க. நா. சு. வின் ஓர் உரை

க.நா.சு.100

இத்துடன் வெளியாகும் க.நா.சு.வின் உரை 16.2.1988 ஆம் நாள் ஒய்.எம்.ஸி.ஏ. கருத்தரங்கில் நிகழ்த்தப் பெற்றது. சிறுகதைபற்றிய பல விளக்கங்களையும் கொண்டிருப்பதே அவ்வுரையின் முக்கியத்துவம். இதுவரை பிரசுரமாகாதது.

மா. அரங்கநாதனின் ‘வீடு பேறு’ சிறுகதை தொகுப்பு பற்றிய கருத்தரங்கத்தின் போது ஆற்றிய உரை.

() () ()

இருபது இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது புத்தக விமர்சன கூட்டங்களுக்குப் போனால் விமர்சனங்களில் ஒரு மாறுதல் இருப்பதையும் ஓரளவிற்கு புத்தகங்களைப் பற்றி பொதுவாகப் பேசுவதற்கு பலபேர் தயாராக இருக்கிறார்கள் என்பதும் நன்றாகவே தெரிகிறது. புத்தகத்தைப் பாராட்டி பேசிவிடுவதோடு நிறுத்திவிடாமல், காசு கொடுத்து வாங்கி இது நன்றாக இருக்கிறது என்று பத்துப்பேரிடம் சொல்லி அவர்கள் சந்திக்கிற ஆட்களும் மற்றவர்களிடம் சொன்னால், அந்தப் பத்துப்பேரும் வாங்காவிட்டாலும் ஓரிருவர் வாங்குவார்கள்  என்ற ஒரு நம்பிக்கையில் புத்தக விற்பனை ஓரளவு ka-naa-su-1நன்றாக ஆகுமென்று தோன்றுகிறது. இது ரொம்ப அவசியமான ஒரு விஷயம் என்று எண்ணுகிறேன். புத்தக விமர்சனக் கூட்டங்கள் மிகவும் சிறப்பாக நடக்கின்றன. இரண்டு மூன்று கூட்டங்களுக்கு நான் தலைமை வகித்தும், பேசப்போயும், வேடிக்கைப்பார்க்கப் போயும் அறிந்துக் கொண்டிருக்கிறேன். அந்த அளவுக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது என்று நான் சொல்லலாம். நல்லவேளையாக இதைச் சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன்.

இரண்டாவதாக சிறுகதைகள் என்பதைப் பற்றி பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. ஒரு எழுபத்தைந்து வருட சரித்திரம் இருக்கிறது. இந்த எழுபத்தைந்து வருட சரித்திரத்தில், சிறுகதைகளில் மிகவும் சிறப்பாக செயலாற்றி இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமானால், ஒரு பத்து / இருபது பேரை பெயர் சொல்லி குறிப்பிட்டுச் சொல்ல்லாம் என்று நான் சொல்வேன். கொஞ்சம் தாராளமாகச் சொல்பவர்கள் நாற்பது ஐம்பது பேரைச் சொல்ல்லாம் என்று சொல்வார்கள். ஒரு காலத்தில் கிட்டத்தட்ட முப்பது நாற்பது பேர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒரு நான்கைந்து பேர்களைத்தான் சொல்ல முடிகிறது. அல்லது ஏழெட்டு பேரை சொல்ல முடிகிறது என்று வைத்துக் கொண்டாலுங்கூட அந்த ஏழெட்டுப் பேரை மட்டும் ஏன் சொல்லுகிறோம் என்று யோசித்துப் பார்க்கையில், அவர்கள் எல்லாருமே மற்றவர்கள் எழுதியதிலிருந்து மாறுபட்ட எழுத்துக்களைக் கொடுக்க வேண்டுமென்று முயற்சி செய்தார்கள் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. அந்த மாதிரிப் பார்க்கும்போது இன்று எழுதப்படுகிற எழுத்துகளிலிருந்து மிகவும் பெரிய அளவில் மாறுபட்ட எழுத்தை மா. அரங்கநாதன் தன்னுடைய ‘வீடு பேறு’ என்ற நூலில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். ஒன்று இரண்டல்ல-இருபது கதைகள் இருக்கின்றன. இந்த கதைகள், இந்த மாறுபட்ட விதத்தில் பொது மக்களுக்கு இதுதான் பிடிக்குமென்று எல்லாரும் தெரிந்து எழுதுகிற சிலர் பழக்கமாக கையாளுகிற – புள்ளிவைத்த இடத்தில் கையெழுத்து போடுகிறமாதிரி வார்த்தைகள் போட்டு நிறுத்திவிடுகிற கதைகள் எழுதுகிற ஒரு தமிழ் உலகத்தில் – தனிப்பட்ட ஒரு குரலாக ஒலிக்கிறது. சிறு கதைகள் எழுதுவதற்கு என்றும் தைரியம் வேண்டியதாக விருக்கிறது. இதில் ஒரு விசேடம் என்னவென்றால், அந்த தைரியம் அரங்கநாதனுக்கு இருந்ததுமட்டுமல்ல-இந்தக் கதைகளில் சிலவற்றை பத்திரிகைகளிலும் பிரசுரித்துப் பார்த்திருக்கிறார். அதாவது ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு சிறுகதைகள் என்று தெரிந்து படிக்க்க்கூடிய வாசகர்கள் படிக்கும் சில பத்திகைகளில் பிரசுரித்துப் பார்த்திருக்கிறார். இதில் எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. அதை – பெயரைச் சொல்லாமல் – சொல்கிறேன். இவருடைய கதையை, ‘மைலாப்பூர்’ என்ற கதையை; ஞனரதத்தில் வெளியிட்டபோது, வெளியிட்டப்பிறகு, நான் ஒரு நண்பரை சந்திக்க நேர்ந்தது சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது ‘‘எனக்கு அந்தக் கதையில் என்ன எழுதியிருக்கிறார் என்று புரியவில்லை’’ என்று சொன்னார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் நான் பேசிக்கொண்டிருந்த அந்த நண்பர் கொஞ்சம் அறிவாளி. விமர்சனங்கள்-கதை என்று அவரும் எழுதுகிறவர்தான். எழுதுவதில் கொஞ்சம் திறமையுள்ளவர், படிப்பதிலும் திறமையுள்ளவர் என்று நான் நம்பிக்கொண்டிருந்தவர்தான். சொன்னவுடன் எனக்கு கொஞ்சம் வியப்பாகவும் இருந்த்து. என்ன புரியவில்லை என்று கேட்டேன். எதற்காக இதை எழுதியிருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை என்று சொன்னார். நான் அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து விட்டு நீங்கள் இன்னொரு முறை படித்துப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, விட்டுவிட்டேன். ஆனால் அன்றிரவு தூங்கப் போகும்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. உங்களை உங்களுக்கே காட்டிக் கொடுப்பதற்காகத் தான் அந்தக்கதையை எழுதி இருக்கிறார் அரங்கநாதன் என்று சொல்லலாமா என்று தோன்றியது. இது எந்த சிறுகதை ஆசிரியரைப் பற்றியும் – தரமாக எழுதுகிற எந்தச் சிறுகதை ஆசிரியரைப் பற்றியும் – சொல்லக்கூடிய ஒரு விஷயம். ஆசிரியன் தன்னைப்பற்றி மட்டும் காட்டிக் கொள்வது இல்லை. வாசகனுடைய அறிவு தளத்திலிருந்து, அவனுடைய மனதிற்குள் அலைகளை எழுப்புகிற வேகத்தையும் அவனைச்சுற்றி சித்தரிக்கிறான். அவனுக்கே புரியாத சில விஷயங்களை புரியும்படியாக செய்வதற்கு புரியாத சில விஷயங்களை புரியும்படியாக செய்வதற்கு இந்தச் சிறுகதைகள் பிரயோஜனப்படுகின்றன. நல்ல சிறுகதைகள் என்று சொல்லக்கூடியவை பிரயோனப்படுகின்றன என்று சொல்ல வேண்டும். அந்த மாதிரி இந்தக்கதைகள் வேண்டியிருக்கிறது என்று அவரிடம் சொல்லாமல் விட்டுவிட்டோமே என எண்ணிக்கொண்டேன். அதற்குப் பிறகு அதைப்பற்றி பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை – அதனால் சொல்லவில்லை. இந்த மாதிரி கதைகள் எழுதுகிறபோது, ஒரு கனமாக கதைகள் எழுதுகிறவர்களை, அதிகமாக பாராட்டுவது என்பது நம்மூரில் பழக்கமில்லை என்று இக்கட்டத்தில் இரண்டுபேர் பாராட்டிவிட்டார்கள்.

தன்னுடைய பர்சனாலிட்டியை பாதித்துக் கொள்வதற்காகவோ, தனக்குள்ளேயே ஒரு முக்கியம் ஏற்படுத்திக் கொள்வதற்காகவோ சிறுகதை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் என்று பொதுவாகச் சொல்ல்லாம். ஆனால் வாசகன் எதிர்கொண்டு, இந்த கதையைப் படிக்கிற வாசகன் மனதில் தன்னைப் பற்றி, அதாவது அந்த வாசகனைப் பற்றி ஓர் உருவத்தை ஏற்படுத்துவதற்காகவும் இந்த சிறுகதை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் என்று சொல்லவேண்டும். இதை மிகவும் சிறப்பாக சமீப காலத்தில் செய்திருப்பவர் என்று லத்தின் அமெரிக்காவில் உள்ள ‘ஜார்ஜ் லூயி போர்ஹே’ என்ற ஓர் ஆசிரியரைப் பற்றி, அவர் ஓர் அறிவுதளத்தில் நின்று எழுதுகிறார் என்கிற அளவில் சொல்லுகிறார்கள். அவருக்கு உலகம் பூராவும் புகழ் பரவியிருக்கிறது என்பது உண்மை. ஆனால் தமிழில் இருக்கிற ரசனை என்னவென்றால் ஓரளவிற்கு தமிழரிடையே கூட தரமான சிறுகதைகள் என்றால் பாராட்டப்படுவதில்லை என்ற ஒரு வழக்கம் ஏற்பட்டுவிட்டது. அரங்கநாதன் எழுதியிருக்கிற கதைகள் போர்ஹே எழுதிய கதைகளுக்கு சற்றும் குறைந்ததல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு ஒரு பரந்த அறிவு தளத்திலிருந்து மோனாலிசா, நசிகேதனும் யமனும் – அப்புறக் இன்னொரு தலைப்பு – இந்த மாதிரி எல்லாம் பார்க்கும் போது ஒரு பரந்த அறிவு தளத்திலிருந்து, நமது பண்பாட்டின் பல அம்சங்களை நாம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு இவர் எழுதியிருக்கிறார் என்று மிகவும் நன்றாகத் தெரிகிறது. ஒரு Intellectual அறிவு தளத்தில் – போலி அல்லாத அறிவுத்தளத்தில் – உள்ளது. இதில் இரண்டு விஷயங்கள் சொல்ல வேண்டும். அறிவுதளம் என்று சொல்லுகிற போது போலியாக ஓர் அறிவு தளம் அதாவது நமக்கு நம்முடைய படிப்பில் இருந்து வராத, நம்முடைய மண்ணில் வேர்விடாத அறிவு இயக்கங்கள் பல பரவி இருக்கின்றது. உலகில் அவைகளுக்கெல்லாம் நாம் வாரிசாக எண்ணிக்கொண்டு, அந்த அறிவு தளத்திலிருந்து செய்யப்படுகிற சில விஷயங்களை நம்மிடையே பார்க்க முடிகிறது. இந்த மாதிரி பார்க்கிற விஷயங்கள் மனோ தத்துவ காரியங்கள், மனோதத்துவ அலசல்கள் என்கிற அளவில் சைக்யாட்ரிக் என்கிற மாதிரி – சைக்கோபாத் என்று சொல்கிற அளவில் எல்லாம் படுகிறபோது, ஓரளவு போலியாகப் போய்விடுகிறது. இந்தப் போலித்தனம் சில சமயம் அரசியலிலும் காணப்படுகிறது. அரசியலில் நாம் யோசித்துப் பார்த்தோமானால், அரசியல் சிந்தனைகளில் ஒரு சிந்தனை கூட நம்முடைய சிந்தனை நம்முடைய மண்ணில் இருந்து கிளம்பியது என்று சொல்லும்படியாக இந்தியாவில் இன்னும் ஏற்படவில்லை என்பது உண்மை. அதனாலேயே இந்த அறிவு தளத்தில் ஒரு போலி அம்சம் எப்போதும் இருக்கிறது. இந்தப் போலி அம்சத்தை மீறி அறிவு தளத்தில் நம்மைச் சுற்றியிருக்கிற மக்களிடமிருந்து, நாம் நிற்கிற மண்ணிலிருந்து கிளம்புகிற வேர்கள், கிழங்குகளிலிருந்து வருகிற ஓர் அறிவு தளத்தை வளர்த்துக் கொள்வது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. அதை சிலபேர் செய்திருக்கிறார்கள் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

அந்த மாதிரி போலி அல்லாத ஓர் அறிவு தளத்தில் இந்தக் கதைகள் – அரங்கநாதனின் கதைகள் – செயல்படுவதை நான் பாராட்டுகிறேன். பார்க்கும் போது மிகவும் சிறப்பாகப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது.

நான் போலி அறிவு தளத்தில் வந்த கதைகள் என்று சொல்வதற்கு ஓர் உதாரணம் சொல்ல்லாமென்று தோன்றுகிறது. ‘பள்ளம்’ என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது. அந்தப் புத்தகத்தை எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. அதில் ஒரு கதை. குரங்குகள் வந்து உபத்திரவப்படுத்தும், ஒரு சமதாயத்தில், அந்தக் குரங்குகளை ஒழிப்பதற்கு அதன் கைகளில் தண்ணீர் பாம்புகளைச் சுற்றி ஓர் ஓலைச்சுருள் மாதிரிக் கொடுத்துவிட்டால் அந்தப் பாம்புகள் அவைகளைக் கவ்விக் கொள்ளும் – அவைகளும் விடாது, குரங்குகளும் பயந்து ஓடிவிடும் என்று ஒரு கதை வந்திருக்கிறது. அதைப் பார்க்கும்போது இது எந்த ஊரில் நடக்கிற விஷயம் – நம்மூரில் யாருக்குமே வந்திராது என்று சொல்லக்கூடும். இந்தக் கதையை எழுதியவர் மிகவும் நல்ல சிறுகதைகள் பல எழுதியிருக்கிறவர்தாம். ஆனால் இந்த அறிவு போலித்தனத்தினால் ஏற்பட்ட ஒரு விளைவாக இந்த மாதிரி கதைகள் சிலவும் நம்மூரில் வரத்தொடங்கி இருக்கின்றன, அந்த மாதிரி போலியான அறிவு தளத்தில் நிற்காது – நல்ல அறிவு தளத்தில் – நமக்குரிய அறிவு தளத்தில் நின்று கதை எழுதுவது என்பது சிலபேருக்கு கைவந்திருக்கிறது. இப்படி கைவந்தவர்களில் சில பேரை குறிப்பாகச் சொல்லலாம். புதுமைப்பித்தனைச் சொல்ல வேண்டும். புதுமைப்பித்தனால் அரங்கநாதன் பாதிக்கப்படுகிறார் என்று நண்பர் சொன்னார். அது எனக்கு அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை ஏனென்றால் புதுமைப்பித்தன் கால சிந்தனையில் பலவிதமான கலப்படங்கள் வந்திருக்கின்றன. ஓரளவு தெளிவின்மை கூட இருந்த்து என்று சொல்லக்கூடும். அரங்கநாதன் சிந்தனையில் – அவர் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எழுதுகிறார் என்பதாலேயே ஓரளவிற்கு சிந்தனைத் தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லக்கூடும், சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. இதேமாதிரி பூரணத்துவம் தெரிகிறது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். இந்த மாதிரி பலபேர் எழுதியிருக்கிறார்கள். சுந்தர்ராமசாமியில் பிரசாதம் என்றி சிறுகதைத் தொகுப்பில் பல கதைகள் அந்த மாதிரியாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். தி. ஜானகிராமன் ஆரம்பகாலத்தில் எழுதிய கதைகள் கொட்டுமேளம் முதலிய தொகுப்புக்களில் வந்த கதைகள் – அந்த மாதிரி பல.

இப்படி சொல்லக்கூடியவர்களில் இருபது முப்பது பேர்கள் நம்மிடையே தேறுவார்கள். அந்தமாதிரியாக ஒரு கனமாக தளத்தில் போலியல்லாத அறிவு தளத்தில் நின்று கதைகள் எழுதுகிற கலை அரங்கநாதனுக்கு நன்றாக்க் கைவந்திருக்கிறது என்பது இந்தக் கதைகளைப் படிக்கும் போது தெரியும். நாம் ஒவ்வொரு கதையாக படித்துச் சொல்ல வேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் ஒவ்வொரு கதையிலுமே முத்துக்கறுப்பன் என்கிற பெயரை அறிமுகம் செய்து வைக்கிற போதே ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ கொடுக்கிறமாதிரி ஓர் உலுக்கலை ஏற்படுத்தி விடுகிறார் என்பது அவருக்கு ஒரு சிறப்பான அம்சமாக இதில் காண முடிகிறது.

இதில் இன்னொரு விஷயம், இந்தமாதிரி பாராட்டுக் கூட்டங்கள் போட்டு ஒரு ஆசிரியரை பாராட்டுகிறபோது, ஓஹோ நாம் ஏதோ பிரமாதமாக செய்து விட்டோம் என்று அந்த ஆசிரியர் திருப்திபட்டுக் கொண்டே அதோடு நிறுத்திவிடவோ கூடும். அந்த மாதிரி அரங்கநாதன் செய்யமாட்டார் என்று நம்புகிறேன். அவருக்கு ஒரு மெச்சூரிட்டி இருக்கிறது. இந்தக் கதைகளிலேயே அது தெரிகிறது. இவருடைய முதல் புத்தகத்தை – ‘பொருளின் பொருள் கவிதை’ என்றப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னார்கள். அதுவும் விளக்கமுடியாத கவிதையைப் பற்றி, சொல்ல இயலாத சில விஷயங்களை, தமிழ் வார்த்தைகளில் சொல்வதற்கு அவர் முயன்றுபார்த்திருக்கிறார். அதுமிகவும் நல்ல முயற்சி. அந்த மாதிரியான ஒரு முயற்சி தமிழுக்கு மிகவும் புதிது. மிகவும் அவசியமானது. பல பேர் செய்து பார்த்திருக்க வேண்டியது. அவரவர்கள் நோக்கிலிருந்து செய்து பார்க்க வேண்டியதென்று எனக்கு தோன்றுகிறது. அந்தமாதிரி இந்தக்கதைகளைத் தொடர்ந்து அவர் நாவல்கள் எழுதலாம், கவிதைகள் எழுதலாம். எது எழுதினாலும் இந்தச் சிறுகதைகளுக்கு அப்பால் போவதாக அமையவேண்டும் என்பது எனது வேண்டுகோள். அது மிகவும் அசவியம். ஏனென்றால் இலக்கியத்தில் சாதனை என்பது ஏதோ ஓரிடத்தில் நின்று விடுவதல்ல. அது மேலே மேலே என்று போய்க் கொண்டிருப்பதால் தான் இன்னும் பலர் எழுத வேண்டியதாய் இருக்கிறது. எழுதியவரே தான் செய்த்து போதாது என்று ஒரு நிலையில்தான் அடுத்த புத்தகத்தையும் எழுத வேண்டியிருக்கிறது. அதற்கு ஓர் அளவிற்கு ஒரு மெச்சூரிட்டி வேண்டும். இதோடு அவர் திருப்தி அடைந்துவிடக் கூடாது என்கிற நினைப்பு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு இதைச் சொல்கிறேன். அது அவருக்கு இருக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அவர் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.

நன்றாக எழுதுகிறவர்கள் மிகவும் அருகிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக இலக்கியம் என்று கேட்பவர்கள் மேலைநாடுகளில் இப்போது இருக்கிறார்கள். சினிமா போதாதா டீ.வி. போதாதா மற்றும் வேறு பல விஷயங்கள் இருக்கின்றனவே – உலகில் அதெல்லாம் போதும் – இலக்கியம் என்ற ஒன்று ஏதோ பத்துபேர் கூடிக்கொண்டு ஏதோ ஒன்றை எதற்காக செய்கிறார்கள் என்று கேட்கிற ஒரு நிலைமை வந்திருக்கிறது என்பது பேராசிரியர்கள் வாயிலாக தெரிகிறது. ஆங்கிலப் பேராசிரியர்கள் கேட்கிறார்கள். நாம் இதுவரையில் முன்னூறு நானூறு வருடங்களாக இலக்கியம் இலக்கியம் என்று சொல்லிக் கொண்டு வந்ததெல்லாம் இனிமேல் எடுபடாது – செல்லாது. ஏனெனில் டி.வி.யும் காமிக்ஸ் புத்தகங்களும் சினிமாவும் தான் பிரயோஜனப்படும் என்று சொல்லி ஒதுங்கிக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால் இலக்கியத்திற்கு என்றைக்குமே ஒரு தேவை இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. கனமான விஷயங்களுக்கு எப்போதுமே ஒரு வால்யூ, தேவை இருக்கத்தான் செய்கிறது. இந்த சினிமா, டி.வி. என்று சொன்னாலும் கூட அவைகளெல்லாம் வார்த்தை என்கிற – மொழி என்கிற – ஒரு சரடோடு இணைக்கப்பட்டதாகத் தான் இருக்கிறது. இந்த மொழி என்பதை சரியாகத் தெரிந்து கொள்ள, சரியாகச் செயல்படும்படியாக செய்வதற்கு கனமான இலக்கிய ஆசிரியர்கள் எந்தக் காலத்திற்கும் தேவைப்படுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. சற்றேறக்குறைய ஒரு மூவாயிரம் வருடங்களாக இலக்கியம் என்கிற சரடை – கனமாக சரடை – புரிந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு பாராட்டுகள் ஓரளவு ஆர்வமுள்ளவர்கள் அதிகமாக ஈடுபடுவதில்லை என்றாலுங்கூட இலக்கியம் என்பது இருந்துகொண்டுதான் இருக்கும்.

இந்த இலக்கியம் என்பது இருந்து கொண்டிருக்கிற வரையில் அரங்கநாதன் போன்றவர்கள் நிறைய செய்ய வேண்டிய காரியங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்து வெயல்படவேண்டியது மிகவும் அவசியம். ஆனால் இந்த மாதிரிப் புத்தகங்களை ஆயிரம்பேர் கூட படிப்பதில்லையே என்ற ஒரு கேள்வி தமிழ்நாட்டில் பிரத்யேகமாக தமிழ் நாட்டிற்கு மட்டும் உரியதாக – இருந்துக் கொண்டிருக்கிறது. இதை எப்படித் தீர்த்து வைப்பதென்றுதான் தெரியவில்லை. நல்ல கதைகளாக எழுதியிருக்கிறார். நல்லப் புத்தகமாக நல்ல அச்சாக ப்ரூப் மிஸ்டேக்ஸ் இல்லாமல் வருகிற புத்தகங்கள் மிகவும் குறைவு என்பது புத்தகங்கள் படிக்கிற எல்லாருக்கும் தெரியும். இப்போது ஆங்கிலத்தில் வருகிற தினசரி பத்திரிகைகளில் கூட ஒரு பக்கத்திற்கு மூன்று ப்ரூப் மிஸ்டேக்ஸ் வந்துவிடுகிறது. இந்த மாதிரி புத்தகங்கள் – அமைப்பு எல்லாமே நேர்த்தியாக வந்திருக்கின்ற புத்தகத்தை வாங்கவேண்டியவர்கள் மிகவும் அதிகமாக இருக்கவேண்டும். அதிகமாக என்றால் பத்தாயிரக் கணக்கில் வேண்டாம், ஆயிரம் இரண்டாயிரம் என்கிற அளவிலாவது இருக்க வேண்டும் என்கிற நினைப்பு நம் எல்லாருக்கும் இருக்கிறது. அந்த மாதிரி வாசகர்களை – காசு கொடுத்து புத்தகம் வாங்கி படிக்கிற வாசகர்களை – கண்டு பிடிப்பது மிகவும் சிரம்மாக இருக்கிறது. இதை எப்படித் தீர்த்துவைப்பது என்பது என் காலத்தில் நடக்கப் போகிற காரியமல்ல. நமது சந்த்தியர் காலத்தில் – உங்கள் காலத்தில் – நடப்பதற்கு ஏதாவது வழி ஏற்படவேண்டும்.

நல்ல புத்தகங்களைப் படிப்பவர்கள் பத்துப் பேரிடமாவது ஒரு மாதத்தில் இந்தப் புத்தகம் படித்தேன் நன்றாக இருந்த்து என்று திருப்பித் திருப்பி அவர்கள் நம்மிடம் என்ன சொன்னாலும் கூட பொறுத்துக் கொண்டு சொல்ல வேண்டும் என்று நண்பர் சொன்னார். அதையே வேண்டுகோளாக நானும் விடுக்கிறேன். யாரிடமும் புத்தகம் படிக்காதவர் என்று தெரிந்தாலுங் கூட சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த விளம்பரத்திற்கு ஓர் உபயோகம் இருக்கும். இதை நான் முப்பது வருடங்களாக சில பேர்களை திருப்பித் திருப்பிச் சொல்லியே ஓரளவிற்கு அவர்கள் புத்தகங்களுக்கு ஒரு டிமாண்ட் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. அது எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிற ஒரு விஷயம். இந்த மாதிரி விளம்பரப்படுத்த வேண்டியது நல்ல புத்தகங்களை – விளம்பரப்படுத்த வேண்டியது – மிகவும் அவசியம். சிறுகதைகள் மிகவும் குறைவாகவே – நல்ல கதைகள் என்று சொல்லக்கூடியவை – இந்தக் காலத்தில் வருகின்றன என்று சொல்ல வேண்டும், இந்தச் சிறுகதைகளில் – மிகவும் குறைவாக வருகிறவைகளில் – மிகவும் சிறந்த ஒரு கதைத் தொகுப்பாக இந்த ‘வீடு பேறு’ என்னும் கதைத் தொகுப்பு அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு கதையும் ஒரு அனுபவமாக அமைகிறது என்று சொல்வது மட்டும் போதாது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கதையைப் படிக்கிற போதும் மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூணடுகிற ஒரு அம்சம் இதில் இருக்கிறது. அந்த கனம் அரங்கநாதனின் ஒரு ஸ்பெஷாலிட்டி என்றும் சொல்லலாம். திருப்பித் திருப்பி படிப்பதற்கு இதில் விஷயமிருக்கிறது. இதை வெறும் கதையாகச் சொல்லியிருந்தால் – சம்பவமாகச் சொல்லியிருந்தால், சம்பவம் முடிந்துவிட்டது – கதையை முடித்த பிறகு அந்த சம்பவம் ஞாபகம் இருக்கும். அந்த சம்பவத்திற்கு முந்தைய சம்பவமும் ஞாபகமிருக்கும். திருப்பி எடுத்து படிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அந்த சம்பவங்களைச் சொல்வதில் இவர் ஓர் உத்தியைக் கையாளுகிறார். இதை எவ்வளவு பேர் நீங்கள் படித்திருக்கிறீர்கள் என்று தெரியாது. ‘எர்னஸ்ட் ஹெமிங்க்வே’ என்பவர் ஒரு சிறப்பான இலக்கிய ஆசிரியர் என்று பெயர் வாங்கிய முதல் புத்தகம் Farewell to Arms என்ற ஒரு புத்தகம். 1924-25ல் வெளிவந்த்து. அந்த புத்தகத்தைப் பற்றி விமர்சகர்கள் பாராட்டிய ஓர் அம்சம் என்னவென்றால், இந்த நாவலில் சொல்லிய விஷயங்கள் மிகவும் சிறப்பானவை என்று சொல்லி ஹெமிங்க்வே என்பவருக்கு ஒரு முதல்தரமான இலக்கிய அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

அந்த மாதிரி அரங்கநாதனின் சிறுகதைகளில் சொல்லாத விஷயங்கள் – அரணையைப் பற்றி – அரணை என்கிற பெயரே சொல்லாமல் வந்திருக்கிறது என்று நண்பர் வாசித்துக் காண்பித்தார். அந்தமாதிரி சொல்லாமல் விட்ட விஷயங்கள் எழுப்புகிற தொனி நம்மை மீண்டும் மீண்டும் இந்தக் கதைகளை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டிவிடக் கூடியவை. இந்த சொல்லாமல் விட்ட விஷயங்களை எப்படி நாம் கிரகித்துக்கொள்கிறோம் என்பது ஒவ்வொரு தடவை படிக்கிற போதும் இதை முதல் தடவை நாம் கவனிக்க முடியவில்லையே இரண்டாவது தடவை தானே கவனிக்க முடிந்தது – இன்னும் என்ன இருக்கிறது இதில் கவனிப்பதற்கு என்று யோசித்துப் பார்த்துப் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதே மாதிரி படிக்க வேண்டிய இலக்கிய ஆசிரியர்கள் தமிழில் இதற்கு முன் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் சில கதைகள் எல்லாம் திரும்பத் திரும்ப படித்து அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டிய கதைகள்.

அதற்கு மாறாக படித்த உடனேயே புரிந்து விடுகிற கதைகளை சிலபேர்கள் மிகவும் விறுவிறுப்பாக எழுதியிருந்தாலும்கூட அவர்களை இலக்கிய ஆசிரியர்களாக ஏற்றுக் கொள்வது மிகவும் சிரம்மாக இருக்கிறது. இதை இலக்கியத்திற்கே ஒரு தொனி என்கிற அடிப்படையைத்தான் அதாவது உடனே விளங்காத ஆனால் பின்னால் நிச்சய விளக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிற விஷயங்கள் சிறுகதையில் ஏற்படுகிறபோது – கவிதைகளில் ஏற்படுகிற மாதிரி – நாவல்களில் கூட இதுமாதிரி உண்டு – இலக்கியத் தரமாக இருக்கிற நாடகங்களிலும் உண்டு – இந்த தொனி என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அது அரங்கநாதனில் மிகவும் பூரணமாக தொனிக்கிறது என்கிற விதத்தில் இந்தச் சிறுகதைகள் உள்ளன. இது 1987ல் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு மூன்று வருடங்களில் என் கண்களில் கிட்டத்தட்ட ஒரு இருபத்தைந்து சிறுகதை தொகுப்புகள் பட்டிருக்கும். அதில் மிகச்சிறந்த ஒன்றாக இதை நான் கருதுகிறேன் என்று சொல்லி அரங்கநாதனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறுகிறேன்.

ஒரு இரண்டாயிரம் பேராவது வாங்கிப்படிப்பதற்கு ஏதாவது வசதி செய்வதற்கு விளம்பரப் படுத்துவதற்கு யாராவது உதவினால் நல்லது என்று நினைக்கிறேன். நல்லப் புத்தகங்கள் என்று சொல்லி – எடுத்துச் சொல்லி நூறுபேருக்கு அல்லது ஆயிரம் பேருக்கு இந்தப் புத்தகம் நல்ல புத்தகம் என்று சொல்லி, எழுதி, தெரியப்படுத்துவதற்காக ஒரு ஸ்தாபனம் மிகவும் அவசியமென்று கருதுகிறேன். நல்ல சிறுகதைகள் வெளியிடுவதற்கு இப்போது தமிழில் ஸ்தாபனங்கள் எதுவும் இல்லை. எல்லாரும் மணிக்கொடி மணிக்கொடி என்று அந்தக் காலத்தில் இருந்து ஒரு பத்திரிகையைப் பற்றி பேசுகிறார்கள். அது இருந்தது-போனது. ஆனால் இப்போது என்ன பண்ண வேண்டும். நல்ல கதைகள் எழுதுகிறவர்கள் எங்கே எழுதுவது என்று கேட்டால் ஏதோ ஒரு கணையாழி இருக்கிற மாதிரிச் சொல்லலாம் – சில சமயம் அது நல்ல கதைகள் போடுகிறது. ஏதோ தீபத்தில் சில சமயம் நல்ல கதைகள் வருகின்றன. இந்த மாதிரி ஒன்றிரண்டு பத்திரிகைகள். இப்படியிருக்கிற ஒரு நிலையில் இம்மாதிரி கதைகள் எல்லாம் வெளிவருவதற்குக்கூட ஏதாவது ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செய்யவேண்டும். இது எப்படி நடக்குமென்று எனக்கு தெரியாது. நான் இதையெல்லாம் பல தடவை சொல்லிச் சொல்லி தோற்றுப் போனவன் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு விஷயம். இதை எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இது இப்படியே தொடர்ந்து ஆனந்த விகடனில் வருகிற கதைகள் போதும் – குமுதம் கதைகள் போதும் என்று தமிழர்கள் காலத்தள்ளுவது சரியல்ல என்று தோன்றுகிறது. இந்தக் கதைகளுக்கு அப்பால் சிறுகதை என்ற ஓர் இலக்கியம் உண்டு. அந்த சிறுகதைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதைப் படிக்க வேண்டியவர்கள் ஆயிரம் இரண்டாயிரம் பேராவது தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்கிற ஒரு நினைப்பு ஏற்படவேண்டும். அது எப்படி ஏற்படும் என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தான் பலருக்கும் சொல்லி இந்த மாதிரி நல்ல புத்தகங்களைப் படிப்பதற்கு வாசகர்களைத் தூண்ட வேண்டும் என்று எண்ணுகிறேன் இலக்கியத்திற்கு ஒரு இயக்கமாக இயங்க வேண்டியவர்கள் இலக்கிய ஆசிரியர்கள் அல்ல. இலக்கிய ஆசிரியர்கள் வாசகர்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நன்றாக எழுதுவதே நின்றுவிடும். வாசகர்கள் தாம் தங்களது ரசனையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, தங்களது ரசனையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, தங்களது அறிவை விருத்தி செய்து கொள்வதற்கு, தங்களது தமிழ் வளத்தை விருத்தி செய்து கொள்வதற்கு நல்ல புத்தகங்களை தேடிக் கொண்டுபோய்படித்தாக வேண்டும். அப்படி தேடிக் கொண்டுபோய் படிப்பதுடன் மற்றவர்களையும் வாசிக்கச் செய்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும்.

நன்றி: மா. அரங்கநாதன் தளம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: