுறுத்தியதுதான் நவீனத் தமிழ் இலக்கியத்துக்குக் க.நா.சு. செய்த பெரும் பங்களிப்பு. பருண்மையான தோற்றம் கொண்டதாக இந்தத் தரத்தைச் சொல்ல முடியாதபோதும் அதன் இருப்பை இலக்கியச் செயல்பாடுகளில் உணர முடியும். அப்படி உணரச் செய்யும் ஒரு மரபை ஏற்படுத்தியவர் க. நா. சு.

தொண்ணூறுகளில் தமிழிலக்கிய விமர்சனச் சூழலில் ஒரு சலனம் உருவானது. கோட்பாட்டுக் கருவிகள் மூலம் படைப்பைக் கட்டுடைக்கும் போக்கு. இதன் பரபரப்பில் க.நா.சுவின் ரசனை விமர்சன முறைதான் முதல் பலியானது. கோட்பாடுகளை முன்வைத்து அல்ல; அனுபவத்தை முன்னிருத்தியே ஓர் இலக்கியப் படைப்பு வாசகனுடன் உறவாடுகிறது என்ற கருத்து வலுவிழ்ந்துபோனது. அதன் விளவு – படைப்புகளுக்குப் பதில் கருத்தாடல்களே இலக்கியச் சூழலை நிரப்பின. க. நா. சு. தனது விமர்சனக் கருத்துகளையும் மதிப்பீடையும் ஒரு பெரும் பின்புலத்திலிருந்தே காண்கிறார். உலகம் தழுவிய இலக்கிய மரபின் தொடர்ச்சியாகவே இங்குள்ள முயற்சிகளையும் கருதியவர் அவர். எழுத்தைத் தீவிரமாக எண்ணும் படைப்பாளி தால்ஸ்தோய், தாஸ்தயேவ்ஸ்கி, தாமஸ் மன், பாரதி, புதுமைப்பித்தன் ஆகியவர்களின் மரபுத் தொடர்ச்சி (இலக்கிய விசாரம் நூலில்) என்பது அவருடைய எண்ணம். அவருடைய விமர்சன இலட்சியம் இந்தப் பெரும் ஆளுமைகளை நெருங்குவது. இந்த நோக்கையே அவர் முதன்மையானதாகக் கருதினார். இந்த அடிப்படையிலேயே அவருடைய தரப்படுத்தல் நிகழ்கிறது. கட்டுடைப்பு விமர்சனங்களில் படைப்பில்லை. பிரதி மட்டுமே. கட்டுமானம் மட் டுமே. தரம் பொருட்டல்ல. இத்தகைய கருத்துச் சூழலில் க.நா.சு. மறுக்கப்பட்டது இயல்பானது. குறுகிய காலம் மட்டுமே விவாதிக்கப்பட்ட இந்தப் புதிய விமர்சன உரையாடல் அதன் அந்நியத்தன்மையால் வலுவிழந்தது. மீண்டும் படைப்பும் அனுபவமும் பேசுபொருட்களாகியிருக்கின்றன. க. நா. சு கையாண்ட அதே வழிமுறையில் இன்று படைப்பை அணுகுவது சாத்தியமல்ல. எனினும் அந்த அடிப்படையிலிருந்து நெருங்குவது இலக்கியபூர்வமானது. பொதுச் சமூகத்திலும் அளவைவிடத் தரத்துக்கே இன்று செலாவணி கூடுதல் என்பதால் க. நா. சுவைப் போஸ்ட் மார்டன் இலக்கியவாதியாகவும் வகைப்படுத்தலாம்.

o

க. நா. சுவை இரு சந்தர்ப்பங்களில் பார்த்து உரையாடிய நினைவின் நிழல் மனத்துக்குள் அசைகிறது.

முதல் சந்திப்பு எண்பத்து ஐந்து நவம்பர் வாக்கில். தருமபுரியில். மாவட்டக் கள விளம்பரத் துறை அதிகாரியான சந்தானம் என்ற இலக்கிய ஆர்வலர் க. நா. சுவைத் தருமபுரிக்கு அழைத்துவந்திருந்தார். அந்த ஊரில் தீவிர இலக்கிய வாசிப்பாளர்கள் இருக்கமாட்டார்கள் என்று தெரிந்தே வந்திருந்தார். சந்தானத்தின் வேண்டுகோளுக்கு இணங்கிய கனிவு அதிலிருந்தது. மத்திய அரசுத் துறை அழைப்பின் பேரில் வந்ததால் ‘நேருவின் ஜனநாயக நம்பிக்கைகள்’ என்ற தலைப்பில் பேச ஒப்புக்கொண்டிருந்தார். மாலையில்தான் கூட்டம். சந்தானத்தின் இல்லத்தில் தங்கியிருந்தவரைச் சந்தித்தேன். ஒரு சிறிய அறையில் சிறகு ஒடுங்கிய கருடன்போல அமர்ந்திருந்தார். அன்று பேசிய பேச்சின் சாரம் நினைவிலில்லை. ஆனால் மாலைக் கூட்டத்தில் பேசியதில் இரு அம்சங்கள் இன்றும் கவனத்தில் இருக்கின்றன. ஜவாஹர்லால் நேருவைக் ‘கற்பனையாளர்’ (ரொமாண்டிக்) என்றும் காந்தியை ‘எதார்த்தவாதி’ (ரியலிஸ்ட்) என்றும் பேச்சில் வர்ணித்தார் க. நா. சு. எல்லாருக்கும் சமநீதி என்ற கனவு கண்டவரை எதார்த்தவாதியாகவும் ஆலைகளும் பெரும் தொழிற்சாலைகளும்தான் இந்தியாவின் புதிய ஆலயங்கள் என்று சொன்னவரைக் கற்பனையாளராகவும் க. நா. சு. செய்த தலைகீழ் வர்ணனை பொதுப்புத்திக்குப் பிடிபடாத சிந்தனையின் வெளிப்பாடு என்று தோன்றியது. கூடவே சமூகப் பார்வையில்லாதவர், அரசியல் உணர்வு இல்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டவரின் அரசியல் நோக்கும் சுதந்திரமான சிந்தனையும் புலப்பட்டன.

இரண்டாவது சந்திப்பு சென்னையில். அப்போது அவர் மயிலாப்பூர் டி. எஸ். வி. கோவில் தெருவில் குடியிருந்தார். இலக்கியப் பத்திரிகைகள் தவிர வெகுசன இதழ்களான குங்குமம், முத்தாரம், துக்ளக் முதலான பத்திரிகைகளுக்கும் எழுதிக்கொண்டிருந்தார். ஒரு பிற்பகல் வேளையில் அவரைத் தேடிப் போனேன். அந்த நேரத்து வெயிலும் அதை மட்டுப்படுத்த வீசிய கடற்காற்றின் குளிரும் இப்போதும் ஞாபகத்தில் அடிக்கின்றன. கதவு எண்ணைக் கண்டுபிடிப்பதில் சின்னத் தடுமாற்றத்துடன் அலைந்துகொண்டிருந்தபோது ஒரு வீட்டுக்குள்ளிருந்து தட்டச்சுப் பொறியில் தட்டும் ஒசை கேட்டது. சந்தேகமில்லை. அது க. நா. சுவின் வீடுதான். ஒரு பழைய மேஜைமேல் வைத்திருந்த போர்ட்டபிள் டைப் ரைட்டரில் ஒற்றை விரலால் எழுத்துகளைத் தட்டி ஆங்கிலக் கட்டுரை தயாரித்துக்கொண்டிருந்தார். அதைப் பாதியில் நிறுத்தி விசாரித்தார். உரையாடத் தொடங்கினார். ‘வெகுஜன இதழ்களை விரோதமாகப் பார்த்தவர், அதில் எழுதலாமா?’ என்ற கேள்விக்கு அவர் பதில் ‘நானாகப் போகவில்லையே, அவர்களாக வந்து கேட்டார்கள். எடிட் பண்ணாமல் போடுகிறார்கள். இத்தனை காலம் சண்டைபோட்டதற்குப் பிராயச்சித்தமோ என்னமோ? அதிலும் நான் வெகுஜன ருசிக்கானதை எழுதவில்லையே? என் போக்கில்தான் எழுதுகிறேன்’. சிறிது நேரப்பேச்சுக்குப் பிறகு ‘ராயர் கபே திறந்திருப்பான். வாங்க’ என்று எழுந்தார்.

கைத்தடியை ஊன்றிக்கொண்டு தெருவில் நடந்தபோது நான் பார்த்தேயிராத என் தாத்தா யாருடனோ நடப்பதுபோல இருந்தது. அந்தத் தாத்தாக்களுக்கு இலக்கியம் தெரிந்திருக்காது என்றும் நினைத்துக்கொண்டேன்.

o

நவீனத் தமிழ் இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் க.நா.சு. தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறார். நாவல். சிறுகதை, நாடகம், கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, கவிதை என எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார். எழுத்தை முதன்மையானதாகவும் தொழிலாகவும் கொண்ட ஒருவருக்குத் தவிர்க்க முடியாத செயல்பாடு இது. எனினும் க.நா.சு.வை விமர்சகராகவே மதிப்பிட வேண்டியிருக்கிறது.

நாவலாசிரியராகக் கணிசமான ஆக்கங்களைச் செய்திருக்கிறார். எனினும் அவரே சொல்லிக் கொண்டது போலக் காலத்தின் முன் வலுவிழந்து போனவை அவை. பொய்த் தேவு, ஒரு நாள் கழிந்தது இரண்டும் அவருடைய முக்கியமான நாவல்களாகச் சொல்லப்படுகின்றன. அந்தக் கணிப்பின் பொருத்தப்பாடு மறு சிந்தனைக்குரியது. இந்த இரண்டுமல்லாமல் அதிகம் பேசப்படாத வாழ்ந்தவர் கெட்டால். . . நாவலை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். பட்ட கடனைக் கொடுக்க முடியாமல் கடன் கொடுத்த நபரால் அவமதிக்கப்படுகிறார் நாவலின் மையப் பாத்திரமான சதாசிவ மம்மேலியார். கடன் கொடுத்தவர் ‘இப்படி பவிஷாகத் திரிவதற்குப் பதில் செத்துத் தொலைப்பதுதானே?’ என்று இடித்துச் சொன்ன அதே நொடியில் ரயில் முன்னால் விழுந்து உயிரைப் போக்கிக்கொள்கிறார். மனித மனத்தின் அபாய நடுக்கத்தைச் சித்தரித்த இந்த நாவல் அதிகம் கவனிக்கப்படவில்லை.

வாசிக்க எளிமையானவை என்பதைத் தாண்டி க. நா. சுவின் சிறுகதைகள் இன்றைய வாசிப்பில் எந்தப் புத்துணர்வையும் ஏற்படுத்துவதில்லை. இன்று எழுதப்படும் சிறுகதைகளின் நேர்த்திக்கும் நுட்பத்துக்கும் முன் அவரது கதைகள் காலத்தில் பின்நகர்ந்துபோகின்றன. புதிய தலைமுறையின் பார்வையில் அவை மறந்துபோவதற்கான வாய்ப்புகளே அதிகம். அவரது கவிதை முயற்சிகளும் அதே விதிக்கு உட்பட்டவை. சமகால வாசிப்பில் பாதிப்புகளை நிகழ்த்த வலுவற்றவை. எனினும் அவரது கவிதையாக்கச் செயல்பாட்டில் புலப்படும் ஓர் அம்சம் இன்றைய கவிஞனுக்கு உதவக் கூடியது. கவிதையாக்கத்தில் தடையற்ற சுதந்திரத்தை இன்றியமையாத கூறாக ஏற்க அவரது கவிதைகள் வலியுறுத்துகின்றன.

மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகிய இரு துறைகளில் க.நா.சுவின் பங்களிப்புகள் அசலானவை. அவரது தேர்வுகள் முதன்மையானவை. கல்லூரியில் ஆங்கிலம் பயின்றவர். ஆங்கிலத்தில் எழுத்துப் பணியைத் தொடங்கியவர். இந்த இரு பின்புலங்களிலிருந்து பார்த்தால் அவருக்கு அறிமுகமாகியிருந்திருக்கும் நாவல்களைத் தமிழாக்கத்துக்காகக் கணக்கிலெடுத்துக்கொள்ளவே இல்லை. மொழிபெயர்ப்புகளுக்கான படைப்புகளை ஒரு கண்டுபிடிப்பாகவே செய்திருக்கிறார். ஆங்கிலத்தில் பிரபலமடைந்த நாவல்களை ஒதுக்கி விட்டு ஐரோப்பிய மொழி நாவல்களையே எடுத்துக்கொண்டிருக்கிறார். நிலவளம் (நட் ஹாம்சன்), மதகுரு, தேவமலர் (செல்மா லாகர்லாவ்), அன்பு வழி (பேர்லாகர் க்விஸ்ட்), விலங்குப் பண்ணை, 1984 (ஜார்ஜ் ஆர்வெல்) , குருதிப் பூக்கள் (காதரின் ஆன்போர்ட்டர்) என்று அந்த நாளையக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர்கள்கூட அறிந்திராத படைப்புகளை மொழியாக்கம் செய்தார்.

ஓர் இலக்கியவாதியும் இலக்கிய வாசகனும் பேரிலக்கிய மரபொன்றின் சந்ததி என்று அவர் கொண்டிருந்த மதிப்பீட்டின் விளைவாக இதைக் கருதுகிறேன். இன்னொரு காரணத்தையும் க. நா. சு. குறிப்பிடுகிறார். ‘இலக்கியம் வளமாக இருக்கும் காலத்தில் அதிக அளவில் மொழிபெயர்ப்புகளும் வரும். ஆங்கில இலக்கியம் செழுமையாக இருந்த விக்டோரியா காலத்தில் ஏராளமான பிற மொழி நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.’ (இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் நூலில்). சமகால வெகுஜன இலக்கியவாதிகள் சரத் சந்திரர், காண்டேகர் என்று சிலாகித்துத் தமிழாக்கம் செய்து கொண்டிருந்தபோது க. நா. சு. அறிமுகப்படுத்திய அயல்மொழிப் படைப்புகள் அன்றைய தீவிர இலக்கியத்தைப் பாதித்தன. சற்றுக் கவனமாகப் பார்த்தால் அந்தப் பாதிப்பின் தொடர்ச்சியை இன்றும் காணலாம்.

க.நா.சு.வின் விமர்சன முகத்தின் இன்னொரு தோற்றம் – நவீனத் தமிழின் இலக்கிய நடைமுறையாளராகப் பிறமொழியினரிடையே அறியப்பட்டிருந்தது. பிழைப்பு நிமித்தம் ஆங்கில இதழ்களில் எழுதிய அவர் அதிகபட்சமாகத் தமிழ் இலக்கியம், கலாச்சாரம் தொடர்பான கட்டுரைகளையே எழுதியிருக்கிறார். உள்நாட்டு, வெளிநாட்டுக் கருத்தரங்குகளிலும் பிற மேடைகளிலும் தமிழுக்காக வலுவாக ஒலித்த குரல் அவருடையது. இந்திக் கவிஞரும் மத்திய அரசின் முன்னாள் பண்பாட்டுத் துறைச் செயலருமாக இருந்த அசோக் வாஜ்பாய் ஒருமுறை தேசிய மட்டத்தில் தமிழின் பிரதி நிதித்துவம் குறிப்பிடும்படியாக இல்லை என்று குறைப்பட்டுக்கொண்டு சொன்னார், “க. நா. சுப்ரமண்யம் போன்ற ஒரு ஆளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.” வேண்டும் தான். ஆனால் எங்கிருந்து?

o

1988இல் க. நா. சு மறைவுக்குப் பின்பு அவருடைய மனைவி ராஜி சுப்ரமண்யம் மகளுடன் வசிப்பதற்காகத் தில்லி திரும்ப முடிவுசெய்தார். சென்னை வீட்டிலிருந்த பொருட்கள் சிலவற்றை விற்பதாக இருந்தார். கவிஞர் லதா ராமகிருஷ்ணன் மூலம் க. நா. சு. பெயரிலிருந்த சமையல் வாயுவும் அவர் பயன்படுத்திய எழுத்து மேஜையும் எனக்குக் கிடைத்தன. கேஸ் விநியோகிப்பாளர் விநியோகத்துக்காக வரும் ஒவ்வொரு முறையும் தெருவிலிருந்து நான் குடியிருந்த வரிசை வீட்டுக்கு வரும்போது “ஏம்பா கே. என். சுப்ரமணியம் வீடு எதுப்பா?” என்று கேட்டுக்கொண்டே வருவார். சமையல் வாயு அரிதான வஸ்துவாக இருந்ததால் உரிமையாளரே கையொப்பமிட வேண்டும் என்று வற்புறுத்துவார். “அவர் எங்க தாத்தா, டில்லிலே இருக்கார். கேஸுக்குக் கையெழுத்துப் போடறதுக்காக இங்கே வர முடியுமா?” என்ற பதிலில் அலுத்துக்கொண்டு போவார். ஊர் மாறும்போது அந்த இணைப்பைக் குறிப்பிட்ட நபர் உயிருடன் இல்லை என்று எழுதிக் கொடுத்த நினைவு.

அவர் பயன்படுத்திய மேஜை இன்னும் இருக்கிறது. ஈட்டி மரத்தில் செய்த மேஜை. வலது பக்கம் மேலே இழுப்பறையும் அதற்குக் கீழே ஓர் அறையும் கொண்ட மேஜை. இடது பக்கம் கால்களை நுழைத்து உட்கார வசதியான அமைப்பு. அதைக் கொண்டுவந்தபோது இழுப்பறைக்குள் காலியாகத்தான் இருந்தது. ஏதோ ஒரு நாள் அந்த இழுப்பறையை முழுவதுமாகக் கழற்றி எடுத்தேன். இரண்டு அறைகளுக்கும் இடையில் பத்திரிகைத் தாள்களிலொன்று பதுங்கி ஒட்டியிருந்தது. எடுத்துப் பார்த்தேன். க. நா. சு. ஆசிரியராக இருந்து நடத்திய ஞானரதம் பத்திரிகைப் பின்னட்டைப் பக்கத்தின் கிழிசல். கீழே க. நா. சுவின் பெயர். தமிழ்நாடு மேப்பைப் போலிருந்த கிழிசலில் படிக்க முடிந்த சில அரை, கால் வரிகளில் என் பெயர். என் முதல் தொகுப்பான கோடைகாலக் குறிப்புகளுக்கு அவர் எழுதிய மதிப்புரை அது. முழுப்பிரதி எங்கோ காணாமற்போனதில் ஏற்கனவே துக்கப்பட்டுக்கொண்டிருந்தேன். கிழிசல் துக்கத்தை அதிகமாக்கியது.

சென்னையில் க. நா. சு.வைச் சந்திக்கப் போனதே அந்த மதிப்புரைக்கு நன்றி தெரிவிக்கத்தான். புத்தகம் வெளியான சமயத்தில் மூத்த எழுத்தாளர்களுக்கும் நண்பர்களுக்கும் பிரதிகளை அனுப்பியிருந்தேன். நான் அனுப்பாதவர்களில் ஒருவர் க. நா. சு. அனுப்பாத சிற்றிதழ் ஞானரதம். ஆனால் அதில்தான் இரண்டு பக்க மதிப்புரை வெளி வந்தது. அதற்கு நன்றி பாராட்டுவது நாகரிகம். ஆனால் க.நா.சுவை நேரில் சந்தித்தபோது சங்கோஜத்திலும் தயக்கத்திலும் அதைச் சொல்ல முடியவில்லை. பின்னர் வெகுகாலம் வரை அந்தத் துண்டுத்தாளைப் பாதுகாத்து வைத்திருந்தேன். வீடும் ஊரும் மாறியதில் அந்தப் பொக்கிஷம் காணாமற்போனது. அந்த ஞானரதம் இதழை இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்கும் எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் ஒரு காலத்தில் தவித்தது போன்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. நானும் தமிழ் இலக்கியக்காரனல்லவா? தேடிக் கண்டு பிடித்துப் பார்க்க வேண்டும்.

‘என்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார், க.நா.சு.?’

நன்றி : காலச்சுவடு

Advertisements
Comments
One Response to “க.நா.சுவின் எழுத்து மேஜை – சுகுமாரன்”
  1. nalla pathivu ilkkiya thaththavukku ilayathalaimraiyin mariyaathaiyayi sethuirukkiraar

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: