’கங்கா’ முன்னுரை – லா.ச.ராமாமிருதம்

என் மதிப்பிற்குரிய ஒரு எழுத்தாள நண்பர் எனக்குக் ‘கோவில்மாடு’ என்று பெயர் வைத்திருக்கிறார்.”ஓ ராமாமிருதமா, சரிதான், எழுதிக்கொண்டே இருப்பார்,சிந்தனையோ சொல்லோ, இஷ்டமோ தடைப்பட்டால் அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார். இஷ்டத்துக்கு எங்கேயோ One Way Traffic. அவர் விலகமாட்டார். எதிராளிதான் ஒதுங்க வேண்டும். பிறகு நாளோ,மாதமோ, வருடமோ தடைப்பட்ட சொல் தட்டியபின்தான் விட்ட இடத்திலிருந்து தொட்டுத் தொடர்வார். யார் கவலையும் கிடையாது. கோவில் மாடு! கோவில் மாடு! இப்படியே இவர் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்!!

எனக்கு உவகை பொங்குகிறது.lasara45

இன்னொரு எழுத்தாளருக்கு என்மேல் ஒரு குறை. ”என்ன அவர் வெளியுலகத்துக்கே வரமாட்டேன் என்கிறாரே!”

எங்களுக்கிடையே இன்னொரு சர்ச்சை:”எழுத்தாளன் யாருக்காக எழுதுகிறான்?”

நான் ”தனக்காக” என்கிறேன்.

அவர் ”பிறருக்காக” என்கிறார். ”தனக்காக அவன் எழுதிக்கொள்வதாக இருந்தால் அவன் எழுத வேண்டிய அவசியமே என்ன இருக்கிறது? அப்படியே எழுதினாலும் அவன் தன் பெட்டிக்குள்ளேயே வைத்துக்கொண்டு அழகு பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கலாமே!”

அவர் பின் கூறியது வாஸ்தவந்தானோ என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரொரு கதை, எழுதி முடித்தபிறகு அதை விட்டுப் பிரிய மனம் வருவதில்லை. நான் அறியாமலே அதைக் கருவுற்ற நாள் முதலாய் அது அதன் தன்மையில் என்னில் இழைந்திருந்தது. சூல் கொண்ட நேரம் ஒருவரிலிருந்து ஒருவர் விடுபட ஒருவரோடொருவர் போராடுகையிலேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். புரிந்து கொண்ட பின் சேர்ந்திருக்க இயற்கையில்லை. பிரிந்துதான் போவோம். கருவுற்றதைப் பெற்றுத்தான் ஆகவேண்டும். பெற்றது பிரிந்துதான் போகும்.

யாருக்காக எழுதுகிறேன்?

யாருக்காகக் கருவுற்றேன்?

இரண்டும் ஒரே கேள்விதான். அந்தக் கேள்விக்கு ஒரே பதில்தான். ஆனால் இந்தக் கேள்வி நேர்வதுண்டு:

”நானா இதை எழுதினேன்? என்னிடமிருந்தா இது வெளிப்பட்டது? இந்தப் பூதம் என்னுள் எப்படி இத்தனை நாள் ஒளிந்து கொண்டிருந்தது?”

வாசகனின் வியப்பு இன்னொரு வகையில்:

”எப்படி எனக்கு நேர்ந்ததெல்லாம் இந்தக் கதையில் நேர்ந்திருக்கிறது? எனக்குக்கூட தெரியாதபடி என்னுள் பூட்டி வைத்திருந்த என் அந்தரங்கங்கள் எப்படி இங்கு அம்பலமாயின? எனக்கு எழுத வராததனால் நான் எழுதாத குறை. ஆனால் இவை என் எண்ணங்கள், என் வேதனைகள், என் வேட்கைகள், நான் என் ஆபாசங்கள் என்று அஞ்சி என் நெஞ்சுக்குள் மறைத்த தெல்லாம் இங்கு எழுத்தில் கண்ட பின், உணமையில் அவை என் ஆத்ம தாபம் என்று என்று இப்போதுதான் தெரிகிறது”என்று கன்னத்தில் கண்ணீர் குளிரத் தலை நிமிர்கையில்,எழுத்து, இருவருக்குமிடையில் ஊமைச் சிரிப்பு சிரிக்கிறது.

அதற்குத் தெரியும், இருவர் கதையும் ஒரு கதைதான், உலகக் குடும்பத்தின் ஒரே கதை என்று.அதற்குத் தெரியும் தான் சுண்டியது ஒரு தந்திதான்,சொல்வதெல்லாம் ஒரு சொல்தான் என்று. உருவேற்றி ஏற்றி, திருவேறி, ஆகாயத்தையும் தன் சிமிழில் அடக்கிக்கொண்டு, இன்னும் இடம் கிடைக்கும் சொல்.

எத்தனை விதங்களில் எழுதினாலும், நான் என் பிறவியுடன் கொண்டு வந்திருக்கும் என் கதைதான்;உலகில் – அது உள் உலகமோ வெளியுலகமோ, அதில் நடக்கும் அத்தனையிலும், அத்தனையாவும் எனக்குக்கிட்டுவது என் நோக்குத்தான். ஆகையால் நான் எனக்காக வாழ்ந்தாலும் சரி, யாருக்காக அழுதாலும் சரி, அப்படி என் நோக்கில் நான்தான் இயங்குகிறேன், என் நோக்கில் நான் காண்பவர் காணாதவர் எல்லோரும் என் கதையுடன் பிணைக்கப்பட்டவரே. என் கதையின் பாத்திரங்களால், அவர்கள் ப்ரவேசங்களில் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் வேளைகளில் தான், நெடுநாளைய பிரிவின் பின் சந்திக்கும் பரபரப்பு, பரிமளம், ஜபமாலையின் நெருடலின் ஒவ்வொரு மணியும் தன் முறை வந்ததும்,தான் தனி மணி என அதன்மேல் உருவேறிய நாமத்தின் தன் பிரக்ஞையை அடையும் புது விழிப்பு.

என் சொல்தான் என் உளி. நான் தேடும் பொருளோ, நயமோ தரும் சொல் கிட்ட, ஓரொரு பக்கத்தை, பதினெட்டு இருபத்தியேழு தடவைகள் எழுத நான் அலுத்ததில்லை. தேடியலைந்த போதெல்லாம் கண்ணாமூச்சி ஆடிவிட்டு, சொல் என்னை நள்ளிரவில் தானே தட்டி எழுப்பி இருக்கிறது. ஒரு சமயம் கனவில்,பாழும் சுவரில் ஒரு கரிக் கட்டி தானாகவே ஒரு வாக்கியத் தொடரை எழுதி அடி எடுத்துக் கொடுத்தது. சம்மந்தா சம்மந்தமற்றவை போன்று வார்த்தைகளை மூளையுள் வேளையில்லா வேளைகளில் மீன் குட்டிகள் போல், பல வர்ணங்களில் நீந்திக் காண்பிக்கும். சில சமயங்களில் நான் தேடிய சொல், அதே சொல், நான் தேடிய அதேஉருவில், காத்திருந்தாற்போல், நடுத் தெருவில் நான் போய்க் கொண்டிருக்கையில் யார் வாயிலிருந்தேனும் உதிரும்.

“நீ ஒன்றும் கழற்றிவிடவில்லை. என் கட்டியங்காரன். நான் சொன்னதை நீ சொல்” என்று அது எனக்கு உணர்த்துகிறது.

இத்தனை கதைகள் எழுதியதும், இனி எழுதப்போவது எத்தனையானாலும் அத்தனையும் நித்தியத்துவத்தின் ஒரே கதையின் பல அத்தியயங்கள்தான். அத்தனையும் ஒன்றாக்க எனக்கு சக்தியோ ஆயுளோ போதாது. என்னால் முடிந்தது ஒரு சொல்தான், அச்சொல்லிலின் உருவேற்றல்தான்.

4-11-1962     லா.ச.ராமாமிருதம்

நன்றி ; வே.சபாநாயகம் – நினைவுத்தடங்கள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: