பகல் உறவுகள் – ஜெயந்தன்

காலை மணி ஒன்பது.கதவைப் பூட்டிக்கொண்டு அவர்கள் இருவரும் தெருவில்இறங்கினார்கள்.அந்தக் கனம் அவர்கள் இருவருக்குமிடையேயுள்ள அந்த ஒப்பந்தம் அமலுக்குவந்தது. அது தினசரி வழக்கம்.

டெரிகாட்டன் பேண்ட்,டெரிலின் சட்டை,கூலிங்கிளாஸ், மிடுக்கான நடை இவையோடுஅவனும்.கலர் மேச் ஆகின்ற உல்லி உல்லி சேலை,ஃபுல்வாயில் ஜாக்கெட்,செருப்பு,கைப்பைஇவையுடன் அவளும். அந்த ஜோடி நடை தினம் வேடிக்கைப் பார்க்கப்படுகின்ற ஒன்று. கடந்தமூன்று வருடங்களாக அவர்கள் அப்படித்தான் புறப்படுகிறார்கள்,வந்து சேருகிறார்கள் என்றாலும்சிலரது கவனத்தை இன்னமும் ஈர்க்கத் தவறாத ஒன்று. சிலருக்கு அவர்கள்மேல் பொறாமைகூட,குறிப்பாக அவள்மேjeyanthanல். ஏனென்றால் அவள் உள்ளூர்க்காரி.’அட,சின்னப்பிள்ளையில் மூக்கஒழுக விட்டுக் கிட்டு,கையும் காலும் சொரி சொரியாப் பார்க்கச் சகிக்காதுங்க’ என்றுசொல்பவர்களும் உண்டு.’அவங்கம்மா பாவம்’களை எடுத்துக் காப்பாத்துச்சுங்க’என்பவர்களும்உண்டு.

அவர்கள் இருவரும் அரசு ஊழியர்கள்.அங்கிருந்து ஐந்து மைலில் இருக்கும் முத்துப்பட்டிபஞ்சாயத்து யூனியனில் வேலை பார்க்கிறார்கள். அவன் கேஷியர். அவள் டைப்பிஸ்ட், வீட்டுவசதிக்காக இங்கே தங்கித் தினம் பஸ்ஸில் போய்வந்தார்கள்.

அவர்கள் இருவரும் தெருவில் வரும்போது எதிர்ப்படும் சிலர் புன்னகை செய்வார்கள். சிலர், “என்னா பொறப்பட்டாச்சா?” என்று கேட்பார்கள். அவன் மிடுக்காகத் தலையாட்டுவான். அந்தமிடுக்குத் கொஞ்சம் அதிகந்தான். நான் பெரிய ஆள் என்பதால்தான் சின்ன மனிதர்களாகிய நீங்கள்இப்படிக் கேட்கிறீர்கள் என்று சொல்கிற மாதிரியான மிடுக்கு. யாராவது அவளிடம் அப்படிக்கேட்டால் அவள் பதிலாக ஒருமாதிரி சிரிப்புச் சிரிப்பாள். அது அழகாக இருக்கும். அது பலநேரங்களில் அவனுக்கு எரிச்சல் தருகின்ற சிரிப்பு. ‘போயி காட்டான் மூட்டான் கிட்ட எல்லாம்பல்லக் காட்டிக்கிட்டு…’

அவர்கள் கிறிஸ்துவர்கள். அவள் ஆதி கிறிஸ்துவச்சி. அவன் பாதியில் கிறிஸ்துவனானவன்.அதாவது இவளைக் கட்டுவதற்காக அப்படியானவன்.

அவர்கள் ஒன்பது பத்துக்கெல்லாம் பஸ் ஸ்டாப் வந்து விட்டார்கள். பஸ் ஒன்பது இருபதுக்கு.பஸ் ஸ்டாப்பில் கூட்டம் அதிகமாக இருந்தது; டிக்கட் கிடைக்காதோ என்று பயப்படும் அளவுக்குஅதிகமாக இருந்தது. அப்படி அன்று திடீர்க் கூட்டத் துக்குக் காரணமாக அங்கிருந்தவர்கள்ஆளுக்கொன்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இவன், உடனே கூட்டமாகக் கூடிக் கல்யாணம் செய்பவர்களை யும், தேர்த்திருவிழா என்றுவைத்துக்கொண்டு கூட்டம் கூட்டுபவர் களையும் முணுமுணுப்பில் திட்டினான்.

ஏதோ வாங்குவதற்காக அவள் பெட்டிக்கடைப் பக்கம் நகர்ந் திருந்தபோது அவன் பக்கமாக வந்தபாலகுருவா ரெட்டியார், “என்னங்க இன்னிக்கு அவங்கள காணும்?” என்றார். இதுகிராமத்துப்பழக்கம். குட்மார்னிங் சொல்வதற்குப் பதிலாக இப்படி எதையாவது கேட்டுவைப்பார்கள். அவன் வழக்கப்படி கௌரவ மாகவும் விரைப்பாகவும், “வந்திருக்காங்க” என்றான்.அவன் வெளியிடங்களில் அவளைக் குறித்துப் பேசும்போது மரியாதை யாக, ‘அவங்க’ என்றுதான்சொல்வான். அவள் அவனை, ‘எங்க சார்’ என்பாள்.

ஒன்பது இருபது பஸ் ஒன்பது நாற்பதுக்கு வந்தது. வரும் போதே அது நிறைந்து ஸ்டாண்டிலும்நிறைய ஆட்கள் நின்று கொண்டு வருவது அதன் கண்ணாடி வழியாகத் தெரிந்தது. இங்கேஇதுவரை இங்குமங்குமாக நின்ற கூட்டம் ஒரே திரளாகி, பரத்துப் பஸ்ஸின் படிக்கட்டு எந்தஇடத்தில் நிற்கும் என்று கணக்குப் போட்டுக்கொண்டு நின்றது. பஸ் நின்றபோது நெருக்கியடித்துமுண்டி ஏறப் போய், ‘யாரும் ஏறாதீங்க’ என்ற கண்டக்டரின் கண்டிப்பான கட்டளையால் தயங்கிஏறாமல் அண்ணாந்து கொண்டு நின்றது.

அவனும் அவளுங்கூட அங்கே ஓடி வந்திருந்தார்கள். அவள், பஸ் படியின் இடதுபுறக் கம்பியைப்பிடித்துக் கொண்டிருந்த பாலகுருவா ரெட்டியாருக்கு அடுத்தபடியாகப் பஸ் பாடியில் உரசியபடிநின்றுக்கொண்டிருந்தாள். அவன் முதலிலேயே கொஞ்சம் முன்னாள் வந்திருந்தாலும் கூட்டம்நெருக்க நெருக்கக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்கிக் கூட்டத்தின் கடைசிக்குவந்துவிட்டான்.

பஸ் ஸ்டாப்பில், கூட்டத்துக்குப் பின்னால் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த பார்த்தசாரதிஎன்னும் இளைஞன், “கண்டக்டர் சாருக்கு ரெண்டு டிக்கெட் போடு, ஆபீஸ்டிக்கெட்” என்றுபலமாகச் சொன்னான். சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான். அவள் அந்தப் பாதிச் சிரிப்பைக்காட்டினாள். இவனுக்குப் பொசு பொசுவென்று வந்தது. பார்த்தசாரதி அங்கே சும்மா நின்றுகொண்டிருந்தான். அவன் பஸ்ஸிற்குப் போவதாக இருந்தால் கம்பியைப் பிடித்துக்கொண்டிருக்கும் முதல் ஆளாக அவன் தான் இருப்பான். அப்போது வாயில் சாரும் வராதுமோரும் வராது.

பஸ்ஸிலிருந்து நான்கைந்து பேர் இறங்கினார்கள். அவர்கள் இறங்கியதும் கண்டக்டர்இடக்காலை நீட்டி வாசலைக் குறுக்காக அடைத்துக்கொண்டு, “எடமில்லே” என்றான். பின்பு,பின்னால் திரும்பி கண்ணாடி வழியாகப் பார்த்தபடி, “என்னா எறங்கியாச்சா?” என்றான். மேலேடாப்பில் எதையோ போட்டுவிட்டு ஒரு ஆள் ஏணி வழியாக இறங்கிக் கொண்டிருந்தான்.

கண்டக்டர் பார்க்க நேர்ந்த சந்தர்ப்பத்தில் அவள் தன் பாதிச் சிரிப்போடு கையை உயர்த்தி இரண்டுவிரல்களைக் காட்டினாள். கண்டக்டர் சிரித்தபடி, “இல்லீங்க, நான் உதயசூரியன்” என்றான்.தேர்தலுக்கு இரண்டு மூன்று நாள்தான் இருந்ததால் அதைப் பார்த்தவர்கள் புரிந்துகொண்டுசிரித்தார்கள். அவள் அரைச் சிரிப்பை முக்கால் சிரிப்பாக்கினாள். கண்டக்டர் மறுபடியும் ஒருமுறை அவளைப் பார்த்துக்கொண்டான். பின்புறம் ஏணியி லிருந்து இறங்கிய ஆள் வந்துபஸ்ஸில் ஏறிக்கொண்டதும் கண்டக்டர் அவளைப் பார்த்து, “நீங்க ரெண்டு பேரும் வாங்க”என்றான்.

பஸ் புறப்பட்டதும் கண்டக்டருக்கு இடம் போடும் பிரச்னை. எப்படியோ ஆட்டைத் தூக்கிக்குட்டியில் போட்டுக் குட்டியைத் தூக்கி ஆட்டில் போட்டு அவளுக்கு ஓர் இடம் கொடுத்தான்.கடைசியாக அவள் உட்கார்ந்த சீட்டில் ஒரு இடம் பாக்கி விழுந்தது. நிற்பவர்களில் பெண்கள்இல்லை. யாரோ ஒருவர், “சார், அங்க உக்காரட்டும்” என்று யோசனை சொன்னார். அதன் பேரில்பின்னால் நின்றுகொண் டிருந்த இவன் வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டான். பஸ்ஸில்வந்த சிலர் தம்பதிகள் என்றாலே அவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தில் இவர்களைப்பார்த்தார்கள். இதை உணர்ந்த அவன் இன்னும் கொஞ்சம் டிரிம் ஆக உட்கார்ந்துகொண்டு பஸ்கண்ணாடி வழியாக நேரே சாலையைப் பார்த்தான்.

அவர்கள் அலுவலக காம்பவுண்டிற்குள் நுழைந்தபோது வராந் தாவில் நின்று சில ஸ்டாப்கள்பேசிக்கொண் டிருந்தார்கள். அவர்கள் இவர்களைக் கண்டதும் ஏதோ பேசிவிட்டுப் பிறகுசிரித்தார்கள். இவர்களைப் பார்த்தே சிரித்தார்கள். இவன் வந்து படியேறியபடியே, “என்னா?”என்றான். அட்டெண்டர் கிருஷ்ணன் சிரித்தபடியே, “இப்ப எங்களுக்கு ஒரு சந்தேகம் சார். இப்பஇவங்க” என்று அவளைக் காட்டி, “நம்ப ஆபிஸ் டைபிஸ்டா; இல்ல மிஸஸ் கேஷியரான்னு”என்றான். புருஷனும் மனைவியும் வெறுமனே சிரித்தார்கள். டெப்போ கிளார்க் ஜகந்நாதன், “நான்சொல்றேன், டைப்ரைட்டர் முன்னால் உக்காந்திருக்கப்ப டைபிஸ்ட், எந்திருச்சுட்டா மிஸஸ்கேஷியர்” என்றான்.

எஸ்டாபிளிஸ்ஷ்மெண்ட் மகாலிங்கம் உடனே, “ஆனா அதே சமயத்தில் இவரு cash-ல்உக்காந்திருக்கணும். இல்லேனா மிஸஸ் ராஜமாணிக்கம் ஆயிடுவாங்க” என்றான். எல்லோரும்சிரித்தனர். பிறகு அவர்கள் ஒரு பெண்ணை அவள் கணவன் பெயரைச் சொல்லி, இன்னார்மிஸஸ் என்று சொல்லும்போது ஓர் ஆணை அவன் மனைவியின் பெயரைச் சொல்லிஇன்னாருடைய மிஸ்டர் என்று ஏன் சொல்லக்கூடாது?

ஆணை மட்டும் ஏன் சுயம்புவாக மிஸ்டர் என்று சொல்லவேண்டும் என்று வாதித்தார்கள்.அவளை ஏன் மிஸ்டர் பிலோமினா என்று கூப்பிடக்கூடாது என்று கேட்டார்கள். இவர்கள்சிரித்தபடியே உள்ளே போனார்கள். அவன் சிரிப்பில், பாதி ‘ஒங்களுக்கு என்னா வேலை’ என்கிறதோரணை. அவள் சிரிப்பில் ‘அப்படியெல்லாம் நானும் உங்களைப் போல் கலகலவென்றுபேசிவிடக்கூடாது, முடியாது’ என்ற சாயல்.

அவர்கள் இருவரும் மானேஜர் மேஜைக்குச் சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப்போடவும் அங்கே மானேஜர் வரவும் சரியாக இருந்தது. அவள் தன் மேஜைக்கும் அவன் தன்அறைக் கும் சென்றார்கள்.

அவள் டைப்ரைட்டர் முன்னால் உட்கார்ந்து சுமார் பதினைந்து நிமிஷங்கள் வரை உருப்படியாகஒன்றும் ஆரம்பிக்கவில்லை. ஏதோ இப்படியும் அப்படியுமாகப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தாள். பிறகும் மனமில்லாமல் டைப்ரைட்டரில் கார்பனோடு சில பேப்பர்களைச்செருகினாள்.

அவளுக்கு எதிரே இரண்டு மேஜை தள்ளி அந்த ஹாலில் கடைசி யாக உட்கார்ந்திருக்கும்டெஸ்பாட்ச் கிருஷ்ணன் இரண்டொரு முறை அவளைப் பார்த்தான். அவள் அந்தஅலுவலகத்தில் ஐந்து வருஷங்களுக்கு முன்பிருந்த பிலோமினாதானா என்று சந்தேகம் வந்தது.இதை அவன் அவர்கள் வராந்தாவில் நின்று பேசிக்கொண் டிருந்த போதே, அவள் தன் கணவன்பின்னால் நின்று வெறுமனே சிரித்து விட்டுப் போனபோதே நினைத்தான். அவனுக்குநிச்சயமாகத் தோன்றியது. இவள் மூன்று வருஷங்களுக்கு முன் இருந்த அந்த பிலோமினாஅல்ல. அவளாக இருந்திருந்தால் அவளும் இவர் களோடு சேர்ந்து ஜோக் அடித்திருப்பாள்.கலகலவென்று சிரித் திருப்பாள். அப்போதெல்லாம் அவள் முகத்தில் அலாதியான களையின்துள்ளல் இருக்கும். ஒரு தடவை அவள் இதே டைப் ரைட்டர் முன்னால் உட்கார்ந்துகொண்டுஅடித்த ஜோக் இன்னும் அவன் நெஞ்சில் பசுமையாக இருந்தது.

அப்போது ராஜமாணிக்கம் இந்த அலுவலகத்தில் வேலை பார்க்க வில்லை. சாயக்காடுயூனியனில் இருந்தான்.

அவன் இங்கு மாற்றலாகி வந்ததுந்தான் இருவரும் காதலித்துக் கல்யாணம்செய்துகொண்டார்கள். அதற்கு முன் இந்த அலுவ லகத்தில் சோசியல் வெல்ஃபேர் ஒர்க்கராகஇருந்த சாமி சுப்ர மணியம் உபதொழிலாகச் செய்துவந்தார். அவர் இவளுக்கொரு வரன்பார்த்தார். அந்த வரன் மதுரை எல்.ஐ.சி யில் வேலை பார்த்தான். கல்யாணப் பேச்சு ஆரம்பநிலையில் இருந்தபோது பெண் பார்க்க ஒரு நாளைக்கு அவன் இந்த ஆபீஸ் வருவதாகஇருந்தது. ஆனால் அப்படிச் சொன்னபடி அவனால் இரண்டு முறை வரமுடியாமல்போய்விட்டது. ஒரு நாள் அலுவலகம் முழுவதும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தபோது இவள்சத்தம் போட்டுச் சாமி சுப்பிரமணியத்திடம் கேட்டாள்; “என்னா சார் ஒங்க மாப்புள? எப்ப சார்வரப்போறாரு?”

அடுத்த தடவை, ” அவரு பொண்ணு பார்க்க வரப்போறாரா இல்ல நான் மாப்புள பாக்கவரவான்னு கேட்டுட்டு வந்துடுங்க.” இதைக் கேட்டு அந்த அலுவலகமே வெடித்துச் சிரித்தது.இதைச் சொல்லி விட்டு அவளும் அதே விகிதத்தில் சிரித்தாள்.

இரண்டு மெட்டர்னிட்டி அஸிஸ்டெண்டுகள் மானேஜர் மேஜை வரை வந்து யாரையோதேடிவிட்டுப் போனார்கள். டைப் செய்துகொண்டிருந்த பிலோமினா அவர்களைக்கவனிக்கவில்லை. கிருஷ்ணன் பார்த்தான். அவர்களில் ஒருத்தி போவூர் மங்களம். சுமார் மூன்றுமாதங்களுக்கு முன் அவளுக்கும் பிலோமினாவுக்கும் ஈவோக்கள் ஹாலில் நடந்த சண்டையும்,அதில் ராஜமாணிக்கமும் கலந்துகொள்ள, முடிவு மிகவும் அசிங்கமாகிப் போனதையும் அவன்நினைத்துக் கொண்டான்.

ஒரு நாள் பிலோமினா இந்த ஹாலில் குடி தண்ணீர் தீர்ந்து விட்டதென்று ஈவோஸ் ஹாலுக்குவந்தாள். அங்கே எப்போதும் பத்துப் பேர் இருந்துகொண்டிருப்பார்கள். பெரிய பீரோக்கள்அப்படியும் இப்படியுமாக நிறுத்தப்பட்டிருக்கும். அங்கே ஒருவர் இருப்பதை ஒருவர்கவனிக்காமல் இருந்து விடவும் வாய்ப்பு உண்டு. பிலோமினா வந்தபோது அங்கு ஒருமூலையில் நின்று நான் கைந்து மெட்டர்னிட்டி அஸிஸ்டெண்டுகள் பேசிக்கொண்டிருந் தார்கள்.அவர்களில் போவூர் மங்களமும் ஒருத்தி. அவர்கள் பிலோமினா வந்ததைக் கவனிக்கவில்லை.அவர்களுக்கு ஏதோ பயணப் படி Cash ஆகி வந்திருந்தது. அதை வாங்க வந்திருந்தார்கள்.

ராஜமாணிக்கம் பொதுவாக மனிதர்களை மதிக்காதவன். அதிலும் Cashன் முன் உட்கார்ந்துவிட்டால் கமிஷனரையே மதிக்கமாட் டான். சும்மாவா? பணம் அல்லவா எல்லாருக்கும்கொடுக்கிறான்? அப்படியிருக்க இந்த அற்ப மெட்டர்னிட்டி அஸிஸ்டென்டுகளை மதிப்பானா?இவர்கள் போய்ப் பணம் கேட்டபோது, “அப்புறம்” என்று சொல்லிவிட்டான். பேசிக்கொண்டிருந்தவர்களிடம் புதிதாக வந்து சேர்ந்த அவர்களில் ஒருத்தி, “என்னா பணம் வாங்கியாச்சா?”என்றாள். அதற்கு இந்தப் போவூர் மங்களம், “அந்தக் கடயன் அதுக்குள்ள குடுத்துடுவானா?அவங்க அப்பன் வீட்டுப் பணத்தை அதுக்குள்ள வெளியே எடுத்துடுவானா?” என்றாள். அவர்கள்மெது வாகச் சிரித்தார்கள்.

இதைக் கேட்ட பிலோமினா உடனே சட்டென்று முகம் சிவக்க “மரியாதையா பேசுடி. நீ நெனச்சஒடனே குடுக்க நீயா சம்பளம் குடுத்து வச்சிருக்கே?” என்றாள். அவளை அங்கே கண்ட அவர்கள்திகைத்தார்கள். இருந்தாளும் மங்களம் சேசுபட்டவள் அல்ல. அவளுக்குப் பட்டப் பெயர் போவூர்ரௌடி. சண்டை சச்சரவுகள் அவளுக்கு மிக்ஸர் காராபூந்தி மாதிரி. எதையும் லேசில் விட்டுக்கொடுக்க மாட்டாள். அவள் விறைப்பாக, “ஒண்ணும் மோசம் போயிடல. அவரும் எங்களக்காணாதப்ப அவளக் கூப்பிடு, இவ ளக் கூப்பிடுன்னுதான் சொல்லிக்கிட்டு இருக்காரு” என்றாள்.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் காரமான வாக்குவாதம் நடந்து கொன்டிருந்தபோது விஷயம்தெரிந்து ராஜமாணிக்கம் வேகமாக வந்தான். வரும்போதே என்ன ஏதென்ற நிதானம் இல் லாமல், “தூக்கிப் போட்டு மிதிச்சா ரௌடிப் பட்டமெல்லாம் பறந்து போயிரும்” என்று சொல்லிக்கொண்டேவந்தான். இதைக் கேட்டு மற்றவர்கள் எல்லாம் என்ன நடக்குமோவென்று பயந்துவிட்டபோதிலும் மங்களம் மட்டும் எதிர்த்து, “எங்கடா, மிதி பார்க்கலாம்” என்று முன்னே வந்தாள்.

இது சில பெண்களின் துருப்புச் சீட்டு. ஓர் ஆணைப் பார்த்து ‘அடா’ என்று சொல்வதோடு ‘அடிடாபார்க்கலாம்’ என்றும் சொல்லி விட்டால் சரியானபடி அவமானப்படுத்தியதாகவும் இருக்கும்.அதோடு நாளைக்கு நாலு பேர்,” என்னா இருந்தாலும் பொம்பள மேல கைவக்கலாமா?” என்றுகேட்பார்கள் என்று யாரும் அடிக்கப் போவதும் இல்லை. பொதுவாக இந்த இடத்தில் எல்லாஆண்களும் திகைத்துப் போவார்கள். ஏதோ பெரிதாக ரத்தத்தைக் குடிக்கிற மாதிரிசெய்யவேண்டும் போல் இருக்கும். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.

அவள் சொன்னவுடன் ராஜமாணிக்கத்துக்கும் ஒரு கணம் அப்படித் தான் இருந்தது. ஆனாலும்அடுத்த நொடி சமாளித்து இவளை அடித்த பின் உண்டாகக்கூடிய அவமானத்தைவிட இப்போதுஅடிக்காமல் விடுகிற அவமானம் ஒன்றும் குறைந்ததல்லவென்று, “என்னாடி செஞ்சுடுவே?”என்று முன்னால் வந்து அவள் கன்னத்தில் அறைந் தான்.

இதை மங்களம் எதிர்பார்க்கவில்லை. அறை வாங்கிய ஒரு கணம் திகைத்துப் போனாள். ஆனால்அதன் பிறகு அவனையும் அலுவலகத்தையும் சாக்கடையாக்கி அடிக்க ஆரம்பித்தாள். வார்த்தைகளை, ” டேய் அடிச்சுட்டியா? என் தம்பிகளைவுட்டு ஒன் கைய முறிக்கச் சொல்லல,போலீசில சொல்லி ஒன் முட்டிய முறிக் கச் சொல்லலவிருந்து அவனைப் பற்றிய அசிங்கமானவர்ணனை கள், அர்ச்சனைகள் வரையில் கொட்ட ஆரம்பித்தாள்.

இதைத் தடுக்க அவன் மேலும் அவளை அடிக்க முனைய வேண்டி யிருந்தது. ஆனால்மற்றவர்கள் ஒருவழியாக அவர்களைப் பிரித்து விட்டார்கள். அது கமிஷனர் வரை போய்அலுவலகத்தின் மானத் தைக் காப்பாற்றப் போலீசுக்குப் போகவேண்டாமென்று அவர் அவளைக்கேட்டுக்கொண்டதோடும், அவரது அறையில் வைத்து இவர்கள் இருவரும் பரஸ்பர மன்னிப்புக்கேட்டுக்கொண்ட தோடும் முடிந்தது.

அந்த நிகழ்ச்சி முழுவதிலும் பிலோமினாவின் முகத்தில் இருந்த கடுமையைநினைத்துக்கொண்ட கிருஷ்ணன், இப்போதைய முகத்தோடு அதை ஏனோ ஒப்பிட்டுப் பார்க்கவிரும்பியவனாக அவள் முகத்தைப் பார்த்தான். அவன் பார்த்தபோதே அகஸ் மாத்தாக நிமிர்ந்துஅவனைப் பார்த்த அவள், “என்னா சார், பார்க் கிறீங்க?” என்றாள். அவன், “ஒண்ணுமில்லை”என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

மாலை மணி மூன்று இருக்கும். அலுவலகத்தில் ஒரு பரபரப்பு. எல்லாரும் மெதுவாகச் சேர்மன்அறை முன்பாக கூட ஆரம்பித்து விட்டார்கள். பிலோமினா மட்டும் தன் டைப்ரைட்டர் முன்னால்மூக்கை உறிஞ்சியபடி படுத்திருந்தாள். ராஜமாணிக்கம் சேர்மன் அறையில் சத்தம் போட்டுக்கொண்டிருந்தான். சேர்மன் பதிலுக்கு மிக மெதுவாகப் பேசியதால் வெளியே இருந்தவர்களுக்குவிஷயம் சரியாக விளங்கவில்லை. தவிர, சேர்மன் கிளர்க் வேதநாயகம் வேறு அறையின்வெளியே நின்றுகொண்டு, “கூட்டம் போடா தீங்க, கூட்டம் போடாதீங்க” என்று எல்லாரையும்தூரத்திலேயே நிறுத்திக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் ராஜமாணிக்கம், “அவ என்னோடு ஒய்ஃப்ங்கற தனாலும் நீங்க நெனச்சுப்பாத்திருக்கணும்” என்று கத்தியதும் அவரும் பதிலுக்கு, “அதுனாலதான்யா அத வுட்டதே;இல்லாட்டி அது பேசின பேச்சுக்கு நடந்திருக்கிறதே வேற” என்று உரத்துச் சொன்னதும் மட்டும்தெளிவாகக் கேட்டது. பிறகு, ‘பாத்துக் கிறேன்’ என்றதும் ‘பாரேன்’ என்றதுமான சவால்கள்கேட்டன.

வெளியே வந்த அவன் முகம் மிகவும் சிவந்திருந்தது. “மூன்று ஓட்டு வாங்கிக்கிட்டு வந்துட்டாஎன்னா வேண்ணாலும் பேசிடலாம்னு நெனப்புப் போல இருக்கு. அதெல்லாம் வேற ஆளுகிட்டவச்சுக் கணும்” என்று சொல்லிக்கொண்டே தன் அறைக்குப் போனான். கொஞ்ச நேரத்தில்சேர்மன் மேனேஜரைக் கூப்பிட்டனுப்பினார்.

ஆறுமணி சுமாருக்கு அவர்கள் பஸ் ஸ்டாண்ட் வந்தார்கள். அவர்கள் வெளியூர் திரும்பியிருந்தகமிஷனரை வீட்டில் வைத்துப் பார்த்து விஷயத்தைச் சொல்லிவிட்டு வந்திருந்தார்கள்.

காலையில் நின்றுகொண்டும் இடிபட்டுக்கொண்டும் வந்த பிரயாணிகளுக்கு நஷ்டஈடுசெய்வதுபோல் பஸ் ஹாயாகக் கிடந் தது. மொத்தமே நான்கைந்து பேர்தான் இருந்தார்கள்.இவர்கள் இருவரும் ஏறி ஒரு சீட்டில் உட்கார்ந்துகொண்டார்கள். ஊர் வந்ததும் காலையில்போலவே ஜோடியாக வீடு வந்தார்கள். பூட்டைத் திறந்தார்கள்.

பூட்டைத் திறந்ததும் காலை ஒப்பந்தம் தானாக முறிந்தது. அவன் சென்று சட்டையைக்கழற்றிவிட்டு முகத்தைக் கழுவி உடம் பெல்லாம் அரை டின் பவுடரைக் கொட்டிக்கொண்டு,நிலைப் படிக்கு வந்து யாரோ வரப்போகிறவனை அடிக்கக் காத்திருப் பவனைப் போல இடுப்பில்கையை வெத்துக்கொண்டு நின்றான். அப்புறம் உள்ளும் வெளியுமாக நடந்தான்.

அவள் நேராக அப்படியே, சேலைகூட மாற்றாமல் போய் ஈஸிச்சேரில் சாய்ந்து கண்ணைமூடிக்கொண்டாள். இருவரும் வெகுநேரம் பேசவில்லை. பொது எதிரி போன்ற ஒருவனோடுஇருவரும் இணைந்து சண்டை போட்டு வந்திருக்கும்போது சாதாரண மாகஉண்டாகியிருக்கக்கூடிய ஒரு பற்றுதல் கூட அங்கே இல்லை.

ஒரு அரைமணி நேரத்தில் பால்காரப் பெண் வந்து பால் வைத்துவிட்டுப் போனாள். அரு ஒருகால்மணி நேரம் வைத்த இடத்திலேயே இருந்தது.

இவன் முடிவாக உள்ளே வந்து வேறு திசையில் பார்த்துக் கொண்டு, “சோறு ஆக்கலியா?”என்றான். அவள் மெதுவாக, கண்ணைத் திறக்காமல், “ஆக்கலாம்” என்றாள். அவன் கடிகாரத்தைப் பார்த்தபடியே, “எப்ப ஆக்கறது? எப்ப திஙகறது?” என்றான்.

அவள் அதே பழைய நிதானத்தோடு, “என்னா செய்யறது? எனக்கு மட்டும் கையும் காலும்இரும்பாலயா அடிச்சுப் போட் டிருக்கு?” என்றாள். அவன் முகம் இறுகியது. பழையபடி உள்ளும்வெளியுமாக நடக்க ஆரம்பித்தான்.

மேலும் சுமார் பத்து நிமிஷம் சென்றதும் அவள் எழுந்து அடுப் படிக்குப் போனாள். ஸ்டவ்வைப்பற்றவைத்து அது பிடித்ததம் காற்றடித்துப் பால் பாத்திரத்தை வைத்தாள். பால் காய்ந்ததும்அதை இறக்கிவிட்டு ஸ்டவ்வில் உலைப் பானையை வைத்தாள். பிறகு அரிசி களையஆரம்பித்தாள். அப்போது அவன் அங்கு வந்து நின்றான். அவள் காபி போட்டுத் தருவாள் என்றுஎதிர்பார்த் தான் அவளோ அரிசி களைந்தபடியே, “பால் காஞ்சுடுங்க, புரூ போட்டுக் குடிங்க”என்றாள். அவன் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு ஒரு டம்ளரில் பால் ஊற்றிஎடுத்துக்கொண்டு சர்க்கரையும் புரூவும் எங்கேயிருக்கின்றன என்று பார்த்தான்.

உலையில் அரிசி போட்டதும் அவள் ஒரு டம்ளரில் பால் ஊற்றி எடுத்துக்கொண்டு வாசலுக்குவந்து படியிறங்க ஆரம்பித்தாள். அவன், அவள் பின்னால் இவளை வெட்டலாமா குத்தலாமாஎன்பது போல் பார்த்துக்கொண்டு நின்றான். இருந்தாலும் அவனால் அதைத் தடுக்க முடியாது.தடுக்க முனைந்த ஒன்றிரண்டு சமயங்களில் வாசலில் ஊர் கூடியதுதான் மிச்சம்.

அந்தத் தெருவில் மூன்று வீடு தள்ளி அவள் அக்காள் இருக் கிறாள். அக்காக்காரி சீக்குக்காரி.சமீபத்தில் ஒரு மாதமாக அவள் ஆஸ்பத்திரியில் இருந்தாள். அவள் புருஷனுக்கு ஹோட்டல்சாப் பாடு. அவனுக்கு இரவில் பால் காய்ச்சிக் கொடுக்கும் பொறுப்பை மட்டும் இவள்ஏற்றுக்கொண் டிருந்தாள்.

ஒரு தடவை இவன் கத்தினான். ஏன், “யாராச்சும் பசங்க கிட்ட எடுத்து வுடக்கூடாதா ?” அவளும்பதிலுக்குக் கத்தினாள். ” நான் போனா அக்காவப் போய்ப் பாத்தீங்களா, எப்பிடியிருக்குனு ரெண்டுவார்த்த கேட்டுட்டு வருவேன்.”

அவள் சென்று பதினைந்து நிமிஷம் கழித்துத் திரும்பி வந்தாள். அது வரை இங்கே இவன்சட்டியில் விழுந்த அரிசியாய் உள்ளே பொரிந்து கொண்டிருந்தான். அவள் வந்துசமையற்கட்டுக்குள் நுழையப் போனபோது, ” கள்ளப்புருஷனோட கொஞ்சிட்டு வந்தாச்சா?”என்றான்.

அவள் நின்று திரும்பி ஒரு கணம் நிதானித்துவிட்டு அடக்கிய ஆத்திரமாக, ” ஆமடா பயலே”என்று அவன் பிறந்த ஜாதியையும் சேர்த்துச் சொன்னாள், பலமாக. இது அவளது சமீபத்தியபழக்கம். அவனை அடிப்பதற்குரிய பெரிய ஆயுதமாக இதை அவள் கண்டு பிடித்திருந்தாள்.

அவன் ஜாதிகள் இல்லையென்று நினைப்பவனோ அல்லது தன் ஜாதி வேறு எதற்கும் சளைத்ததுஅல்லவென்று நிமிர்ந்து நின்று குரல் எழுப்புபவனோ அல்ல. ஏதோ ஒன்றின் நிழலில் தன்னைமறைத்துக்கொண்டால் போதுமென்று நினைப்பவன். அதன் காரணமாகத்தான் ஆண்டி என்ற தன்இயற்பெயரைக் கூட ராஜ மாணிக்கம் என்று மாற்றியிருந்தான். பிற்பாடு அவள் காரணமாக மதம்மாறவேண்டி வந்தபோது, அவனுக்கு உண்டான இன்னொரு பெரிய சந்தோஷம் தன் ஜாதிப்பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு கிடைக்கிறது என்பது. தான் ரெட்டியார்-சிவப்பாக இருப்பதில் அவனுக்கு ஒரே சமயத்தில் பெருமையும் உண்டு, உருத்தலும் உண்டு. யாராவது தன்பழைய ஜாதியைச் சொன்னாலோ அல்லது உறவினர்களைக் கண்டாலோ கூட அவனுக்குஎரிச்சலாக வரும். இந்த லட்சணத்தில் அவன் பழைய ஜாதியைச் சொல்லி, அதுவும் தானேதிட்டினால் அவனுக்கு எப்படியிருக்குமென்று அவளுக்குச் சென்ற வாரச் சண்டையின்போதுதோன்றியது. அதைப் பரீட் சித்துப் பார்த்து வெற்றியும் கண்டிருந்தாள்.

அவன் துள்ளி எழுந்து பாய்ந்து வந்து அவள் தலைமயிரை வலது கையால் பலமாகப்பற்றிக்கொண்டு, “ஆமாடி …. பயதான் ஏண்டி கட்டிக்கிட்டே?” என்றான்.

“சரிதான் விடுடா.”

அவன் முடியை இடக் கைக்கு மாற்றிக்கொண்டு வலக் கையால் அவள் கன்னத்தில் அறைந்தான். “சொல்லுவியோ?” என்று கேட் டான். இரத்தம் தெறிக்கும் அந்த அடியை வாங்கிக்கொண்டு அவள்நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் முகம் சிவந்து கன்னி நின்றது. அது அவனைக்காட்டிக் கொடுத்தது. தான் அடித்த அடியும் சாதாரணமானதல்ல என்பது அவனுக்குப் புரிந்தது.ஆகவே அந்த அஸ்திரத்தையே திரும்பவும் செலுத்தினான். அழுத்தம் திருத்த மாகச்சொன்னாள்: “….பயலே!”

அவன் பின்னும் ஆத்திரத்துடன் அவள் தலையைக் கீழே அழுத்தி முதுகில் அடித்தான்.

“சொல்லுவியா?”

“பயலே!”

குத்தினான்.

“…பயலே!”

அவள் முடியை இழுத்து ஆட்டி அங்குமிங்கும் அலைக்கழித்தான். மீண்டும் மீண்டும் அடித்தான்.குத்தினான். அவள் அவனது ஒவ்வொரு செயலின் போதும் அதையே விடாமல் சொல்லிக்கொண்டிருந்தாள். கையாளும் சொல்லாலும் என்ற இந்தப் போர் சில நிமிஷங்கள் நீடித்தது. என்னஆனாலும் சரி, இந்தப் போரில் தான் தோற்கப் போவதில்லையென்று அவள் உறுதி எடுத்துவிட்டதாகத் தெரிந்தது. அவன் அடிகளுக்குத் தகுந்தமாதிரி அவள் குரலும் உயர்ந்துகொண்டேபோயிற்று. கடைசியில் அவனுக்குத் தான் பயம் வந்தது. இனிப் பயனில்லை, ஊரைக்கூட்டிவிடுவாள். கூட்டி அவர்களிடம் இதைச் சொல்லுவாள் என்று பயந்தான். ஆகையால்களத்திலிருந்து தானே வாபஸாக நினைத்து அவளை ஒரு மூலையில் தள்ளிவிட்டுமுறைத்துக்கொண்டு நின்றான். அவள் தள்ளாடிப் போய்த் தொப்பென்று விழுந்தாள்.இருந்தாலும் எழுந்து உட்கார்ந்துக்கொண்டு தலையைத் தூக்கிச் சொன்னாள்: “பயலே!”அவனுக்கு ஓடி அப்படியே மிதிக்கலாமா என்று வந்தது. ஆனால் யாரோ கூப்பிட்டு அதெல்லாம்பிரயோஜனமில்லை என்று சொன்னதுபோல் தன்னை அடக்கிக்கொண்டு, “இரு, ரெண்டு நாளையில் ஒனக்கொரு வழி பண்ணிவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு நாற்காலிக்குப் போனான்.நாற்காலியில் வெகுநேரம் உட்கார்ந்திருந்தான்.

சிறிதுநேரம் சென்றதும் அவள் அந்த இடத்திலேயே படுத்துக் கொண்டாள். உடல் வெந்தபுண்ணாய் வலித்தது. ஆனால் தான் மட்டும் அடிவாங்கிவிட வில்லையென்ற நினைப்பு அந்தவலிக்கு ஓரளவு ஒத்தடமாக இருந்தது. இருந்தாலும் போராட்டத்தின்போது வராத கண்ணீர்இப்போது வந்து தரையில் தேங்கியது.

அங்கே கொசு அதிகம். மிக அதிகம். நிகழ்ச்சி நினைவுகள் அவர்கள் மூளையைப்பிடுங்கிக்கொம்டிருந்தபோது இவை அவர்கள் உடலைப் பிடுங்கின. கடைசியாக அவன் எழுந்துஅடுப்படிக்கு வந்தான். ஸ்டௌவ்வும் உலையும் தன்னால் நின்று போயிருந்தன. அவன் ஒருடம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு வந்து கட்டிலில் படுக் கையை விரித்துக் கொசுவலையைத்தொங்கவிட்டுக்கொண்டு படுத் தான்.

கொசுக்கூட்டம் முழுவதும் அவள் மேல் திரும்பியது. சிறிது நேரத்தில் அவளும் எழுந்து தான்படுக்கும் இடத்துக்குச் சென்று படுக்கையைப் போட்டுக் கொசுவலையைக் கட்டிக்கொண்டு படுத்தாள்.

நீண்ட நேரம், மிக நீண்ட நேரம். அவளுக்குத் தூக்கம் வர வில்லை. இப்போது மணி ஒன்றுஅல்லது ஒன்றரை இருக்கலாம் என்று அவள் நினைத்தபோதுகூடத் தூக்கம் வரவில்லை.நிகழ்ச்சி– நினைவுகள் மையம் பலவீனமடைந்து இதர சாதாரண் விஷயங்கள் இடையிடையேவந்தபோதுகூடத் தூக்கம் வரவில்லை. மாலையில் சேரமன் கேட்டதும் தொடர்ந்து நடந்ததும்நினைவில் வந்தன. நாளை செய்தாக வேண்டிய வேலைகள் வநதன. சென்ற ஆ்ண்டு உண்டானஅபார்ஷன் வந்தது. தூக்கம் மட்டும் வரவில்லை. இப்போது, வாங்கிய அடிகளைவிட இந்தத்தூக்கமின்மை அதிக வேதனையை தர ஆரம்பித்தது. ஏதோ பத்தோடு பதினொன்றாக உடல்உறவும் நினைவில் வந்தது. அவள் சட்டென்று அதற்காகத் தன் மேலேயே எரிச்சல் பட்டாள். ‘அதையா, இனிமேலா, இவனோடா’ என்று நினைத்தாள். இனி செத்தாலும் அது மட்டும்கூடாதென்று உறுதி செய்துகொண்டாள். ஆனால் இப்படிப்பட்ட முன்னைய உறுதிகள்தகர்ந்துபோனதும் நினைவுக்கு வந்தது. விரோதமும், குரோதமும் கொப்பளித்து நின்ற சிலநாட்களிலேயே. இன்னும் அவை நீறு பூத்த நெருப்பாக இருந்தபோதே அவர்கள் உடல் உறவுகொண்ட துண்டு. அதில் வியப்பு என்னவென்றால், ஒரு காலத்தில் அவர் கள் இரவிலுங்கூடக்கணவன் மனைவியாக இருந்தார்களே, அந்த நாட்களில் நடந்ததுபோலவே, இதிலும் கூட மூச்சுத்திணறும் அணைப்புகளும் ஆழ்ந்த முத்தங்களும் இருந்ததுதான். அதை இவள் ஒன்றிரண்டுதடவை நினைத்துப் பார்த்திருக்கிறாள். இப்போதும் கூட அது எப்படிச் சாத்தியமாகிறதென்றுநினைத்தாள். ஆனால் இப்போது ஏதோ, மங்கலாக, நிரவலாக அதற்கு விடை போல ஒன்றுதெளிந்தும் தெளியாமலும் தெரிந்தது.

அந்த நேரத்திய கொடுக்கல் வாங்கல்கள் ராஜமாணிக்கத்துக்கும் பிலோமினாவுக்கும் இடையேநடந்ததல்ல. ஓர் ஆணினுடையதும் ஒரு பெண்ணினுடையதுமான உடல் உணர்ச்சிகள் வடிகால்தேடிய போது சாத்தியமாகியிருந்த ஓர் ஆணின் மூலமாகவும் ஒரு பெண்ணின் மூலமாகவும்செயல்பட்டுக்கொண்ட நிகழ்ச்சிகள்.

கடைசியாக அவள் மெதுவாகக் கண் அயர்ந்தாள். எப்படித் தான் கொசுவலையைக் கட்டினாலும்விடிவதற்குள் எப்படியோ இரண்டு கொசுக்கள் உள்ளே வந்துவிடத்தான் செய்கின்றன. அப்படிவந்து இதுவரை இப்படியும் அப்படியுமாக இருந்த இரண்டு கொசுக்கள் அவள் உறங்கிவிட்டதும்நிம்மதியாக அவள்மேல் போய் உட்கார்ந்தன.

இனி அவை கொஞ்சம் இரத்தம் குடிக்கும். குடித்த பிறகுதான் வெளியே போக வழியில்லாததுஅவற்றுக்குத் தெரியும். பிறகு வலையின் சுவர்களில் அங்குமிங்கும் சென்று மோதும்.கடைசியாக ஒரு மூலை உயரத்தில் சென்று பிராண்டிப் பார்க்கும். காலையில் அந்த வலைசுருட்டப்படும் வரை அங்கேயே உட்கார்ந்து விடுதலைக்காகத் தியானம் செய்து கொண்டிருக்கும்.

*******

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: