ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு முன்னுரை-இ.பா

  ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு”  – இந்திரா பார்த்தசாரதி

முன்னுரை

‘கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோர்வுகளையும், ஆரோகண அவரோகங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.’

‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில், ஆதவன் தம்முடைய சிறுகதைகளைப் பற்றி இவ்வாறு விமர்சிக்கிறார். அவர் ‘கூடாரங்கள்’ என்று குறிப்பிடுவது aathavan அவருடைய சிறுகதைகளை. இந்தப் புத்தகந் தான் (‘முதலில் இரவு வரும்’) அவருக்குச் சாகித்திய அகெதமி விருதை வாங்கித் தந்தது.

இலக்கியத்தைப் பற்றி ஆதவன் கொண்டிருக்கும் கொள்கையையும், மேற்காணும் கூற்று நிறுவுகிறது. ஆரவார மற்ற அமைதியான சூழ்நிலையில், தனிமையின் சொர்க்கத் தில், தன்னுருவ வேட்டையில் இறங்கி, தன் அடையாளத்தைக் காணும் முயற்சியே இலக்கியம்.

இவ்வடையாளம், சூன்யத்தில் பிரசன்னமாவதில்லை ‘நான் – நீ’ உறவில்தான் அர்த்தமாகிறது. இலக்கியம் தனி மொழியன்று. உரையாடல். உரையாடல் என்பதால் இது நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது எண்ணத்தின் நிழல். வாசகன் மீது நம்பிக்கை வைக்காமல் தனக்குத்தானே உரக்கச் சிந்தித்துக் கொண்டிருக்கும் எழுத்து இலக்கியமாகாது.

ஆதவன் தன் கதைகள் முழுவதிலும் ‘உரக்கச் சிந்திக்கிறார்’ என்பது உண்மை. ஆனால் வாசகனுடன் உரையாடுகின்றோம் என்பதை அவர் மறக்கவில்லை என்பது தான் அவர் எழுத்தின் வெற்றி.

அவர் தன் எழுத்தின் மூலம், சமூகத்துடனிருக்கும் தம் உறவை, அடையாளத்தை, மிக நளினமாக, கலை நேர்த்தியுடன் உறுதிப்படுத்திக் கொள்ள முயலுகிறார்.

தில்லியில் சிறுவயதிலிருந்தே இருந்து வந்த இவர், தமிழில் எழுதுவதென்று துணிந்ததே, தம் வேரைத் துண்டித்துக் கொள்ள முயலவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அதே சமயத்தில், தமிழ் நாட்டின் தற்காலத்திய கலாச்சாரச் சூழ்நிலையிலிருந்து ஒதுங்கி, ஒரு பார்வையாளராக இச் சமூகத்துக்குள் தம் முகத்தைத் தேடுவதையே ஓர் இலக்கிய விளையாட்டாகக் கொண்டிருப்பதுதான் இவர் எழுத்தின் பலம்.

இவர் தம்முடைய நூல்களுக்கு எழுதிய பல முன்னுரைகளில், தாம் எழுதுவதை, ஒரு ‘விளையாட்டு’ என்றே குறிப்பிடுகிறார். ‘விளையாட்டு’ என்றால் வெறும் பொழுதுபோக்கு என்று கொள்ளக் கூடாது. தத்துவக் கண்ணோடு பார்க்கும்போது, எல்லாமே, பாவனைதான். ‘அலகிலா விளையாட்டுடையார்’ என்று முத்தொழில் செய்யும் இறைவனையே குறிப்பிடுகிறான் கம்பன். இலக்கியமும் முத்தொழில் ஆற்றுகின்றது. எழுத்தாளனை இவ்வகையில் இறைவன் என்று கூறுவதில் எந்தத் தடையுமிருக்க முடியாது.

‘விளையாட்டு’ என்று கொள்ளும் சிந்தனையில்தான், எழுத்தாளனால் தன்னைச் சமூகத்தோடு ஆரோக்கியமான உறவு கொண்ட நிலையில், தத்துவார்த்தமாக ‘அந்நியப் படுத்தி’க்கொள்ளவும் முடியும். இதுதான் அவனுக்குப் ‘பார்வையாளன்’ என்ற தகுதியைத் தருகிறது. ‘பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன், உலகத்தினர் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதையோ அல்லது சமரஸம் செய்து கொள்வதையோ, ஒதுங்கிய நிலையில் தன் கை விரல் நகத்தைச் சீவியவாறு பார்த்துக் கொண்டிருக்கிறான்’ என்று ஜேம்ஸ் ஜாய்ஸ் கூறுவது போல், எழுத்தாளனும் இறைவன் நிலையிலிருந்து, பார்வையாளனாக இருக்கும் போதுதான் அவன் படைக்கும் இலக்கியம் கலைப் பரிமாணத்தைப் பெறுகின்றது.

ஆதவன் கூறுகிறார்: ‘சொற்களைக் கட்டி மேய்ப்பது எனக்குச் சின்ன வயதிலிருந்தே பிடித்தமான காரியம். அவற்றின் இனிய ஓசைகளும், நயமான வேறுபாடுகளும், அவற்றின் பரஸ்பர உறவுகளும், இந்த உறவுகளின் நீந்துகிற அர்த்தங்களும், எல்லாமே எனக்குப் பிடிக்கும். மனிதர்களையும் எனக்குப் பிடிக்கும். மனிதர்களுடன் உறவு கொள்வது பிடிக்கும்.’

சொல், தனி மனிதன் சமூகத்தோடு கொள்கின்ற உறவை நிச்சயப்படுத்தும் ஒரு கருவி. சமூகரீதியாக உணர்ச்சிப் பரிமாற்றங்களைத் தெரிவிப்பது சொல். சமுதாயத்தில் மனிதச் சந்திப்பினாலோ அல்லது மோதலினாலோ ஏற்படும், அல்லது ஏற்பட வேண்டிய மாறுதல்களை அறிவிப்பது சொல் விஞ்ஞானத்தின் பரிபாஷை கலைச்சொற்கள். (Technical language) இலக்கியத்தின் பரிபாஷை அழகுணர்ச்சி (aesthetics). சமுதாய ஒப்பந்தமான சொல், இலக்கியமாகப் பரிமாணமமுறும்போது, அது அச்சொல்லை ஆளுகின்றவனின் உள் தோற்றமாக (Personality) அவதாரம் எடுக்கின்றது. இதுதான் அவனது சமூகத்தில் அவனுக்கேற்படும் அடையாளம். சொல்தான் சமுதாய உணர்ச்சியைத் தெரிவிக்கும் கருவி. சமுதாய ஒப்பந்தத்தின் செலாவணி.

ஆதவன் தம் உருவ வேட்டையில் தம்மை இழந்து விடவில்லை. ‘இயற்கையைப் பற்றிப் பாடிய இருவர்களில் ஷெல்லி இயற்கையில் தம்மை இழந்தார். வேர்ட்ஸ்வொர்த் தம்மைக் கண்டு தெளிந்தார்’ என்று விமர்சகர்கள் கூறுவார்கள். ஆதவன் தன்னை, ‘சொற்களை மேய்த்து’ ‘விளையாடி’க் கண்டு கொள்ளும் முயற்சிகளாகத்தாம் அவர் எழுத்து அமைகின்றது.

இவருடைய ‘அடையாளம்’ என்ன? அவரே எழுதுகிறார். என்னுடைய ‘நானை’ இனம் கண்டு கொள்வதற்காக நான் எழுதுவதுண்டு. என்னுடைய ‘நானி’லிருந்து விலகி இளைப்பாறவும் எழுதுவதுண்டு. எல்லா ‘நான்’களுமே நியாயமானவையாகவும், முக்கியமானவையாகவும் படும். ஆகவே, என்னுடைய ‘நான்’ என்று ஒன்றை முன் நிறுத்திக் கொள்வதும், பிறருடைய ‘நான்’களுடன் போட்டியிடுவதும் குழந்தைத் தனமாகவும் தோன்றும். ஆமாம். நான் ஓர் ‘இரண்டு கட்சி ஆசாமி’

இரண்டு கட்சி ஆசாமி எனும்போது அவர் தம்மை ஒரு Paranoid Schizo Phrenic ஆகச் சித்திரித்துக் கொள்ளவில்லை. உளவியல் தர்க்கத்தின்படித் தம்மை வாதியாகவும் பிரதி வாதியாகவும் பார்க்கும் தெளிவைத்தான் குறிப்பிடுகிறார். இதனால், தனிமனிதனுக்கும், சமுதாயத்துக்குமிடையே உள்ள உறவில் காணும் முரண்பாடுகளை அவரால் புரிந்துகொள்ள முடிகின்றது. புரிந்து கொள்கின்றாரேயன்றித் தீர்ப்பு வழங்க முன் வருவதில்லை. இது தம்முடைய பொறுப்பில்லை என்று ஒதுங்கி விடுகிறார்.

இதனால்தான் இவருக்கு இலக்கியம் பற்றிய கொள்கைத் தீவிரம் எதுவுமில்லை என்ற ஓர் அபிப்பிராயம் இவரைப் பற்றி சில இலக்கிய விமர்சகர்களிடையே உண்டு.

இதைப் பற்றியும் அவரே கூறுகிறார்: ‘திட்டவட்டமான சில எதிர்பார்ப்புகளைத் திசை காட்டியாகக் கொண்டு இலக்கியத்தில் ஏதோ சில இலக்குகளைக் கணக்குப் பிசகாமல் துரத்துகிற கெட்டிக்காரர்கள் மீது எனக்குப் பொறாமை உண்டு. திசைகாட்டி ஏதுமின்றி, பரந்த இலக்கியக் கடலில் தன் கலனில் காற்றின் போக்கில் அடித்துச் செல்லப்பட விரும்பும் சோம்பேறி நான். இலக்குகளிலும், முடிவுகளிலும் அல்ல, வெறும் தேடலிலேயே இன்பங் காணும் அனைவரையும் இனிய தோழர்களாக என் கலன் அன்புடன் வரவேற்கிறது!’

எழுத்தாளன் ஒருவனுக்குக் ‘கொள்கைத் தீவிரம்’ தேவையா என்ற கேள்வி எழுகின்றது. பட்டயத்தைக் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு, அப்பட்டயத்தை நியாயப்படுத்துவதற்காக எழுதுவதுதான் ‘கொள்கைத்தீவிரமா’ என்றும் கேட்கலாம்.

படைப்பாளி படைக்கிறான். விமர்சனப் பாதிரி நாம கரணம் சூட்டுகிறான். இதுவே பட்டயமும் ஆ கிவிடுகின்றது. பல சமயங்களில், இப்பட்டயத்தையே ஓர் சிலுவையாக எழுத்தாளன் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது தான், அவன் படைப்பாற்றல் ஒரு வரையறைக்குள் குறுகி, அவன் எழுத்து, சலிப்பைத் தரும் ஓர் ‘எதிர்பார்க்கக் கூடிய’ (Predictable) விஷயமாக ஆகிவிடுகின்றது.

கலையின் சிரஞ்சீவித் தன்மை, அது தருகின்ற ‘ஆச்சர்யத்தில்’ தான் இருக்கிறது. ஒரே ராகத்தை ஒரு சங்கீத மேதை பல்வேறு சமயங்களில், பல்வேறு விதமாகப் பாடுவது போல. ind_paaஆதவன் எழுத்தில் இந்த ‘ஆச்சர்யத்தை’ என்னால் காண முடிகின்றது. ‘ஒரு பழைய கிழவர், ஒரு புதிய உலகம்’ எழுதிய ஆதவன் தான், மிக நளினமான காதற் கதைகளும் எழுதியிருக்கிறார்.

ஆனால் எல்லாக் கதைகளிலும், அடிப்படையாக ஒரு விரக்தியை நம்மால் உணர முடிகின்றது. அவர் கதை ‘இன்டர்வியூ’வில் வரும் சுவாமிநாதன் கூறுவது. ஆசிரியருடைய மன நிலையையும் பிரதிபலிக்கின்றது. ‘முதலாவதாக இருப்பதற்கும் கூச்சம், கடைசியாக இருப்பதற்கும் வெறுப்பு’ ‘முதலில் இரவு வரும்’ என்ற தலைப்பே, இவர் மன இயல்பை வெளிப்படுத்துகின்றது. ‘குளிர் காலம் வந்தால், இதற்குப் பிறகு வசந்தம் நிச்சயம் வந்துதானே ஆகவேண்டும்?’ என்று ஷெல்லி கூறுகிறான். ஆதவனும் வரவேற்பது ‘முதலில் இரவு’; அக்கதையில் ராஜாராமன் சொல்லுகிறான்: ‘ராத்திரி, ராத்திரி முடிஞ்சப்புறம் மறுபடியும் சூரியன் வரும். வெளிச்சமா ஆயிடும். அதுதான் நாளைக்கு’.

நிகழ்காலம் நரகம், வருங்காலம் சொர்க்கம், நிகழ்கால விரக்தியைத் தவிர்க்க முடியாது. ஆனால் ‘நாளைக்கு’ என்பதும், ‘இன்றைக்கு’ என்று ஆகிவிட்டால், அப்பொழுதும் சொர்க்கம் நரகமாகிவிடும். அது, நிச்சயமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய ‘நாளை’யாக இருப்பதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது. இந்த எதிர்பார்ப்புதான் வாழ்க்கையின் கால அட்டவணை.

‘ஒரு பழைய கிழவர், ஒரு புதிய உலகம்’ என்ற கதையில் ஆதவன் (இக்கதையை எழுதும்போது இவர் வயது 31) ஒரு கிழவரின் அகத்தில் புகுந்து கொண்டு சிந்தனை ஓட்டமாகக் கதையில் சொல்லுகிறார். புற நிகழ்ச்சி ஒவ்வொன்றும் அவருடைய சிந்தனை, விளக்கை ஒளி வீசச் செய்வதற்காகப் பயன்படும் மின்சார ‘ஸ்விட்ச்’. மனைவியை இழந்த கிழவர் மகன் வீட்டிலிருக்கிறார். தம் உலகை இழந்து விட்ட தவிப்பில் அவர் புதிய உலகைக் கண்டு மருள்கிறார். அவருக்குப் பிடித்தமான நாவிதன் கடைக்கு முடி வெட்டிக் கொள்ளச் செல்லும்போது, தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு நிரந்தரமான சலிப்பில் உழலும், இக்கால இளைஞர்களைக் கண்டு, புதிய உலகம் இப்படி ‘உருப்படியான தீவிரப் பிடிப்பில்லாமலும், நம்பிக்கை இல்லாமலும் ஆழமான எதனுடனும் தம்மைச் சம்பந்தப் படுத்திக் கொள்ளாமலும் இருக்க வேண்டுமா என்று மனம் வருந்துகிறார். தம் உலகத்திய வாழ்க்கை மதிப்புகளைப் பற்றி எண்ணிப் பார்க்கிறார். தம் மண வாழ்க்கையையும், தம் மகனின் மண வாழ்க்கையையும் பற்றி எண்ணிப் பார்க்கும் போது, இத்தகைய அந்தரங்க உறவுகளில் கூட இக்காலத்தில் போலித் தனம் மேலோங்கி இருக்க வேண்டுமா என்பதுதான் அவர் வேதனை. அவர் மகனும், மகளும் கல்லூரி ஆசிரியர்கள்.

அன்று மாலை பல்கலைக் கழகப் பேராசிரியாகிய மோத்வானியும், அவர் மனைவியும் பேச வருகிறார்கள். மோத்வானி இக்கால அறிவு உலகின் பிரதிநிதி. போலி அறிவு ஜீவி. இடம், வலம், நடு ஆகிய எல்லா அரசியல் கட்சிகளையும் சார்ந்தவர். அதாவது, வாழ்க்கையில் வெற்றி அடைவது எப்படி என்று அறிந்தவர். விஸ்கி குடித்துக் கொண்டே, வறுமையற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முயலுவதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த ‘ட்ராயிங் ரூம்’ சோஷலிஸ்டுகளின் உரையாடலில் பங்கு கொள்ளாமல் கிழவர் ஒதுங்குகிறார். அவருக்கு அன்று காலை மயிர் வெட்டிவிட்ட நாவிதனை போலித் தனமான மனக் கிளர்ச்சியின் வெளியீடாக ஓர் இளைஞன் கத்தியால் குத்தி விட்ட விபரீத செய்தியைக் கெட்கிறார். கள்ளங் கபடமற்ற தன் பேத்தியை இறுகத் தழுவிக் கொள்வதுடன் கதை முடிகிறது.

இளைஞனின் ‘அந்நியமாதல்’ கதைகளைப் படித்த நமக்கு ஒரு கிழவரின் ‘அந்நியமாதல்’ கதை ஒரு வேறு வகையான அனுபவம். இக்கிழவர் உலகை வெறுக்கவில்லை. நாவிதனின் ஸ்பரிஸம், முடி வெட்டிக் கொண்டு வெந்நீரில் குளித்தல், நல்ல காப்பி ஆகிய வாழ்க்கையில் சின்ன சின்ன சலுகைகள் கூட அவருக்குச் சொர்க்கமாக இருக்கின்றன. வாழ்க்கையை வெறுத்துப் போலிப் பரவசங்களில் ஆழ்ந்து நிலை கொள்ளாமல் தவிக்கும் இக்கால இளைஞர்கள் மீது தான் இவருக்குக் கோபம்.

வர்க்கப் பேதங்களுடைய சமூகத்தில், தொழில் வளர்ச்சிகளின் காரணமாகச் சமூகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பொருளாதாரக் காரணங்களினால் குடும்ப வாழ்க்கை நிலை குலைகின்றது. அடிப்படையில், பிரபுத்துவ சமூக அமைப்பை உடைய ஒரு சமுதாயத்தின் மீது, தொழில் யுக வாழ்க்கைக்குரிய மதிப்புக்கள் சுமத்தப்படும்போது, முரண் பாடுகள் மேலோங்குகின்றன. வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டு வதிலும், போலிப் பரவசங்களிலும், விளையாட்டுக்காகச் செய்யும் வன்முறைகளிலுந்தான் தங்களை நிரூபித்துக் கொள்ள முடியுமென்று இளைஞர்கள் கருதுகிறார்கள். அவர்களுக்கு நிறையக் கோபம் இருக்கிறது. யார் மீது என்றுதான் அவர்களுக்குப் புரியவில்லை; ‘இன்று’, ‘இன்றாக’ இருப்பதற்குக் காரணம் ‘இன்று’, ‘நேற்றைய தினத்தின்’ தொடர்ச்சிதான் என்று ‘நேற்றைய தினத்தை’ அடியோடு வெறுக்கும் மனப்பான்மையில், ‘நாளை’யைப் பற்றிய நினைவே இல்லாமலிருக்கிறார்கள். பழைமையை அடியோடு அழிக்கும் ஆவேசந்தான் இக்கதையில், அந்த முள்ளங்கி இளைஞனைப் பழமையின் சின்னமாக இருக்கும் நாவிதனைக் கொல்லத் தூண்டுகிறது. ஆனால் கிழவருக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை போய்விடவில்லை.

அந்தச் சிறிய குழந்தையை அக்கிழவர் தழுவிக் கொள்வதாகக் காட்டும் குறியீடு மூலம், ஆதவன், இதை அழகாக விளக்குகிறார். கிழவருக்குப் பழமையின்பாலிருக்கும் பிடிப்பு, போலித் தனமான, வெறுக்கத்தக்க ஈடுபாடன்றி, சமூக உறவுகளில் ஒருவன் தன் ‘சுதந்தரத்தை’ உணர முடியுமென்று புரிந்து கொள்ளும் கேண்மையுணர்வு. ‘சமூக உறவுகள்’ என்றால், கிழவரின் மகனுக்கும், மோத்வானிக்குமிடையே இருக்கின்ற போலித் தனமான உறவு அன்று; அவர்களுக்கும், நாவிதர் களுக்குமிடையே உள்ள உறவு, கிழவர் புதிய உலகுக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளத் தயாராகவிருப்பது ஒரு முக்கியமான விஷயம்.

‘பழமை நேர்மையும் ஆழமும் கொண்டிருந்தால், ஒருவனால் தன்னை நியாயமான, சரித்திர நிர்ப்பந்தங் களினால் ஏற்படுகின்ற புதிய மாறுதல்களுக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும். அத்தகைய உள் வலு அதற்கு உண்டு’ என்று ஜார்ஜி மார்க்காவ் கூறுகிறார்:

ஆதவனின் ஒவ்வொரு கதையும் உள் நோக்கிச் செல்லும் பயணம். அப்பயணத்தின் விளைவாகப் புலப்படும் மதிப்பீடுகளின் அடிப்படையில், புற நிகழ்ச்சிகள் பரிசீலனைக் குள்ளாகின்றன.

ஆனால் ஆதவன் தீர்ப்பு வழங்குவதில்லை. மென்மையும், நளினமும், நாசூக்கும் கலந்த நடையின் மூலம், சொல்ல விரும்பும் கருத்தை, எழுத்தின் வடிவத்தின் வழியாக உணர்த்துகின்றார்.

இதுவே அவர் கலையின் வெற்றி.

***

Advertisements
Comments
2 Responses to “ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு முன்னுரை-இ.பா”
 1. நிகழ்காலம் நரகம், வருங்காலம் சொர்க்கம், நிகழ்கால விரக்தியைத் தவிர்க்க முடியாது. ஆனால் 'நாளைக்கு' என்பதும், 'இன்றைக்கு' என்று ஆகிவிட்டால், அப்பொழுதும் சொர்க்கம் நரகமாகிவிடும். அது, நிச்சயமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய 'நாளை'யாக இருப்பதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது. இந்த எதிர்பார்ப்புதான் வாழ்க்கையின் கால அட்டவணை.

  அழியாச் சுடர்களாய் ஒளிவிடும் அருமையான வரிகள்..

  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

 2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_21.html) சென்று பார்க்கவும்…

  நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: