ஒரு புளியமரத்தின் கதை-முன்னுரை- சுந்தர ராமசாமி

முதல் பதிப்பின் முன்னுரை

இது என்னுடைய முதல் நாவல்.

நண்பர் ஸ்ரீ விஜயபாஸ்கரன் சரஸ்வதிக்கு ஒரு தொடர்கதை வேண்டு மென்று கேட்டார். 1959இல் நாவலாக எழுதிவிடலாம் என்று நான் நம்பிய கரு ஒன்று அப்போது என் மனசில் ஊசலாடிக்கொண்டிருந்தது. ஒப்புக்கொண்டேன். நாலைந்து அத்தியாயங்கள் வெளிவந்ததும் சரஸ்வதி தளர்ந்துவிட்டது. கையோடு அப்போதே இந்த நாவலை எழுதி முடித்திருக்கலாம்.sura20 எழுதியிருந்தால் அன்றே புத்தக உருவம் பெற்றிருக்கவும் கூடும். இதற்குள் – ஏழு வருடங்களில் – முதல் பதிப்பு ஆயிரம் பிரதிகள் விற்று முடிந்திருந்தால்கூட ஆச்சரியப்படுவதிற் கில்லை. எத்தனையோ  வாசகர்கள் என் எழுத்தை விரும்பிப் படித்துத் தான் வருகிறார்கள். ஏனோ அப்போது எழுதி முடிக்கவில்லை. அதனால் விசேஷ நஷ்டம் ஒன்றுமில்லையென்று இப்போது சமாதானப் பட்டுக் கொள்கிறேன். 1959இல் எனக்கு வயது 28. இப்போது 35. ராஜம் அய்யர், கமலாம்பாள் சரித்திரத்தைச் சிறுவயதில்தான் எழுதினார். அந்நாவலின் குறைகள் இன்று விமர்சகர்களால் எடுத்துக் காட்டப்பட்டு வருகின்றன. வயோதிகத்தில் எழுதப்பட்ட தரமற்ற படைப்புகளுக்கு நம் மொழியில் மட்டுமல்ல, உலக மொழிகளிலும் உதாரணங்கள் சொல்லலாம்..

தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபைத் திசைதிருப்பிவிட வேண்டு மென்றோ, உரு, உத்தி இத்யாதிகளில் மேல்நாட்டுக் களஞ்சியத்திலிருந்து கொஞ்சம் கொள்ளையடித்துத்தான் தீருவது என்று ஆசைப்பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதிய நாவல் அல்ல இது. தமிழ் அன்னைக்கு இதோ ஒரு புதிய ஆபரணம் என்று எண்ணியும் இதை எழுதவில்லை. எந்தக் கலைஞனும் தன் மொழியில் இல்லாததைத் தேடி அளிக்கவோ, இடைவெளிகளை நிரப்பவோ, இலக்கிய வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கவோ, மொழிக்குச் செழுமை யூட்டவோ எழுதுவதில்லை. நவநவமாய் ஆபரணங்களைச் செய்து அன்னையின் கழுத்தில் சூட்டுவது அல்ல, தன் கழுத்திலேயே மாட்டிக்கொண்டு அழகு பார்க்கவே அவனுக்கு ஆசை. கலைஞனின் சமூகப் பொறுப்புகளும் பொதுநல உணர்ச்சிகளும் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டுவிட்ட காலம் இது. அவன் எந்த அளவுக்குச் சுயநலக்காரன், திமிர்பிடித்தவன், அரசாங்க அமைப்பின் எதிரி, அனைவரையும் திரணமென மதிக்கும் அகங்காரி, சகோதரத் தொழிலாளிகள்மீது தீராத பொறாமை உணர்ச்சியை அடைகாத்து வருபவன், சிலவேளைகளில் எப்படி மனிதனிலும் கடைமனிதன் அவன் – இவை எல்லாம் மறந்துவிட்ட பாவனை காட்டும் காலம் இது. வெகுளிகளில் அவன் அக்கிரகண்ணியன். அவனால் சொந்தம் பாராட்ட முடியாத அர்ச்சனைகள் சொரியப்படுகிறபோது அதையும் அவன் கேட்டுக்கொண்டுதான் இருப்பான். ஆமோதிக்க, உண்மை உணர்ச்சி அவனை உறுத்தும். மறுக்க, அவனுடைய புகழாசை விடாது. விமர்சகர்களுக்கு வேட்டைதான். காண ஆசைப் படுவதையெல்லாம் கண்டுவிட்டதாகவே சொல்லிவிடலாம். ஆட்சேபணை இல்லை.

எழுத்தாளனும் ஒரு கலைஞன். தன் எழுத்து எவ்வாறு பிறர் படித்து ரசிக்கும்படியாக அமைந்துவிடுகிறது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தத்தளிக்கும் அப்பாவி அவன். அவன் வாழ்கிற காலத்தின் ஜீவரசம் அவனுள் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய பொறி களுக்கு வசப்பட்ட வாழ்க்கையின் கோலத்தை எழுதுவதிலும், எழுதாமல் விடுவதிலும், அதன் அடுக்கிலும், தேர்விலும், அழுத்தத்திலும், முடிப்பிலும் அவனுடைய ரத்த நம்பிக்கைகள் துளிர்க்கின்றன. வைஷ்ணவன் நெற்றியில் நாமம் போல் டைட்டில் பக்கத்தில் அவை பொறிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது இல்லை. பிரமாணமாக உருவாகாத சிந்தனைகளும், தீர்ப்புகளுமே படைப்பில் கசிகின்றன. விஞ்ஞான பத்ததிக்கும் தருக்க சாஸ்திர முறைக்கும் இலக்காகாத அவ்வுணர்வுகளின் தீர்ப்புகளில் முரண்பாடுகள் சகஜம்; தவிர்க்க முடியாதவை. இதற்கு நேர்மாறாக, கலையுலகில் அங்கீகரிக்கப்பட்ட தத்துவங்களுக்குத் தலையணை உறை தைப்பவன் கலைஞனே அல்ல. தெருக்கோடி கிருஸ்துவ பஜனையில் தொண்டையைக் கிழித்துக் கொள்பவனுக்கும் அவனுக்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது. கலைஞனின் படைப்பின் விளைவால் புதிய மாற்றங்கள் நிகழலாம்; மொழி செழுமை அடையலாம்; இடைவெளிகள் அடைக்கப்படலாம். இவை விளைவுகள். தலைகீழாகச் சொல்லிப் பழகிவிட்டார்கள் சமூக சாஸ்திரிகளான விமர்சகர்கள். கலைஞனின் வெகுளித்தனம் மறுக்காமல் பழகிவிட்டது.

puliayamaram

சரஸ்வதியில் புளியமரம் தொடர்கதைக்கு 15.7.59-ல் வந்த விளம்பரம்

1956 – 57 ஆண்டுகளில், சாயங்கால வேளைகளில் பள்ளி மணி அடித்துச் சில நிமிஷங்களுக்கெல்லாம் பஜாரில் தெற்கேயிருந்து ஒரு வாத்தியாரம்மா தோன்றி வடக்கே போவதை எண்ணற்ற நாட்கள் பார்த்திருக்கிறேன். அவளுடைய நடையழகு என்னை வெகுவாகக் கவர்ந்தது. தேவதூதர்கள் இருமருங்கும் நின்று அவள் பாதம்படப் பூக்கள் தூவிச் செல்வது என் கண்களுக்குத்தான் தெரிய வில்லை என்று எண்ணிக்கொள்வேன். மனசில் பதிந்துவிட்ட அவளுடைய உருவமே இந்நாவலில் செல்லத்தாயின் உருவாக அந்தர்முகமாய் நின்று தொழில்பட்டிருக்கிறது என்ற உண்மை சமீபத்தில் ஒருநாள் ஏதோ ஒரு நிமிஷத்தில் என் மனசில் பளிச் சிட்டது. அவளுக்கும் செல்லத்தாயிக்கும் ஒட்டும் உறவும் இல்லை தான். இருந்தாலும் விஷயம் உண்மை.

இந்நாவலின் கதாபாத்திரங்களில் பெண்கள் மிகக் குறைவு. நம் தேச ஜனத்தொகையில் பெண்களுக்குரிய வீதாசாரமான பிரதிநிதித் துவம் ஏகதேசமாய்க்கூட இந்நாவலில் அளிக்கப்படவில்லை. ஏதோ அவ்வாறு நிகழ்ந்துவிட்டது. உண்மையில் ஒரு பெண் கதாபாத்தி ரத்திற்கு நிறையப் பங்கு அளிக்கவே உத்தேசித்திருந்தேன். 1958இல் எங்கள் ஊரில் நான் விரும்பும் நாவலாசிரியர் ஒருவர் வந்து தங்கியிருந்தார். நானும் என் இலக்கிய நண்பரும் வெகு நேரம் ஆசை யோடு அவருடன் பேசிக்கொண்டிருப்போம். பேச்சு அலுப்புற்ற வேளைகளில் அந்த ஓட்டலின் இரண்டாவது மாடியில் நின்று பஜார் இயக்கங்களை வேடிக்கை பார்த்தபடி இருப்போம். அங்கிருந்து நேராகக் கீழே பார்த்தால் சினிமா தியேட்டரை ஒட்டிப் பொரி கடலைக்காரி ஒருத்தி உட்கார்ந்துகொண்டிருப்பது தெரியும். மேலே இருந்து பார்க்கையில் முறத்தில் பொரிகடலைக் குவியல்மீது அவளுடைய சிரம் வெட்டி வைக்கப்பட்டிருப்பது போல் தெரியும். இந்தக் கோணத்தில் பார்க்க நேர்ந்ததால் அவள் என் மனசில் இடம் பெற்றாள். கொழகொழவென்று வெற்றிலைச் சாறு தளும்பும் வாயுடன், தலையில் கனகாம்பர மூட்டையுடன், பெரிய பொட்டு டன், மலிவான அலங்காரங்களுடன், செயற்கைக் கவர்ச்சிகளுடன், ‘இது என் தொழில் அல்ல; உப தொழில்’ எனப் போடாமல் போடும் கோஷத்துடன், சிரிப்பும் வசையுமாக, கண்களால் ஆண்மையை அவ்வப்போது சீண்டியபடி இருப்பாள். அவளுக்கு இந்நாவலில் முக்கிய பங்கு அளிக்கவேண்டுமென்று எண்ணியிருந்தேன். ஒரு அத்தியாயத்தில் அவளை அறிமுகப்படுத்தியும் வைத் தேன். கூலி ஐயப்பனின் காதலியாகவோ, சகோதரியாகவோ, மாமியாராகவோ பின்னால் வளர்த்திக்கொண்டு வரவேண்டு மென்று யோசித்திருந்தேன். அடித்துத் திருத்திக் கிழித்துப்போட்டுத் திரும்ப எழுதிய பக்கங்களின் அவஸ்தையில் அவள் எப்போது நழுவி வெளியே விழுந்தாள் என்பதே தெரியவில்லை.

இது என்னுடைய முதல் நாவல்.

நாவல் துறைக்கு இந்நாவல்வழி நான் அறிமுகமாக நேர்ந்தது எனக்கு ஏதேதோ வகைகளில் திருப்தியைத் தருகிறது.

படித்துப் பாருங்கள். இந்த நாவல் உங்களுக்குப் பிடிக்கலாம். பிடிக்காமலும் இருக்கலாம். சில நாவல்கள் நன்றாக இருக்கும். சில நாவல்கள் நன்றாய் இராது.

நான் இதைவிடவும் விரும்பும் நாவல் ஒன்றைப் பின்னால் எழுதக் கூடுமென்று தோன்றுகிறது.

நாகர்கோயில் சுந்தர ராமசாமி

23 ஜூன் 1966

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: