தாம்பத்யத்தின் முழுமை : க. நா.சு-வின் மனமாற்றம்.- அ.ராமசாமி

க.நா.சு.100

கதைவெளி மனிதர்கள்

புதிதாக வந்துள்ள அரசு அறிக்கையின்படி ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைகளைப் பெறுவதற்குத் தங்கள் புகைப்படங்களோடு வாரிசுகளின் புகைப்படத்தையும் அலுவலகத்தில் தர வேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தச் சுற்றறிக்கையைப் பார்த்தவுடன் அவர்கள் கொஞ்சம் கலங்கித் தான் போனார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் தம்பதிகள்.

இதுவரை அவர்களின் நம்பிக்கை சார்ந்த பயணங்களுக்கும், மருத்துவம் சார்ந்த சோதனை முயற்சிகளுக்கும் எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைத்துவிடவில்லை என்றாலும் மனம் தளர்ந்து விடவில்லை. கடைசி முயற்சியாகச் செயற்கை முறையில் கருவைத் தாங்கிக் குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொள்வது என்று முடிவு செய்திருந்தார்கள். அதற்குள் இப்படியொரு சுற்றறிக்கை வka-na-su ந்து அவர்களின் மனக்கலக்கத்தைக் கொஞ்சம் கூட்டிவிட்டது.அவர்களுக்குக் குழந்தை இல்லை என்று பலரும் பேசியது பல நேரம் காதில் விழவில்லை என்பது போலக் காட்டிக் கொண்டு நகர்ந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அலுவலகத்தில் அதைப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது மனம் தவித்திருக்க வேண்டும். அடுத்த நாள் அந்தத் தம்பதியரில் மனைவி மட்டும் அலுவலகத்திற்கு வரவில்லை.

குழந்தை இல்லை என்பதற்கும் மலட்டுத்தனம் இருக்கிறது என்பதற்கும் முதலில் கலங்கிப் போவது பெண்ணாகவே இருக்கிறாள். திருமணமாகிச் சில ஆண்டுகள் வரை குழந்தை பிறக்கவில்லை என்றால் முதலில் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவதும் பெண்ணாகவே இருக்கிறாள். ஆண் முதன்மையை அல்லது ஆணாதிக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ள இந்திய சமூகம் எப்போதும் பெண்ணையே கேள்விக்குரியவளாகவும், பதில் சொல்ல வேண்டியவளாகவும் வைத்திருக்கிறது.

ஆணும் பெண்ணும் காதல் செய்வதற்கான காரணம் என்ன? இந்தக் கேள்வியைக் காதல் செய்யும் ஆணிடம் கேட்டாலும் சரி, பெண்ணிடம் கேட்டாலும் சரி உடனே பதில் எதுவும் கிடைப்பதில்லை. அதற்குப் பதிலாக ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் திருமணம் நடக்கிறது ? எனத் திருமணம் செய்து கொண்ட ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ கேட்டால் உடனடியாகக் கிடைக்கக் கூடிய பதில் “தங்கள் வம்சத்தை விருத்தி செய்யவே திருமணம் செய்து கொண்டோம்” என்ற பதில் உடனடியாகக் கிடைக்கும்.

இந்தக் கேள்விக்குப் பலவிதமான பதில்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் சொல்லும் பதில் தங்கள் பரம்பரையின் தொடர்ச்சி விட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காகவே ஒவ்வொரு திருமணமும் நடக்கிறது என நம்புகிறார்கள்.அந்த நம்பிக்கை நிறைவேற்றம் கண் கூடாக நடக்க ஒவ்வொரு குடும்பமும் சில ஆண்டுகள் கூடக் காத்திருக்கத் தயாராக இருப்பதில்லை. திருமணம் நடந்து அடுத்த திருமண நாளில் பெண் கர்ப்பமாக இருந்தால் அந்தக் குடும்பம் அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை . அப்படி நடக்கவில்லை என்றால் முதல் சந்தேகம் பெண் மேல் தான்.

தனது முதல் மனைவிக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக அவளது தங்கையை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஆண்மை நிரம்பிய ஆண்கள் தங்களிடம் மலட்டுத்தனம் இருக்கக் கூடும் என நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. வாய்ப்புக் கிடைத்தால் மூன்றாவதாக ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்யவும் தயாராக இருப்பார்கள். ஆனால் இன்று கிராமங்கள் கூட மாறிக் கொண்டிருக்கின்றன. குழந்தை பிறக்கவில்லை என்று தெரிந்தவுடன் உடனடியாகக் கணவனையும் மனைவியையும் ஒருசேரச் சோதனைக்கு உட்படுத்தும் மருத்துவமனைகள் வந்து விட்டன. என்ன செய்தாலும் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்ற போதிலும் செயற்கை முறைக் கருத்தரிப்புகளும் சோதனைக் குழாய் குழந்தைப் பேறும் இருக்கிறது.அநேகமாக வாரிசு இல்லை என்ற பேச்சு வரும் காலத்தில் இருக்காது என்றே தோன்றுகிறது.

குழந்தையின்மை அல்லது மலட்டுத்தன்மையை மையப்படுத்திய ஏராளமான கதைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன என்றாலும்,எழுதியுள்ள நேர்த்தி மற்றும் அமைப்புக்காக மனமாற்றம் என்ற க.நா.சுப்பிரமணியத்தின் சிறுகதை எப்போதும் நினைவுக்கு வரும். தமிழின் முன்னோடித் திறனாய்வாளரான க.நா.சு.மேற்கத்திய இலக்கிய வடிவங்கள் மற்றும் திறனாய்வுப் பார்வைகளில் ஆழ்ந்த புலமையும் தேர்ச்சியும் கொண்டவர் என்றாலும், இந்திய வாழ்க்கை மற்றும் இலக்கிய நோக்கு போன்றவற்றில் நம்பிக்கையும் கொண்டவர். அவரது முதன்மையான அடையாளம் இலக்கியவிமரிசனம் தான். அதற்காகவே அவருக்கு இந்திய அரசு சாகித்திய அகாடெமி விருது வழங்கிச் சிறப்பித்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் கோயம்புத்தூரிலிருந்து அச்சிட்டு வெளிவந்த சக்தி என்ற இதழில் இக்கதை வெளிவந்துள்ளது. சக்தி இதழை நடத்திய வ.விஜயபாஸ்கரன் ஒரு சிறந்த படைப்பாளி என்பது கூடுதல் தகவல்.

க.நா.சு.வின் மனமாற்றம் கதையின் மொத்தப் பாத்திரங்கள் நான்குதான்.அதில் மூன்று பாத்திரங்களுக்கு மட்டும் தான் பெயருண்டு. கதை நடக்கும் காலம் கூட ஒரு நாள் மாலையும் முன்னிரவும் மட்டும் தான். அலுவலகம் முடிந்து வரும் சீனிவாசனின் மனைவி லட்சுமி. சீனிவாசனும் லட்சுமியும் பத்து வருஷங்களுக்கு முன் கல்யாணமான , ஆனால் இன்னும் புது மெருகு அழியாத, இளந்தம்பதிகள். அவர்களுடைய புது மெருகு அழியாததற்குப் பல காரணங்கள் இருந்தன- அவர்களுடைய குழந்தை உள்ளங்கள்; அவர்களுடைய நல்ல ஸ்திதி முதலியன. ஆனால் முக்கியமான காரணம் அவர்களுக்குக் குழந்தை பிறக்காததுதான் என்று சொல்லும் க.நா.சு. அவர்களின் ஒரு மாலை நேரத்தைக் கதையாக்கும் விதமாக இப்படி ஆரம்பிக்கிறார்:

“டாக்டர் வருவதாகச் சொன்னாரே, வந்தாரோ?” ” வந்தார் லட்சுமி”

” உம்.. லேடி டாக்டரைப் பார்த்தாராமா?” ” பார்த்தாராம்”

“அவள் என்ன சொன்னாளாம்” ” ஆப்பரேஷன் பண்ணத்தான் வேணும் என்றானாம்..”

” ம்..ம்..” ” டாக்டரும் ஆப்பரேஷன் பண்ணிக் கொள்வதுதான் நல்லது என்று அபிப்பிராயப் படுகிறார்.?”

“ம்..ம்..” “ஒன்றும் பயமில்லை என்றார். ரொம்பச் சின்ன ஆப்பரேஷன் தானாம்.”

“பயமில்லேன்னாலும்.. குளோரோபாரம் கொடுத்துத்தானே ஆப்பரேஷன் பண்ணுவா?” இப்படி ஆரம்பிக்கும் உரையாடல் இருவருக்கும் இடையே ஊடலாக மாறி, ஆபரேஷனில் லட்சுமி இறந்தால், கணவன் மறுமணம் செய்வதற்குள் சென்று, அவளோடு சினிவாசன் சந்தோசமாக வாழ்வதற்குள் நுழைகிறது. அந்த உரையாடலில் லட்சுமி வெளிப்படுத்துவது தனக்குக் குழந்தை இல்லை என்பதன் ஆழமான வடுக்களை என்பதைக் கதையை வாசிக்கும் போது உணரலாம்:

“உங்களுக்கென்ன? நான் போனா. இன்னொருத்தியைப் பாத்து ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிக்கொண்டு விடுவீர்கள்!” ” இதென்ன , இப்படி அசடாப் பேசறே?”.

“நான் போனப்புறம் லட்சுமி என்று ஒருத்தி இருந்தது கூட உங்களுக்கு ஞாபகம் வராது, இல்லையா? நான் சொல்றது நிஜந்தானே?” “இதோ பாரு, இந்த அசட்டுப் பேச்சை எல்லாம் விட்டு விடு.. ..” ” உள்ளதைச் சொன்னால் அது அசட்டுப் பேச்சோ?” ” என்ன உள்ளதைச் சொன்னே, உள்ளதை?”

“பெட்டி நிறைய புதுப்புடவை வைத்திருக்கேன். அதை அவள் எடுத்துக் கட்டிப்பாள்.” ” இப்படிப் பேசிக் கொண்டே இருந்தால் நான் போறேன்.” என்று கிளம்பும் சீனிவாசன் பின்னர் அவளைச் சமாதானப் படுத்திச் சினிமாவுக்கு அழைத்துச் சென்றுவிட்டுக் கடைக்கெல்லாம் போய்விட்டுத் திரும்புகிறான்.வரும்போது லட்சுமி ஒரு பொம்மையை வாங்கிக் கொள்கிறாள். அந்தப் பொம்மையைக் கீழ் வீட்டிலிருக்கும் சாலுவுக்குத் தரப்போவதாகச் சொல்கிறாள். அதோடு சாலுவுக்காக ஒரு சாக்லெட் பொட்டலமும் வாங்கிக் கொண்டாள். தனக்குக் குழந்தை இல்லை என்பதால் அவள் காட்டும் பிரியத்தில் முதலிடம் இந்தச் சாலுவுக்குத் தான்.

தான் வாங்கி வந்த பொம்மையையும் சாக்லெட்டையும் தருவதற்காகச் சாலு..சாலு.. என்று அழைத்தபடி படிகளில் இறங்கிய லட்சுமிக்கு, ” சாலு தூங்கிப் போய் விட்டாளே என்று அவள் அம்மா சொன்னது பொய் என்பதைத் தொடர்ந்து வந்த சாலுவின் குரல் உணர்த்தியது. ஆம், ‘ஏன் மாமி?’ என்று சாலுவின் குரல் கேட்டது. தொடர்ந்து சாலுவின் அம்மா பக்கத்திலிருந்த பெண்ணிடம் சொன்ன அந்த வார்த்தைகள் லட்சுமியின் மனதை அப்படியே மாற்றிப் போட்டு விட்டது.

அவள் சொன்ன வார்த்தைகள் இதுதான்: மாடியிலே குடியிருக்கிறது அந்தக் குழந்தையில்லாத பெண். அந்தக் குரலைக் கேட்டபின் லட்சுமி மணமும் குணமும் முந்திரிப்பருப்பும் நிறைந்த சாக்லேட்டையும் பொம்மையையும் வீசி எறிந்துவிட்டு, சீனிவாசனை அழைத்து, ” டாக்டரிடம் சொல்லி விடுங்கள்;முடியுமானால் நாளைக்கே ஆபரேஷன் செய்து விடட்டும் ” என்றாள் என்பதாகக் கதையை முடிக்கிறாள். ஆபரேஷன் செய்து கொள்ளத் தயங்கிய அவளது மனத்தை மாற்றிய சொல் ‘குழந்தையில்லாத பெண்’.குழந்தையில்லை என்பதை நாம் உணர்கிறோம் என்பதை விட மற்றவர்கள் தொடர்ந்து உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் இந்திய சமூகத்தின் நெருக்கடி. இங்கே தனிமனிதர்களின் பிரச்சினைகளையெல்லாம் அவர்களாக முடிவு செய்ய விடாமல் சமூகம் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இதை இந்திய சமூகத்தின் பலம் எனப் பலரும் சொல்கிறார்கள்.ஆனால் மிகப்பெரிய சுமை என்பதை நிதானமாக யோசித்தால் புரிந்துகொள்ளலாம்.

நன்றி: உயிர்மை

Advertisements
Comments
One Response to “தாம்பத்யத்தின் முழுமை : க. நா.சு-வின் மனமாற்றம்.- அ.ராமசாமி”
  1. microram says:

    PEN URIMAI PESUM KALAM

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: