>தேன் மாம்பழம் – பஷீர்

>

வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில்: சுகுமாரன்

‘நீங்கள் கேள்விப்பட்டது எதுவும் சரியல்ல. நான் எந்த மரத்தையும் ஆராதிப்பதில்லை. எந்தப் படைப்பையும். ஆனால் இந்தத் தேன்மாவுடன் எனக்குப் பிரத்தியேக அன்பு உண்டு. என்னுடைய மனைவி அஸ்மாவுக்கும் அன்பு உண்டு. மிக மகத்தான ஒரு செய்கையின் அடையாளம் இந்தத் தேன்மா. அதை நான் விளக்கமாகச் சொல்கிறேன்’

   நாங்கள் அந்த மாமரத்தடியில்தான் இருந்தோம். மரத்தில் ஏராளமான மாங்காய்கள் இருந்தன. மாமரத்தின் அடியில் அகலமான Basheerவட்டத்தில் வெள்ளை மணல் பரப்பியிருந்தது. அதைச் சுற்றி இரண்டு வரிசை செங்கல் கட்டு வைத்து அதற்குள் வட்டமாக ரோஜாச் செடிகள் நடப்பட்டிருந்தன. பல நிறங்களிலுள்ள ஏராளமான பூக்கள். அவர் பெயர் ரஷீத். மனைவி மகனுடன் பக்கத்திலிருக்கிற வீட்டில் வசிக்கிறார். கணவனும் மனைவியும் பக்கத்திலிருக்கும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள். அவருடைய மனைவி மாம்பழத்தைச் சீவித் துண்டாக்கித் தட்டில் போட்டு, பதினாறு வயது மகன்  கையில் கொடுத்துவிட்டிருந்தார். நாங்கள் அதைத் தின்றோம். தேன்போலத் தித்திப்பு.

"மாம்பழம் எப்படி?"

"தேன் மாம்பழந்தான்"

"இதை நாம் தின்ன முடிவதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது"

"இந்த மாமரத்தை நட்டது யார்?"

"நானும் அஸ்மாவும் சேர்ந்துதான் இதை இங்கே நட்டோம். மாமரம் பற்றிய விவரங்களை நான் சொல்லுகிறேன். நிறையப் பேரிடம் இதைச் சொல்லியிருக்கிறேன். கேட்டவர்கள் சம்பவங்களையெல்லாம் மறந்துவிட்டு விருட்ச ஆராதனை ஆக்கிவிட்டார்கள். இதில் ஒரு ஆராதனையுமில்லை. மகத்தான ஒரு செய்கையின் நினைவு மட்டுமே. என்னுடைய தம்பி போலீஸ் இன்ஸ்பெக்டர். இங்கேயிருந்து எழுபத்தைந்து மைல் தூரத்திலிருக்கிற ஒரு பட்டணத்தில் அன்றைக்கு வேலை செய்துகொண்டிருந்தான். நான் தம்பியைப் பார்க்கப் போயிருந்தேன். அவன் கூடத் தங்கியிருந்தேன். பெரிய பட்டணமில்லை. இருந்தாலும் சும்மா சுற்றிப் பார்க்கப் போனேன். நல்ல வேனிற் காலம். சுடு காற்று வீசிக்கொண்டிருந்தது. தண்ணீருக்குத் தட்டுப்பாடாக இருந்தது. நான் அப்படி நடந்துகொண்டிருந்தபோது, இடை வழியில் மரத்தின் நிழலில் ஒரு கிழவர் சோர்ந்து கிடப்பதைப் பார்த்தேன். தாடியும் முடியும் நீளமாக வளர்ந்திருந்தன. எண்பது வயது இருக்குமென்று பட்டது. ரொம்பவே சோர்ந்து சாகிற நிலைமை. என்னைப் பார்த்ததும் ‘அல்ஹம் துலில்லா, மக்களே, தண்ணீர்’ என்றார்.

நான் பக்கத்தில் தென்பட்ட வீட்டுக்குப்போய் வராந்தாவில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்த இளம் பெண்ணிடம் தண்ணீர் வேண்டுமென்று கேட்டேன். அழகான அந்த இளம் பெண் உள்ளே போய்ச் செம்பில் தண்ணீர் கொண்டு வந்தாள். நான் அதை வாங்கிக்கொண்டு நடந்ததும் செம்பையும் ஏன் எடுத்துக்கொண்டு போகிறேன் என்று கேட்டாள். வழியில் ஒரு ஆள் விழுந்து கிடக்கிறார். அவருக்குக் குடிக்கத்தான் என்றேன். இளம்பெண்ணும் என்னுடன் வந்தாள். தண்ணீரைக் கிழவருக்குக் கொடுத்தேன். கிழவர் மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். பிறகு அற்புதகரமான ஒரு செயலைச் செய்தார். செம்புத் தண்ணீருடன் எழுந்து பாதையோரத்தில் வாடித் துவண்டு நின்ற மாங்கன்றுக்கு அடியில் பாதித் தண்ணீரை பிஸ்மி சொல்லி ஊற்றினார். மாம்பழம் தின்ற ஏதோ வழிப் போக்கன் வீசியெறிந்த கொட்டை. அது துளிர்த்திருந்தது. வேர்கள் மண்ணுக்கு மேலாக இருந்தன. கிழவர் மர நிழலில் வந்து உட்கார்ந்து மிச்சமிருந்த தண்ணீரை பிஸ்மி சொல்லிக் குடித்தார்.. ‘அல்ஹம் துலில்லா’ என்று இறைவனைத் துதித்துவிட்டுச் சொன்னார்: ‘என் பெயர் யூசுப் சித்திக். வயசு எண்பது தாண்டிவிட்டது. சொந்தக்காரர்கள் யாருமில்லை. பக்கீராக உலகம் சுற்றிக்கொண்டிருந்தேன். நான் சாகப்போகிறேன். உங்கள் இரண்டு பேரின் பெயர்கள் என்ன?’

நான் சொன்னேன்: ‘என் பெயர் ரஷீத். பள்ளி ஆசிரியர்’. இளம் பெண் சொன்னாள்: ‘என் பெயர் அஸ்மா. பள்ளி ஆசிரியை’. ‘நம் எல்லாரையும் அல்லாஹ் ஆசீர்வதிப்பாராக’ என்று சொல்லிவிட்டுக் கிழவர் படுத்தார். எங்கள் கண்ணெதிரில் யூசுப் சித்திக் இறந்து போனார். அஸ்மாவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு நான் போய்த் தம்பியிடம் விவரம் சொன்னேன். ஒரு வேனைக் கொண்டுவந்தோம். சடலத்தை மசூதிக்குக் கொண்டுபோய்க் குளிப்பாட்டினோம். புதுக்கோடியில் மூடி கபரடக்கம் செய்தோம். கிழவரின் பையில் ஆறு ரூபாய் இருந்தது.

நானும் அஸ்மாவும் அதன்கூட ஐந்தைந்து ரூபாய் போட்டு மிட்டாய் வாங்கினோம். பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக மிட்டாயை அஸ்மாவிடம் ஒப்படைத்தேன். பிற்பாடு அஸ்மாவைத் திருமணம் செய்துகொண்டேன். அஸ்மா மாஞ்செடிக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள். இந்த வீட்டைக் கட்டிக் குடிவருவதற்கு முன்பு அந்த மாஞ்செடியை வேர் அறுபடாமல் பறித்து ஒரு கோணித் துண்டில் மண்ணைப் போட்டு நானும் அஸ்மாவும் நீரூற்றினோம். இரண்டு மூன்று நாள்கள் மாங்கன்று அஸ்மாவின் படுக்கையறை மூலையில் சாய்ந்து நின்றிருந்தது. அதை இங்கே கொண்டுவந்து நானும் அஸ்மாவும் சேர்ந்து குழிதோண்டிக் காய்ந்த சாணமும் சாம்பலும் போட்டு நட்டுவைத்துத் தண்ணீர் விட்டோம். புதிய இலைகள் துளிர்த்து ஜோரானதும் எலும்புத் தூளும் பசுந்தழை உரமும் போட்டோம். அப்படியாக அந்த மாமரம் இப்படி ஆனது.

‘மனோகரமான சம்பவம். சாவதற்குமுன் பேச முடியாத ஒரு மாங்கன்றுக்கு அந்தக் கிழவர் தண்ணீர் விட்டார். நான் இதை ஞாபகத்தில் வைத்திருப்பேன்.’ நான் விடைபெற்றுக்கொண்டு நடந்தபோது பின்னாலிருந்து அழைப்பு. நான் திரும்பினேன்.

ரஷீதின் மகன் ஒரு காகிதத்தில் பொட்டலத்தில் கட்டிய நான்கு மாம்பழங்களைக் கொடுத்துவிட்டுச் சொன்னான்: ‘ பெண்டாட்டி பிள்ளைகளுக்குக் கொடுக்கச் சொன்னார்கள்’

‘மோன், படிக்கிறாயா?’

‘காலேஜில் படிக்கிறேன்’

‘பேரென்ன?’

‘யூசுப் சித்திக்’

‘யூசுப் சித்திக்?’

‘ஆமாம். யூசுப் சித்திக்’

****

நன்றி : காலச்சுவடு

*********

Advertisements
Comments
5 Responses to “>தேன் மாம்பழம் – பஷீர்”
  1. Thangamani says:

    >இறக்கும் நிலையிலும் வாடும் செடிக்கு நீர் ஊற்றிய அந்தப் பெரியவரின் செயல்போற்றுதற்குரியது!வைக்கம் பஷீர் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் சொல்லத் தோன்றுகிறது!அன்புடன்,தங்கமணி.

  2. >பஷீரின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் இதுவும் ஒன்று.

  3. அழகான மனதுக்கு நிறைவான கதை. பஷீரின் சித்தரிப்பில் எளிய மனிதர்களின் உன்னதம் வெளிப்படுகிறது.

  4. rajkumar says:

    நான் படித்த பஷீரின் முதல் படைப்பு. 'கண்டதும் காதல்' என்பதில் அவ்வளவாக நம்பிக்கையற்று இருந்தேன். மாற்றிவிட்டார் பஷீர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: