வறுமையிலும் வாழ்வைக் கொண்டாடிய கரிச்சான்குஞ்சு-ரவிசுப்ரமணியன்

தன் படைப்புகளை முன்நிறுத்தாது தன்னை முன்னிறுத்தும் போக்கு மலிந்த தமிழ்ச் சூழலில் தன் படைப்புகளின் மேன்மை வழியே தன்னை அறிந்துகொள்ளவைத்தவர் கரிச்சான் குஞ்சு.

நம் காலத்தில் வாழ்ந்து மறைந்திருந்தாலும் கீழான வகைதொகைகளில் அவர் சிக்கிவிடவில்லை. கலைக்குள் இயங்குவதை ஒரு நோன்பென நோற்று ஆழமான அமைதியோடு படைப்புக்கு உண்மையாய் இருந்து அதற்குச் செழுமை சேர்த்தவர் கரிச்சான் குஞ்சு. அவரது படைப்புகளைத் தேடுபவர்களே கண்டடைய முடியும். அதனால் தான் அவர் போன்ற கலைஞர்களை, அவர்கள் வாழ்ந்த காலங்கடந்தே நாம் முழுமையாகக் கண்டுணரும்படி நேர்ந்துவிடுகிறது.

தன் சிறுகதைகள் குறுநாவல்கள், நாவலில், எந்த ஒரு கருத்துக்காகவும் கொள்கைக்காகவும்karichankunju தனிப்பட்ட குரலில் அவர் மாய்ந்து உருகுவதையோ எதிர்ப்புக் குரல் எழுப்புவதையோ நாம் காண முடியாது. தான் கண்ட, கேட்ட, அனுபவித்த, உணர்ந்த, கற்பனை செய்த விஷயங்களை அலட்டலில்லாமல் தன் படைப்புகளின் வழி முன்வைத்தவர் கரிச்சான் குஞ்சு.

அது ஒரு சமனான நிலை. அந்த நிலை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஏகாந்திகளுக்குச் சித்திக்கும் ஒருவித நிலை. வாழ்வில் தன்னைச் சுற்றி நடப்பவற்றையும் தனக்கே நேர்ந்தவற்றையும்கூட ஒரு பார்வையாளனாகக் கவனித்து அதை முன்வைப்பது. ஒரு சம்பவம், அவமானம், துயரம், சந்தோஷம், பகடி இப்படி ஏதோ ஒன்றை அவர் தன் படைப்பின் வழியே நம் பார்வைக்குக் கொண்டுவருகிறார். முன்னனுமானம், மனச் சாய்வு, தீர்மானங்கள், அபிப்ராயங்கள் போன்றவை இல்லாமல், தன்னிலை என்ற ஒன்றும் இல்லாமல் ஒரு விஷயத்தைப் படைப்பாக்கி நம் பார்வைக்கு வைப்பது போலத்தான் அது நமக்குத் தோன்றும். ஆனால் இங்குதான் கரிச்சான்குஞ்சு நுட்பமான உலகில் பிரவேசிக்கிறார். அவர் கண்டுணர்ந்த, அனுபவித்த, ஆயிரம் விஷயங்களில் அவர் நமக்கு எதைச் சொல்ல வந்தார் என்ற இடத்திலிருந்து ஆரம்பிக்கிறது விஷயம். விமர்சனமோ புகாரோ இன்ன பிறவோ ஏதுமின்றி ஒன்று எப்படி நடந்ததோ அப்படியே அதைச் சொல்கிறேன் என்னும் பாவத்தைக் காட்டி அதில் ஏதோவொன்றை நாம் உணரும்படி வைப்பார். ஆனால் அவர் பாத்திரங்கள் எழுப்புகிற தர்க்கங்கள், படைப்பினை நகர்த்திச் செல்லுகிற பாதை, உள்ளடக்கமாகக் குங்குமப் பூ ரேகையாய் ஓடும்

ஒரு தத்துவார்த்த இழை, இவை மூலம் அவர் எழுப்புகிற த்வனி, இந்த இடங்களில்தான் கண்ணுக்குத் தெரியாத கவிதை உணர்வாய், விண்டு சொல்ல முடியாத அனுபூதியாய், கரிச்சான் குஞ்சுவின் ஆளுமை விரவிக்கிடக்கிறது. ஒரு வகையில் இவைதான் அவர் எழுப்ப விரும்பும் குரலின் தடங்கள். இவற்றின் வழியாகத்தான் அவர் சொல்ல விரும்பும் எல்லாவற்றையும் நமக்குள் லாவகமாகக் கடத்துகிறார்.

சொல்லியும் சொல்லாமல் செல்லும் இந்த விட்டேத்தியான போக்கை அவர் கதையைக் கட்டமைத்த விதத்தின் வழியேகூட நாம் உணரமுடியும். அதீதக் கவனத்துடன் இழுத்துக் கட்டப்பட்டு கிண் என்று நாதம் எழுப்புபவை அல்ல அவரது கதைகள். தளர்வான கதைகள். சில சமயம் சளசளப்பும் தொய்வுமாய் வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து சற்று விலகிச் செல்லும் கதைகள். எல்லோரையும் சட்டென ஈர்க்கும் யத்தனத்தையோ செதுக்கி எடுத்து மினுமினுப்பாய்த் துலக்கிப் பார்வைக்கு வைப்பதையோ பிரகடனங்களையோ அவர் படைப்புகளில் நாம் காணமுடியாது. இதை மீறிச் செறிவான கட்டமைப்புடன் அமைந்த சில படைப்புகளும் அதற்கான யத்தனமின்றி அதனியல்பில் பிறந்தவையே.

ஒரு பரதேசி ஒப்பனைகள் ஏதுமின்றி இடுப்பை மறைக்கமட்டும் உடுத்தியபடி தன் போக்கில் காலாற நடக்கும் ஒருவித மனோ நிலையில் எழுதப்பட்டவை போலத்தான் இந்தக் கதைகள் தோன்றுகின்றன. இதை அவர் அறிந்தோ அறியாமலோ செய்திருக்கக்கூடும்.

இளமையில் வறுமை, பால்யகால உறவுகளின் அனுசரணையற்ற தன்மை, அனாதை போலப் பாட சாலைகளில் கழிந்த பால்யம், அவர் படித்த வேதாந்தத் தத்துவங்கள், எல்லாமுமாகச் சேர்ந்து லௌகீக வாழ்விலும் அவரை ஒட்ட விடாமலேயேதான் வைத்திருந்தன. அவர் வீட்டுக்குள்தான் வாழ்ந்தார். ஓட்டுக்குள் பழுத்துருளும் விளாம் பழம் போல் ஓட்டுக்குள்ளிருந்தும் ஒட்டியும் ஒட்டாமல் விட்டு விடுதலையான வாழ்வைத்தான் வாழ்ந்தபடி இருந்தார்.

பொதுவாக அவருக்குக் குடும்பப் பொறுப்பு இருக்கவில்லைதான். ஆனால் அதே சமயம் முற்றமுழுக்க உறவுகளை அறுத்துக்கொண்டார் என்றும் சொல்லிவிட முடியாது. அவரது மகள்களை அவர் பெயர் சொல்லிக்கூட அழைக்கமாட்டார். ‘குழந்தே’, ‘குழந்தே’ – என்றுதான் கூப்பிடுவார். அவர்களைப் படிக்கவைக்க அவர் பட்ட பாட்டையும் திருமணம் செய்து வைக்க அவர் பட்ட அல்லாட்டத்தின் ஒரு பகுதியையும் நான் அறிவேன். அவர் தனது நண்பர் ல.கி.ராமானுஜத்துக்கு மன்னார்குடி 36, கீழ நாலாந் தெருவிலிருந்து 09.08.1977இல் எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“மூத்தவளுக்கு மணம் முடித்தே ஆகவேண்டும். வயது இருபத்தி ஒன்பது முடிந்துவிட்டது. அவமான உணர்ச்சியுடன்தான் நடமாடிக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் விரைவில் ஆகவேண்டும். இறையருள் எப்படியோ. மனசை இம்சிக்கும் தீய கனவுகளை நான் பெரிதுபடுத்திக் கொண்டால் கொஞ்சமாய் மிஞ்சி மங்கிக்கிடக்கும் ஆத்ம விலாசமும் மாய்ந்தே போய்விடும். ஆனால் அப்படித்தான் மனம் குழம்பிச்செத்த நிலை. மனம் மாய்ந்துதான் போய்க்கொண்டிருக்கிறது. உண்மையில் மனம் மாய்ந்துவிட்டால் நான் ஒரு பரமஹம்சன். அமுதத்தாரையைக் குடித்துக்கொண்டு ஆனந்த சாகரத்தில் திளைப்பேன். அந்த மஹா பாக்கியமெல்லாம் இந்த பாவிக்கேது”

பல சிரமங்களுக்குப் பின் அந்தக் கல்யாணத்தை 21.04.1978 அன்று நடத்தி வைத்திருக்கிறார். தன் அம்மாவோடு அவருக்கு வந்த பெரும் கருத்து வேறுபாடே அவரது மகள்களைப் படிக்க வைப்பதில்தான் தொடங்கியது. “என்னத்துக்குடா பொண் குழந்தைகளைப் படிக்க வைச்சுண்டுருக்க? நான் சொல்றேன் கேளு. இவாள்ளாம் படிச்சுட்டு இப்ப என்ன பண்ணப் போறா? அவள்களுக்கு கல்யாணத்த பண்ணி வைச்சிப்புடு” என்று அவர்கள் சொல்ல, “எப்பாடு பட்டாவது நான் அவாளைப் படிக்க வச்சுடுவேன்” என்று இவர் பிடிவாதமாய் சொல்ல, “அப்படின்னா நீ என் முஞ்சிலயே முழிக்காத. நான் செத்துட்டா தலைகாணிக்கு அடில பணம் வைச்சிருக்கேண்டா. அத எடுத்து நீ எனக்கு காரியம் பண்ணிடு” என்று சொல்லிவிட்டார். அந்தப் பாட்டியோடு பேத்திகள் சீராடிக் கொண்டிருந்தாலும் கரிச்சான்குஞ்சுக்கு இந்தச் சண்டையால் தனது அம்மாவை அவரது கடைசி காலம் வரை பார்க்க முடியவில்லை.

இன்னொரு பக்கம் அவர் சீட்டாடினார். ரேசுக்குப் போனார். எது பற்றியும் கவலை கொள்ளாமல் இருந்தார். வேலை பார்த்த சில இடங்களில் தவறு நடக்கையில் சகித்துக்கொண்டிராமல் சமரசம் கொள்ளாமல் சண்டைபோட்டு விலகிவந்தார். கோபக்காரர். சாப்பாட்டுப் பிரியர். தாம்பூலக் காதலன். கிடைத்த பணத்தை உடனே செலவிட்டுவிடுபவர். அறச்சினம் கொண்டவர். துன்பங்களை அலட்சியப்படுத்தியவர். கோபத்தில் கெட்ட வார்த்தை பேசுபவர். வேதம் படித்தவர். கம்யூனிசத்தில் சற்று மோகம். இசை ரசிகர். விச்ராந்தி மனோநிலையில் இருப்பவர். இப்படி கரிச்சான் குஞ்சுவின் விசித்திரக் குணாம்சங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். கொஞ்சம் கொஞ்சம் பிடிமானம் இருந்தாலும் சராசரி வாழ்வில் ஒட்டாத மேலும் கீழுமான இந்த ஏற்ற இறக்கமான நிலைதானே ஒரு அசல் கலைஞனின் சாமுத்ரிகா லட்சணம். அவன் மன நிலையில் அவன் அப்படித்தானே வாழமுடியும்.

ஆனால் இது போன்ற விசித்திரப் பிறவியை வீடு சகித்துக்கொள்ளுமா? அது வரவு செலவு கணக்குகளால் ஆனது. அதைப் புரிந்து சகித்துக்கொள்ள வேறோரு கலைமனம் தேவைப்படுகிறது. திருமதி கரிச்சான் குஞ்சுவான சாரதா அம்மாளும் அவருடைய மகள்களும் பல சமயம் அவரைக் கடிந்துகொண்டதை அவரோடு சண்டையிடுவதை நான் நேரில் கண்டதுண்டு. ஆனால் அது அவர்கள் தவறல்ல. அவர்களின் கருத்துலகம் வழியே, அவர்களின் புரிதல்கள் வழியே, அவர்களின் அன்றாடச் சிரமங்கள் வழியே அவரைப் பார்த்த பார்வை அது. இது கரிச்சான் குஞ்சுக்கு மட்டுமல்ல பெரும்பாலும் தேர்ந்த கலைஞர்களெல்லாம் எதிர்கொள்கிற லௌகீகச் சிக்கல்தான். சம்பாத்தியமில்லாத, செல்வாக்கில்லாத புருஷனை வீடு சகித்துக்கொள்ளாது. சகித்துக் கொள்ளவும் முடியாதுதான். இப்படி ஆதார இருப்பிடத்திலிருந்தும் வீசிக் கலங்கடிக்கிற காற்றுக்கும் மத்தியில்தான் ஒரு கலைஞன் தன் படைப்பின் சுடரை அணையாமல் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆனால், காலம் கடந்து கரிச்சான் குஞ்சுவின் மகள்கள் அவரைக் கொண்டாடத்தான் செய்தார்கள். வாடகை வீடுகளில் அவர் குடியிருந்த காலங்களில் வீட்டுக்காரன் ஒருவன் “வாடகை குடுக்க வக்கில்ல. உனக்கு ஹிண்டு பேப்பர் ஒரு கேடா” என ஒருமுறை கேட்டிருக்கிறான். அதனால் விஜயா அவருக்காகவே சொந்த வீடு கட்டும் முயற்சி எடுத்துப்பெரும் சிரமத்திற்கிடையில் அதைக் கட்டி முடித்தது. பிரபாவின் ப்ரியங்கள் சொல்லில் அடங்காதது. கரிச்சான்குஞ்சு ஈஸிச்சேரில் அமர்ந்து விஸ்தாரமாக பாவ அபிநயங்களோடு நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்க அவரது மேன்மை அறிந்த காலத்தில் அவர் காலடியில் அமர்ந்தவாறே பிரபா அதை வியந்து கேட்டுக்கொண்டிருக்கும். அவர் மறைந்து இவ்வளவு காலத்துக்குப் பின்னும் அதற்கு இவ்வளவு வயதாகியும்கூட எப்போது அவரைப் பற்றி பேசினாலும் நெகிழ்ந்து அழுதுவிடுகிறது பிரபா.

ஒருமுறை கரிச்சான்குஞ்சுவுக்குக் கடுமையாக உடல்நிலை பாதித்தபோது அவர் மகள் விஜயாவும் நானும் கும்பகோணம் செட்டி மண்டபம் அருகே உள்ள விமல் மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தோம். அந்த முதல் நாள் முழுக்கத் தவிப்பும் வலியும் சஞ்சலமுமாக இருந்தார். பிறகு தூக்கத்துக்கான மருந்துகள் தரப்பட்டு ஊசிகள் போடப்பட்டுக் காலையில் கண்விழித்தார். “என்ன சார் எப்படி இருக்கீங்க. இப்ப வலி ஏதும் இல்லியே” என்று கேட்டேன். “ஆத்மாவுக்கு வலி உண்டா என்ன?” என்றார்.

09.08.1983இல் பாண்டிச்சேரியிலிருந்து ஞானாலயா கிருஷ்ண மூர்த்திக்கு எழுதிய கடிதத்திலும் ஆத்மாவைக் குறிப்பிட்டுள்ளார். “வறுமையும் வேதனையும் எனக்குப் பிடித்த தோழர்கள். ஆனால் அது என் ஆத்மாவைப் பாதிக்கவில்லை என்றே நினைத்துக்கொள்கிறேன். அது எவ்வளவு தூரம் சரியோ எனக்குத் தெரியாது”

ஆத்மா என்று அவர் எதைச் சொல்கிறாரென எனக்குப் புரியவில்லை. த்வன்யா லோகா மொழிபெயர்ப்பான தொனி விளக்கில், தொனியின் முக்கியத்துவம் குறித்து தனது கருத்தைத் தனியே அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆத்மா பற்றி அவர் குறிப்பிடுவதை அதிலும் கவனித்தேன். அதைப் படித்தபின் அதன் உட்பொருள் எனக்கு விளங்கிற்று.

”சொல்லும் பொருளும் காவியத்திற்கு உடல். ரஸம் முதலியவை உயிர், தொனி, ஆத்மா. உயிர் உடலில் இருந்து விலகுமெனில் ஆத்மா என்பது அவ்வியக்கம் மாத்திரம் இல்லை. உணர்வுகளே ஆத்மா ஆகும். உயிரும் ஆத்மாவும் கூடித் தான் சரீரமென்பது நேரும். அவை இல்லையெனில் வெறும் சரீரம் உயிரும் உணர்வும் அற்றது ஆகும் என்பதை நினைவில் கொள்க” என்று குறிப்பிடுகிறார்.

பார்வைக் குறைபாடுகள் இருந்தும் உடல் நலிவு இருந்தும் எழுத வேண்டுமென்ற ஆவல் அவரிடம் சதா இருந்துகொண்டே இருந்தது. அது போலவே அவர் எழுதிப் பாதியில் நிறுத்தியவை சில. தனது சுயசரிதைத் தொடர் ஒன்றைத் திருச்சியில் இருந்து வந்த மனிதம் இதழில் தொடங்கி அது நான்கு இதழோடு நின்றதும் நிறுத்திவிட்டார். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் பற்றிய ஒரு நாவல் எழுத எண்ணி அவர் பற்றிய ஏராளமான வரலாற்றுத் தகவல்களைப் பல நூல்நிலையங்கள் சென்று குறிப்பெடுத்துச் சேகரித்து வைத்திருந்தார். கடைசிவரை அதை அவரால் எழுத இயலவில்லை.

02. 05. 1978இல் மன்னார்குடியிலிருந்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராமானுஜம் இருவரையும் சேர்த்து விளித்து எழுதிய ஒரு கடிதத்தில் எழுதுகிறார்.

“1937 முதல் 1947 வரையிலான சமகால வரலாற்றுப் பின்னணியில் நாவல் எழுத முடிவாகிவிட்டது. இது வெறும் வரலாறாகிவிடுமோ என்று பயப்படுகிறீர்களா? இருக்காது. கதையம்சமே நிறைய இருக்கும். பிராமணசமூகத்தின் ஸனாதனிகள், ஆஷாடபூதிகள், போலி ஆச்சாரங்கள், முதலியவை தோலுரிக்கப்பட வேண்டும். இவ்வளவும் எழுத முற்றிலும் எனது குடும்பச் சூழ் நிலையிலிருந்து விலகி தத்துவம், சிந்தனை, தவம், தனிமை என்று இருந்தால் முடிந்துவிடும். காதல் கதைகள்தான் நிறைய வருகின்றனவே. உண்மையான நாவலை எழுதிப் படைக்கப் பார்க்கிறேனே நான்”

இது தொடர்பான இன்னொரு கடிதம் 27. 11. 1981இல் பாண்டிச்சேரி 123 செட்டித்தெருவில் இருந்து கிருஷ்ணமூர்த்திக்கு எழுதியது. முன் நான் குறிப்பிட்ட கடிதம் 78. இது 81. இந்தக் கடிதத்தில் இப்படிச் சொல்கிறார்.

“இங்கே எனக்கு நேரமே கிடையாது. ஓய்வு மிகக்குறைவு. இரவுகளில் எழுதலாம் என்றால் கண் ஒத்துழைக்க மறுக்கிறது. முன்பெல்லாம் இரவுகளில் தூங்குவது முட்டாள்தனம் என்று திமிரடியாய் இருந்ததற்கு இப்போது தண்டனை. இருந்தாலும் ஏதாவது செய்யத் தீர்மானித்துவிட்டேன். அடுத்த வருஷம் பிறந்த பிறகாவது மெல்ல மற்றொரு நாவலை அரசியல் மற்றும் ஆன்மீகப் பின்னணியில் ஜாதி, சமய சர்ச்சைகளோடு எழுதப்போகிறேன். ஆமாம் எழுதத்தான் போகிறேன். தினந்தோறும் சிறிது சிறிதாக எழுத உத்தேசம். ஏற்கனவே திட்டம் போட்டு நிறையச் சிந்தனை  செய்த கரு அது. ஆகவே சில மாதங்களில் முடித்துவிடலாம். ஒருவேளை பக்கம் குறைந்தாலும் நாவல் தரமுடையதாய் அமையும். வரலாற்று விவரங்கள் 1939 முதல் 1948வரை அடிபடும். முறையற்ற பிராமணர்கள் சவுக்கடிபடுவார்கள். சீர்திருத்தக்காரர்களும் செல்லாக் காசாய் இளிப்பது காட்டப்படும். பெரியாரின் தொண்டும் அதன் பயனும் உரிய பாராட்டைப் பெறும். அதேவேளை அவர் செய்த நாத்திகப் பிரச்சாரத்தின் போலித்தன்மையும் ஆத்திகத்தின் போலித்தன்மைக்கு அப்பால் உள்ள நிஜமான ஆத்திகமும் விளக்கப்படும். அந்தக் கதையில் நானே ஒரு பாத்திரமாக அமைவேன். (இது உண்மையும் கூட) ஆகவே தயவு செய்து கலைஞரின் நெஞ்சுக்கு நீதி எனக்கு வேண்டும். திருப்பிக் கொடுக்கப்படும் வகையில் எனக்கு கிடைக்குமாறு செ ய்தல் வேண்டும். இதை எழுதும் போது இரவு 10:30 பாரதி படித்துக்கொண்டிருக்கிறேன். அடடா, படிக்கப் படிக்க புதுமை”

எழுதுவதில் திட்டங்களும் ஆசைகளும் இருந்தது போலவே தான் உயிரோடு இருக்கும்போதே தனது புத்தகங்களின் மறுபதிப்புகள் வந்துவிட வேண்டுமென்றும் கரிச்சான் குஞ்சுக்குத் தணியாத ஆசை இருந்தது. அதை ஓரளவே அப்போது எங்களால் நிறைவேற்ற முடிந்தது. ஏற்கனவே வெளிவந்திருந்த அவரது ஏழு கதைத் தொகுதிகளில் இருந்து தொகுத்து நர்மதா பதிப்பகம். அன்றிரவே தொகுப்பை எண்பதுகளில் வெளியிட்டது. அதன் பின் பேராசிரியர். மது. ச. விமலானந்தம் அவர்கள் முயற்சியால் கீர்த்தி வாசன் என்ற தொழிலதிபரால் அவரது கழுகு என்ற நாடகத்தொகுதி வெளிவந்தது.

சிம்மம் என்றும் ஞானபண்டிதர் என்றும் பிரியமாக அழைத்ததோடு மட்டுமல்லாமல் தனது கதைகளில் கரிச்சான் குஞ்சைச் சிறுசிறு பாத்திரங்களாகவும் உலவவிட்டவர் ஜெயகாந்தன். பொதுவாய்த் தனது சபையில், தான் அமரும் நாற்காலியில் யாரையும் அமர அனுமதிக்காத ஜெயகாந்தன் அவரை அதில் அமர வைத்துப் பேசச்சொல்லிக் கேட்டுக்கொண்டிருப்பார். அந்த ஜே.கேயின் முயற்சியால் 197Ravi Aathi 1A 8இல் மீனாட்சி புத்தகநிலையம் பசித்த மானிடம் புத்தகத்தை வெளியிட்டது.

“அதன் மறுபதிப்பு இனி எப்போ வருமோ தெரியலை” என வெகு காலமாய்ச் சொல்லிக்கொண்டிருந்தார் கரிச்சான் குஞ்சு. 1990இல் என்னிடமும் அது குறித்துப் பேசியுள்ளார். 09.04.1982இல் பாண்டிச்சேரியிலிருந்து அவர் தனது நண்பர் ஞானாலாயா கிருஷ்ண மூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் சலிப்போடு இப்படிச் சொல்கிறார். “பசித்த மானிடம் மறுபதிப்பு வர வேண்டுமென்பது என் ஆசை. அது நிறைவேறப் போவதில்லை. போகட்டும்”

அந்த நாவலை 1978க்குப் பிறகான நீண்ட இடைவெளிக்குப் பின் 2005இல் காலச்சுவடு வழியாகக் கொண்டுவந்தேன். கண்ணன் இதற்கு முன்பணமாகப் புத்தகம் வெளிவரும் பலமாதங்களுக்கு முன்பே 2004இல் ஒரு தொகையை என்னிடம் தந்தார். சாரதா அம்மாளிடம் நான் அதை வடபழனி தங்கவேல் காலனியில் சென்று தந்தபோது, “அவர் இருந்தபோதுகூட புஸ்தகம் வருமின்ன எழுத்துக்கான பணத்த நான் பாக்கல சுப்ரமண்யம். அவர் இப்ப இல்லாமயும் குடுக்கறார். அத அப்படியே சுவாமி படத்துக்கு மின்ன வச்சுரு” என்று தழுதழுத்தார்.

சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள் எனப் படைப்பிலக்கியத் தளத்தில் பல காலம் அவர் இயங்கி வந்திருந்தாலும் பசித்த மானிடம் என்ற ஒரு நாவலின் வீச்சு, அவரை இலக்கியத்தின் பல தளங்களிலும் இயங்குபவர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. அந்த நாவல் இப்போது நான்காம் பதிப்பைத் தாண்டிச் செல்கிறது. மூன்று பதிப்புகளின் ராயல்டி தொகையாக மட்டும் இதுவரை முப்பத்து ஐய்யாயிரம் வந்துள்ளது. காலச்சுவடின் வழியாகவே அவரது சிறுகதைகளும் இந்த ஆண்டு வெளிவரும் என்பது என் நம்பிக்கை.ஞானத்தால் பெற்ற பயமின்மையும் மார்க்ஸியச் சிந்தனைப் போக்கில் இருந்த சன்னமான ஈடுபாடும் சேர்ந்து, அவர் எந்தச் சபையிலும் எந்த விஷயத்தையும் துணிச்சலாகப் பேசுபவராகவே இருந்தார். காஞ்சிப் பெரியவர் சந்திர சேகரேந்திர சுவாமிகளுடனான சதஸில் அத்வைதம் குறித்த விவாதங்களில் ஈடுபடும்போது த்வைதம் என்றால் ஜீவாத்மா, பரமாத்மா என்று இரண்டு. அத்வைதம் என்றால் இரண்டுமல்லாத ஒன்று என்கிறபோது கடவுளும் இல்லை. அப்போ அதுவும் நாத்திகம்தானே என்று அவர் காஞ்சிப் பெரியவரிடம் விவாதித்ததை நண்பர் தேனுகாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் கரிச்சான்குஞ்சு.

1986இல் இலங்கை எழுத்தாளர் மார்க்ஸியச் சிந்தனையாளர் டேனியல் இறப்புக்கு

பொ.வேலுச்சாமியின் கோழி முட்டை ஏற்றும் வண்டியில் அமர்ந்து அவரது இறுதிச்சடங்குக்குச் சென்றதும் கம்யூனிச ஊர்வலங்களில் கலந்துகொண்டு கோஷமிட்டு சென்றதும் இதனால்தான். அதே பார்வை கொண்ட, சிக்கல் சிடுக்கான நிரடான மொழியில் அமைந்த தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய ஆங்கிலப் புத்தகமான வாட் ஈஸ் லிவ்விங் அன்ட் வாட் ஈஸ் டெட் இன் இண்டியன் பிலாசஃபி என்ற புத்தகத்தை எளிமையாக அவர் தமிழில் மொழிபெயர்த்ததும் அதனால்தான்.

பொ.வேலுச்சாமியும் பொதியவெற்பனும் அந்தப் புத்தக மொழிபெயர்ப்புக்குக் காரணமாக இருந்தாலும் அது மொழிபெயர்க்கப்பட்டதும் அதன் அதிக பக்கங்களால் பதிப்பாளர்கள் அதை வெளியிட முன் வரவில்லை. (அது வெளிவந்தபோது அதன் பக்கங்கள் எழுநூற்றி ஐம்பத்தி ஐந்து) அதை வெளியிட யார் யாரிடமோ அணுகி கடைசியில் தேனுகா அவரது நண்பர் சவுத் விஷன் பாலாஜி வழியாக அந்தப் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பான இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் புத்தகத்தைக் கொண்டுவந்தார் பாலாஜி. அந்தப் புத்தகத்துக்காக ஐயாயிரம் ரூபாயைக் கரிச்சான்குஞ்சுக்கு தந்தார் அவர். அது அப்போது அவருக்குப் பெரிய தொகையாக இருந்தது.

காஷ்மீரத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆனந்தவர்த்தனரின் த்வன்ய லோகவைத் தொனி விளக்கு என்ற பெயரில் அவர் மொழிபெயர்த்த புத்தகமும் தமிழுக்கான பிற மொழி வரவுகளில் முக்கியமானது. க்ரியாவுக்காக மொழி பெயர்க்கப்பட்ட த்வன்ய லோகம் க்ரியா ராமகிருஷ்ணனுக்கும் அவருக்குமான சிறு கருத்து முரண்பாடால் வெளிவராமல் போனது. அதன் பின் அதனை நான் மீராவின் அன்னம் பதிப்பகம் வழியே கொண்டுவர முயற்சி எடுத்து அவரிடம் கொண்டுபோய்ச் சேர்த்தேன். அவரும் ஏனோ சில வருஷங்கள் அதனை வெளியிடாமலே இருந்தார். கரிச்சான் குஞ்சுவின் மறைவுக்குப் பின் அதை அவர் இருக்கும்போது வெளியிடாததற்கு வருத்தப்பட்டுப் பின் அதை அச்சாக்கமும் செய்துவிட்டார். அப்போது திடீரென அதன் கடைசி அத்தியாயம் காணவில்லை என்று மீரா சொல்ல எனக்கு என்னசெய்வதெனப் புரியவில்லை. அப்போது கரிச்சான் குஞ்சுவும் இல்லை. மறுபடி எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. இதற்கிடையில் மீராவும் உடல் நலமின்றி இருந்து மறைந்துவிட்டார். கடைசியில் மீராவின் மகன் கதிரிடமிருந்து அதை வாங்கி வந்தேன். நண்பர் கி. அ. சச்சிதானந்தன் அதில் விடுபட்ட பகுதிகளை சமஸ்கிருத அறிஞர்களின் உதவியோடு ஒழுங்கு செய்ய முதலில் முயன்றார். பின்பு அவரே “கரிச்சான் குஞ்சு உயிரோடு இல்லாததால, இன்னாத்துக்குப்பா அதுல போயி திருத்தம் பண்ணி, இல்லாத இன்னோர்த்தனை வச்சி எழுதிச் சேத்துகினு. வேண்டாப்பா. வுடுப்பா அப்படியே போட்றலாம்” என்று சச்சி முடிவு செய்யவே அதை அவ்விதமே வெளியிட நண்பர் சந்தியா நட்ராஜன் சம்மதித்து 2004இல் அதை வெளியிட்டார்.

1992இல் அவர் மறைந்த பிறகு நானும் தேனுகாவும் கரிச்சான் குஞ்சு பற்றிய கருத்தரங்கமொன்றை நடத்தத் திட்டமிட்டோம். பிறகு முத்துவையும் பொதியவெற்பனையும் அதில் சேர்த்துக்கொண்டோம். கும்பகோணம் ஜனரஞ்சனி ஹாலில் கருத்தரங்கம் நடந்தது. அதில் கரிச்சான் குஞ்சுவின் படத்தைத் திறந்துவைத்து அவர் பற்றியும் எம்.வி.வி நடத்திய தேனி இதழில் இணைந்து அவர் துணை ஆசிரியராகப் பணியாற்றியது பற்றியும் அவரது பன்முக ஆற்றல் பற்றியும் எம்.வி.வி. பேசினார். அந்த விழாவில் அவரது சிறு நாடகப்பிரதியான காலத்தின் குரலை நானும் தேனுகாவும் எங்கள் சொந்தச் செலவில் புதிய நம்பிக்கை இதழ் ஆசிரியர் பொன் விஜயன் வழியாகக் கொண்டு வந்தோம்.

அதே கும்பகோணம் ஜனரஞ்சனி ஹாலிலும் காந்திபார்க்கிலும் கோபால்ராவ் நூலகத்திலும் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் என் கல்லூரி காலங்களில் அவர் மீது எனக்குப் பெரும் மதிப்பு உருவாகி இருந்தது. சில வேளைகளில் எம். வி. வியும் அவர்கூட இருப்பார். வெங்கட்ரமணா ஓட்டலில் காபி சாப்பிட்ட பின் முத்து பீடாக் கடையின் தாம்பூலம் துலங்கப் பேச்சு போய்க்கொண்டிருக்கும். அதன் பின் அவரை வீட்டுக்குச் சென்று பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. நானும் இன்று திரைப்பட வசன கர்த்தாவாக இருக்கும் பிருந்தாசாரதியும் இப்போது கோவையில் தமிழாசிரியராப் பணிபுரியும் செந்தில் வேலுவும் வெற்றிலைச் சீவல் வாங்கிக்கொண்டு அவரைப் பார்க்க மாசம் ஒரு தடவையாவது சென்றுவிடுவோம். கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் எழுதிய கவிதைகளை வாங்கி அவர் ஆர்வமாய்ப் படிப்பார். அப்போது கம்பராமாயணப் பாடல்களை அனுபவித்து ரசனையோடு பாடம் எடுப்பது போலச் சொல்வார். அவருக்குப் புதுக்கவிதைகள்மீது அத்தனை ஈடுபாடில்லை. மரபின் செழுமையை உண்டுகளித்துத் திளைத்த மனத்திற்கு அப்படி ஒரு விலகல் இருந்ததில் எங்களுக்கு ஆச்சர்யமும் இல்லை.

கவிதை பற்றி ஏராளமான விஷயங்களைச் சொல்வார். தொல் காப்பியம் யாப்பெருங்கலக்காரிகை பற்றியெல்லாம் பேசுவதோடு உசிதமல்லாததை விலக்கி உசிதமானதை மட்டும் வைத்தால் கவிதை ஆகும் என்று சொல்லும் ஷேமேந் திரரின் ஔசித்திய விசாரம், நேர்கோட்டில் போனால் உரை நடை அதைச் சற்று வளைத்து நெளித்து போட்டால் கவிதை என்று சொல்லும் குந்தகாவின் வக்ரோத்தி ஜீவிதம், கவிதைக்குள் எழுப்பும் த்வனி பற்றிய ஆனந்தவர்தனரின் த்வன்ய லோகா போன்ற கவிதை இயல் சார்ந்த புத்தகங்கள் பற்றியெல்லாம் விரிவாகச் சொல்வார். வயசு வித்யாசமின்றி எதைப் பற்றியும் அவரிடம் பேச முடியும். அருவி போல விஷயங்கள் கொட்டும். அவரைவிட்டு விலக மனம் வராது. எத்தனை நூலகம் போய்ப் படித்தாலும் அவ்வளவு விஷயங்கள் கிடைக்காது. பேச்சின் போது அமர்ந்தபடியே குதிப்பார், சப்தமிடுவார். சத்தமாகச் சிரிப்பார். கைதட்டுவார். சில சமயம் மூக்கு கண்ணாடி கீழே விழும். தனது கைத்தடியை எடுத்துத் தரையில் தட்டுவார். வெற்றிலை எச்சில் தெறிக்கும். கோபத்தில் சில சமயம் தாயோளி என்றும் வள்ளார ஓளி முண்டைகளா, வக்காள ஓழிகளா என்றும் கெட்டவார்த்தைகள் சிதறும். எதைப் பேசினாலும் அதை உல்லாசமாய் அனுபவித்துப் பேசுவார். அது வெறும் பேச்சாக இராது. ஒரு நிகழ்வு போலவே இருக்கும். கண் உபாதைக்கும் இதய நோய்க்கும் ஆட்பட்டபின் இந்த வேகம் கொஞ்சம் குறைந்தது.

கரிச்சான்குஞ்சு வடமொழி விற்பன்னராக இருந்தாலும் ஹிந்தி, ஆங்கிலம் அறிந்திருந்தாலும் தமிழ் மொழியின் மீது அவர் கொண்டிருந்த மாளாத அன்பு அவரது செயல்களில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னதற்கேற்ப கும்பகோணம் சங்கர மடத்தில் உரை நிகழ்த்தி இருக்கிறார். அதற்குத் தேனுகா அவரை அழைத்துப் போவார். சமஸ்கிருதத்தில் உரை அமைய வேண்டுமென்று சொல்லப்பட்டாலும் அதன் கடைசிப் பகுதிகளில் அவர் தமிழில் பேசித்தான் முடிப்பார். அது போலவே அவர் பள்ளிகளில் கம்பராமாயணம் நடத்தும்போது வால்மீகி ராமாயணத்தையும் சேர்த்துச் சொல்லி நடத்தியிருப்பதை அவரிடம் படித்த மாணவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

உயர்சாதியில் பிறந்திருந்தாலும் அவர் கரிசனங்கள் மிகச் சாதாரணர்கள்மீதும் எளியவர்கள் மீதுமே இருந்தது. அவர் சார்ந்த சமூகத்தின் சில மடமைகளின் மீது அவருக்குக் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. அவர் எழுதிய நாவலில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு குஷ்டரோகியின் கதையையே எடுத்துக்கொள்கிறார். ஓரினப்புணர்ச்சி பற்றிய விஷயங்களைத் தமிழில் முதன்முதலாக எழுதியவர் அவர். ரகசியமாய் நடக்கும் ஒரு விஷயத்தைப் பொது வெளிக்குக் கொண்டுவருகிறார். சமூகம் அது குறித்த பார்வையையும் விவாதத்தையும் முன்னெடுக்கத் தன் படைப்பின் வழியே ஒரு ஒரு சாளரத்தைத் திறந்துவைக்கிறார். இந்தத் தொனியை அவரின் பல படைப்புகளில் நாம் காணமுடியும்.

சமூகம் பேசக் கூசுகிற விஷயத்தை எழுதும் இது போன்ற துணிச்சல் அவருக்கு புதிதல்ல. அவரது பால்ய காலத்தில் 1937 ஜூன் முதல் 1941 மே வரை மதுரையில் உள்ள ராமேஸ்வரம் தேவஸ்தானப் பாடசாலையில் வடமொழியும் தமிழும் பயிலும்போது அவர் சில நாடகங்களில் நடித்துள்ளார். அதில் பட்ட நாராயணரின் “வேணீ சம்ஹாரம்” என்ற பாரதக் கதையை ஆதாரமாகக் கொண்ட நாடகத்தில் நடித்தபோது கர்ணனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் கடும் வாக்குவாதம் நடக்கும் காட்சி. இதில் அஸ்வத்தாமனாகக் கரிச்சான் குஞ்சு நடித்தார். “இங்கே பார் கர்ணா நான் எதற்கும் தயங்கமாட்டேன் என் பூணூலைக்கூட அறுத்தெறிவேன்’’ என்று பேசி சவால்விட வேண்டிய கட்டத்தில் அவர் உண்மையாகவே பூணூலை அறுத்தெறிந்துவிட்டார் என்கிறார் அவருடன் அந்தப் பாடசாலையில் உடன் பயின்ற பி.எச்.சிவசுப்ர மணியன். பூணூலை அறுப்ப தென்பது அபச்சாரம். அதுவும் வேதபாடசாலையில் பயிலும் ஒரு மாணவன் அறுப்பது என்பது பெரும் அதிர்ச்சியான விஷயம். அன்று முதல் அவருக்கு அங்கு அஸ்வத்தாமா என்ற பட்ட பெயர் நிலைத்திருக்கிறது.

வேதாந்த நோக்கில் அவர் பாரதியின் ஆத்ம பக்குவத்தைப் பற்றி எழுதிய பாரதி தேடியதும் கண்டதும் நூலும் கு.ப.ரா. பற்றி விரிவாக அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பும் அவரது தமிழ் இலக்கியப் பங்களிப்பில் பிரதானமானவை.

பாரதி நூற்றாண்டின் போது பாரதி பற்றியும் அவர் படைப்புகள் பற்றியும் நூற்றுக்கணக்கான புத்தங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் எல்லாம் சேதாரம். மிகையில்லாமல் பரவசமில்லாமல் அவரை வெளிப்படுத்திய புத்தகங்கள் கனகலிங்கத்தின் என் குருநாதர், கரிச்சான் குஞ்சுவின் பாரதி தேடியதும் கண்டதும், யதுகிரியம்மாள் எழுதிய பாரதி சில நினைவுகள் போன்ற வெகுசிலவே தேறுகின்றன’’ என்று அவரது பசித்த மானுடத்தை மிகச்சிறந்த நாவலாக குறிப்பிட்டு கா.நா.சு பேசியுள்ளார். தாய் வார இதழிலும் எழுதினார்.

பாரதி போலவே கரிச்சான் குஞ்சும் வேதங்களில் தோய்ந்தவர்தான். இன்னும் கூடுதலாக சுக்ல யஜீர் வேதத்தின் பகுதியான பிருஹ தாரன்ய உபநிஷத்தைச் சுரத்தோடு அத்யயனம் செய்தவர். அப்படிக் கனம் முறையில் கடினமான வேதப் பகுதிகளைப் பயின்ற கனபாடிகளுக்கு இணையானவர் அவர். பாரதியின் படைப்புகளில் வேதங்களின் தாக்கங்கள் பற்றியும் அவர் பேசியுள்ளார்.

பாரதி “ஜெயபேரிகை கொட்டடா கொட்டடா, ஜெயபேரிகை கொட்டடா. பயமெனும் பேய்தனை அடித்தோம், பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம். வியனுலகனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைபிடித்தோம். ஜெயபேரிகை கொட்டடா கொட்டடா. ஜெயபேரிகை கொட்டடா’’ என்று பாடுகிறார். ஆனால் வேதங்களைத் தங்கள் அளவில் ஆழமாக உள் வாங்கிக்கொண்ட இருவருமே வேத வாழ்வைக் கைப்பிடிக்கவில்லை, அசல் கலைஞனின் வாழ்க்கையையே வாழ்ந்தனர்.

மனித மனத்தின் அடியில் படிந்து போயிருக்கும் தன்முனைப்பு, காமம், பொருந்தாக்காமம், செல்வம் சேர்ப்பதில் உள்ள வேட்கை, அதன் பொருட்டு நடக்கும் கேவலங்கள், பக்தியின் பெயரால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் போலித்தனங்கள் என்று எல்லாவற்றையும் மறைக்காமல் ஒளிக்காமல் தன் படைப்புகள் மூலம் நம் முன்வைக்கிறார் கரிச்சான் குஞ்சு. எதையும் எதிர் பார்க்காமால் எதன் மீதும் மறைந்தோ சாய்ந்தோ ஒளிந்தோ கொள்ளாமல் நேரிடையாகக் கணீரென்ற குரலில் தளுக்கின்றி அவர் சத்தியத்தைப் பேசுவது அவர் படைப்புகளின் வழியே இன்னமும் கேட்கிறது.

ஒன்றித் திளைத்து வெளிப்படும் அவரது சுவாரஸ்யமான சம்பாஷனை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடிகிற ஒன்றல்ல. கடும் வாசிப்பும் வாசித்ததைக் கேட்பவன் கிறங்குமாறு சொல்வதிலும் சமர்த்தர். ருசியான உணவும் பேச்சும் தாம்பூலமும் சிரிப்பும் குதூகலமுமாய் அவர் வாழ்வைக் கொண்டாடிக் கொண்டு தானிருந்தார். எல்லாவிதத் துயரங்களோடும் அவர் சுகவாசியாகச் சந்தோஷமாக நிம்மதியாக இருந்ததைத்தான் நான் எப்போதும் கண்டிருக்கிறேன். ஒரு வகையில் எனக்கு அப்போது ஆச்சரியமாக இருந்தது. தரித்திரத்தை எக்காளம் செய்து அவர் சிரித்து விளையாடிய விளையாட்டு அது என்று இப்போது புரிகிறது.

***

தமிழ் பல்கலைக்கழகமும் சாகித்ய அக்காதெமியும் இணைந்து தஞ்சையில் 10.08.2012இல் நடத்திய கரிச்சான்குஞ்சு கருத்தரங்கில் கரிச்சான் குஞ்சு குறித்தும் அவர் படைப்புகள் குறித்தும் ரவிசுப்பிர மணியன் வாசித்த கட்டுரை

நன்றி: காலச்சுவடு

Comments
One Response to “வறுமையிலும் வாழ்வைக் கொண்டாடிய கரிச்சான்குஞ்சு-ரவிசுப்ரமணியன்”
  1. அரிய தகவல்கள் எளியநடையில் ஆவணபடுத்த்தியுள்ள ரவி சுப்ரமணியத்தை நெகிழ்வோடு பாராட்டுகிறேன் -வித்யாஷங்கர்

Leave a comment