நவீன கவிதையை க.நா.சுவிலிருந்தும் தொடங்கலாம்-ஷங்கர்ராமசுப்ரமணியன்

க.நா.சு.100

க.நா.சுவின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறைக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை

இன்று செழுமையும், பன்மைத்தன்மையும், பலபடித்தான பாதைகளும் கொண்ட நவீனத் தமிழ்க் கவிதைகளைப் புதிதாக படிக்கத் தொடங்கும் வாசகன், நவீன கவிதையின் இன்றைய உருவம், எதேச்சையாக, எதிர்ப்புகளற்று, வசதிகள் கொண்ட ஒரு சூழலில் பிறந்ததாகவே எண்ணக்கூடும்.  புதுக்கவிதை தன்னை நிறுவிக் கொண்ட கதை அவ்வளவு எளிதானதல்ல.. இலக்கண வயப்பட்ட சட்டகங்களிலிருந்து மட்டுமல்ல, பழமையின் இறுகிய தடைகொண்ட மனோபாவங்களிலிருந்தும், சிந்தனை மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்தை பெற்ற உருவம் புதுக்கவிதை. பழைய வெளியீட்டு வடிவத்திலிருந்து புதிய வெளியீட்டு வடிவத்தை தமிழ்க் கவிதை அடைந்தது உடல் ஒரு சட்டையைத் துறந்து, மற்றொரு சட்டையை அணிவது போன்றதல்ல. ஒரு உயிர் தன் உடலையை மறு தகவமைப்புக்கு உட்படுத்தியதற்கு சமமானது.kanasu98

தமிழில் பாரதியால் வசனகவிதை என்ற பெயரில் தொடங்கப்பட்டு,புதுமைப்பித்தன், கு.ப.ரா. ஆகியோரால் ஓரளவு முயற்சிக்கப்பட்டு,ந.பிச்சமூர்த்தியும், க.நா.சுவும் நிலைநிறுத்திய வடிவம் புதுக்கவிதை.

ந.பிச்சமூர்த்தி மற்றும் க.நா.சு ஆகியோர் முயன்ற கவிதைகளை இப்போது ஒப்பிடும்போது, க.நா.சுவின் கவிதைகள் இன்றைய நவீன கவிஞர்களுக்கும் பொருளம்சத்துடன் கூடிய அனுபவத்தை தரும் வலுவில் இருப்பதை உணரமுடிகிறது. ந. பிச்சமூர்த்தியின் வேதாந்த, லட்சியச்சார்பு அவர் கவிதையை பழமையில் நங்கூரமிட்டு விடுகிறது. க.நா.சுவின் கவிதைகள் லட்சியம் துறந்தவையாக உள்ளன. அந்த குணம் க.நா.சுவின் கவிதைகளை,இன்றைய நவீன கவிஞனுக்கு மேலும் இணக்கமாக்கக் கூடியது.

தமிழில் நாவல், சிறுகதைகளின் வடிவம் மற்றும் பொருள் சார்ந்து தனது மொழிபெயர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் மூலம் திட்டமான தரமதிப்பீட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் க.நா.சுப்பிரமணியம். அதே போலவே புதுக்கவிதை தொடர்பாகவும் அந்தக் கலைவடிவம் நவீன வாழ்க்கை சார்ந்து துறக்கவேண்டியதும், ஏற்கவேண்டியதுமான அம்சங்களையும் நிகழ்த்திக் காட்டுவதற்காகவே தனது கவிதைகளை எழுதியுள்ளார் என்றும் சொல்லலாம்.அதனால் தான் தனது கவிதைகளை அவர் சோதனைகள் என்று சொல்கிறார்.

“இலக்கியச் சோதனைகளில் எப்போதுமே வெற்றி,தோல்விகள் பூரணமானவை.என் புதுக்கவிதை முயற்சி வெற்றிபெறும் என்றே நான் எண்ணிச் செய்கிறேன்.சோதனைகளின் தன்மையே இதுதானே. செய்து, செய்து பார்க்கவேண்டும்.அவ்வளவுதான்”

இப்படி, 1959 இல் வெளியான சரஸ்வதி ஆண்டுமலரில் வெளியான அவர் கட்டுரையில் எழுதுகிறார்.
சிறுகதை, நாவல் மற்றும் உரைநடையைப் போல் நேரடியாக க.நா.சுவின் கவிதைகள் எல்லாத் திசைகளிலும் திறந்திருக்கும் ஒளிவீடாக வாசகனை வரவேற்பவை.. வாசகன் தனது அனுபவத்தைக் கொண்டு பிரதிபலிக்கவும்,அதில் தனது சலனங்களை இனம்காணவும், அவர் கவிதைகள் இன்றின் துடிப்போடு காத்திருக்கிறது. அதுதான் அவர் கவிதைகளில் நுழையும் போது காணும் முதல் அழகு. நேரடிக் கூற்று, மரபின் சுமையற்ற சுதந்திரம், படிம,தத்துவச் சுமையின்மை போன்ற அம்சங்களுடன் அன்றாட வாழ்வின் பொருட்களும், சத்தங்களும் சாதாரணத்துவத்துடனேயே உலவும் இடம் அது.இப்படியாக தமிழ் புதுக்கவிதை வடிவத்துக்கு ஒரு சிறந்த முன்வரைவை க.நா.சு உருவாக்கியிருக்கிறார்.

க.நா.சுவின் எளிமை என்று நான் கூறுவது அதன் மொழிதல் முறையையே தவிர, அதன் பொருள் மற்றும் அனுபவத்தை அல்ல. நவீன வாழ்வின் சிக்கல்கள் மற்றும் சிடுக்குகள் அனைத்தும் புதுக் கவிதையில் இருக்கவேண்டும். . ஆனால் மொழிதலில் தெளிவு, வாசகனுக்குத் தொனிக்க வேண்டும் என்று பிரக்ஞையுடையவர் அவர்.

புதுக்கவிதையில் க.நா.வின் இடத்தைப் பற்றி ஞானக்கூத்தன் பேசும்போது, “இருபதாம் நூற்றாண்டு படைப்பாளிகளில் கவிதைக்கு நிகழ்ந்து கொண்டிருந்த சிக்கல்களை அறிந்தவர்களில் பாரதி, பிச்சமூர்த்தி,கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், க.நா.சு இவர்கள் தான் முக்கியமானவர்கள். அடுத்த நூற்றாண்டின் இரட்டைக் கதவு மூடிக்கிடந்ததை அறிந்தவர் பாரதி. அதைத் திறக்க முயன்றதில் அது சற்றுத் திறந்துகொண்டு இடைவெளி காட்டியது. பிச்சமூர்த்தி முயன்றதில் அது திறந்துகொண்டது.ஆனால் முழுமையாகத் திறந்துகொண்டு விடவில்லை. அவரே கூட அது முன்போல மூட வருகிறதா என்று பார்த்தார். ஆனால் க.நா.சுவோ கதவை நன்றாகத் திறந்ததோடல்லாமல், கதவின் இரண்டு பக்கங்களையும் பெயர்த்து அப்புறப்படுத்திவிட்டார்.” என்கிறார்.

000

க.நா.சுவின் கவிதைகளைத் தொடர்ந்து படிக்கும்போது சலித்த ஒரு மனதின் தன்விசாரமாக அவை இருப்பதை உணரமுடியும். தனிமனிதனின் குரல் முதல்முதலில் கவிதையில் அழுத்தம்பெறும் போது இப்படித்தான் தொடங்கியிருக்கவும் முடியும். தமிழிலும் முதல் தலைமுறைப் புதுக்கவிஞர்களின் பொது இயல்பென்றும் இந்த தன்விசார அம்சத்தை நாம் கூறிவிடமுடியும். தத்துவம் அல்லது வேதாந்தத்தின் சாய்வுநாற்காலியில் சாய்ந்து கொண்டு இந்த சுயவிசாரத்தை க.நா.சு நிகழ்த்தவில்லை. தனது வாசிப்பு, பட்டறிவு, நினைவுகள் வழியாக அவர் சுயவிசாரத்தை தொடர்ந்து கவிதைகளில் மேற்கொள்கிறார். அவர் கவிதைகளில் நன்மை, தீமைகளின் பெரிய மோதலையோ, உயிரின் அலைக்கழிப்பையோ, உணர்வுச்சத்தையோ வாசகன் பார்க்க இயலாது. க.நா.சுவின் எழுத்துவாழ்வு அது தொடர்பான ஏமாற்றங்கள், சலிப்புகளையும் அவர் கவிதைகள் வழியாகப் படிக்க முடியும்.அறிவார்த்தத்தின் சமநிலையுடன், அசட்டுத்தனத்தை மூர்க்கமாக அகற்றியபடிதான் செல்கிறது அவரது விசாரணை. அந்த விசாரணையில் பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளாத மனதின் இயல்புகளை மனத்தடை இன்றி சுய அம்பலமாக நிதர்சனத்தைச் சொல்லிச் செல்கிறார். கலாச்சாரப் புனிதங்கள் ஏதும் படைப்பில் கட்டிக்காக்கவேண்டியதில்லை என்ற தொனியை அவர் கவிதையில் பார்க்கமுடிகிறது..

நினைவுப்பாதை

இரவு சாப்பிட உட்கார்ந்ததும்
பாட்டி சாதம் போட்டு சாம்பார்
வார்த்ததும்
பக்கத்தறையில் உரக்க
முனகல் கேட்டு
எழுந்துபோய்ப் பார்க்க
செத்துக்கிடந்த தாய்
உருவம் அடியோடு மறந்துவிட்டது.

ஆனால்
தாயை இழந்தவன்
அழ வேண்டிய
மாதிரியா நீ அழுதாய்?
என்று
மறுநாள்
பாட்டி கேட்டது மட்டும்
பசுமையாய் நினைவில்
பதிந்திருக்கிறது.

தகப்பன் இறந்தபோது
சாகவயது வந்துவிட்டது.
கருமத்தில் கண்ணாக
இருந்தது கண்டு புரோகிதர்
‘என்ன சிரத்தை! என்ன சிரத்தை!
என்று வைதீகமாய்ப் பாராட்டியது
நினைவில் இருக்கிறது.
குப்பையைக் கூட்டி
அப்புறப்படுத்த
உயிரற்ற உடலை
எடுத்தெரிக்க
எத்தனை சடங்குகள்
எத்தனை புராணச் சப்பைக் கட்டுகள்
என்று நினைத்ததும்
நினைவில் இருக்கிறது

20 ஆம் நூற்றாண்டில் வாழும் க.நா.சுவுக்கு மனிதகுலம் ஓரளவுக்கும் அதிகமாக நீடித்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது. வாழ்வு ஒரு கட்டத்தில் பழக்கத்தின் செக்குமாட்டுத் தனத்தில் உறைந்துவிட்டது. பாலுறவு, மதம்,சிந்தனை எதுவுமே அவனை விடுவிக்கவில்லை. இந்நிலையில் ஒரு நம்பிக்கையின்மை, ஒரு சந்தேகம், விடை போன்று தொனிக்கும் விடை,ஆழ்ந்த புரியாமை உணர்வு, ஒரு போதாமை மற்றும் அமைதியை உருவாக்க அவர் ஒரு வார்த்தைக் கூட்டத்தை சுழற்றி மேயவிடுகிறார். சின்னஞ்சிறிய வியப்புகளையும், கவனிப்புகளையும் அவர் வானில் நட்சத்திரங்களைப் போல தெளித்துவிடுகிறார். கவிதைச் செயல்பாடு மட்டுமல்ல படைப்புச் செயல்பாடு அத்தனையும் மனிதனின் போதாமை மற்றும் நிராசையிலிருந்தே எழுகிறது என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. அந்த நிறைவின்மையை அவர் தனது கவிதைகளிலும் தொட்டெழுப்பி ஒரு முழுமையைப் பற்ற முயன்றுகொண்டே இருக்கிறார்.
கவிதை பற்றி எழுதிய கவிதை இதோ

கவிதை

எனக்கும்
கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ
எட்டுகள் எடுத்து வைத்துவிட்டான்; இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்திய மாயின
என்று யார்
தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின்
எதற்காகத்தான் கவிதை தோன்றுகிறது?
மொழியின் மழலை அழகு தான்.
ஆனால் அது போதவே
போதாது.
போதுமானால் கவிதையைத் தவிர வேறு
இலக்கியம் தோன்றியிராதே. போதாது
என்று தான், ஒன்றன்பின் ஒன்றாக
இத்தனை இலக்கியத்
துறைகள்
தோன்றின- நாடகமும், நாவலும், நீள்
கதையும், கட்டுரையும் இல்லாவிட்டால்
தோன்றியிராது; ஆனால் அவையும்தான்
திருப்தி தருவதில்லையே!
அதனால்,
தான் நானும் கவிதை எழுதுகிறேன்.
மனிதனுக்கு கலை எதுவும் திருப்திதராது
மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத் தான்
தரும். கலையின்
பிறப்பு
இந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே
இன்னமும் உயிர்வைத்துக் கொண்டிருப்பது
இந்த அடிப்படையில்தான் சாத்தியம்
என்று சொல்லலாம்.

எழுத்து- ஜனவரி 1959

என்று எழுதுகிறார்.

000

இன்றைய தலைமுறை வாசகர்களும், நவீன கவிஞர்களும் இனம் காணக்கூடிய, க.நா.சு மீதான மதிப்பாக நினைவுகொள்ளக் கூடிய கவிதைகளை அறிமுகப்படுத்துவது இக்கட்டுரையின் முக்கிய பயன்பாடாக இருக்கவேண்டும்.க.நா.சு கவிதையில் வரும் பிராணிகளும், பறவைகளும் அழகு, சுதந்திரம் அல்லது எந்த தத்துவப் பொருண்மையுடையதான குறியீடுகளாக இல்லை.அவை சிறியதாக இருந்தாலும் தனித்த குணமுடைய மற்றமையின் அழகுடைய உயிர்கள். அந்தப் பிராணிகளுக்கும், பறவைகளுக்கும் க.நா.சு கவிதையில் அளித்த சுதந்திரம் சாதாரணமானதல்ல. இன்றைக்கும் க.நா.சுவின் வாஞ்சையான பரிசுகள் என்று பெருமிதமாக கூஃபி, விளையாடும் பூனைக்குட்டி, சிட்டுக்குருவி, பூனைக்குட்டிகள் ஆகிய கவிதைகளை இளம் வாசகன் முன் எடுத்துவைக்க முடியும்.

க.நா.சு தனது அறிவு மற்றும் பிரக்ஞையின் போதத்திலிருந்து,ம்,சலிப்பிலிருந்தும் விடுபட்டு தன்னை இழக்கும் இடமாக இக்கவிதைகளைப் பார்க்க முடிகிறது.

அதற்கு அடுத்தபடியான நிலையில் இலக்கிய வரலாறு மற்றும் அரசியல் முக்கியத்துவம் கொண்டு பார்த்தால் புதுமைப்பித்தன் இருந்த வீடு,போ, உயில்,மதுரை மீனாக்ஷியின் கன்னிமை கழியும்போது, முச்சங்கம், இன்னொரு ராவணன், பயணம் போன்ற கவிதைகள் முக்கியமானவை.
(கூஃபி- பக்கம் 44) (விளையாடு பூனைக்குட்டி-70) (பூனைக்குட்டிகள் 148)

அவர் காலத்தில் எழுச்சி பெற்ற திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனங்களை அவர் கவிதைகளில் வெளிப்படையாகவே பார்க்கமுடிகிறது.. நகுலனில் அது விபீடணன் தனிமொழி போன்ற கவிதைகளில் மிகவும் பூடகமாக இயங்குகிறது.அலங்காரப் பேச்சுக்கும், நடைமுறை எதாரத்தத்துக்கும் இடையே தத்தளிக்கும் தமிழ் கலாச்சார வறுமை, முச்சங்கம் கவிதையில் அங்கதத்துடன் விமர்சிக்கப்படுகிறது. முச்சங்கம்( 129)

மதுரை மீனாக்ஷியின் கன்னிமை கழியும்போது கவிதையும் அரசியல்ரீதியானதே.. ஆனால் அவரது கவிதைகளின் பொதுவான சமநிலையைத் துறந்து உக்கிரமான நிகழ்ச்சிகள் தாளகதியுடன் இக்கவிதையில் விவரிக்கப்படுகின்றன. இன்னமும் அக்கவிதை பூடகத்தையும், புதிரின் எழிலையும் விலக்காமல் வைத்திருக்கிறது. இக்கவிதையில் இறந்தகால நிகழ்ச்சிகளையும் , தற்காலத்தின் நடைமுறைக்காட்சிகளையும் பிணைத்து ஒரு கூத்து நிகழ்த்தப்படுகிறது. மதுரையின் மீனாக்ஷியின் கன்னிமை கழியும் போது என்ற வாக்கியமே ஒரு சாதாரண தமிழ் மனத்துக்கு இன்னமும் அதிர்ச்சியை ஊட்டுவதே.(103)

000
தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் முக்கியத் தடம் பதித்த சாதனையாளர்களை இருவகையாகப் பிரிக்கலாம். தனக்கென ஒரு பார்வையையும், உலகத்தையும் உருவாக்கி அதை முற்றிலும் செழுமைப்படுத்தி அந்த வெற்றியின் பலன்களை முற்றிலும் நுகர்ந்து அது தரும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் சுவைத்தவர்கள் முதல்பிரிவினர்.
படைப்பின் தீராத சவால்களால் தூண்டப்பட்டு, நிறைவின்மையின் தொடர்ந்த அலைக்கழிப்புடன் வெற்றி,தோல்வியை அறியாமலேயே பல்வேறு சாத்தியங்களின் விதைகளைத் தூவியவர்கள் இரண்டாம் பிரிவினர். அவர்கள் பண்படுத்தி, விதைகள் இட்ட நிலம் அவர்களின் படைப்பு வாழ்க்கைக்குப் பின்னும் செழுமையாகவே இருக்கும். முழுமையின்மையிலிருந்து கொப்பளிக்கும் படைப்பூக்க நிலம் அது. இந்த இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர் தான் க.நா.சுப்பிரமணியம்.
க.நா.சுவின் தொடர்ச்சியாக நகுலன், விக்ரமாதித்யன், ஆத்மாநாம், சுகுமாரன்,சமயவேல், பா.வெங்கடேசன் என்று ஒரு ஆரோக்கியமான சங்கிலி இன்னும் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
க.நா.சு, புதுக்கவிதை சார்ந்து உத்தேசித்த இயல்புகளின் விரிந்த வரையறைக்குள் இருப்பவர்களே தவிர ஒவ்வொருவருமே அவர்களின் உலகங்கள் சார்ந்து தனித்துவம் கொண்டவர்கள் என்பதும் முக்கியமானது.

000

இலக்கியத்தை பிரதானமான அறிதல் முறையாகப் பார்த்து, முழுவாழ்க்கையின் கர்மமாக எழுத்தை எண்ணி வாழ்ந்த வாழ்க்கை க.நா.சு.வினுடையது.  படைப்பின் வழியாக அவர் வாழ்க்கையின் சிக்கல்களையும் அதன் அகபரிமாணங்களையும் தொடுவதற்காக அவர் கொண்ட எத்தனங்களின் துளி அனுபங்களாக அவரது கவிதைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் சிட்டுக்குருவி கவிதை.
தான் கழற்ற முடியாத மின்விசிறியின் ப்ளேடை தொடர்ந்து அசைத்துப் பார்த்துவிட்டு பின்னர் சிகரெட் தாளையும், விளக்குமாறு குச்சியையும் தன் கூட்டுக்கு எடுத்துச் செல்வது போல மெய்மையைக் அறிந்துவிட எழுத்தாளனும் முயன்றுகொண்டேயிருக்கிறான். அவனுக்கு கடவுளின் ஆறுதல் பரிசைப் போல கணநேர அழகுகளும், தரிசனங்களும், மன எழுச்சிகளும் கிடைக்கின்றன. அவன் ஓயாமல் கொண்ட சலனங்களுக்கு அவன் மேற்கொண்ட சிரமம்மிக்க பயணமும் பரிசுதான் என்பதைப் போலத்தான் இருந்திருக்கிறது க.நா.சுவின் வாழ்க்கை.

பார்வை நூல்கள் மயன் கவிதைகள், க.நா.சு கவிதைகள்

நன்றி: யானை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: