நீக்கல்கள் – சாந்தன்

அவனுடைய வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு பஸ்ஸை நம்பிப் புண்ணியமில்லை. அது சமயத்தைப் பொறுத்தது. சில வேளைகளில், ஆலடிச் சந்திக்குப் போன கையோடேயே பஸ் கிடைத்து, அரைமணித்தியாலத்திற்குள் ஆளைப் பட்டணத்தில் கொண்டுபோயும் விட்டுவிடும். இன்னுஞ் சில வேளைகளில் – அப்படித்தான் அதிகம் நேர்கிறது. – பஸ்ஸைக் கண்ணாற் காண்பதே பெரிய பாடாகிவிடும். அப்படியான வேளைகளில், பட்டணம் போய்ச் சேர இரண்டல்ல – மூன்று மணித்தியாலமுமாகும். சைக்கிள்தான் நம்பிக்கை. ஆகக்கூடியது, முக்கால் மணித் தியாலத்திSanthanற்குள் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால் அதுவுங்கூட அரும்பொட்டு நேரம்… 

வீட்டிலிருந்தே ‘ஸ்பெஸிம’னை எடுத்துக் கொண்டு போக முடியாது. கொஞ்சம் முந்திப் பிந்தினால், இவ்வளவு பாடும் வீணாகிவிடும். “எப்படியும், எடுத்து நாற்பத்தைஞ்சு நிமிஷத்துக்குள்ளை குடுத்திட வேணும் — இல்லாட்டி, நிச்சயமா ஒன்றும் சொல்ல ஏலாது.” என்று விஜயன் நேற்றைக்கே சொல்லியிருந்தான். விஜயன் இவனுடைய வலு நெருங்கிய கூட்டாளி. டொக்டர். பெரிய ஆஸ்பத்திரியில்- பட்டணத்தில்தான் இப்போது வேலை. அவனுடைய உதவியாலும், ‘அட்வைஸா’லும்தான் இந்த விஷயம் சுலபமாக நடக்கப் போகிறது – வீண்மினைக்கேடு, பரபரப்பு, ஆட்டபாட்டமில்லாமல்.

சைக்கிளிற்தான் போவது என்று தீர்மானிப்பதைத் தவிர வேறு வழியிருக்க முடியாது. ‘ஸ்பெஸிம’னையும் அங்கு போய்த்தான் எடுத்தாக வேண்டியிருக்கிறது.

‘ஸிப்’ வைத்த காற்சட்டையையும், ‘புஷ்-ஷேர்ட்’டையும் முன்னேற்பாடாக-வசதி கருதிப்-போட்டுக் கொண்டான். விஜயன் தந்த ஆஸ்பத்திரிச் சிட்டையை ஞாபகமாக எடுத்துக்கொண்டாயிற்று. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு புறப்பட்டபோது, அவனுக்குள்ளே சாதுவான கூச்சமாய்த்தானிருந்தது. சும்மா, விஜயனைப் போய்ப் பார்த்துவிட்டு, அப்படியே பட்டணத்திற்குப் போய்விட்டு வருவதாகவே, மனைவியிடம் சொல்லியிருந்தான். அவளுக்கு இப்போது விபரஞ் சொல்லத் தேவையில்லை; இந்த ‘டெஸ்’டின் முடிவைப் பார்த்துத் தேவையானதைப் பேசிக்கொள்ளலாம்.

அவளுக்கும் இவனுக்கும் கல்யாணமாகி, வருகிற சித்திரை இரண்டு வருடம். காதல் கல்யாணம்தான். அந்தக் காதல் காலத்திலேயே, இவன் கனக்கக் கற்பனைகள் பண்ணிக் கொண்டிருந்தான். நீண்ட காலத் திட்டங்கள், அழகிய ஓவியங்களாக நெஞ்சிற் பதிந்து உறைந்துபோன, அவள் நிறமும் விழிகளு, தன் தோற்றமும் முடியுமாக, இவனது விந்து இதுவரையில் முளைத்துத் தளிர்த்திருக்க வேண்டுமே – அது நடக்கவில்லை என்பதை அவனாற் பொறுத்துக் கொள்ள முடியவில்லை…

திருப்பித் திருப்பிப் பரீட்சை எழுதிக் ‘குண்டடிக்கிற’ மாணவன் மாதிரி, மாதா மாதம் ‘ரிசல்ட்’க்காக காத்திருந்து; ஆசை அவதியாய், ஏமாற்றத்தில் அடுத்தடுத்து முடிகிறபோது –

‘எங்கே வழுக்குகிறது’ என்று புரியவில்லை. தானறிந்த மட்டில், தங்களிருவரிலும் எந்தக்கோளாறும் வெளிப்படையாயில்லை என்பது தெரிந்தது. சராசரிக்குக் கொஞ்சம் மேலாயிருந்த உடற்கூற்று அறிவு, விஜயனிடம் போகத் தூண்டவே, போனான். “அதுதான் சரி; இப்பவே ஏதாவது செய்யிறதுதான் புத்தி. வயது போனால், பிறகு என்ன செய்தும் அவ்வளவு பலனிராது”.. என்று, விஜயன் உற்சாகப்படுத்தினான். வழிமுறைகளும் அவ்வளவு சிக்கலாயில்லை.

“முதல்லே, உன்னை ’டெஸ்ட்’ பண்ணுவம் அதிலை ஒரு கோளாறுமில்லையெண்டா, பிறகு, அவவை ஒரு லேடி டொக்டரிட்டைக் கூட்டிக் கொண்டு போ…”

தன்னை எப்படிப் பரிசோதித்துக் கொள்ள வேண்டுமென்று அவன் அறிந்தபோது ’வலு சுகமான டெஸ்ட்’ -என்று தெரியவந்தது. எப்படி ’ஸ்பெஸிமன்’ எடுக்கிறது என்பது புரியவில்லை. கேட்டான். அதற்கும் ஏதாவது முறை அல்லது கருவிகள் இருக்கக்கூடும்..

”நீதான் எடுத்துக் குடுக்கவேணும். ‘டெஸ்ட் ரியூப்’ தருவினம்” விஜயன் பயலின் முகத்தில், குறும்போ, சிரிப்போ மருந்துக்குக் கூட இல்லை!

‘கவுண்ட’ரின் வெளியே நின்று மெல்லத் தட்டினான். யாரோ ஒருவர் – ஆய்வுக்கூட உதவியாளராய்த்தானிருக்கும் – வந்தார். விஜயன் தந்த சிட்டையை நீட்டினான். பெயர், வயது, என்ன பரிசோதனை – எல்லாவிபரமும், அந்தத் துண்டில் விஜயன் தானே குறித்துக் கொடுத்திருந்தான்.

‘டெஸ்ட் ரியூப்’ இல்லை – கிட்டத்தட்ட அதே அளவில், சுத்தமாகக் கழுவி பிளாஸ்டிக் மூடிபோட்ட, சிறிய போத்தல் ஒன்று கிடைத்தது.

ஏதோ ஒரு ’வார்ட்’டிலிருந்த விஜயனைத் தேடிப் போனான். “எங்கேயிருந்து எடுக்கப் போகிறாய்? ‘குவார்ட”ஸிலை, என் அறைக்குப் போனா, வசதியாயிருக்கும்….”

“அது சரியில்லை; நீயில்லாத நேரத்திலை, நான் அங்க தனியாய்ப் போறது அவ்வளவு நல்லாயிராது…”

“அப்ப, வேற என்ன செய்யிறது? இங்க உள்ள ஆஸ்பத்திரி ‘லவெட்டிரி’யளை நம்பி உள்ளுக்குப் போகேலாது….” கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு-

“…இங்க வா” என்று சொல்லிக் கூட்டிப் போனான்.

ஓரிடத்தில் வரிசையாக நாலைந்து சின்னச்சின்ன அறைகளிலிருந்தன. தொங்கலிலிருந்த அறைக்கதவை விஜயன் மெல்லத் தள்ளினான். அது கக்கூஸ் அல்ல. ஆஸ்பத்திரி வேலையாட்கள் தட்டுமுட்டுக்களைப் போட்டு வைக்கிற அறை. இந்த வரிசை அறைகள் எல்லாமே அப்படித்தான் போலிருக்கிறது.

விஜயன் அறைக்கதவைத் தள்ளுகிறபோதே, ஒரு வேலையாள் பார்த்து விட்டான். அவசரமாக ஓடி வந்தான் – உடம்பை வளைத்துக் கொண்டு; நின்ற இடத்திலேயே காற் செருப்பைக் கழற்றி விட்டு விட்டு.

“ஐயா-?” கேள்வியே வணங்கியது. இவனுக்கு அந்த ஆள் மேல் கோபமாக வந்தது; பரிதாபமாயுமிருந்தது.

விஜயன் கேட்டான்.

“இந்த ஐயா, ‘லாப்’பில் குடுக்கிறதுக்கு ஏதோ ‘ஸ்பெஸிமன்’ எடுக்க வேணுமாம். இதுக்குள்ளை துப்புரவாய் இருக்குதுதானே?….”

“ஆமாங்க, ஆமாங்க.. வடிவாப் போலாமுங்க”

“சரி; நீ போய் அந்தரப்படாம ஆறுதலா எடு.. எடுத்து ‘லாப்’பிலை குடுத்திட்டு வா- நான் ‘வார்ட்’டிலை தானிருப்பன்…” – விஜயன் இவனைப் பார்த்துச் சொல்லிவிட்டுத் திரும்பினான்.

“ஐயா பயப்படாமப் போலாமுங்க… உள்ள, நல்ல ‘கிளீ’’னா இருக்கு…” அந்த ஆளும் போய் விட்டான்.

கதவைத் தள்ளி உள்ளே போனான், இவன். மிகவுந் துப்புரவாய்த்தானிருந்தது. சிறிய அறை. ஐந்தடி அகலங்கூட இராது. அதில் அரைவாசி இடத்தை, சுவரிலேயே கட்டப்பட்டிருந்த ‘றாக்கைகள்’ பிடித்துக் கொண்டிருந்தன. ஒரு மூலையில் தண்ணீர்க் குழாய் இருந்தது. ‘நல்ல இடந்தான்’ என்று எண்ணிக் கொண்டே கதவை சாத்தினான். பூட்ட முடியாது போலிருந்தது. பூட்டுவதற்காகப் போடப்பட்டிருந்த கட்டை இறுகிக் கிடந்தது. நிலையில் கட்டியிருந்த கயிற்றுத் துண்டை இழுத்து, கதவில் அடித்திருந்த ஆணியில் இறுகச் சுற்றினான். ‘வெளியிலிருந்து தள்ளினாலும் திறவாது’ என்கிற நிச்சயம் வந்தபின் தான் உள்ளே வந்தான். காற்சட்டைப் பையிலிருந்த போத்தலை எடுத்துத் தட்டின் மேல் வைத்தபோது தான், ஜன்னல் கண்ணில் பட்டது. ஜன்னற் கதவின் மேல் பாதி, கண்ணாடி!

அருகே போய் நின்று பார்த்தான். தன்னுடைய தலை எப்படியாவது வெளியே தெரியும் போலத்தானிருந்தது. பரவாயில்லை. தலை மட்டும்தானே’ என்கிற ஒரு நிம்மதி, ஜன்னலுக்கூடாய்ப் பார்த்தால், ஆஸ்ப்பத்திரியின் மற்ற கட்டிடங்கள் உயர உயரமாய் நின்றன. எதிர்த்த கட்டிடத்தின் மேல் மாடியில், வரிசையாக ஜன்னல்கள். நல்ல காலமாக அங்கு ஒருவரையும் காணவில்லை. அந்தக் கூட்டத்திற்கும் இந்த அறைக்கும் நடுவிலிருந்த முற்றத்தில் யாரோ போனார்கள். இந்தப் பக்கம் பார்க்கிறவராக எவருமில்லை.

இரண்டு மூன்று வருடங்களுக்கு மேலாகக் கை விட்டிருந்த பழக்கத்தில் இப்போது  கை வைப்பது ஒரு மாதிரியாய்த்தான் இருந்தது. வளம் வராதது போல, சீனி போட்டுக் கோப்பி குடித்துப் பழகியவனுக்குக் கருப்பட்டியைக் கடித்துக்கொண்டு குடிக்கச் சொல்லிக் கொடுத்தாற் போலவும்  இருந்தது. எப்படிச் சரிவரும் எவ்வளவு நேரம் எடுக்கும் என்றுத் தெரியவில்லை.

கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்தேகால். முடிந்துபின் எவ்வளவு நேரம் எடுத்திருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

மனம், எங்கெங்கோ ஓடிக் கொண்டிருந்தது. பதட்டம் வேறு. இந்தப் பதட்டத்துடன் மனதை ஒரு முகப்படுத்த முடியாமல், ஒன்றுஞ் செய்ய முடியாது என்பது அவனுக்குத் தெரியும். மனதை நிலைப்படுத்த முயன்றான். திருவிழா நாட்களில் கோவிலுக்குப் போய், சாமியைக் கும்பிட முயல்வது போல இருந்தது இந்த முயற்சி. தான் இப்போது செய்து கொண்டிருக்கிற வேலை, மனைவிக்குத் தெரிந்தால் என்ன நினைத்துக் கொள்வாள் என்ற நினைப்பு வந்தது.

பழைய ‘ரெக்னிக்’குகள் ஒன்றுஞ் சரிவரவில்லை. சீனியுங் கருப்பட்டியுந்தான். முதற்கட்டமே இன்னம் முடியவில்லை…. வெளியே, யாரோ ஆர்ப்பாட்டமாகப் பேசிக் கொண்டு போனார்கள். இந்த அறையைத்தான் திறக்க வருகிறார்களோ என்று, ஒரு நிமிடம் பேசாமல் நின்றான். அந்தப் பரபரப்பில், இவ்வளவு நேரம் பட்ட பாடும் வீணாய்ப் போயிற்று. அவர்கள் இங்கு வரவில்லை – குரல்கள் தாண்டிப் போய், நடைபாதையில் மங்கி மறைந்து போயின.

மீண்டும் முயன்று ஒரு நிலைக்கு வந்த பின் நேரத்தைப் பார்த்தபோது, இப்போதே பத்து நிமிடமாகி விட்டுருந்தது; ‘கெதியாகச் செய்து முடிக்க வேணும்’ என்கிற உறுதி மனதை நிலை நிறுத்த உதவியாயிருந்தது.

படிக்கிற காலத்தில், ஒத்த தோழர்களுக்குள் புழங்கிய ‘தன் கையே தனக்குதவி’ ‘வெள்ளையனே வெளியேறு’ – என்கிற வசனங்களெல்லாம் அப்போதைய ‘ரீன் ஏஜ்’ அர்த்தங்களுடன் இப்போது நினைவில் வந்தன. இந்தப் பரபரப்பிலும் சிரிப்பு வந்தது.

“ஐயா…. உள்ளேதான் இருக்கிறீங்களா?……” என்கிற கேள்வி, இவனைத் திடுக்கிடச் செய்வது போல, இருந்தாற்போல் வெளியிலிருந்து வந்தது. அந்த ஆளாய்த்தானிருக்கும். சட்டென்று பாய்ந்து, கதவை அழுத்திப் பிடித்தபடி “ஓமோம் இன்னம் முடியேல்லை…”’ என்றான். குரல் அடைக்க.

”சரிங்க, சரிங்க… ஐயா வெளியே போயிட்டீங்களோன்னு பாத்தேன்.. நீங்க இருங்க…”-குரல் நகர்ந்தது… அவன் மேல் அசாத்தியக் கோபம் வந்தது, இவனுக்கு.

கதவடியிலிருந்து திரும்பி, மீண்டும் தன் இடத்திற்கு – ஜன்னலடிக்கு வந்த போது, எதிர்த்த மாடி ஜன்னல்களில் ஆள் நடமாட்டந் தெரிந்ததை அவதானித்தான். ஒரே ஆத்திரமாய் வந்தது. யாரோ இரண்டு மூன்று பேர், அங்கே நின்று ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பக்கந் திரும்பவில்லைதான்; ஆனால் தற்செயலாகத் திரும்பினால், இவன் கட்டாயம் கண்ணிற்படுவான். சுவர்த் தட்டின் ஒரு மூலையில் மடங்கிப் போய்க்கிடந்த கடதாசி மட்டை கண்ணிற் பட்டது. எடுத்துத் தூசி தட்டி, விரித்துப் பார்த்த போது, ஜன்னலில் இவன் தலையை மறைக்கிற அளவுக்குச் சரிவரும் போலிருந்தது. வலு பாடுபட்டு, ஜன்னல் இடுக்குகளில் அதைச் சொருகி மறைக்கப் பார்த்தான். இதை விட்டு, போத்தலையும் வீசி எறிந்துவிட்டுப் போய்விட வேண்டுமென்கிற அவதி எழுந்தது. அடக்கிக் கொண்டான்.

கனவுகளின் தோல்வியை இனியும் பொறுக்க முடியாது.. இல்லாவிட்டாலும், காரணமாவது தெரிந்தாக வேண்டும்…  ஒருபடியாக, மட்டையை ஜன்னலிற் பொருத்திய போது, அது அந்நேரத்தில் நிற்குமாப் போல நின்றது. ஒரு மூலையில் மட்டும் நீக்கல். பரவாயில்லை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, நிச்சயமாக இவனைத் தெரியாது; ஆனால், இவனுக்கு வெளியே எல்லாந் தெரியும்.

நீக்கல் வழியே பார்த்தான்; அந்த மாடி ஜன்னல்களருகில் அப்போது நின்றவர்கள் இல்லை. இரண்டு ‘நேர்ஸ்மார்’, அவசரமாக நடந்து வருவது தெரிந்தது. ஒருத்தி, ஜன்னலை நெருங்கி வந்தாள். கையிலிருந்த எதோ காகிதங்களை விரித்து வெளிச்சப் படுகிற மாதிரிப் பிடித்து, அந்த இடத்திலேயே நின்று படிக்கலானாள். இவன் நேரத்தைப் பார்த்தான். இருபது நிமிடமாகிக் கொண்டிருந்தது.

வெளியே இருந்தவன், மீண்டுங் குரல் கொடுக்கலாம். விஜயன் கூட தேடி வந்தாலும் வரலாம்…

‘டக்கென்று முடித்துவிட வேண்டும்’ – என்று திரும்பவும் நினைத்துக் கொண்ட போதிலேயே, அதைச் சுலபமாக முடித்துக் கொள்வதற்கான வழியும் அவன் மனதிற் பளிச்சிட்டது.

கடதாசி மட்டை நீக்கலூடாகப் பார்த்தான். அந்த ‘நேர்ஸ்’ இன்னமும் அங்கேதான் நின்று கொண்டிருந்தாள். ‘அழகு’ என்ற சொல் கிட்டவும் வராது. ‘சாதாரணம்’ என்று வேண்டுமானால் – அதுவும் யோசித்து – சொல்லலாம். கறுப்பு இளவயதுதான். உடற்கட்டை நிர்ணயிக்க முடியாதபடி, ‘யூனிஃபோர்ம்’ நின்றது. பாதகமில்லை.

அவள், தானறியாமலே இவனுக்கு உதவலானாள்.

இவன் வலு சுத்தமாக அவளுடைய ‘யூனிஃபோர்ம்’, தொப்பி, எல்லாவற்றையும் தன் மனதாலேயே கழற்றிவிட்டான்.

கற்பனைகள் கற்பிதங்கள் எல்லாம், அவள் நேருக்கு நேரேயே நின்றதால், நிதர்சனம் போலவே இவனை எழுப்பி, ஊக்கப்படுத்தின…..

உச்சத்தை நோக்கி விரைந்த கணங்கள்.

எல்லாம் முடிந்தபோது, ‘அப்பாடா’ என்றிருந்தது. கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது, அந்த நேர்ஸ் மீது பச்சாத்தாபமும் தன்னில் ஆத்திரமும் கொண்டான்.

*

தட்டச்சு : சென்ஷி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: