>நாகராஜனின் உலகம் – சுந்தர ராமசாமி

>

நாகராஜனின் அச்சேறிய உலகம் 200 கிராம்தான் இருக்கும். வருடத்திற்கு அரை டன் கழித்துக்கொண்டிருக்கும் பட்டாளத்தின் மத்தியில், பாவம் நாகராஜன்! மூன்று லட்சத்திச் சொச்சம் விற்பனைப் பத்திரிகைகளில் இவர் உருப்படி ஒன்றுகூட வெளியானதில்லை. அவருடைய மாணவர்களுக்குக்கூட, கணக்கு வாத்தியாரின் இந்த விஷமங்கள் தெரிந்திருக்க நியாயமில்லைgnagarajan . புரட்டிப் பார்த்த உறவுப் பெண்களோ ‘சீ, அசிங்கியம்!’ என்று சொல்லிவிட்டார்களாம்!

அவர் மீது இந்த உலகம் காட்டிய அக்கறை ஒருபுறமிருக்கட்டும்.

தன்னுடைய அனுபவ உலகத்தின்பால் நாகராஜனுக்கு ஏற்பட்ட தீவிர அக்கறையின் விளைவுகள் இக்கதைகள்.

கதைகள் என்றால் அவை எத்தனையோ விதங்களில் இல்லையா?

உய்விக்க வந்த கதைகள், கிழித்துக் காட்டப் பீறிட்ட கதைகள், சுத்திகரிக்கப் பிறந்த கதைகள். இன்னும் பண்பாடுகளைக் காக்க, தர்மங்களை நிலைநிறுத்த, சிதிலமடைந்த கற்புகளைப் புனருத்தாரணம் செய்ய…

இப்படி ஏதாவது கொஞ்சம் ’பெரிசாய்’ இவர் கதைகளைப் பற்றிச் சொல்ல முடியுமா?

மன்னிக்கனும் ஸார். இவை கதைகள்தாம்.

கதைகள் மட்டும்தாமா?

மட்டும்தான்.

நோக்கம் என்னவாம்?

தெரியவில்லை. அக்கறையாக இருக்கலாம். அனுபவங்களைப் பற்றிய அக்கறையாக இருக்கலாம்.

இட்டுச் செல்ல வேண்டாம். வழிகாட்ட வேண்டாம். கோடியாவது காட்ட வேண்டாமா?

இட்டுச் செல்லலாம். தலைமை தாங்கி நடத்திச் செல்லலாம். செய்து காட்டியிருக்கிறார்கள் மகான்கள். செய்துகாட்டிவருகிறார்கள் பெரியவர்கள். இவருக்குக் கொடுத்து வைக்கவில்லை. கதைகள்தாம் எழுதியிருக்கிறார். ஆனால்…

என்ன ஆனால்?

ரொம்பவும் அருமையாக எழுதியிருப்பது மாதிரிப் படுகிறது. மகான்களுக்கு இன்னும் கிடைக்காத தரிசனங்கள் எல்லாம் இவருக்குக் கொஞ்சம் கிடைத்துவிட்டது மாதிரிப் படுகிறது.

ஓஹோ!

2

நாகராஜனை நான் சந்தித்தது பதினைந்து வருடங்களுக்கும் முன்னால். 1956இல். வஸ்தாதுகளின் உடலமைப்பில் எனக்கு ஒருவித ஆசையும் சலிப்பும் உண்டு. இதனால் நாகராஜனின் உடலமைப்பு என்னைக் கவர்ந்து, நெருங்கிப் பழகவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. ஸ்டாலின் மீசை வேறு, முரட்டு ஆத்மா என்று என்னுடைய கற்பனை கலந்த பயம் வேறு.

நாகராஜனின் கலையோ பேதைமையும் ஜாலமும் நளினமும் கொண்டது. எதிர்வீட்டு ஜன்னலில் தோன்றி சில கணங்கள் முகச்சேட்டைகள் காட்டி, நாம் மயங்கி நெகிழும்போது மறைந்து வெற்று ஜன்னலில் நம் பார்வையைப் பதியவைத்துத் தவிக்க வைக்கும் குழந்தை போன்றது.

நாம் மதிக்கத்தக்க இளம் கலைஞர்களுக்கும் மேடைகள் இல்லை. சீர் கெட்டுப்போன ரசனையின் புறக்கணிப்பில் அவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தம் முகங்களைக் காட்டிக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் எழுத்தில் எப்போதும் என்னைக் கவனப்படுத்தி வந்திருப்பவர் என் நண்பர் கிருஷ்ணன் நம்பி. நாகராஜனிடம் என் பார்வையைப் பதிய வைத்தவரும் அவர்தான். குப்பைகளை மேயாமல், தெரிந்து கொள்ள வேண்டியவர்களைத் தெரிந்து கொள்ளாத நஷ்டத்திற்கு ஆளாகாமலிருக்கும் சௌகரியத்தை நான் இவரால் அனுபவித்து வருகிறேன்.

இந்த எழுத்தாளர்கள் வரிசையில் நாகராஜன் மிகவும் முக்கியமானவர்.

3

இலக்கிய வித்தைகளை யார் கற்றுத்தர இயலும்? அதன் நயங்கள் சொல்லப்படுகையில் பாழ்பட்டுப்போகின்றன. பின்பற்றப்படுகையில் காலைவாரி விடுகின்றன. தன்னுடைய சுனைகளைத் தானே தேடும் முயற்சி அது. நாகராஜனின் கதைகள், இக்கதைகள் பிறப்பதற்கு முன்னரும் பிறந்த காலங்களிலும் அவர் மேற்கொண்டிருக்க வேண்டிய தவத்தையும் ஏக்கத்தையும் கட்டுப்பாட்டையும் உந்துதலையும் நமக்குக் காட்டுகின்றன. கலையின் நியதியை மதிக்கத் தெரிந்த எந்த ஆத்மாவுக்கும் இதை உணர முடியாமற் போகாது.

இவர் உலகம் வாழ்க்கையின் பின்கட்டு. முன்கட்டுக்கு என்ன என்று கேட்கலாம். திண்ணையில் பண்பாடு க்லு வீற்றிருக்கிறதே! நாம் பிறருக்குக் காட்ட ஜோடித்து வைத்திருக்கும் வேஷங்களில் கலைஞனுக்கு என்ன அக்கறை? அங்கே மடிப்புக் கலையாத அங்கவஸ்திரங்கள், புன்முறுவல்கள், தாம்பூலத்தட்டுகள், ஆண்சாமி படங்கள், பெண் சாமி படங்கள், வாங்கோ, வாங்கோக்கள்….

கதைகளைச் சொல்லிச் சொல்லிக் கொல்ல வந்தவர் அல்ல இவர். விளக்கங்களும் உரைகளும் விரவிவரும் உபந்நியாசம் இலக்கியக் கலை ஆகாது என்பது இவருக்குத் தெரியும். பின்கட்டின் சாளரம் ஒன்றைத் திறந்துவிட்டு கம்மென்று வாயை மூடிக்கொண்டு நம்முடன் நின்றபடி உள்ளே எட்டிப் பார்க்கிறார் – இந்தத் தருணத்தில் சாளரத்தைத் திறந்ததுதான் தான் செய்த ஒரே காரியம் என்ற பாவத்துடன். கெட்டிச் சாயங்கள் என்று நாம் நம்பிவரும் சில உருப்படிகள் சலவைக்கு ஆளாகின்றன.

சோமுப் பிள்ளை கட்டிலில் விழுந்துவிட்டார்  (தீராக் குறை). ஒரு பெருங்கூட்டம் சுய கணக்குகளைப் புரட்டுகிறது. சொத்துச் சுகம், உரிமை, அன்பு, முக்கியத்துவம், சுதந்திரம், செல்லம் இவற்றின் பங்கீடு சரிசமமாகக் கணக்கில் வரவுவைக்கப்பட்டுள்ளதா? சாயங்கள் கரைகின்றன. யதார்த்த சொரூபங்கள் சருமங்களைக் கிழித்துக்கொண்டு வெளியே துருத்துகின்றன. தாய், தந்தை, மூன்று பிள்ளைகள், மூன்று புதல்விகள், பேரன், பேத்தி – பெரிய ஆலவிருட்சம் இது. உபந்நியாச எழுத்தாளருக்கு இத்தனை நபர்களையும் அறிமுகம் செய்துவைக்கவே பேனாவில் இருமுறை மை நிரப்பிக்கொள்ள வேண்டியிருக்கும். ஆசிரியரின் தேர்ந்த கேமரா மனசு, திரை விலகியதுமே தன் கோணத்திலிருந்து பதிவு செய்து வர, பாத்திரங்கள் தங்கள் இயக்கங்களிலேயே தங்கள் முகங்களையும் தங்கள் மனங்களையும் உறவுகளையும் காட்டிக் கொண்டு வருகிறார்கள்.

நாடகம் நிகழ்ந்து முடிந்துவிட்டது. சாளரத்தை மூடுகிறார் ஆசிரியர். முகத்தைப் பார்க்கிறோம். ‘மனைவிதான் களங்கமற்ற துணையா?’ இத்தனை பேர்களிலும் வாயைத் திறக்காத அந்தப் பூச்சிதான் நம் மனத்தை நெகிழ வைக்கிறது. ‘எனக்கு என்ன தெரியும்? இந்த இடத்தில் அப்படித்தான் தோன்றுகிறதோ?’ என்று சந்தேகப்பட்டுக்கொள்கிறார் ஆசிரியர்.

முத்தாய்பு வைத்து முடிவு சொல்ல ஆசிரியர் காட்டும் தயக்கம் – அல்லது பரிபூர்ண விலகம் – கலைப்பூர்வமானது. வாழ்க்கையின் பரப்பையும் விசித்திரங்களையும் சிக்கல்களையும் அனுபவப்பூர்வமாக மனத்தில் ஏற்றுக்கொண்டுவிட்ட கலைஞனின் பொறுப்புணர்ச்சி அது. கதை ‘பண்ணு’கிறவர்களோ முடிவுகளையும் தீர்மானங்களையும் பாராவுக்குப் பாரா செங்கல் வண்டிகளாய்ச் சரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கதை படுத்தும் பாட்டை இவர் எழுத்தில் தெரிந்துகொள்வது சுலபம். சதைக்கும் இளமை முறுக்குக்கும் ஏய்ப்புக் காட்டும் காதல், எலும்பு துருத்திய தோலுக்கும் வயோதிகத்துக்கும் மத்தியில் கொஞ்சி விளையாடும் (அங்கும் இங்கும்) உண்மையும் இவருக்குத் தெரியும் என்பதை ஏற்றுக்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் நமக்கு இருக்க வேண்டும். முரட்டுத்தனமான உலகம் இவரைக் கவருவதைப் போலவே (அப்படி ஒரு காலம்! அப்படி ஒரு பிறவி!) ஒரு குழந்தையின் மென்மையான உலகமும் (பச்சக் குதிரை) இவரைக் கவரத்தான் செய்கிறது. அந்த அந்த உலகங்களுக்கு உரித்தான விசுவாசத்தைச் செலுத்தி, அந்த அந்த உலகங்களுக்கு உரித்தான நாதங்களை எழுப்பி, இந்த இரு உலகுகளையும் நாம் அனுபவித்து ரசிக்கும்படியாக எழுதி விடுவது எல்லாவற்றிற்கும் மேலாக இவர் கலைஞர் என்பதால்தான் என்பதையும் நாம் உணர வேண்டும்.

மிகுந்த சொற்சிக்கனத்தோடு எழுதும்போதும் சித்திரங்களும் பாத்திரங்களும் எத்தனை முழுமையாக உருப்பெறுகின்றன! ஒரு சம்பாஷணையில், ஒரு சில வாக்கியங்களில், ரங்கநாயகியின் முகமும் அகமும் எத்தனை தெளிவாய் மலர்கின்றன (மிஸ் பாக்கியம்)! லsura 12க்ஷ்மி அம்மாளுடன், அவள் பெண் அரவிந்தா (எங்கள் ஊர்) பேசும் நிமிஷங்கள் மிகச் சொற்பமே. ஒரு குடும்பத்தின் சோக வரலாறே விவரணங்களோடு அதில் துலங்கி வெளிப்படுகிறது.

எங்கள் ஊர் என்ற கதை மிகவும் அழகாக உருவாகியிருக்கிறது. ஒரு நவீன கவிதை போல், நாம் மீண்டும் மீண்டும் படித்து ரசிக்கும்படி அமைந்துவிட்ட கதை அது. கோள் மூட்டும் ஜாலக்காரி பொதுப்படையாகப் பேசுவதுபோல் பாவனை காட்டி ‘குண்டுணி’யை இடையே செருகுவது போல், ஊர் வனப்பின் லயிப்பினூடே சோகத்தை மீட்டுகிறார் ஆசிரியர்.

யாரோ முட்டாள் சொன்ன கதையை அவர் நிகழ்த்திக் கொண்டு போகும் முறையும் ரசிக்கும்படியாக இருக்கிறது, நிகழ்காலத்தில் இரண்டு கீற்று, நிகழ்ந்து முடிந்தவை இரண்டு கீற்று – இப்படி முடைகிறார் ஆசிரியர். மேற்பரப்பில் இது சாதாரணமாகத் தெரியலாம். எளிது என்றுகூடப் படலாம். கைவந்த வித்தைகளில் – பானை வனைவதிலிருந்து பல்லாங்குழி ஆடுவது வரையிலும் – அவற்றின் நேர்த்தி அவற்றைச் சாதாரணம் போல் காட்டுகிறது.

இந்தக் கலைஞரின் உலகத்திற்குள் உங்களை மகிழ்ச்சியுடனும் மிகுந்த நம்பிக்கையுடனும் அழைக்கிறேன்.

ஜி. நாகராஜனின் ‘கண்டதும் கேட்டதும்’ சிறுகதைத் தொகுப்பின் முன்னுரை, ஏப்ரல் 1971.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: