க. நா. சுவின் மொழிபெயர்ப்புகள் -ஜி. குப்புசாமி

க.நா.சு.100

க. நா. சுவின் மொழிபெயர்ப்புகள்
உன்னதங்களைப் பரிந்துரைத்த ஒற்றைக் குரல்

தன்னை வெறுக்கிற சமுதாயத்தை விட்டுக் கெட்டிக்காரத்தனமாக ஒதுங்கி நின்று உண்மை இலக்கியாசிரியன் தனது முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கிறான். மௌனமாக, வாசகர் கவனத்தையும் கவர விரும்பாமல் – திருட்டுத் தனமாக என்றுகூடச் சொல்லலாம் – எழுதிச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறான். தனி மனிதனாக அவன் கௌரவிக்கப்படுகிறான். எழுதிவிட்டானானால் ஒரு சில வாசகர்களையேனும் எட்டுவது பெரிய விஷயமாக இல்லை. வேறு என்ன வேண்டும் ஒரு நல்ல உண்மையான இலக்கியாசிரியனுக்கு?

இலக்கிய வட்டம் இதழ் 7, 14.2.64
இன்றையத் தமிழ் இலக்கியம் கட்டுரையில் க.நா.சு.

கந்தாடை நாராயணஸ்வாமி சுப்ரமண்யம் (க.நா.சு) என்னும் பன்முக ஆளுமையின் மொழி பெயர்ப்பாளர் என்ற பரிமாணம் மட்டுமே இக்கட்டுரையில் மீள்பார்வை செய்யப்பட்டுள்ளது. நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், கவிஞர், விமரிசகர் என்ற பல்வேறு முகங்களைக்கொண்ட க. நா. சுவின் முக்கியப் பங்களிப்பு மொழிபெயர்ப்பே.

பொய்த்தேவு, ஒருநாள் கழிந்தது போன்ற குறிப்பிடத்தக்க நாவல்களை எழுதியிருந்தாலும், உலக இலக்கியங்களின் மகோன்னத சிகரங்களை அறிமுகப்படுத்திவந்த அவருடைய தரத்திற்குப் பெரும் இடைவெளியில் இந்த நாவல்கள் அமைந்திருப்பதை இன்றைய வாசகன் உணர்கிறான். ‘தமிழ் மரபு தெரிய வேண்டுமென்றும் அதில்லாவிட்டால் தமிழிலே இலக்கியமே சாத்தியமல்ல’ என்றும் கூறுகிறவர்களுக்குப் பதிலளிப்பது போல் ‘உலக இலக்கிய மரபுகள் நமக்குத் தெரிய வேண்டும். அது தெரியாமல் இலக்கிய சிருஷ்டி செய்ய முற்படுவது வீண் வியர்த்தம்’ என்று கூறிய க. நா. சு. அதற்கு உதாரணம் காட்டுவதுபோலவே தனது நாவல்களை முயன்று பார்த்திருப்பதாகக் கூறலாம். உன்னதமான எழுத்துக்களை அடையாளம் கண்டுகொள்ளும் திறமையையும் படைப்பாளிக்குள்ளிருக்கும் கவிமனக்கூறுகளைக் கவனிக்கும் நுட்பமான பார்வையையும் அவர் கொண்டிருந்தாலும் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய இயல்பான உந்துசக்தி அவரிடம் இருந்ததில்லை.

நவீனக் கவிதை பற்றிய தெளிவான பிரக்ஞையோடு இருந்த அவர்தான் ‘புதுக்கவிதை’ என்ற பெயரையே சூட்டியவரென்றாலும் அவர் இயல்பான கவிஞரும் அல்ல.

இலக்கியத்தை நேரடியாகவே உணர்ந்து அனுபவிக்க வேண்டுமென்ற நம்பிக்கை கொண்டிருந்தவரென்பதால், அவர் இடைவிடாது வாசித்துக்கொண்டிருந்த நூல்களில் தரமானவற்றை, தன் ரசனையின் அளவுகோலை மட்டும் வைத்துக் கணித்து அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தோ அறிமுகமோ செய்துவந்திருக்கிறார்.

விமர்சனத்திலும் அவரது சமகால விமர்சகர்களான சி. சு. செல்லப்பாவின் பகுப்பாய்வுக் கோட்பாடுகளுக்கோ கைலாசபதி, ரகுநாதன் போன்றோரின் மார்க்சிய அடிப்படை விமர்சன முறைகளுக்கோ உட்படாமல் வாசிப்பின்போது தன் மனத்திற்குப்பட்ட விஷயத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு ரசனை விமர்சகராகவே செயல் பட்டுவந்தார். அவர் தன்னை எக் காலத்திலும் முழுமையான விமர்சகன் என்று கூறிக்கொண்டதுமில்லை.

தொடர்ச்சியான வாசிப்பையும் வாசித்தவற்றில் சிறந்தவற்றை எந்தவொரு மனமாச்சரியமுமின்றிப் பரிந்துரைத்து வந்தது அவர் விரும்பி ஏற்றுச் செய்த விஷயங்கள் என்று கூற வேண்டும். இந்தப் பரிந்துரை என்ற கூரையின் கீழேதான் அவரது மொழிபெயர்ப்புகளையும் வைத்துப் பார்க்க வேண்டுமெனக் கருதுகிறேன்.

2

உலக இலக்கியம் என்பது ஓர் இயக்கமாக உருவெடுக்க வேண்டுமென்ற சிந்தனையைத் தமிழில் முதன்முதலாகப் புகுத்தியவர் க. நா. சு.தான். இதற்கான வழி வகைகள் என்னவென்று சிந்திப்பது தன்னைப் போன்ற இலக்கியவாதியின் கடமையென்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. உலகத்தில் எந்த மொழியில், எந்தப் பகுதியில் மிகத் தரமானது. உயர்ந்தது, சிரேஷ்டமானது வந்திருந்தாலும் அது உடனடியாகத் தமிழில் மட்டுமல்ல, தமிழ் போன்ற எல்லா மொழிகளிலுமே வருவதற்காக வழிவகைகள் வகுத்துக்கொள்ள வேண்டும்’ என்ற க. நா. சு. தமிழுக்கு அறிமுகப்படுத்திய, மொழிபெயர்த்த எழுத்தாளர்கள் மற்றும் படைப்புகளின் தேர்வு மிக முக்கியமானது. கிரேஸியா டெலடா, ஸெல்மா லாகர்லெவ், பேர் லாகர்க் விஸ்ட் போன்ற நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களைப் பெரும்பாலும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். வணிகப் பத்திரிகைகள் பிரபலமான, பெரும் வாசகர்களைக் கொண்டிருந்த ஆங்கில எழுத்தாளர்களின் கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுக்கொண்டிருக்கையில் க. நா. சு. முதன்முதலாகக் கிழக்கு ஐரோப்பிய எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தமிழில் கொண்டு வந்தார். இங்கிலாந்து மற்றும் அமெரிக்கப் படைப்புகளை வாசிக்கையில் ஒருவித அந்நியத் தன்மையை உணர்வதாகவும் கிழக்கு ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கும் தமிழ் வாழ்க்கை முறைக்கும் இடையில் ஏதோ ஒற்றுமை இருப்பதாகவும் அவர்கள் தமது குடும்பம் சார்ந்து பேசினாலும் நம்மால் அதை உணர்ந்துகொள்ள முடிகிறது என்றும் க. நா. சு கூறியதாக சுந்தரராமசாமி தனது நினைவோடையில் குறிப்பிடுகிறார்.

மேற்கத்திய விமர்சகர்கள் அதிகம் கொண்டாடாத காதரின் ஆன் போர்ட்டர் போன்றோரின் மிகச் சிறந்த கதைகளை மொழிபெயர்த்துத் தொகுப்பாகவே வெளியிட்டிருக்கிறார். அவர் மொழிபெயர்த்த பேர்லாகர் க்விஸ்ட்டின் பாரபாஸ், அன்பு வழி மற்றும் ஸெல்மா லாகர்லெவ்வின் மதகுரு போன்ற நாவல்கள் தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் பெரும் ஆதர்சமாக இருந்திருக்கின்றன. வண்ணநிலவன் தனது முதல் நாவலான கடல்புரத்திலின் முன்னுரையில் அன்பு வழியைப் போன்றதொரு நாவலைத் தன் வாழ்நாளில் எழுதிவிட முடிந்தால் . . . என்று ஏங்குகிறார். மதகுரு நாவலைக் கிருஷ்ணன் நம்பி பாராயணமே செய்துவந்ததாக சுந்தரராமசாமி கூறுகிறார். நட்ஹம்சனின் நிலவளம் தனது பள்ளிப் பிராயத்திலேயே எத்தகைய ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி உலக இலக்கியத்தின்பால் தன் கவனத்தைத் திருப்பியது என்று எஸ். ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். ரோமன் ரோலந்தின் ஜீன் கிருஸ்தஃபர், மார்டின் து கார்டின் தபால்காரன், வில்லியம் ஸரோயனின் மனுஷ்ய நாடகம், அண்டோனியோ பாகஸாரோவின் கடல் முத்து போன்ற இலக்கியத்தின் புதிய சிகரங்களைத் தொட்ட கலைப் படைப்புகளைத் தமிழ் வாசகருக்குக் க. நா. சு. அறிமுகம்செய்து ஒரு மொழிபெயர்ப்பு மரபையே தமிழில் உண்டாக்கி வைத்திருப்பதால்தான் இன்று நம்முடைய சூழலில் நவீன இலக்கியத்தைப் பற்றி ஹொசே சரமாகோ, உம்பர்தோ ஈகோ, மார்கேஸ் என்று பேச முடிகிறது. அவர் மொழிபெயர்த்த முழு நீள நாவல்களைத் தவிர, தான் வாசித்த மேனாட்டு நாவல்கள் ஒவ்வொன்றையும் ஏழு எட்டுப் பக்கத்திற்குள் சுருக்கிப் புகழ்பெற்ற நாவல்கள் என்ற தலைப்பில் தந்ததும் படித்திருக்கிறீர்களா? என்ற தொடர் கட்டுரை மூலம் உலகின் தலைசிறந்த நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், இந்தியாவின் முக்கிய நாவல்கள் மற்றும் இலக்கியப் படைப்புகளை அறிமுகப்படுத்தியதும் தமிழுக்கு அவர் ஆற்றிய மிகப்பெரும் தொண்டுகள். அவரது சமகால இலக்கியவாதிகள் சரத் சந்திரர், காண்டேகர் ஆகியோரைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, அந்தப் பொது வழியிலிருந்து விலகி தாரா சங்கர் பந்தோபாத்தியாயா, விபூதி பூஷன் பந்தோபாத்தியாயா போன்றோரின் நாவல்களை ஆர். சண்முகசுந்தரம் மொழியாக்கம் செய்ததும் தி. ஜானகிராமன் அன்னை, குள்ளன் போன்ற ஐரோப்பியப் புனைகதைகளை மொழிபெயர்த்ததும் க. நா. சு. உருவாக்கிய மரபின் தொடர்ச்சியே.

3

க. நா. சு. தனது மொழிபெயர்ப்புகளைச் சரளமாகப் படிக்கும்படி செய்வார். வாசிப்புப் பயிற்சியில்லாத வாசகனுக்கும் புரிய வேண்டும். நமது கலாச்சாரத்திற்கு அந்நியமாக ஒரு படைப்பு இருந்துவிடக் கூடாது என்ற அளவில் இலக்கியப் பரிந்துரையாளராக அவரது கருத்து ஒப்புக்கொள்ளக்கூடியதுதான். இன்றைய சூழலில் அவரைப் பொருத்திப்பார்க்கும்போது க. நா. சுவை பரிபூரணமான மொழிபெயர்ப்பாளர் என்று கூற முடியாது என்பதுதான் என் எண்ணம். அவர் மொழிபெயர்த்தவை மறுகதைகூறலாகவே (retelling) இருக்கின்றன. அவரளவில், வார்த்தைக்கு வார்த்தை, உத்திக்கு உத்தி, மூலப் படைப்பைத் தமிழுக்குக் கொண்டுவர அவர் சிரத்தை காட்டவில்லை எனலாம். அவரைப் பொறுத்தவரை அக்கதையின் ஆன்மாவை, எது அக்கதையை முக்கியமாகக் கருத வைத்ததோ எந்த அம்சம் தமிழுக்கு அதைக் கொண்டு வர வேண்டுமென அவரைத் தூண்டியதோ அதைத் தனது மொழிபெயர்ப்பில் கொண்டு வந்தால் போதுமானது என்று அவர் நினைத்திருக்கக்கூடும். தான் மொழிபெயர்த்த நூல்களின் ஆசிரியர்களுடைய தனித்தன்மையைப் பெரும்பாலும் அவரால் புனர்சிருஷ்டி செய்துதர முடிந்ததில்லை. இதற்குக் காரணம் அவரது எளிமையான, வெகுஜனப் பத்திரிகைத்தனமான மொழிநடைதான் என்கிறார் பிரமிள். மேலும் அவர் கூறுகையில், க. நா. சு. எப்போதுமே ஆழ்ந்த, பின்னலான பிரச்சினைகளையோ கவித்துவ அம்சங்களையோ எடுத்தாண்டதில்லை என்கிறார். இதனால் அவரது மொழிபெயர்ப்பின் மூலம் நமக்குக் கிடைக்கும் எழுத்தாளர்களின் சுயத்தன்மைக்கு அவரது தமிழ் ஈடுகட்டியதில்லை. மொழி பெயர்ப்பின் உண்மையான சவால் மூல நூலாசிரியனின் தனித்தன்மையும் நமது மொழியின் எல்லைகளை விஸ்தரிக்க வேண்டிய அவசியமும் பண்பாட்டு, பிரதேச, மத வேறுபாடுகளால் நிர்ணயிக்கப்படும் வழக்குகள், குறியீடுகள் போன்றவற்றை வேற்று மொழியிலிருந்து நமது மொழிக்குக் கொண்டுவருதலும் ஆகும். மொழிபெயர்ப்பு இந்த அளவு லட்சியத் தன்மையை அடையாவிட்டாலும் மூல ஆசிரியனின் முத்திரையை அப்படியே தரும் முயற்சி முக்கியமானது; நிச்சயம் செய்யப்பட வேண்டியது. க. நா. சு. இதற்காக முயன்றதில்லை என்று பிரமிள் அவதானிக்கிறார்.

உன்னதமான உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு தன்னை மட்டுமே சார்ந்திருந்தது என்ற நினைப்போடு, தன் வாழ்நாள் முடிவதற்குள் அவை எல்லாவற்றையும் தமிழில் கொண்டு வந்தேயாக வேண்டுமென்ற அவசரத்தில் அவர் மொழிபெயர்த்துத் தள்ளிக்கொண்டிருந்ததாக அத்தகைய அசிரத்தையான வாக்கிய அமைப்புகளை வாசிக்கும்போது அவரைப் பற்றிய சித்திரம் என் மனத்தில் வருவதுண்டு. அவருக்கு எதிராக வர்த்தக ஊடகங்களின் எக்களிப்புகள், லட்சக்கணக்கான வாசகர் கூட்டத்தைக் கொண்டிருப்பவர்களே சிறந்த எழுத்தாளர்கள் என்று நம்பிக்கொண்டிருந்த வாசகர்கள், தமிழின் புராதன மரபுகளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டு, உலக இலக்கியங்களிலேயே தமிழ்தான் தலையாயது என்ற பெருமிதத்துடன் மற்ற மொழிகளை உதாசீனம் செய்துகொண்டிருந்த கிணற்றுத்தவளைப் பண்டிதர்களின் ஆரவாரக் கூச்சல்கள், நவீன இலக்கிய சகாக்களிடமிருந்தே தன்னைப் பற்றியும் ( ‘அவர் ஒரு சி. ஐ. ஏ. ஏஜென்ட்) தனது இலக்கியக் கோட்பாடுகள் பற்றியும் (அவர் செய்வது விமர்சனமே அல்ல – அபிப்பிராயங்கள்தான்’) எழுப்பப் பட்டுவந்த அக்கப்போர்கள் போன்ற அனைத்து விதமான தாக்குதல்களையும் அவரது இலக்கிய வாழ்வின் மிகப்பெரும்பான்மைக் காலம்வரை தனியாளாகவே நின்று சமாளித்து வந்திருக்கிறார். இத்தகைய சாதகமற்ற தமிழ்ச் சூழலிலிருந்த ஓர் உணர்ச்சிகரமான கலைஞன் மிக எளிதாக மனம் நொடித்து விலகி விட்டிருக்கக்கூடும்.

க. நா. சுவை வைத்து நடத்தப்படும் மற்றுமொரு சர்ச்சை அவர் எந்த மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார் என்பது. தனக்கென்று பெரிய அளவில் ஆதரவாளர் கூட்டம் ஏதுமில்லாதிருந்த அவருக்குக் கடைசி சில வருடங்களில் சேர்ந்த புதிய தலைமுறை அபிமானிகள் அவருக்குப் பதினெட்டு மொழிகள் தெரியுமென்றும் நார்வேஜிய, ஸ்வீடிஷ், பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்தாரென்றும் புதிய பிம்பங்களை உருவாக்க, அவருடைய எதிர்ப்பாளர்கள் அவருக்கு ஆங்கிலத்தையும் தமிழையும் தவிர வேறு மொழி எதுவுமே தெரியாதென்றும் ஆவேசத்தோடு வாதாடிவந்திருக்கின்றனர். இத்தகைய விவாதங்களே அவசிய மற்றவை என்றுதான் நான் கருதுகிறேன். க. நா. சு. தானாக எந்தப் புத்தகத்திலும் எந்த மொழிப் பதிப்பை ஆதாரமாக வைத்துத் தான் மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டதில்லையென்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். ஆனால் தன்னை ஓர் இலக்கியப் பரிந்துரையாளராகவே கருதிச் செயல்பட்டு வந்தவர் என்பதால், இந்த விஷயத்தில் தன்னிலை விளக்கத்தைத் தர அவர் முயலாததைப் பெரிய குறைபாடாகக் கருதத் தேவையில்லையென நினைக்கிறேன்.

பின்னலும் சிடுக்கும் மண்டிய மொழியைக் கொண்ட பிரதிகளை மொழிபெயர்க்க அவர் தேர்ந் தெடுத்ததேயில்லையென்றும் எளிதாகவும் தெளிவாகவும் சொல்லக் கூடிய விஷயங்களை மட்டுமே எடுத்தாண்டதாகவும் பிரமிள் கூறுவதை மறுக்கும்படியாகவே அவர் மொழிபெயர்த்த ஆல்பெர் காம்யு, காதரின் ஆன் போர்ட்டர், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றோரின் சிறுகதைகள் இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இருந்தும், ஒரு தேர்ந்த வாசகன் பார்த்தவுடனேயே இது க. நா. சு. மொழிபெயர்த்த கதை என்று சொல்லிவிடும்படியாக அவரது மொழிநடை பல கதைகளில் ஒரே ஜாடையில் இருக்கிறது. ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கென்று தனித்துவமான மொழிநடை கெட்டித்துவிடக் கூடாது என்பதில் நவீன மொழிபெயர்ப்பாளர்கள் பலரும் கவனமாக இருக்கின்றனர். மிகெல் ஸெர்வாண்டிஸ்ஸின் டான் க்விக்ஸோட் மற்றும் கார்ஸியா மார்கேஸின் பெரும்பான்மையான நாவல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள எடித் கிராஸ்மன் மொழிபெயர்ப்பைத் தவிரச் சொந்தமாக எதையும் எழுதுவதற்கு மிகவும் தயங்குவதாகவும் கூடியவரை தவிர்ப்பதாகவும் கூறுகிறார். அனேகமாக எல்லா எழுத்தாளர்களுமே தாம் ஒரு நாவலை எழுதும் காலத்தில் பிற எழுத்துக்களை அவை தம் எழுத்தில் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்ற ஜாக்கிரதையுணர்வில் வாசிப்பதில்லை. ஆனால் விமர்சனம் உட்பட எந்தவிதமான இலக்கியச் செயல்பாட்டிலும் தொழில்நுட்பச் சட்டகங்களைப் பொருத்திப் பார்க்காத க. நா. சு. இத்தகைய அழகியல் விதிமுறைகளுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டிருப்பாரென்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இலக்கிய நுண்ணறிவையும் ரசனையையும் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இயங்கிவந்த அவருக்கு இத்தகைய ‘தியரி’கள் தெரிந்திருக்காது என்று நினைப்பது அபத்தம்.

அவருக்கு மிக விருப்பமான கெஸ்டா பெர்லிங் ஸாகாவைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கு முன்பு ஐம்பது தடவையாவது படித்திருப்பதாக மதகுருவின் முன்னுரையில் கூறுகிறார். இப்போது மொழிபெயர்க்க உட்காரும்போதுகூட நாலு பக்கம் மொழிபெயர்த்தால் தொடர்ந்து நாற்பது பக்கம் படித்துவிட்டுத்தான் அடுத்த நாலு பக்கம் மொழிபெயர்ப்பது என்று ஏற்பட்டுவிட்டது என்கிறார். அந்தளவிற்கு லயிப்போடு அவர் மொழிபெயர்த்த இந்நாவலிலும் பாரபாஸிலும் மூல நூலை வைத்து நான் சோதித்துப் பார்த்ததில்லையென்றாலும், ஸெல்மா லாகர்லெவ் மற்றும் பேர் லாகர்க் விஸ்ட் ஆகியோரின் ஆன்மாவிற்கு மிக அருகிலேயே தனது மொழியாக்கத்தைக் கொண்டு சென்றிருப்பதாக நான் உணர்கிறேன். தேவமலர் சிறுகதையில் கிருஸ்துமஸ் இரவன்று கீயிங்கே வனம் விழித்தெழுந்துகொள்ளும் காட்சியை வர்ணிக்கும் அவரது நடை, படித்துப் பல பத்தாண்டுகள் கழிந்த பின்பும் புத்தம் புதிதாக என் நினைவில் ஊறிக்கொண்டிருக்கிறது:

பூமியின் மேல் போர்த்தியிருந்த மாரிக்காலத்துப் போர்வையை ஏதோ ஒரு மாயக்கரம், தெய்வீகக்கரம் எடுத்துவிட்டதுபோலிருந்தது. அப்பட் ஹான்ஸினுடைய கண் முன்னர் பூமியின் மேல் பச்சைப் போர்வை படர்ந்தது. புல்லும் பூண்டும் அடர்ந்து ஒரு நொடியில் வளர்ந்து தலைதூக்கின. எதிரே தெரிந்த குன்றுகளின் சரிவெல்லாம் திடுமென்று பச்சைப் பசேலென்றாகிவிட்டது. விதவிதமான பூச்செடிகள் முளைத்துத் தலைதூக்கிப் பூத்துக் குலுங்கின. அந்த வர்ண விஸ்தாரமே அபூர்வமானதாக, அற்புதமானதாகவே இருந்தது. வேறென்ன சொல்வது? தெய்வீகமானதோர் வர்ணச்சித்திரம் அது. . . அவர் கண்கள் நிறைந்தன. திடீரென்று வெளிச்சம் சற்று மங்கிற்று. மறுபடியும் முன்போல் இருட்டிப்போய் விடுமோவென்று பயந்தார் அப்பட்ஹான்ஸ். ஆனால் வெளிச்சம் முன்னிலும் அதிகமாயிற்று. அவ்வெளிச்சத்திற்குப் பின்னணியாக ஆறுகளின் சலசலப்பும் அவற்றின் இசையும் எழுந்தன. எங்கேயோ தூரத்தில் ஒரு நீர்வீழ்ச்சியின் சப்தம் கேட்டது.

. . .

க. நா. சு. நமக்கு அறிமுகப்படுத்திய இத்தகைய உன்னதமான வரிகள்தாம் தமிழில் நவீன இலக்கிய மரபு ஒன்று உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தனவென்று நெகிழ்ச்சியோடு மட்டுமல்ல, நிதானத்துடனேயே கணிக்கிறேன்.

4

சர்வதேசக் கதைகளைக் க. நா. சு. மொழிபெயர்த்த அளவிற்குப் பிற இந்திய மொழி இலக்கியங்களிலும் அவருக்கு அக்கறை இருந்தது. இந்தியின் அக்ஞேயாவுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. விகாஸ் பப்ளிகேஷன்ஸிற்காக இந்திய மொழிக்கதைகளைத் தொகுத்து, அத்தொகுப்பின் முன்னுரையில் இதற்காக 600 கதைகள் வரை படித்து அவற்றிலிருந்து அக்கதைகளைத் தேர்வுசெய்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய இலக்கியம் என்ற ஒன்று உண்டா என்ற தேடல் அவருக்கு எப்போதும் இருந்தது. இந்திய இலக்கியத்தின் சாயலை மேற் சொன்ன கதைகள் சிலவற்றில் பார்ப்பதாக அவர் கூறுகிறார். அவர் அதிகமும் ஈடுபாடு கொண்டிருந்த கிழக்கு ஐரோப்பிய இலக்கியங்களிலும் குறிப்பாக ரஷிய, ஸ்காண்டி நேவிய இலக்கியங்களிலும் இந்தியப் பாரம்பரியத்தைப் போலவே ஆன்மீக அக்கறையும் கடவுள் பற்றிய பிரக்ஞையும் கூடுதலாக இருப்பதைச் சிலாகித்துக் குறிப்பிடுகிறார். ஆன்மிக மரபுகளில் அக்கறை கொண்டிருந்த இலக்கியம் அவருக்கு எப்போதுமே முக்கியமானதாகப் பட்டிருக்கிறது.

மொழியை மட்டும் வைத்துப் பார்த்தால் இந்திய இலக்கியம் என ஒன்று இல்லைதான். ஆனால் இலக்கியம் என்பது மொழியை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை. மொழிமூலம் வெளிப்பாடு பெற்றாலும் மொழியைத் தாண்டிய அம்சங்கள் இலக்கிய உருவாக்கத்தில் உள்ளன. பொதுவான வேர்ச்சொற்கள், வெளிப்பாடுகள், படிம வளம், கதைகள், மூலமாதிரிகள் என்ற வகையில் இந்திய மொழிகளுக்கிடையே பொதுவான இழையோடுகிறது. (கே. சச்சிதானந்தன், இந்தியன் லிட்டரேச்சர், 3,4,94) இதிகாசங்களை சுவீகரித்துக் கொண்ட தன்மையிலும் ஆன்மிகத் தத்துவ மரபுகளை ஏற்றுக்கொண்ட விதத்திலும் நாட்டார் இலக்கியக் கூறுகளிலும் காணப்படும் பொதுத் தன்மையை வைத்துத்தான் பல மொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் என்பது ஒன்றே என டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றோர் கூறுகின்றனர்.

பலதேசிய இனங்களையும் பல மொழிகள் பேசுவோரையும் பல மதத்தினரையும் கொண்டுள்ள இந்தியாவை சமஷ்டியமைப்பாக வளர்த்தெடுக்காமல் இந்திய தேசம் என்னும் ஒற்றைப் பரிமாணத்தில் திணிக்க முயலும் தேசியவாத அரசியலின் ஓர் அம்சம்தான் இந்திய இலக்கியம் என்ற கோட்பாடு என்று விமரிசிப்பவர்கள் இருக்கின்றனர். பிராந்திய மொழிகளை இந்திக்கு இணையாக வளர்த்தெடுக்காமல் இருக்கும்வரை இந்திய இலக்கியம் என்று சொல்வதற்கான பொதுக் கூறுகள் நிலவுவது சாத்தியமல்ல என்பது இவர்களது வாதம்.

இந்தியாவின் ஒவ்வொரு பிராந்திய மொழியிலும் முதலில் தோன்றிய இலக்கியங்கள் ராமாயணமும் மகாபாரதமுமாகவே இருந்திருக்கின்றன. ஆன்மீக அடிப்படையில் இதிகாசங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் இந்திய இலக்கிய மரபு என்று இதைப் பொதுமைப்படுத்திவிட முடியாது. பிராந்திய மொழிகளில் இந்த இதிகாசங்கள் மறு உருவாக்கம் செய்யப்பட்டபோது அவை தத்தமது இன விடுதலைக்கான நோக்கத்திலேயே அமைந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். மூலப் பிரதியின் அடிப்படை நோக்கங்களிலிருந்தே விலகி எதிர்த்திசை நோக்கிப் பயணிக்கும் இந்தப் பிராந்திய இலக்கியங்கள், இதிகாசங்களை சுவீகரித்துக்கொண்டதால் தமது மொழியில் பொதுப்படையான அம்சங்களை உண்டாக்கிக் கொண்டுள்ளனவா என்று கவனிக்கும் தேடல் க. நா. சுவிடம் இருந்தது.

5

இந்தியாவின் ஒவ்வொரு மொழியிலும் தத்தமது இலக்கியச் சிறப்புகளை ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதவும் ஆவேசமாக முழங்கவும் ஏராளமானோர் இருந்தபோது அத்தகைய காரியங்களைத் தமிழுக்காகத் தனியாக நின்றுகொண்டு செய்துவந்தவர் க. நா. சு. தமிழ்மொழியில் நடைபெற்றுவந்த புதிய முயற்சிகளைப் பற்றித் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மீறித் தொடர்ந்து அவர் பேசிவந்திருக்கிறார். புதுமைப்பித்தன், மௌனி போன்றோரின் மேதமையைப் பல ஆங்கிலக் கட்டுரைகளில் அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் சிலப்பதிகாரத்தையும், நீல. பத்மநாபனின் தலைமுறைகள், சண்முகசுந்தரத்தின் சட்டி சுட்டது, இந்திரா பார்த்தசாரதியின் குருதிப் புனல் போன்ற நாவல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார்.

எழுதுவது ஒன்றையே ஜீவனமாகக் கொண்டிருந்த அவர் தனது அந்திமக் காலத்தில் இந்தியாவில் கத்தோலிக்க சமுதாயம் போன்ற நூல்களையும் சமூக உண்மையைத் தீவிரமாகச் சொல்லவில்லை என்று அவரே குறிப்பிட்டிருந்த குருதிப் புனலையும் மொழிபெயர்த்துக் கொடுத்திருப்பது தமிழில் முழுநேர எழுத்தாளராக இருந்தால் ஏற்படக்கூடிய நகைமுரண் விளைவுகளுக்கு உதாரணங்கள்.

ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய வாழ்க்கையில் அவர் ஆங்கிலத்தில் 15,000 கட்டுரைகள் எழுதியிருப்பதாக Financial Express இல் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் ஆர். வெங்கட்ராமன் கூறுகிறார். அவர் தமிழில் எழுதிப் பிரசுரமாகாதவையே பல்லாயிரம் பக்கங்களைக் கொண்டிருக்கும் என்பது பரவலான நம்பிக்கை. அவற்றையும் அவர் ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளையும் தொகுத்து நூல் வடிவத்தில் . . . அல்லது குறைந்தபட்சம் இணையதளத்திலாவது வெளியிட முயற்சிகள் செய்யப்பட வேண்டும். இலக்கியத்திற்கு ஓர் இயக்கம் கண்டவரின் நூற்றாண்டில் அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி அதுவாகவே இருக்க முடியும்.

உதவிய நூல்கள்:

1. க. நா. சு. இலக்கியத்தடம்: தொகுப்பா சிரியர்: ப. கிருஷ்ணசாமி, காவ்யா பதிப்பகம்.

2. இலக்கிய வட்டம் – இதழ் தொகுப்பு: சந்தியா பதிப்பகம்.

3. இலக்கியத்திற்கு ஓர் இயக்கம், க. நா. சு, காவ்யா பதிப்பகம்.

4. நிலவளம், நட் ஹாம்சன், மருதா பதிப்பகம்.

5. மதகுரு, ஸெல்மா லாகர்லெவ், கவிதா பப்ளிகேஷன்ஸ்.

6. அன்பு வழி, பேர் லாகர்க்விஸ்ட், சந்தியா பதிப்பகம்.

7. க.நா.சு மொழிபெயர்த்த உலக இலக்கியம், சந்தியா பதிப்பகம்

8. புன்னகை புரியும் இளவரசி – இந்தியச் சிறுகதைகள், மருதம்.

9. காற்றில் கலந்த பேராசை, சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம்.

10. க.நா.சு நினைவோடை, சுந்தரராமசாமி, காலச்சுவடு பதிப்பகம்.

நன்றி: காலச்சுவடு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: